/* ]]> */
Nov 182011
 

இன்னாருடைய ரசிகை அல்லது விசிறி நான் , என் ஆதர்சம் இவர் என்று சொல்வதை எப்போதுமே வெறுத்து வந்திருக்கிறேன்(எஸ்.ராவை தவிர்த்து ). அதிலும் திரை நட்சத்திரங்களின் மீது பைத்தியமாக அலைபவர்களைக் கண்டால் நஞ்சு தான் எனக்கு. வார்த்தைகளின் வழி விரிவதை விட விஷுவல் மீடியாவில் அதிகம் விரிந்து விடாது என்பதிலும் ஓர் பிடிவாதம். மணிக்கணக்காகப் புத்தகங்கள் படிக்க இயன்று வந்திருக்கிறது, படிக்கும் நாள் தொட்டே. ஆனால் சில நிமிடங்களுக்கு மேல் திரையில் ஒன்ற இயலாமல் போகிறது.

வெகு சில படங்கள் மட்டும் தான் சேர்த்து இழுத்து என்னைக் கட்டிப்போட்டிருக்கின்றன திரையோடே..இது ஏதோ ரசனை சம்பந்தப்பட்ட விஷயமாக சொல்லிக் கொள்ளவில்லை..இயலாமை என்று தான். அப்படி வெகுவாக நான் ரசித்த, அல்லது எனை ஈர்த்துவிட்ட படங்கள் பெரும்பாலும் குழந்தைகள் படங்களாகவோ கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாகவோ தான் இருக்கின்றன.

ஏனோ ஒரு பொம்மை போன்ற பாத்திரங்களில் வந்து செல்லும் நாயகியர் என்னை வெகுவாக எரிச்சல் கொள்ளச்செய்கின்றனர். அதே போல கடுமையான சென்டிமெண்ட் காட்சிகள் அருவருப்பு உண்டாக்குகின்றன. இப்படி ஒரு மனப்போக்கில் உள்ள ஷஹியாகிய நான் பெரிதும் விரும்பும் ஒரு பெண், ஒரு நடிகை, நந்திதா தாஸ்.

பெண் சாதனையாளர்களை அங்கீகரிக்கும் சர்வதேச பெண்கள் அமைப்பின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் முதல் இந்தியராக இணைந்திருக்கிறார் நந்திதா தாஸ் என்று விகடனில் படித்ததில் இருந்தே மகிழ்ச்சியாக இருக்கிறது.

சுரணையுள்ள ஒரு இந்தியப்பெண்ணாக வெகுவாக மகிழ்கிறேன்.

ஜதின் தாஸ் என்ற ஒரிய ஓவியருக்கும் வர்ஷா என்ற எழுத்தாளருக்கும் பிறந்தவர் தான் நந்திதா. புவியியலிலும் சமூக சேவையிலும் பட்டம் பெற்றுள்ள நந்திதா நடிப்புப்பயிற்சியும் பெற்றிருக்கிறார்.

தி திங்கிங் மான்ஸ் ஆக்ட்ரெஸ் (the thinking man’s actress) என்று அழைக்கப்படும் நந்திதா குழந்தைகள் மற்றும் பெண்கள் நலனில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். ஃபயர், எர்த், ஃஃப்ளீட்டிங் பியூட்டி, அழகி, கன்னத்தில் முத்தமிட்டால், கண்ணகி, கம்லி, மாட்டி மாய் என்று தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், மராத்தி, இந்தி, உருது, மலையாளம் ஆகிய பல மொழிகளில் நடித்திருக்கிறார்.

அவர் இயக்கிய முதல் படம் ஃபிராக் – ஆசிய முதல் திரைப்படங்கள் விழாவில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த திரைக்கதை, ஆசிய முதல் திரைப்படங்கள் விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான பர்பிள் ஆர்ச்சிட் விருது, கேரள சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு ஜூரி விருது,சர்வதேச தெஸாலோனிகி திரைப்பட விழாவில் சிறப்புப் பரிசு ஆகியவற்ரை வென்றது உலகளாவிய கவனம் பெற்றது. மேலும் சர்வதேச தெஸாலோனிகி திரைப்பட விழாவில் கோல்டன் அலெக்ஸாண்டர் க்காக பரிந்துரைக்கப்பட்டது.

2002 இல் குஜராத்தில் நிகழ்ந்த கலவரம் தான் ஃபிராக்கின் கதை.

நம் நாட்டில் நடக்கும் மதக்கலவரங்களைப் பற்றிய முற்றிலும் புதிய ஒரு கோணத்தைக் காட்டியிருக்கிறார் நந்திதா, கலவரங்கள் ஓய்ந்த பிறகு அவற்றினால் ஏற்படும் பாதிப்புகள், சமூகத்தில் மட்டுமல்லாமல் வீட்டிலும் எத்தகைய தாக்கங்களை உண்டாக்குகின்றன என்பதையும் துவங்கின வேகம் மாறாமல் சொல்லியிருக்கிறார்.

“டொராண்டோ, லண்டன், புசான், கொல்கத்தா மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட உலகின் பல்வேறு பாகங்களிலும் பார்வையாளர்களால் இந்தத் திரைப்படம் பாராட்டப்படுவது குறித்து ஃபிராக் திரைப்படத்திற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். எல்லாவற்றிற்கும் மேல் மனித உணர்ச்சிகள் உலகளாவியது என்பதையும், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெற்ற இதுபோன்ற பின்னூட்டத்தால் நான் அதை இன்னும் அதிகமாக புரிந்துகொண்டேன். பார்வையாளர்களால் எங்கு வேண்டுமானாலும் பயணிக்க முடிகிற கதாபாத்திரத்தோடு ஒன்று கலக்க முடிந்திருக்கிறது. இந்தக் கதை அமைக்கப்பட்டுள்ள, இதனோடு தங்களை அதிகம் அடையாளம் காண்கின்ற இந்தியாவிலும் அப்படித்தான். இன்னும் அமைதியாகவே இருக்கும் விஷயங்களுக்கு இந்தத் திரைப்படம் ஒரு குரலை அளித்திருப்பதாக சொல்லப்படுவதோடு இது குறைந்தது ஒருமுறையேனும் பார்க்கப்பட வேண்டும். நாங்கள் இந்தத் திரைப்படத்தோடு நுழைந்த ஒவ்வொரு போட்டி விழாவிலும் விருதுகளை வெல்வது நல்ல விஷயமாக இருந்தாலும் பார்வையாளர்களின் எதிர்வினைகளே முக்கியமானதாக இருக்கிறது”  என்கிறார் நந்திதா ஒரு இயக்குனராக தன் கன்னி முயற்சிக்குக் கிடைத்த உலகளாவிய கவனம் குறித்து.

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் அந்தப் போராளி ஷ்யாமா பாத்திரத்துக்கென்றே பிறந்தவர் போல் எத்தனை அழகாகப் பொருந்திப்போனார் நந்திதா? படத்தில் அவருடைய ரோல் எத்தனை சிறிதோ அத்தனை பெரிதல்லவா அதன் வீச்சு? தாயும் மகளும் சந்தித்துக்கொள்ளும் அந்தக் காட்சியில் இதயம் வெடிக்கக் கதறாதவர் யார்? அந்தத் தாய், மகளுக்காக மட்டுமல்லாமல் இவளைப்போன்றோர் இன்னம் எத்தனை பேரோ என்று எல்லோரையும் திகைக்க வைத்த நடிப்பல்லவா அவருடையது? குட்டி கீர்த்தனா அவ்வளவு சிறப்பாக நடித்திருக்கிறார் என்றாலும் துளி ஒப்பனை இல்லாமல், அந்தக் கூர்நாசியும் துடிப்பிலும் உதடுகளின் வெடிப்பிலும் அள்ளிக்கொள்கிறாரே நந்திதா நம் மனங்களை?

தீபா மேதாவின், மிகுந்த சர்ச்சைக்குள்ளான, ஃபயர் படத்தில் ஒரு லெஸ்பியன் பாத்திரத்தில் நடித்து பெரும் பரபரப்புக்குள்ளானார் நந்திதா.

ஒடுக்கப்பட்ட ,மன மற்றும் உடற்தேவைகளை ,இரு பெண்கள் ,சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணம் முன்னிட்டும், தங்களுக்குள்ளாகவே தீர்த்துக்கொண்ட கதையாகத் தான் ஃபயரை என் வரையில் பார்க்கிறேன். ஏதோ பாலியல் திரிபுகளும் , குரூரங்களும், வன்முறைகளும் நம் நாட்டில் எங்குமே என்றுமே நிகழ்ந்ததில்லை..இம்மாதிரியான படங்கள் வந்து தான் அப்படி ஓர்  நிலை இப்பூமிக்கு வந்து விடும் என்பது போன்ற ஓர் நிலைப்பாட்டை முன் வைத்து ஏகப்பட்ட அமர்க்களங்கள் நடத்தப்பட்டன.

நந்திதா அட்டகாசமாக, அனாயாசமாக நடித்து ,தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்கு வலு சேர்த்தார். மகா துணிச்சல் கொண்டவர் அவர் என்பது இதில் இருந்தே தெரிய வந்தது. அதே சமயம் அழகி படத்தில் பதவிசான, அமைதியான ஒரு தனலக்ஷ்மியாக நடித்து ஒரு மயிலிறகாக வருடவும் அவரால்முடிந்தது.

.

தன்னுடைய படங்கள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும், இந்தியாவில் சக்திவாய்ந்த தேசிய இயக்கத்தின் தேவை குறித்தும் உலகம் முழுவதிலும் பேசி வரும் நந்திதா எய்ட்ஸ் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறை குறித்தும் பேசிவருகிறார். அவர் 2009 ஆம் ஆண்டில் இந்திய குழந்தைகள் திரைப்பட சமூகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். 2010 இல் சுப்தோஷ் மஸ்காராவைத் திருமணம் செய்து கொண்ட நந்திதாவுக்கு விஹான் என்ற பெயரில் ஆண் குழந்தை ஒன்று இருக்கிறது.

“தனது திறமையான நடிப்பால் பெண்களின் அவலமான வாழ்வியல் சூழலை வெளிச்சத்துக் கொண்டு வந்தவர்” என்று புகழப்படும் ,இத்தனை அழகான, நடிகை, இயக்குனர், தாய், பெண்கள் மற்றும் சமூக நலனில் அக்கறையும், உலக அரங்கில் இந்தியப்பெண்களுக்கு சிறப்பான ஒரு கௌரவத்தையும் பெற்றுத் தந்த நந்திதாவின் ரசிகை என்று உங்களிடம் ஒப்புக்கொள்வதில் பெருமகிழ்கிறேன்.

 

..ஷஹி..

(நந்திதாவின் விருதுகள் பற்றின தகவல் நன்றி விக்கிபீடியா)

 

tags

nandhitha dass, azagi, firaaq, fire, hall of fame, the thinking man’s actress, earth, fleeting beauty, kannathil muthamittal, kannagi, kamli, gujarath

நந்திதா தாஸ், அழகி, ஃபயர், ஹால் ஆஃப் ஃபேம், தி திங்கிங் மான்ஸ் அக்ட்ரெஸ், யெர்த், ஃப்ளீடிங் பியூட்டி, கன்னத்தில் முத்தமிட்டால், கண்ணகி, கம்லி, குஜராத்

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>