இயல்பானவைதாம் என்றாலும்
அபூர்வ வானியல் நிகழ்வுகள் போல
கவனிப்புக்கு உரியவை
நம் சந்திப்புகள்.
வாழ்தலின் உந்துதலை
உன்னிடமிருந்து பெறும்
அத் தேவ தருணங்களில்
நான் உயிர்த்தெழுகிறேன்.
ஓரங்குலமே மீந்த நெருக்கத்தில்
கிட்டும் உன் அண்மை
என் வனாந்தரங்களில்
பருவ மழையைப் பொழிவிக்கிறது.
கரடு தட்டிப் போன
என் நிலத்து மண்ணைக் குழைவிக்கிறது.
என் தோட்டத்தின்
கத்தரிப் பூக்கள்
சூல் கொள்கின்றன.
நான் காயகல்பம் அருந்திய
கிறக்கம் கொள்கிறேன்.
என்றாலும்
பேசப்பட வேண்டிய விஷயம்
பேசப்படாமலேயே
நம் சந்திப்பு முடிந்து விடுகிறது.
நீ விடைபெற்றுச் செல்லும் தருணத்தில்
வெறுமையின் பெருவெளியில்
நான் சிறைப்படுகிறேன்.
பிரியமானவளே,
ஒரு ஒற்றை மழைத்துளிக்காய்
உயிர் உருகக் காத்திருக்கும்
சாதகப் பறவையைப் போல
உன் இதழ் உதிர்க்கப்போகும்
அந்த ஒற்றைச் சொல்லுக்காக
நான் ஏக்கத்துடன் காத்திருக்கிறேன்
நம் அடுத்த சந்திப்பை நோக்கி.
..வீரை பி. இளஞ்சேட்சென்னி
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments