/* ]]> */
Jul 132011
 

மூன்றாம் கோணம் பயணக்கட்டுரை போட்டியில் கலந்து கொள்ளும் கட்டுரை

உத்திரகோசமங்கை மரகத நடராஜர்

- இராஜராஜேஸ்வரி

http://jaghamani.blogspot.com/2011/07/blog-post_10.html

 

ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலையில் உள்ளது உத்திரகோசமங்கை என்ற பாடல் பெற்ற ஸ்தலம்.

மாணிக்கவாசகர் அதிக நாள் இந்த ஆலயத்தில் தங்கி இருந்ததாக குறிப்புகள் கூறுகின்றன.


ஆரூதரா தரிசனத்தன்று மட்டுமே நடராஜரை மரகத கோலத்தில் தரிசிக்கமுடியும். மற்ற நாட்களில் சந்தனகாப்பு சார்த்தபட்டிருக்கும்.

ஆரூதரா தரிசனம் முடிந்த அடுத்த நாள் மீண்டும் சந்தன காப்பு சார்த்தப்பட்டு அடுத்த ஆண்டு ஆரூதரா தரிசனத்தன்று மட்டுமே களையப்படும். சுவாமிக்கு மங்களநாதர் என்று பெயர். இங்கு நடராஜர் சிலை மரகதத்தில் உள்ளது. இந்த நடராஜர் தான் ஆதி நடராஜர் என்றும் சொல்லப்படுகிறது.

 இறைவன் உமையவள் மட்டும் காணுமாறு நடனம் ஆடியதுஉத்திகோசமங்கையில் மட்டுமே
.

ஐந்தரை அடி உயரமுள்ள மரகத நடராஜர் சிரித்த முகமாய் இருக்கிறார்.எப்பவும் சந்தனம் பூசப்பட்டு இருந்ததால் தான் ஆங்கிலேயர்கள் அது மரகதம் என்று தெரியாமல் தங்கள் ஊருக்கு கடத்தாமல் இருந்தார்கள் போலும்.  உலகத்திலேயே பெரிய மரகத கல் இதுவாக தான் இருக்கும்.
அம்மனுக்கு பிரணவம்(வேதம்) ரகசியமாய் உபதேசித்த இடமாம். உத்திரம் எனில் உபதேசம், ஓசம் எனில் ரகசியம்.மங்கைக்கு ரகசியமாய் உபதேசித்த இடமானதால் உத்திரகோசமங்கை எனப்பெயராம்.
இங்கு இறைவன் உமயவள்க்கு வேதம் உபதேசித்து நாட்டியமும் காட்டி அருளியதாக வரலாறு.இங்கு உள்ள நடராஜர் சபை ரத்தின சபை என்று அழைக்கப் படுகிறது. உத்திரகோசமங்கை என்பது அன்னை உமயவளையே குறிக்கும். ரகசியமாக உபதேசம் அளிக்கப்பட்ட மங்கை என்று பொருள்.மாணிக்கவாசகர் இந்த ஸ்தலம் பற்றி 9 பாடல்கள் பாடி இருக்கிறார்.
உத்திர கோச மங்கைப் பகுதி ஒரு சொல் வழக்கு உண்டு,மக்கள் அடிக்கடி சொல்வார்கள்.
மண் முந்தியோ . . . இல்லை . . . மங்கை முந்தியோ . . .

வெறும் வார்த்தை இல்லை இது, அப்படியே நிஜம். காரணம் கோலின் தொன்மை அப்படி. இராவணன் அரசாண்ட போது இந்தக் கோவில் இருந்நிருக்கிறது. இராமேச்வரம் எல்லாம் தோன்றுவதற்கு முன்பே இந்தக் கோவில் இருந்திருக்கிறது.

இராவணன் மனைவி மண்டோதரி இங்கு வந்து வழிபட்டதாய் சொல்கிறார்கள். அழகமர் வண்டோதரிக்குப் பேர்அருள் அளித்த பிரான்’ என்று சிவ பெருமானைப் பாடுகிறார் மணிவாசகர். இங்குள்ள ஸ்தல விருட்சம் 3000 ஆண்டு பழமை வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது.

மணிவாசக வள்ளல் இங்கே இந்த மரத்தடியில் அமர்ந்திருக்கிறார். மணிவாசகர் காலம் 2-ம் நூற்றாண்டு(கி.பி)இங்குள்ள அர்ச்சகர்கள், மற்றும் ஓதுவார்கள் சொல்கிறார்கள், இதே மரத்தடியில்தான் பராசரர், வேத வியாசர் முதலியவர்கள் எல்லாம் தவம் செய்தனர் என்று.
பதஞ்சலி, வியாக்கிரமர்கள் கூட இங்கு இந்த மரத்தடியில்நிட்டையில் இருந்ததாகவும் சொல்லப் படுகிறது. ஒன்றுமட்டும் நிச்சயம். இந்த இலந்த மரம் பல பல அருட்தலைமுறைகளைப் பார்த்தது; மாமுனிவோர்களைத் தன் பாதவேர்களில் தாங்கியது; பல சீவன் முக்தர்களுக்கு அருள்நிழல் தந்தது. தானும் மரணம் வென்று இருப்பது.

இந்த இலந்த மரம் பூமியின் மகா பொக்கிஷம்.

மாணிக்க வாசகர் அப்பன் நடத்தரையனுக்கு 1087 தலங்கள் இருந்தாலும், பாண்டிநாடே அவன் பதி, உத்திரகோசமங்கையே அவன் சொந்த ஊர் என்கிறார், உலகத்தின் இதயஸ்தானம் என்று சொல்லப் படுகின்ற தில்லைச் சிதம்பரத்துக்கே இங்கிருந்துதான் மையத் தொடர்பு இருந்தது, இராமேச்வரத்துக்கும், ஏன், மெக்கேச் வரத்துக்கும் அதுவே ..
பாண்டி நாடே பழம் பதி ஆகவும் பத்திசெய் அடியரைப் பரம் பரத்து உய்ப்பவன்உத்திர கோச மங்கை ஊர் ஆகவும் ….
தமிழ் அறிஞர் வாயைத் தித்திக்க வைக்கும்

இன்னொரு பாடல் மணிவாசகத்தின் திருத் தசாங்கத்தில் இருந்து.

தாதாடும் பூஞ்சோலைத் த்த்தாய் நமைஆளும்
மாதாடு பாகத்தன் வாழ் பதி என் – கோதாட்டி
பத்தர்எலம் பார்மேல் சிவபுரம்போற் கொண்டாடும்
உத்திர கோச மங்கை ஊர்.. . .’

இந்தத் திருத் தசாங்கத்தில் ஒவ்வொரு கேள்வியையும் கிளியிடம்கேட்டுப் பெறுகிறார். மணிவாசகப் பெம்மான். உத்தார கோசமங்கைஅவர் காலத்து இருந்த மங்கையாக இல்லை. எல்லாமே மாறிவிட்டது. இன்றும் கூடக் கோபுரங்களில் அந்தக் கிளிக் கூட்டங்கள் இருக்கின்றன. அது மட்டும்தான் மாறவே இல்லை. நம் மனிதர்கள் இல்லை, அவைமட்டும, அவைமட்டுமே கீச் கீச் என்பதற்குப் பதிலாக ஊர்பேரை உச்சரித்துக் கொண்டிருக்கின்றன. . .’

பெரிய தெப்பகுளம். வருடம் முழுவதும் வற்றாத தண்ணீர். உப்பு கரிக்கிறது.

திருவிளையாடற் புராணத்தில் வருகிறதே, வலைவீசி விளையாண்ட படலம் அது நடந்த இடம், இங்கே இந்த ஸ்தலத்தில்தான்.

“ஆரா அமுதாய் அலைகடல்வாய் மீன் விசிறும்
பேராசை வாரியனைப் பாடுதும்காண் அம்மானாய்!”

என்று மணிவாசகர் அண்ணாமலையில் இருந்து கொண்டு பாடியது இங்கே நடந்த நிகழ்வு பற்றித்தான். ஆக, இது வலை வீசி விளையாண்ட தலம்

கால நிலையின் மாற்றத்தால், பூமிப் பரப்பின் மாற்றத்தால் அப்படியே உள் வாங்கி ஏர்வாடி வரை போயே போச்சு என்றால் நம்புவது கொஞ்சம்

கடினமாகத்தான் இருக்கும்,

உத்திரகோசமங்கைக் கோவிற் குளத்தில் மீன்கள் நல்ல நீரில் வாழும் மீன்கள் இல்லையாம், உப்பு நீரில் அதாவது கடல் நீரில் வாழும் மீன் வகையைச் சார்ந்தவையாம்.

கோவிலின் வெளிப்பிரகாரத்துத் தூண்கள், நந்தி சிலைகள் முதலியன கடல்வாழ் பாறைகளை நினைவு படுத்தின; கடற் காற்று அரித்த எச்ங்களைப் பறை சாற்றின.


உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம் விழா 17 ஆண்டுகளுக்கு பின்னர் -07-06-2010  நடந்தது. மூன்றாம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது. தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடந்தன. 66 குண்டங்கள் வளர்க்கப்பட்டு,66 வேத ரிஷிகளுடன் பூஜைகள் நடந்தன.முக்கிய நிகழ்ச்சியாக நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.இதை தொடர்ந்து அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 640 ஆண்டிற் குப்பின் மங்களேஸ்வரி அம்மன் ஐந்து நிலை ராஜகோபுரம் திருப்பணிகள் நிறைவடைந்து கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் முடிந்ததும் கோயிலில் இருந்த பக்தர்கள் மீது சுழல் குழாய் மூலம் புனித நீர் தெளிக்கப் பட்டது. மூலவருக்கும் சிறப்பு அபிஷேகம்,தீபாராதனைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப் பட்டது. கும்பாபிஷேகத்தை யொட்டி மாலை மரகத நடராஜர் சிலையில் சந்தனம் களையப்பட்ட நிலையில் பச்சை மரகத மேனியாய் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கும்பாபிஷேகம் முடிந்த நிலையில் மரகத நடராஜருக்கு சந்தனம் பூசப்பட்டது.

இந்த நடராசர் சிலை உத்திர கோசமங்கையின் தனிப்பெரும் சொத்து. ஆனானப்பட்ட கோகினூர் வைரமே வெறும் நெல்லிக்காய்அளவு தான். கடைசியில் இரஞ்சித் சிங் மகராசாவிடம் போய்,  பிடுங்கப் படாத குறையாகப் பிரிட்டிஷ் மணிமகுடத்தில் போய் உட்கார்ந்துவிட்டது.

நல்ல வேளை, இந்த மரகதச் சிலையைத் தாபித்த பெரியவர் இதற்குச் சந்தனக் காப்பு இடும் முறைமையை ஏற்படுத்தினார். யார் கண்ணையும் இது உறுத்தாமல் தப்பித்தது. களப்பரர்கள,  ஆங்கிலேயர் என்று எத்தனையோ படைஎடுப்புக்களைச் சந்தித்த போதும் யாருக்கும் தெரியாமல் இது தப்பித்துக் கொண்டது.

இது மரகதம். விருப்பாச்சி சேர்த்து ஏழடி உயரம் இருக்கும். மரகதம் மிகவும் மென்மையான கல். சாதாரண ஒலி அலைகள் கூட மரகதத்தை உதிர வைக்கும் என்பதால், ‘மத்தளம் கொட்ட மரகதம் உதிரும்’ எனும் வழக்கு மொழி எழுந்தது. கோவில் என்றால் மத்தளம் கொட்டு முழக்கு இல்லாமலா? இவ்வாறு எல்லாம்மரகதச் சிலைக்கு ஊறு ஏற்படலாகாது என்று எண்ணித்தான் சந்தனக் காப்பிடும் முறையை உண்டாக்கினாரோ சண்முக வடிவேலவர்?
மரகதக் கல் ஒலிக்கே உதிரும் என்னில், செதுக்கும் உளிக்குமுன் எப்படித் தாங்கும்.? இந்தச் சிலையை வடித்த விதம் ஓர் அற்புதம். உளி கொண்டு பொளிக்கப் பட்டதல்ல இச்சிலை. மனத்தால் நினைத்து உருவாக்கப் பட்டது. இந்த விவரம் தெரியாத நம்மவர்கள் இதைச் சுயம்பு என்கின்றனர்.
இங்குள்ள ஆடல் வல்லானுக்கு நித்திய அபிஷேகம் எதுவும் கிடையாது.

காரணம், வருடம் பூரா, சிலை சந்தனக் காப்பு தரித்தே இருக்கும். ஆண்டுக்கு ஒருமுறை மார்கழித் திங்கள் திருவாதிரைத் திருநாள் அன்று சந்தனக் காப்பு களையப் படும். அன்றுபகல் முழுக்க தனிச் சபைத் தலைவனைக் காப்புக் களைந்த திருக் கோலத்தில் தரிசிக்கலாம்.

அன்றுபூரா ஒன்பது வகை அபிஷேகங்கள் நடைபெறும்.

இரவு மறுபடியும் காப்பு இட்டபின் அடுத்த அபிஷேகம் என்பது அடுத்த திருவாதிரைக்குத்தான்.

ஆண்டுமுழுக்க மரகதச் சிலையில் காப்பிடப் பட்டிருந்த
சந்தனத்தை பெற பக்தர்களிடையே பெரிய போட்டாப் போட்டிநடக்கும். இப்பொழுதெல்லாம் தேவஸ்தானத்திலேயே அதைப் பாக்கெட் போட்டு விற்க ஆரம்பித்து விட்டார்கள். உத்திர கோசமங்கைக் கோவிலிலும் சுரங்கம் இருக்கத்தான் இருந்தது. ஆனால் அவைகள் மனிதரால் ஏற்படுத்தப் பட்டவை அல்ல. அப்படி ஏற்படுத்தல் சாத்தியமும் இல்லை. இங்கிருந்து, சரியாகச் சொல்லப் போனால் உமாமகேச்வர சன்னதிக்குக் கீழே இருந்து அதாவது பெருமாள் சன்னதியில் இருந்து தில்லைக்கும், இராமேச்வரத்துக்கும், ஏன் மெக்காவுக்கும் கூடசுருங்கை வழிகள் இருந்தன. நடத்தரையன் மனத்தளவில் நினைக்க பூமி உள்ளே விரிந்து கொடுக்கச் சாதாரண மக்களுக்காக உருவாக்கப்
பட்டவை அல்ல அவை.

அவைகள் அந்தக்கால முனிவர்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. காடுகள் நாடுகள் இனங்கள் போர்கள் முதலிய பல்வேறுதடைகளில் சிக்காவண்ணம் நேரிடையாகச் செல்ல திருக் கூட்டத்தார்க்கு மட்டும் அறிவிக்கப் பட்டு இருந்தவை இப்போது நவீன காலத்தின் இடர்பாடற்ற இனிய பயணங்களால் அவனாலேயே செயல்இறந்தன.

இக்கோவிலில் உள்ளே இருக்கும் ஓவியங்கள் பழமையானவை, அழகானவை

தலப் பெருமைகள்

1) சிதம்பரம் கோவிலுக்கு முன்பே தோன்றியது. எனவே உத்திர கோச
மங்கைக்கு ஆதி சிதம்பரம் என்ற ஒரு பேரும் உண்டு>

2) நடத்தரையர் இங்கு அறையில் ஆடிய பின்னர்தான சிதம்பரத்தில்
அம்பலத்தில் ஆடினார்

3) இது அம்பிகைக்கு பிரணவப் பொருள் உபதேசித்த இடம். ஓசம் என்றால்
இரகசியம். உத்தர என்றால் விடை. மங்கைக்கு உபதேசித்ததால் இது
உத்தர கோச மங்கை.

4) இங்குள்ள மங்களநாதர் கருவறையில் வடச் சுவற்றை ஒட்டிப்
பாணாசுரன் வழிபட்ட பாண லிங்கம் ஒன்று உள்ளது. பார்த்திருக்கிறேன்.
தனியாக அத்தாயமாக்க் கிடக்கும் உருண்டைக் கல் காலவெள்ளத்தில்
காணாமல் போகாமல் இருக்க வேண்டும்.

5) மணிவாசகரின் பாடல் பெற்ற தலம்.

6) மிகமிகத் தொன்மையானதும் இன்று வரை உயிருடன் உள்ளதும் பல
அருள் தலைமுறைகளையும் முனிவர்களையும் பார்த்த தல விருட்சம்
இலந்த மரம் உள்ள இடம்.

7) உலகிலேயே மாப் பெரிய மரகதக் கல் அதுவும் சிலை வடிவில், இன்னும்
சொல்லப் போனால் நடராசப் பெம்மானின் அருட்சீவ ஒளிசிந்த ஆடும் திருக்
காட்சி இங்குதான்.

8) வேதவியாசரும் பாராசரும் பூசித்த தலம்

9) உலகில் உள்ள 1087 சிவாலயங்களிலும் உள்ள அருட் சக்திகளைத்
தன்னகத்தே கொண்டு விளங்கும் சகஸ்ர லிங்கம்.

10) திருவிளையாடற் புராணத்தில் வரும் வலைவீசி மீன் பிடித்த படலம்
இக் கோவில் வாயிலில் நிகழ்ந்தது.

11) மணிவாசக வள்ளலுக்குச் சுத்த பிரணவ ஞான தேகம் கிடைத்த இடம்
இன்றளவும் ஒளி உருவில் அவர் அமர்ந்துள்ள இடம்.
மற்ற கொவில்களில் எல்லாம் மணி வாசகரின் திருமேனித் துறவு
நிலையில் மழித்த தலையோடு வடிக்கப் பட்டிருக்கும். இங்கே அவருக்குத்
தனிச் சன்னிதியே உண்டு,அதுவும் தவழும் சடாமுடிளோடு கன கம்பீரமாய்.
12) விழா இல்லாத ஊரா, ஆண்டுக்கு இரண்டு உண்டு. ஒன்று சித்திரைத்
திருவிழா, இன்னொன்று மார்கழித் திருவாதிரைத் திருவிழா

13) இக்கோவிலில் குடிகொண்டு அருள் பாலிக்கும் முருகப் பெம்மானின் மீது
அருணகிரிநாதர் கூட ஒரு திருப் புகழ் பாடி உள்ளார்.
தில்லையும் உத்திரகோசமங்கையும்

தில்லை என்பது சிதம்பரம். உத்திர கோசமங்கையோ ஆதி சிதம்பரம்.

ஆதிசிதம்பரத்தில் நடத்தரையர் திருமேனி தாபிக்கப் பட்ட அடுத்த நாள்
தில்லையிலும் அது தாபிக்கப் பட்டது. இது இரண்டையும் செய்தவர்
சண்முக வடிவேலர்.

இங்குள்ள இரண்டு நடராசர் சிலைகளும்தான் மூலச் சிலைகள்.
மற்ற மற்ற கோவில்களில் இந்த இரண்டையும் பார்த்துத்தான் நடராசர்
சிலைகள் வடிவமைக்கப் பட்டன.

இந்த இரண்டு சிலைகளுக்கும் கழுத்திலோ இடுப்பிலோ பாம்பு கிடையாது;
தலையில் கங்கை கிடையாது; அரையில் புலித் தோலும் கிடையாது.
இரண்டுமே இராஜ கோலம்.

தில்லையில் உள்ளது ஐம்பொன். இங்கோ இது பச்சை மரகதம்..

இரண்டு இடத்திலும் நடராசர் சன்னதிக்கு எதிரில் வலப்புறத்தே பெருமாள் சன்னிதி உள்ளது. ஒரே வேறுபாடு தில்லையில் இற்றைக்கும் பெருமாளுக்கு
வழிபாடு உண்டு(திருச்சித்ரக் கூடம்) . ஆனால் உத்திர மங்கையில் அது என்ன காரணத்தாலோ அல்லது பிணக்காலோ இன்றளவும் மூடப் பட்டுக் கிடக்கிறது. மூடி மறைத்து அதன் மேல் உமா மகேச்வர்ர் சிலையும் மணி மாடமும் உள்ளது.

இரண்டுமே மணிவாசகரால் பாடல் பெற்ற தலங்கள்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>