
( picture courtesy heavensgain.com )
சாரா
ஒரு மலர் உதிர்வது போல
மறைந்து போனாள்
என் தம்பியின் குழந்தை
துஷ்டிப்பயண நெடுகிலும்
இறுதிச் சடங்கிலும் கூட
பேச நிறைய விசயம் இருந்தது
வந்த சனத்துக்கு
நேற்றிரவு கனவில் வந்தவளிடம் கேட்க
எனக்கும் இரண்டு கேள்விகள் இருந்தன
எப்படிப் பிரிந்தது உன் ரூஹு ?
அப்படித்தான் மாமி …
நீ எழுதியிருக்கிறாயே,
ஒரு பூ உதிர்வது போலத்தான் !
இத்தனை பெரிய துனியாவில்
நீ இருக்க இடமில்லையா ?
அதை விடு மாமி …
பால்யத்தில் நீயும் என் அப்பாவும்
மலர்த்தி , உடைத்து விளையாடுவீர்களாமே
சோப்புக்குமிழ்களை ?
அப்படியானது தான் வாழ்வும் மரணமும்
என்று நான் சொன்னதாக
நீ ஏன் வந்தவர்களுக்காக
ஒரு கவிதை எழுதக் கூடாது ?
கண்ணாடிச்சில்லுகளின் மீது போல தட்டச்சுகிறேன் ..
குமிழ்த்து முகிழ்க்கும் மலர்கள்
உதிர்கையில் கமழ்கின்றன
ஒரு குழந்தைச்சோப்பின் நறுமணம் கிளர்த்தி
குழந்தை சாராவுக்கு
..ஷஹி..
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments




//கண்ணாடிச் சில்லுகளின் மீது போலத் தட்டச்சுகிறேன்// நம் உள்ளத்து உணர்வுகளைத் தருவதாக இருக்கிறது.
//குமிழ்த்து முகிழ்க்கும் மலர்கள்
உதிர்கையில் கமழ்கின்றன
ஒரு குழந்தைச் சோப்பின் நறுமணம் கிளர்த்தி//
இதில், ‘உதிர்கையில்’ ரொமான்ற்றிசைஸ் பண்ணிவிடுகிறது.
குமிழ்த்து முகிழ்க்கும் மலர்கள்
கமழ்கின்றன
ஒரு குழந்தைச் சோப்பின் நறுமணம் கிளர்த்தி
என்றிருந்தாலே பொருந்தும்.
ஷஹி,
எனக்கும் ராஜசுந்தரராஜன் அவர்கள் சொன்னது சரியென்றே தோன்றுகிறது… இதைப் படித்த போது எனக்குத் தோன்றியதை நான் எழுதினேன்… அது உங்கள் பார்வைக்கு…
நான் பயந்தது அல்லது
நினைத்தது நடந்து விட்டது
எந்த வன்விரலாலோ இந்த குமிழ்
உடைக்கப்பட்டு விட்டது
உடைவது தான் அதன் தன்மையாய்
இருந்தும் கூட
ஆனால் வர்ணங்களை பிரதிபலிப்பதற்கு
முன்னமே தன் கண்ணாடி பிம்பத்தை
உடைத்து கொண்டது ஏன்?
குறைவான தூரமே இருக்கும்
அது மிதந்து வந்தது
களைப்பு மேலிட காரணம்
எதுவுமில்லை
எழுதும் விரலைக்கொண்டவனின்
ஆதிகால பயனக்குறிப்புகளை
அதன் மீது பதிய முற்பட்டிருப்பானோ
இல்லை குமிழுக்குள் மேலும் காற்றை
ஊத முயன்றிருப்பானோ?
இது அவனுக்கு வெற்றியா தோல்வியா?
கனவில் வந்து வருடிய விரல்கள்
எழுதும் விரலைக் கொண்டவனின்
சாயலில் இருப்பதை
யாரும் பார்த்து விடாதபடி
என் கனவின் சாளரங்களை அடைக்கிறேன்
அன்புடன்
ராகவன்
“உதிர்கையில்” என்பதை “கண்ணாடிச்சில்லுகளின் மீது போல் தட்டச்சுகிறேன்” என்பதன் தொடர் வினையாகப் பாருங்களேன் ராகவன் .. நான் அப்படி எண்ணித்தான் எழுதினேன் .. அதாவது முகிழ்க்கும் மலர்கள் உதிரத்தால் ஆனவை என்று ..அவை உதிர்ந்து விழும் போது சோப்பு மணம் கமழ்வதாய் ! பொருள் படுகிறதா ? இத்தனை விளக்கித்தான் பொருள் கொள்ள வேண்டும் என்றால் அது என் போதாமையே ..ஒப்புக்கொள்கிறேன் ..
உங்கள் பதிவமைப்பில் என்ன பிரச்சனை என்றால், அது copy & paste வசதிக்கு இடந்தராது. அது காரணம் இரவே இங்கு கருத்தூட்டம் இட முடியவில்லை.
இதன் கவிதைப் பொருள் சீரியஸான ஒன்று. //கண்ணாடிச் சில்லுகளின் மீது போலத் தட்டச்சுகிறேன்// என்றதில் அந்த சீரியஸ்னெஸ் தொற்றி இருக்கிறது. //குமிழ்த்து முகிழ்க்கும் மலர்கள்/ உதிர்கையில் கமழ்கின்றன/ ஒரு குழந்தைச்சோப்பின் நறுமணம் கிளர்த்தி// என்றதில் ‘உதிர்வதால் கமழ்கின்றன’ என்று பொருள்பட்டு, ‘உதிர்தல் நல்லது’ என்றோர் ஏடாகூடப் பொருளுக்கு இட்டுச் செல்கிறது.
‘உதிர்கையில்’ என்னும் சொல் தவிர்க்கப்பட்டால், மலர்களின் இயல்பு அங்கே உதிரும் பருவ நிலையாமையின் டென்ஷனோடு காட்சிக்கு எஞ்சும்.
saara……….saara………..saara…………..muntru murai un perai solli parkka thontriyathu……sonnen………..ithai vida periya kavithai ulakile illaiyamma……vili orathil oru thuli…..nenjil yengo oorathil…..oru uusi kuthum vali……..
saara…………saara…………..saara…………
நன்றி சபீனா .. உங்கள் மனம் வருந்தச் செய்து விட்டேன் என்பது பற்றி வருந்துகிறேன் . ப்ரார்த்தனையின் போது என் தம்பியையும் அவன் மனைவியையும் நினைவில் கொள்ளுங்கள்..
ராகவனின் திருத்தல் எழுத்து நல்லாவே இல்லை. அறிந்ததின் எல்கைக்குள் இருந்து அறியவொண்ணாததின் intention பற்றி எழுத முற்படுகிறார். De-learning நடைமுறைக்கு சாத்தியமில்லை (ஞானியர்க்கு சாத்தியம்; கவிஞருக்கு சாத்தியமில்லை) ஆதலால், குறைந்தபட்சம் அறிந்ததை ஒதுக்கி நிறுத்திய உணர்வு வழிப்பட்டே கவிதையை எழுதுதல் நல்லது.
intention என்று ஆங்கிலத்தில் எழுதினால், தானே அது ஒரு தொடுப்புக் கொடுக்கிறது. அது என் இன்டென்ஷன் இல்லை. மன்னிக்க!
wow ..this is a good one !
அன்பு அண்ணன் ராஜசுந்தரராஜனுக்கு,
டி லெர்னிங்க் என்று எதனை சொன்னீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை… டி லெர்னிங்க் என்பதன் லிட்டரரி அர்த்தத்தில் அது சாமானியர்களுக்கு சாத்தியமில்லை என்று எப்படி சொல்ல முடியும் என்று எனக்கு புரியவில்லை… அறியவொண்ணாததின் நோக்கம் பற்றி நான் அறுதியிடவில்லையே… கேள்விகள் தானே வைக்கிறேன்… மாறுபட்ட பெர்ஸ்பெக்டிவ்வில் ஒரு விஷயத்தை அணுகுவது தவறா? எனக்கு கவிதை பற்றிய சரியான புரிதல் இல்லை எப்போதுமே! அதனால் இது போல தவறுகள் இயல்பு தான்… அறிந்ததை ஒதுக்கி நிறுத்திய உணர்வு வழிப்பட்டு எழுத முயல்கிறேன்… அன்பும் நன்றிகளும், ராகவன்
J.கிருஷ்ணமூர்த்தி கவிதைகளும் எழுதி இருக்கிறார். ஆனால் அவற்றில் ஒன்றுகூடத் தேராது. இதுபற்றி ஒருமுறை நான் பிரமிளிடம் கேட்டேன். அவர் சொன்னார், “Conflict இல்லாதவங்களுக்குக் கவிதை, ஏன் எந்தக் கலைப் படைப்பும், வராது” என்று. அப்படி இருக்குமோ என்று ஐயுற்று, இருக்கலாம் என்றே நானும் முடிவுக்கு வருகிறேன். உடனே, புத்தர், ராமகிருஷ்ணர் எல்லாம் கதி சொல்லி இருக்கிறார்களே என்றால், பிளவுபடு நிலைக்கு அவர்கள் சற்றுக் கீழிறங்கித்தான் அந்தக் கதைகளைச் சொல்லி இருக்கிறார்கள் என்று கொள்ள வேண்டும். என்றால் JK ஏன் கீழிறங்கவில்லை என்றால்… எனக்கென்ன தெரியும்?
கவிதைக்கு அறிந்த மேட்டிமை அல்ல, ஒரு freshness அவசியம். ஷஹி தன் உணர்வு/ உணர்ச்சிகளின் freshness-ஐத் தருகிறார். ராகவன் அறிந்த நிரந்தரத்தில் இருந்து எழுதுகிறார். அதனால் அவரைச் சீண்டினேன். அவ்வளவே.
கவிதை எழுத முன்வருபவர்களுக்கு என் பரிந்துரை William Carlos Williams. அவருடைய எல்லாக் கவிதைகளும் வலைத்தளத்தில் கிட்டுகின்றன. Modern poet-ஆன WCW கவிதைகளை உள்வாங்கிய பின் post modern இன்னும் neo-romanticism வரை வரவேண்டும்.
“ஏன்டா, நீ மொதல்ல அப்படிச் செய்யுறாயா?” என்றால், இல்லையென்றால் என் திறமை அவ்வளவுதான் – பேச்சுதான், காரியத்தில் இல்லை – என்று எடுத்துக்கொள்ள வேண்டும். என்றாலும் g+இல் உள்ள எனது சில கவிதைகளைப் பரிந்துரைப்பேன்.
அப்பாடா, இதில் கருத்தூட்டம் போடுவதற்குள் என் தாவு தீர்ந்து விடுகிறது. (ஷஹி, தவறுகள் நேராமல் எழுதக் கூடிய கடவுள் அல்லன் நான். Edit செய்கிற வசதி கொடுங்களேன், please!)
இத்தனை பெரிய கருத்தூட்டங்களுக்கு வகை செய்யும் என்று உணராமலே எழுதிவிட்டேன் கவிதையை ! பிறந்து 21 நாட்களில் மறைந்து போன எங்கள் வீட்டு குழந்தை சாராவிடம் உரையாடினார் போல , பேசினார் போன்ற ஒரு நிறைவு கிடைக்கிறது ஒவ்வொரு முறையும் என் இந்தக் கவிதையைப் படிக்கும் போதும் .
..எனக்கும் தான் கவிதைகள் பற்றின பெரிய புரிதல் ஏதும் இல்லை ராஜா சார் , ராகவன் ! ஆனாலும் நினைத்த மாத்திரத்தில் , கவிதைகள் ராகவனுக்குப் போல் எல்லாம் எனக்கு வரவே வராது . ஒரு குமிழ் உடைந்தது என்று படித்த மாத்திரத்தில் இன்னொரு கவிதையை உண்டாக்குவது எனக்கெல்லாம் அசாத்தியம் .. ஆனால் என் கவிதைகளில் ஒரு ஃப்ரெஷ்னஸ் இருக்கிறது , அவை கவிதைகள் தாம் எனும் கவிஞர் ராஜசுந்தரராஜன் அவர்களின் கருத்துக்கு மிகுந்த மகிழ்ச்சியோடும் நன்றிகளோடும் தலைவணங்குகிறேன் . ( எடிட் செய்யும் வசதி பற்றி அவசியம் பார்க்கிறேன் ராஜா சார் . எனக்கு டெக்னிகல் விபரங்கள் ஒன்றும் தெரியாது , நண்பன் அபியைத் தான் கேட்க வேண்டும் .)
ராகவன் கவிதையை எனக்கான ஒரு ஆறுதல் மெசேஜாகத்தான் பார்க்கிறேன் .. அதன் கவித்துவத்தையும், தர்க்க அழகையும் வியந்த பின்னே .”இழப்பு நேர்ந்து தான் விட்டது என்ன செய்யலாம் ? அது இறைசித்தம் எனும் போது” எனும் படியான பொருளில் அல்லவா எழுதப்பட்டிருக்கிறது அது ? மொழியின் அழகையும் அதன் பொருளையும் சிலாகிக்கலாம் , குறை பேசலாம் ..கோட்பாடுகள் என்பன மிகப்பெர்சனலானவை இல்லையா ? அதன் கோட்பாடும் கூட இசைவானதாகத் தான் இருக்கிறது .. இம்மாதிரியான மரணங்கள் நேரும் போது ஆறுதல் சொல்ல வரும் இஸ்லாமியப் பெரியவர்கள் . “ஒரு முள் குத்தினாலும் கூட அதற்குப் பகரமான நன்மையை இறைவன் நமக்காக வைத்திருக்கிறான் எனும் போது இத்தனை பெரிய துயரத்துக்கு உனக்கு பகரம் செய்வான் பொறு , சபுர் செய் ” என்பார்கள் ..துயரத்தில் அழுது அரற்றிக் கொண்டிருப்பவனுக்கு மிகப் பெரிய ஆறுதலாக இந்த செய்தி இருப்பதை பல மரணங்களைப் பார்த்தவள் என்ற முறையில் சொல்கிறேன் . அப்படியான ஒரு செய்தியாகத் தான் ராகவன் கவிதை தெரிகிறது எனக்கு . துயரத்திலேயே அழுந்திக் கிடக்க யாருக்குத் தான் பிரியம் .. மீட்க வரும் கரத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம் தானே ? இதை விடவும் ஒரு பெரிய வெற்றி இலக்கியம் சாதிக்குமா ?
“ஏண்டா நீ மொதல்ல அப்புடிச் செய்யுறாயா” என்று உங்களைக் கேட்கும் அளவுக்கான ஒரு கவிஞன் , எழுத்தாளன் பிறந்து விட்டானா ராஜா சார் ? g+ இலும் , பண்புடனிலும் உங்கள் கவிதைகள் படித்து விரிந்த விழி மூடாமல் முழித்துக் கிடந்திருக்கிறேன் ! நீங்கள் படித்து பின்னூட்டி , விவாதம் செய்யும் அளவிலானவையாக என் கவிதைகள் இருப்பது லேசான கர்வம் எழும்பக் கூடக் காரணமாக இருக்கிறது! மிக்க நன்றி ராஜா சார் , ராகவன் .