/* ]]> */
Feb 142012
 

உலகின் ஆகச்சிறந்த காதல் கதை : ஜமீலா ..

சிங்கிஸ் ஐத்மதேவின் ஜமீலா –நான் படித்ததிலேயே ஆகச்சிறந்த காதல் கதை என்பேன் . மூலக்கதை ரஷ்ய மொழியிலானது . தமிழில் மொழிபெயர்த்தவர் பெயர் நினைவில் இல்லையென்றாலும், சின்னஞ்சிறுமியாய் இருந்த போதே சரியாகப் புரிபடாத  கதை அப்போது என்றாலும் கூட கிட்டத்தட்ட மனப்பாடம் ஆகும் அளவுக்கு ஜமீலாவைப் படித்திருக்கிறேன்  . இன்னமும் ஜமீலா எனும் போது முட்டி வரையிலும் நீண்டு தொங்கிய அவளின் இரட்டைப் பின்னல்கள் பற்றின வர்ணனையும் வெண்ணிற கைக்குட்டை உடுத்திய அவள் அழகு ததும்பும் முகமும் ஏதோ நெருங்கின தோழி ஒருத்தியின் நினைவு போல் நிறைந்து தளும்புகிறது மனதில் . நான் பார்த்தறியாத இந்த ஜமீலா ஏனோ என் மனதுக்கு மிக நெருக்கமானவள்.

கட்டுப்பாடுகள் மிகவும் கூடிய ரஷ்ய ,இஸ்லாமிய குடும்பத்தின் மருமகள் ஜமீலா .கணவன் சாதிக் போருக்குப் போயிருக்கின்றவன் .இவள் கூட்டுப்பண்ணை விவசாயப் பெண் . . கடுமையான உழைப்பாளியாகவும் ,மூத்தவர்களுக்கு மரியாதை செலுத்துபவளாகவும் இருந்த போதும் துணிவும், மனதில் பட்டதை ஒளிக்காமல் பேசும் சுபாவமும் கொண்டவள்  . கதை சொல்லி இவளின் கொழுந்தன் . அவனுக்கும் இவளுக்குமான பிணைப்பும் நட்பும் கவித்துவமானது .

தனிமையில் வாடிய போதும் பண்ணையில் உடன்பணிபுரியும் இளம் வாலிபர்களின் காதல் கரநீட்டல்களை ஆத்திரத்துடன்  மறுக்கும் ஜமீலா ,தானியார் என்ற கால் முடமான முன்னாள் போர் வீரனைப் பார்த்த மாத்திரத்தில் (அவன் அவளின் பால்ய தோழன் என்பதாக நினைவு ) காதல் வசப்பட்டு காதலற்ற தன் மணவாழ்வைத் துறந்து , ஆதிக்க குணம் படைத்த தன் கணவனை வெறுத்து அவன் உடன் போகிறாள் .

கதையின் முடிவாக வரும் வரிகள் மிக்க அழகானவை . அவர்கள் இருவரும் ஊர் நீங்குவதைப் பார்த்துக்கொண்டு இருந்தாலும் அதைத்தடுக்க நினைக்காமல் அந்த காட்சியை ஒரு சித்திரமாகவும் தீட்டி வைக்கிறான் “கிச்சினே பாலா” என்று ஜமீலா அன்போடு அழைத்து வந்த அவளின் கொழுந்தன் . அவள் ஊரை ஏமாற்றி இருக்கலாம் , தன் உள்ளத்தை அதில் பெருகி வழிந்த காதலை , அன்பை , தன் அன்பனை ஏமாற்றவில்லை .கதை சொல்லி தனக்குத் தெரிந்தே அவர்கள் ஊரை நீங்கினாலும் அதை மறைத்து தன் குடும்பத்தை ஏய்த்தாலும் காதலில் உருகிக்கரைந்த இரு இதயங்களை ஏமாற்றவில்லை என்பதோடு நிறைகிறது கதை .

முக்கியமான அம்சம் இதில் என்னவென்றால் ஆன்மாவை உருக்கும் அளவிலான குரல் வளம் கொண்டவன் தானியார் என்பதும் ,ஜமீலா அந்த இசையில் உலகின் மீது, இயற்கையின் மீது ,வாழ்வின் மீது அவன் கொண்டிருந்த காதலைக் கண்டு விட்டாள் என்பதும் தான் . தன்னை தன் குடும்பத்துக்கு உழைத்துப் போடுபவளாகவும் தனக்குக் கட்டுப்பட்டு வாழும் ஒருத்தியாகவும் மட்டுமே பாவித்த தன் கணவனில் இருந்து முற்றிலும் வேறுபட்ட தன் காதலனை அவள் தெரிவு செய்து கொண்டாள் . வாழ்வு கொண்டாடப் படவேண்டியது ஒன்று தானே ? இசையாக ! கவிதையாக ? தன்னை ஒரு அடிமையாக நினைத்தவனை உதறி இசையானவனை , மழையாளானவனை ஜமீலா தேர்ந்து கொண்டாள் .

ஆகச்சிறந்த காதல் பாடல் : மாலை நேரம் மழைத்தூறும் காலம் ..

ஆன்ட்ரியா தமிழ்த் திரைப்பட உலகில் நான் ரசிக்கும் மிகச்சில நடிகைகளில் ஒருவர் . அழகானவர் என்பதோடு அருமையாகப் பாடுவார் என்பதும் தான் இவரிடம் மிகவும் பிடித்த விஷயம் . ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இவர் பாடியுள்ள மாலை நேரம் மழைத்தூறும் காலம் என்ற இந்தப் பாடல் என்னளவில் மிகச்சிறந்த காதல் பாடல்களில் ஒன்று .

காதலனை ஏதோ ஒரு தேவதூதன் போல் கருதி வந்த நிலையில் தான் எத்தனை அழகான , கம்பீரமான மாற்றம் ?

காதலுக்கான ஒரு யாசிப்பு இந்தப் பாடலில் இருக்கிறது  என்றாலும் அதைச் சொல்லும் விதம் தான் எத்தனை கம்பீரமானது , கண்ணியமானது ?

“ஒரு முறை வாசலில் நீயாய் வந்தால் என்ன நான் கேட்கவே துடித்திடும் வார்த்தை சொன்னால் என்ன ?”

“இரு மனம் சேர்கையில் பிழைகள் பொறுத்துக்கொண்டால் என்ன ?இரு திசைப் பறவைகள் இணைந்தே விண்ணில் சென்றால் என்ன ? “

“உன் தேடல்கள் நானில்லை என் கனவுகள் நீயில்லை ..இரு விழிப் பார்வையில் நாம் உருகி நின்றால் என்ன ?”

இவ்வரிகளில் இன்றைய இளம் பெண்களின் ஆன்மா , அவர்களின் காதல் பற்றின நிலைப்பாடு ததும்புகிறதே !

பாடலாசிரியரின் காதல் மற்றும் பெண்ணியப் புரிதல் சிலாகிக்கத்தக்கது . இவ்வளவே தான் இன்றைய என்றைய பெண்ணின் தேடலும் ஏக்கமும் .. என்னைப் புரிந்து கொண்டு வா ..என்னைக் கொண்டாடு ..நாம் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் மழைநாளாகக் கொண்டாடுவோம் என்பது !

ஆகச்சிறந்த காதல் படம் : டான்ஸ் வித் மீ ..


டான்ஸ் வித் மீ (Dance with me 1998 )உணர்வுபூர்வமான ஒரு காதல் கதை . ரூபி( முன்னாள் மிஸ். அமெரிக்கா வனிஸா வில்லியம்ஸ் ) ஒரு ப்ரொஃபெஷனல் டான்ஸர் .உடன் ஆடிவந்த முன்னாள் காதலன் மூலம் ஒரு குழந்தையும் உண்டு அவளுக்கு . காதலில் கசப்பு கொண்டு மீண்டும் ஒரு உறவு ஏற்படுத்திக்கொள்ளும் எண்ணமே அற்று இருப்பவள் . மிகச்சிறப்பாக நடனம் ஆடுபவனும் எப்போதும் புன்னகை பூத்திருக்கும் முகத்துக்குரியவனும்மான ரஃபேலை சந்திக்கும் ரூபி கட்டுங்கடங்காத வண்ணம் காதல் வயப்படுகிறாள் அவனிடம் . ரஃபேலாக நடித்திருக்கும் பாடகர் ஷயேன்னின் ப்ளஸ் பாயிண்ட்ஸ் அவருடைய, மனங்களை மலரச்செய்யும் சிரிப்பும் ,அட்டகாசமான நடனத்திறனும் .

ஒரு காட்சியில் கொண்டாட்டமான ஒரு குழு நடனத்தில் தன்னை மறந்து ஆடுகிறாள் ரூபி , அவள் அணிந்திருக்கும் ஆடை மார்பிலிருந்து தொடை வரையில் இறுகக் கவ்வும் வகையிலானது (அதாவது தோளில் மாட்ட ஸ்ட்ராப் இல்லாத வகை ) . விஷமி ஒருவன் அவள் அறியாமல் பின்பக்க ஜிப்பை மெதுவாக பிரித்துவிட்டு விட ,சட்டென்று கவனித்து விடும் ஹீரோ ஆடியபடியே அவளை இழுத்து ,ஆட்டம் கெடாமல் அவள் ஜிப்பை அணிவித்து விடுகிறான் ..வாவ்! விபரம் புரிந்து ரூபியின் முகத்தில் பூக்கும் நிம்மதியும் ,நன்றியும் கலந்த எக்ஸ்ப்ரஷன் பிரமாதம் !

குறிப்பிடத்தக்க இன்னொரு சீன் ரூபியை சிரிக்க வைக்க, கிட்டத்தட்ட சார்லிசாப்ளின் ரேஞ்சுக்கு ,செயற்கை நீர் ஊற்றுகளில் நனைந்த வண்ணம் ரஃபேல் நடனம் ஆடுவது.

க்ளைமாக்ஸ் இல்  இன்டெர்னேஷனல் நடனப்போட்டியில் பங்குபெற்று முன்னாள் காதலனுடன் ஆட மனமற்று இருக்கும் ரூபிக்கு ,கூட்டத்தில் இருந்தவாறே தன் பார்வையின் மூலம் உற்சாகம் அளிக்கிறான் ரஃபேல் – தன் முன்னாள் காதலனில் ரஃபேலை வரித்துக்கொண்டு பிரமாதமாக ஆடி கோப்பையை வெல்கிறாள் ரூபி !

அருமையான லத்தீன் அமெரிக்க இசையும் ,பிரம்மாதமான பெப்பி நடனங்களும் ஒரு கொண்டாட்டமான மனநிலைக்கு நம்மை அழைத்துச்செல்வன . காதல் துணையுடன் பார்க்க பிரமாதமான படம் ( சற்றே பழயது என்றாலும் ) .

ரூபியின் மகனை ரஃபேல் தன் குழந்தை போலவே பாவிப்பதும் நட்புடன் கூடிய உன்மத்தமான காதலை அவளை முதன்முறையாக அனுபவிக்க செய்வதிலும் அவள் மனதை வென்று விடுகிறான் என்பது தான் ஹைலைட் !

ஆகச்சிறந்த காதல் கவிதை :

இது ஒரு சிறுவன் தன் தோழிக்கு எழுதியது . இதில் தளும்பி நிறையும் இன்னோசென்ஸும் , காதலும் நான் படித்தவற்றில் இதைச் சிறந்ததாக எப்போதும் என்னை எண்ண வைத்திருக்கிறது .

My dear
I share with thee my dreams
not of glitter nor of naught
and certainly not in black and white !
I can see the rainbow of care shared
and you by my side – when i leave !
and then
the strength of thousands of smiles for you
and as a reflection the ….
benign Almighty !
இயன்ற வரையிலான என் தமிழாக்கம் இது

அன்பே
உன்னுடனான என் கனவுப் பகிர்வில்
யதார்த்தம் தவிர நகாசு ஏதுமில்லை !
வானவில்லாய் ஒளிரும் நம் அன்பும் நீயும் வேண்டும்
நான் விடை பெரும் தருணம்!
மறைந்தும் தருவேன் உனக்கு
துயர் தாங்கும் திடம்
உன் புன்னகையில் காண்பேன்
உலகாளும் இறைவன் உறையும் இடம் !

உலகின் சிறந்த காதலன்:

இவர் காதலித்து கலப்பு மணம் புரிந்து கொண்டவர் .  “இவருக்கு இணையாக நானும் சம்பாதித்தேன் “என்று மனைவி பெருமிதம் கொண்ட போதெல்லாம் “இவளுக்கு இணையாக நான் வீட்டு வேலைகளிலும் பிள்ளை வளர்ப்பிலும் கை கொடுத்தேன்” என்று ஒரு முறை கூட பதிலுக்கு சொல்லிக்கொள்ளாதவர் ! இயலாத வயதிலும் மனைவியின் அறுவை சிகிச்சையின் போது உடன் இருந்து ,பெண் பிள்ளைகள் தான் தாய்க்கு சேவை செய்ய முடியும் என்ற வழக்கத்தைப் பொருட்படுத்தாமல் ,அத்தனை பணிவிடையும் செய்து மனைவியைத் தாங்கினவர் .

அவரே உலகின் சிறந்த காதலர் ..அவர் என் அப்பா !

..ஷஹி..

 

tags,

valentines day , valentine , lovers , love story, rushyan story , chinghiz aitmatov, jameela, dance with me, love poem, love poetry , tamil love poetry, love, andrea, aayirathil oruvan, malai neram mazai thoorum kalam,

 

சிங்கிஸ் ஐத்மதேவ் , காதலர் தினம், காதல் , காதலர்கள், சிங்கிஸ் ஐத்மதேவ் , ஜமீலா, ரஷ்ய கதை, ருஷ்ய நாவல் , காதல் கவிதை, காதல் பாடல், ஆண்ட்ரியா , ஆயிரத்தில் ஒருவன், மாலை நேரம் மழை தூறும் காலம் பாடல், டான்ஸ் வித் மீ , லத்தின் அமெரிக்க இசை , லத்தின் அமெரிக்க நடனம், வனீஸா வில்லியம்ஸ்

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>