May 212012
அர்ஜுனன் பாசுபத அஸ்த்திரம் பெறும் பொருட்டு சிவபெருமானை நோக்கி தவம் செய்த இடம் திருக்கயிலாயம் ஆகும்.
திருக்கயிலாயத்திலும் , மானசரோவரிலும் ரிஷிகள் சூட்சுமமாக தவம் செய்கிறார்களாம் .அவர்கள் கயிலைக்கு வரும் பக்தர்களை ஆசிர்வதிக்கிறார்களாம் .என்பது இந்துக்களின் நம்பிக்கை . அவரவர் சொந்த வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு,அனைவரும் ஒன்று கூடினோம். பனிக்கட்டி மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது.கயிலை மலைமுழுவதும் பனியால் மூடப்பட்டு இருந்தது. அடியேன் பலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்; என்னவென்றால், அதிகாலையில் உதய சூரியனின் கதிர்களால் திருக்கயிலாயமலை ”தங்கம்” போல் ஜொலிக்கும்; என்று; சிவபெருமானை ”பொன்னார் மேனியனே” என்று அழைப்பதும் அதனால்தான் என்றும்,படித்திருக்கிறேன்;ஆனால், இன்றோ, கயிலை மலையே கண்களுக்கு புலப்படவில்லை.இது என்ன சோதனை என்று மனதிற்குள் நினைத்தவாறே, எங்களை வழி நடத்திச்செல்லும் சீனக்குழுத்தலைவரிடம் ‘தங்க தரிசனம்’ பற்றிக்கேட்டேன்;
அதற்கு அவர், ”பொன்னார் மேனியனை (கயிலைமலை) தரிசிப்பது வெகு அபூர்வம் என்றார்.கயிலைக்குச் சென்று திரும்பியவர்கள் அனைவருமே தங்க தரிசனம் கண்டதாகக் கூறுகிறார்களே –என்று கேட்டதற்கு, உண்மையாக இருக்காது என்றார். மே முதல் செப்டம்பர் வரை திருக்கயிலாயப்பயணம் அனுமதிக்கப்படும். இந்த நாட்களில்,ஓறிரண்டு முறை தான் தங்கம் போல் மின்னுவதைப்பார்க்கலாமாம். அவ்வாறு கிடைப்பது வெகு அரிதான ஒன்றாம் . இணைய தளத்திலிருந்து இந்தக்காட்சியை எடுத்து தங்கள் வீடியோ பதிவில் இணைத்துக்கொண்டு தாங்களே கணடது போல் கூறுவார்களாம் .
பற்பல சர்ச்சைகள் எழுந்தன . பனிப்புயல் வீசுகிறதாம், முட்டியளவு பனியாம், முன்தினம் பரிக்கிரமா மேற்கொண்டாவர்கள் பாதிவழியில் திரும்பி விட்டனராம் என்று ஏகப்பட்ட வதந்திகள். தமிழ் நாட்டிலிருந்து சென்றவர்களில் ஒருவரைத்தவிர அனைவரும் பரிக்கிரமாவை மேற்கொள்ள முடியாமல் திரும்பினோம் .(பயமுறுத்தப்பட்டோம் என்றே சொல்லலாம்) . ஆனால் சாம்ராட் அணியின் தலைவர் எங்களிடம், ”விருப்பமுள்ளவர்கள் பரிக்கிரமாவை மேற்கொள்ளலாம்”. என்று கூறிவிட்டு முன்னோக்கி செல்லத் தொடங்கினார். பனி மழை பெய்ய ஆரம்பித்தது. சிலர் பயணத்தை மேற்கொள்ள பயந்தார்கள். என்னையும் பயமுறுத்தினார்கள்.எங்கள் குழுவில் பெரும்பான்மையோர் திரும்பி விடுவது எனத் தீர்மானித்தனர். எனக்கும் வேறு வழியில்லாமல் திரும்ப வேண்டியதாயிற்று. சிலர் பரிக்கிரமாவை மேற்கொண்டனர்.வெறுப்புடன் திரும்பினேன். எனது ”பாபா” வின் அனுமதி இருந்தும் , எனது இயலாமையை எண்ணி வெட்கப்பட்டேன்.
கூர்ந்து நோக்கினால் அன்னப்பறவை , பாம்பு , சிவலிங்கங்கள் என்று தெரியும் என்றார்கள் . அவரவர்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன்
கயிலை மலை முழுவதும் பனியால் மூடப்பட்டிருந்தது . சரி.. மீண்டும் ஒரு முறை நம்மை இங்கு வரவழைப்பதற்கு ஈசன் செய்த ஏற்பாடு போலும் , என்று மனதை ஒருமுகப்படுத்திக்கொண்டு குதிரையை நோக்கிச் சென்றேன் இப்பொழுது குதிரை ஓட்டி மற்றொரு குதிரையை அழைத்து வந்திருந்தார் . இது எந்த விதத்தில் பிரச்சினை பண்ணுமோ என்று எண்ணினேன் . ஏற்கெனவே மனதிற்குள் குழப்பம் , ஏக்கம் , பரிக்கிரமா செய்ய முடியவில்லையே— இத்தனை தூரம் வந்தும் பாதியில் திரும்புகிறோமே என்று இப்போழுது குதிரை மாற்றம் வேறு . (தெரியாத புத்திசாலிக்கு தெரிந்த முட்டாளே தேவலை ) ஒன்றும் புரியவில்லை . அனைவரும் கட்டிட வாசலிலேயே குதிரைமீது அமர்ந்து செல்ல ஆரம்பித்தனர் . ஆனால் நம் தோழர் மட்டும் அருவியைத்தாண்டி ஏறுமாறு கட்டளை இட்டு குதிரையுடன் நடக்க ஆரம்பித்தார். அருவி அரை கிலோமீட்டர் தூரம் இருக்கும் (வரும்போழுதும் அங்குதான் இறக்கிவிட்டார்) .
உடலளவிலும் மனதளவிலும் மிகவும் சோர்வாக இருந்தேன். அருவியைத்தாண்டுவதற்கே அரைமணிநேரம் பிடித்தது .குதிரையின் மீது ஏறி அமர்ந்தேன் .அவ்வளவுதான் . பயங்கரமாகக் கனைத்தது . எல்லோரும் வெகுதூரம் சென்று விட்டனர் . தோழர் வாகனத்தைத் தட்டிக் கொடுத்து ஏதோ பேசினார் . மெதுவாக நகர ஆரம்பித்தது .சிறிது தூரம் தான் சென்றிருக்கும் . பயங்கரமாகக் கனைத்து நின்று விட்டது . ( முற்பகல் செய்யின் , பிற்பகல் தானே விளையும் ‘) இதற்கும் போனபிறவியில் வம்பு செய்திருக்கிறேன் போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டு , அமைதியாக மனதிற்குள் ”லலிதாசஹஸ்ரநாமம்” பாராயணம் செய்ய ஆரம்பித்தேன் . வாகனம் பத்தடிக்கு ஒருமுறை கனைத்துக்கொண்டே வந்தது . ( மஹாராஜாக்கள் நகர் வலம் வரும்போழுது , முன்னே செல்லும் வீரர்கள் , ” மஹாராஜா வருகிறார் ” ”வருகிறார்” என்று உரக்க சத்தம் போட்டுக்கொண்டே செல்வார்களே , ) அதுபோல , குதிரையும் , எனது வருகையை அறிவிக்கிறது போலும் , (இப்படியும் பாசிடிவ் வாக எடுத்துக்கொள்ளலாம் அல்லவா ) , என்று நினைத்துக்கோண்டேன் . பனிமழை வலுக்க ஆரம்பித்தது .
பனிக்கட்டிகள் முகத்தில் முத்தமிட்டு , அந்த சந்தோஷத்தில் உருகிப்போயின . இடுப்புக்குக் கீழே தண்ணீர் புகாத உடை அணியாததால் , தெர்மல் (பேண்ட்) உடையும் , சல்வாரும் நனைய ஆரம்பித்தது . கால்கள் சில்லிட ஆரம்பித்தன . இடுப்புக்குக் கீழே மரத்து விட்டது . பனிக்கட்டி மழை விட்டு விட்டு பெய்தது . காற்று பலமாக வீசியது . குதிரையும் , தோழரும் மிகமிக மெதுவாக சிரமத்துடன் நடந்தனர் . மழை விட்ட ஓரிடத்தில் , தோழர், சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம் என்றார் . ஒரு பக்கம் பாறாங்கற்கள் நிறைந்த மலை ; மறுபுறம் சரிவில் ஓடும் நதி . குதிரையோ நிலைகொள்ளாமல் தவித்துக்கொண்டிருந்தது . நானும் குதிரையிலிருந்து இறங்குகிறேன் என்று அவரைப்பிடித்துக்கொண்டு கால்களை கீழே வைத்தேன் . அவ்வளவு தான் ; என் பாரம் ( 70 கிலோ ) தாங்காமல் கிழவர் , தொப்பென்று கீழே சாய்ந்தார் . சினிமாவில் வரும் கதாநாயகி போல் நானும் அவர் மேல் விழ வேண்டியதாயிற்று . நல்லவேளை மேடான பகுதியில் சாய்ந்தார் . பிஸ்கட்டும் ,குளிர்பானமும் அளித்தேன் . மகிழ்ச்சியுடன் உண்டார் . சிறிது களைப்பாறினோம் . பிரயாணம் தொடங்கியது . மீண்டும் குதிரை ஏற்றம் . புறப்படும் இடத்தில் பெரிய பெரிய பாறாங்கற்கள் பல இருக்கும் . அதன் மீது ஏறி குதிரையின் மீது ஏறுவதற்கு வசதியாக இருக்கும் . ஆனால் இங்கோ ஒற்றையடிப்பாதை எப்படி ஏறுவது ? என்னால் ஏறவே முடியவில்லை . தோழரோ மிகச்சிறிய உருவம் . வெகு நேரம் என்ன செய்வதென்றே புரியாமல் அமர்ந்திருந்தோம் .கண்ணுக்கெட்டியெ தூரம் வரை ஒருவரையும் காணவில்லை . சரி ’பாபா’ யாரையாவது துணைக்கு அனுப்புவார் , என்று , மீண்டும் மீண்டும் லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்தபடியே இருந்தேன் . அப்பொழுது எங்கள் குழுவில் நடைப்பயணம் மேற்கொண்டவர்கள் சிலர் வந்துகொண்டிருந்தனர் . அவர்களது உதவியால் மீண்டும் வாகனத்தின் மீது அமர்ந்தேன் . பயணம் தொடங்கியது . இனி வழியில் எங்கும் இறங்கக்கூடாது என்று நினைத்துக்கொண்டேன் .
பனிக்கட்டி மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது . காமராவை வெளியே எடுக்கவே இயலவில்லை . யமதுவாரத்தை நெருங்க நெருங்க எதிரே யாத்திரிகர்கள் தென்பட்டார்கள் . ஒரு வழியாக புறப்பட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தோம் . மூன்று நாள் பரிக்கிரமா மேற்கொண்டாலும் சரி ; அல்லது பாதியிலேயே எங்களைப்போல் திரும்பி வந்தாலும் சரி , பேசிய தொகையை குதிரைக்காரர்களுக்கு கொடுத்துவிடவேண்டும் . குதிரைக்கும் , தோழருக்கும் நன்றி சொல்லியவாரே வாகனத்திலிருந்து இறங்கினேன் .
மழை விடவில்லை . அனைவரும் கூடாரத்திற்குள் அமர்ந்திருந்தனர் . சூடாக ஏதாவது குடிக்க வேண்டும் போலிருந்தது . அங்கு டீ தயாரித்துக்கொண்டிருந்தனர் . கேட்டதற்கு , ” யாக் ”கின் பால் பழக்கப்படாதவர்களுக்கு ஜீரணமாகாதாம் ; குடிக்கக் கூடாது என்று தர மறுத்துவிட்டார்கள் . அனைவரும் தங்குமிடம் வந்து சேர்ந்தோம் . பரிக்கிரமா சென்றவர்கள் நல்லபடியாக திரும்பி வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்தபடியே அனைவரும் உறங்கச்சென்றோம் . மறுநாள் அனைவரும் பரிக்கிரமாசெய்தவர்களை எதிர்நோக்கி ஆவலோடு காத்திருந்தோம் . அனைவரும் ஆரோக்கியமாக வந்து சேர்ந்தனர் . ”’ நம்பினார் கெடுவதில்லை ”’ இது நான்மறை தீர்ப்பு ஆயிற்றே !
இந்த புனித யாத்திரையில் ஒரு பெண்மணியைப்பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும் .
தெய்வ நம்பிக்கையும் , மனதில் உறுதியும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் .வயது தடையாக இருக்காது .
வயது 65க்கு மேல் இருக்கும் . தனியாகத்தான் வந்தார் . ஒரே ஒரு ஸ்வெட்டர் , பள்ளிக்குச்செல்லும் மாணவிகள் அணியும் ஷூ , ஸாக்ஸ் , ஒரு ஷால் , கொஞ்சம் புடவைகள் இவ்வளவுதான் அவரது உடைமைகள் .ஹைதராபாத்திலிருந்து வந்திருந்தார் . மராட்டி மொழியைத்தவிர எதுவும் தெரியாது . சிரித்த முகம் . எப்போழுதும் துரு , துரு வென்று இருந்தார் . மூன்று வேளையும் தனக்கு அளிக்கப்பட்ட உணவை உண்பதற்கு முன் கண்மூடி தியானம் செய்வார் . மூன்று நாள் பரிக்கிரமாவையும் செய்தார் . இரண்டாம் நாள் பரிக்கிரமா மேற்கொள்ளவேண்டாம் என்று சிலர் அவரைத் தடுத்த போது , ” பகவான் ” பார்த்துக்கொள்வார் , இந்த உயிர் பகவானுக்கு சொந்தமானது என்று கூறி விட்டு குதிரையின் மீது அமர்ந்து செல்லத்தொடங்கினார் . வழியில் எந்தவிதமான சிரமத்தையும் , அவர் , ஒருவருக்கும் அளிக்கவில்லையாம் . இருபது வயது பெண்ணைப்போல் உற்சாகமாக வந்தாராம் . “”என்னே அந்த ஈசனின் கருணை “” . கள்ளமில்லா மனத்துடன் தன்னை நாடி வருபவர்களை அரவணைப்பதில் அவனுக்கு நிகர் ஏது ? .ஆனால் அந்த அம்மையார் தன் பிள்ளைகளிடம் சொல்லிவிட்டுத்தான் வந்தாராம் ; எதிர்மறையாக எது நேர்ந்தாலும் வருத்தப்படக்கூடாது என்று .
…தொடரும்
பாபா நளினி
ஆன்மீகம் , பயணக்கட்டுரை , ஈசன், பரிக்கிரமா , பகவான் , யாக் , டீ , பனிமழை , குதிரை ,
லலிதாசகஸ்ரநாமம் , பாபா , கயிலாயம் , சிவபெருமான் , பொன்னார் மேனியனே , சீனா
eesan , lord shiva , parikrama , yak , tea , horse , pony, shiva , china , baba , himalayas , pilgrimage
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments