வந்ததே சொந்த வீடு

அணில் கீச்சிட்டு குதித்தோடும்
ஒரு மத்தியான வேளையிலோ…
உரிமையாளரின் கடிந்த குரலில்
உறக்கம் வரா பொழுதினிலோ…
எப்போதோ கைவிட்டுப் போன
காரைக் கட்டிடத்தின் வனப்பும்
கனவிலே வந்தே கலைத்தது…!
கல்லெறிந்த நீர் வளையங்கள்
துடுப்பிழந்த படகாய் ஆட்டிட,
மண்ணை உரிமை காணும்
ஆவல் உள்ளே கிளைத்தது.
கையிருப்பில் கட்டாந்தரையும்,
கடன் பெற்றே செங்கல் சுவரும்,
கழுத்து தங்கத்தை வைத்தாலும்
முழுமை பெறாமல் தவிர்த்தது.
வாரயிறுதி கறிச்சோறு விலக்கி
மதிய வேளையில் தேநீர் பருகி
காலை மாலையில் சிக்கனமாக
கீரையுடன் அரிசிக்கஞ்சி குடித்து,
குல தெய்வத் திருவிழா முடித்து,
ஒரு காசு வேண்டுதல் முடிச்சுடன்
பொங்கல் விழா புத்தாடை மறந்து
மழைக்கான கடவுளை வேண்டி…
பூமியிலிருந்து முளைத்து வந்தது
வெண்ணிறத்து தேவதையாகவே.
கடன் தீர, வைத்தது மீட்டெடுக்க
இன்னும் பல வருடம் விரதமே!
ஆனாலும்…
சன்னலோர மரத்தின் காற்றில்
தவிட்டுக் குருவிகளும் கீச்சிட
வாயிலோரத்து மல்லிகை மணம்
குட்டித் தம்பியின் மழலைமொழி
அக்காவின் வெள்ளி கொலுசொலி
சின்னச் சின்ன சண்டைகளுடன்
துள்ளிக் குதித்தாடிய வெற்றிகள்
தற்காலிக தோல்வியின் அழுகை
அடுப்படியில் அம்மாவின் மணம்
அலமாரியில் அப்பாவின் உடை
இன்னும் எத்தனையோ….
அடிச்சுவடுகள் அரிச்சுவடிகளாய்
நினைவு பொதிந்த பெட்டகமாக
வாழ்ந்த கதை கூறும் தோழியாக
இனிய சுமையாகும் காதலிபோல்
வந்ததே எங்கள் சொந்த வீடு.!
- சாகம்பரி, மகிழம்பூச்சரம்
Tags : tamil poem on owning a new house and buying a own house in tamilnadu , tamil poetry on new house
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments




//இனிய சுமையாகும் காதலி போல் வந்ததே எங்கள் சொந்த வீடு//
ஒன்றைப்பெற பலவற்றை இழக்க வேண்டியுள்ளதை அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
அருமையான புது வீட்டை எங்களுக்காகவே கவிதையாகக் கட்டித்தந்து,
அதை நாங்கள் அடைய தகுந்தபடி அடையாளமும் காட்டியதற்கு நன்றிகள். அன்புடன் vgk
கருத்துரைக்கு நன்றி சார்.
கவிதையில் கட்டிய வீட்டுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி ராஜேஸ்வரி
சென்னை பாசஹியில் சொன்னால் … சாகம்பரி… உங்கள் தமிழ் வூடு கட்டி விட்டது
மெய்யாலுமேயா? தேங்க்ஸ்பா.
வீடு கட்டப்போகிறேன்————
இந்த
இனிய
கவிதையின் கரம் பிடித்து………….அமல்