/* ]]> */
Oct 032011
 

பழமொழிகளில் வாதமும் பிடிவாதமும்

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

pazamozi

     மனிதர்கள் தங்களுக்குள் பேசுவதனைப் பலவகைளில்  குறிப்பிடுவர். மக்கள் பேசுவதை வீண்பேச்சு, வெட்டிப் பேச்சு, கேலிப்பேச்சு, திண்ணைப் பேச்சு, கிண்டல் பேச்சு, கிறுக்குப் பேச்சு, பிடிவாதப் பேச்சு என்று கூறுவர். இருவர் சாதராணமாகப் பேசிக் கொண்டிருக்கும்போதே கோபமுற்று ஒருவருக்கொருவர் காரசாரமாகப் பேசுவர். அதுமட்டுமல்லாது சிலர் காரசாரமாகப் பேசுவர். அது மட்டுமல்லாது சிலர் ஒரு பொருள் பற்றியோ அல்லது வேறு ஏதேனும் செய்தி பற்றியோர கருத்துக் கூறும்போது மற்றவர்களின் கருத்தைக் கேட்காது தாங்கள் கூறிய கருத்துத்தான் சரியானது என்று கூறுவர். யார் எடுத்துக் கூறினாலும் ஏற்றுக் கொள்ளமாட்டார். தான் கூறியதை மட்டும் கூறிக் கொண்டே இருப்பார். இதனை வாதம் புரிதல், அல்லது வாதம் செய்தல் என்று கூறுவர்.

     வழக்கத்தில் இதனை விவாதம் செய்தல் அல்லது விவாதித்தல் என்றும் குறிப்பிடுவர். இவ்வாதம் பற்றிய கருத்துக்கள் பழமொழிகளில் பலவிதங்களில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாதம் – விவாதம்

     நோய்களுள்  மிகவும் கொடியது வாத நோயாகும். இவ்வாதம் கீழ்வாதம், முடக்கு வாதம், பக்க வாதம், விரை வாதம் எனப் பலவகைப்படும். கால் முகம், கைகள் ஆகியவை ஒருப க்கமாக இழுத்துக் கொண்டு செயல்படாநிலையை உண்டாக்கக் கூடிய தன்மை உடையதாக இவ்வாத நோய் அமைகிறது.  மருந்தும் முறையான பயிற்சியும்(பிசியோதெரபி) கொடுத்து இந்நோயை நாம் குணப்படுத்தலாம்.

     ஆனால் சிலர் ஒன்றுமில்லாதவைகளுக்காக தாம் கூறும் கருத்தே சரியானது என்றும் தான் செய்வதுதான் சரி யென்றும் தம்மை, தம்நிலையை எந்த வகையிலும் மாற்றிக் கொள்ளாது இருப்பர். இதனைப் பிடிவாதம் எனலாம் இவ்வாறு வீண் பிடிவாதம் என்பது மனிதனுக்குக் கூடாத, பொருந்தாத, வாழ்வில் கைவிடத்தக்க பண்பாகும். அவ்வாறு கைவிடக் கூடிய பண்பினைச் சிலர் சிக்கெனப் பிடித்துக் கொள்வர். இது தவறானது. இதனை வரட்டுப் பிடிவாதம் என்றும் கூறுவர்.

     இத்தகைய பிடிவாதத்தால் பலர் வாழ்க்கையை இழந்துள்ளனர். அரசனிலிருந்து ஒன்றுமில்லாமல் பிச்சை எடுப்பவரர் வரை  இப்பண்பினை விட்டொழிக்க வேண்டும். மகாபாரதத்தில் வரும் துரியோதனன் தமக்குப் பெரியோர்கள் பல நன்னெறிகளை எடுத்துரைத்தபோதும் வீண் பிவாதமாக இருந்தான். அதனால் சுற்றத்துடன் இறந்தான். இராமாயணத்தில் வரும் இராவணன் தான் செய்வது தவறு என்று உணர்ந்தும் சீதையை விடுவிக்காது வீண் படிவாதததினால் சுற்றத்தாருடன் இறந்தான்.

இப்பிடிவாதம் கொண்டவனை மட்டும் அழிக்காது அவருடன் இருப்போரையும், சேர்ந்தோரையும் அழித்தொழிக்கும் தன்மை வாய்ந்தது. வீண் பிடிவாதம் ற்றிக்குத் தடையாகும். அதனால் பிறர் கூறும் நற் கருத்துக்களைக் கூட நாம் ஏற்க முடியாத நிலை ஏற்பட்டு அழிவு நிலைக்குக் கொண்டு செல்லும். இத்தகைய பிடிவாதத்திற்கு மாற்று மருந்தே இல்லை. இது அவரவர்களாகத் தெரிந்து தெளிந்து தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இத்தகைய அரிய வாழ்வியல் கருத்துக்களை,

     ‘‘வாதத்திற்கு மருந்துண்டு

     பிடிவாதத்திற்கு மருந்துண்டா?’’

என்ற பழமொழி தெளிவுறுத்துகின்றது. இதனையே,

‘‘வாதத்திற்கு மருந்து கொடுக்கலாம்

பிடிவாதத்திற்கு மருந்து கொடுக்க முடியுமா?’’

என்றும் வழக்கில் மக்கள் வழங்குவர்.

பிடிவாதம் – தூக்கம்

     சிலர் உண்மையில் தூங்குவர். சிலர் தூங்குவதைப் போன்று நடிப்பர். உண்மையில் தூங்குபவரை எழுப்பிவிடலாம். ஆனால் தூங்குவதைப் போல நடிப்பவரை எழுப்ப இயலாது. அது போன்றே சில கருத்துக்களை எடுத்துக் கூறினால் சிலர் புரிந்து கொண்டு நடப்பர். ஆனால் சிலர் எதைக் கூறினாலும் தாங்கள் முன்னர் எதைக் கூறினார்களோ அதையே விடாப்பிடியாகக் கூறிக் கொண்டே இருப்பர். பிறர் என்ன கூறுகிறார்கள் என்று கவனிக்க மாட்டார்கள். இதுவும் பிடிவாதத்துள்ள ஒன்றாகும். இத்தகையவர்களை வழக்கில், ‘‘கூறுகெட்டவன், விளங்காதவன்’’ என்று கூறுவர். இவர்கள் என்ன ஏது என்று அறியாமலேயே தாங்கள் கூறியதுதான் சரியென்று கூறுவர்.

     மேலும் சிலர் புரிந்து கொண்டாலும்வேண்டுமென்றே தாங்கள் கூறுவது சரி என்று வாதித்துப் பேசுவர். இதுவும் வாழ்க்கைக்கு உதவாது கைவிடத்தக்க பண்பாகும். இதனை,

     ‘‘தூங்குறவனை எழுப்பலாம்

     தூங்குறவன் மாதிரி நடிக்கிறவனை எழுப்ப முடியுமா?’’

என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது. இதில் தூங்குபவன் என்பது இயல்பாக இருப்பவனைக் குறிக்கும். தூங்குபவரைப் போல் நடிப்பவர் என்பது வீண்பிடிவாதம் பிடிப்போரையும், எடுத்துக் கூறினாலும் புரிந்து கொள்ளாதவர்களையும் குறிக்கும் சொற்களாகும். புரிந்து கொள்ளாது பிடிவாதமாக இருக்கும் பண்பினைக் கைவிட வேண்டும் என்ற வாழ்வியல் நெறியை தூக்கத்தை வைத்து இப்பழமொழி எடுத்துரைப்பது நோக்கத்தக்கது.

சூதும் – வாதும்

     மக்கள் விலரைப் பற்றிக் கூறும்போது, ‘அவர் சூது, வாது அறியாதவர்’’ என்று கூறவதைப் பார்க்கின்றோம்.  சூது வாது என்றால் என்ன? சூது – தீயது, வஞ்சனை என்று பொருள்படும். பிறரின் வாழ்வைக் கெடுக்கக் கூடிய எண்ணத்தைக் குலைக்கக் கூடிய செயல் சூது என மக்களால் வழங்கப்படுகின்றது. வாது எனில், வாதம் செய்தல், வாதிடுதல், பிடிவாதமாகக் கூறுதல் என்ற பொருள்களில் மக்கள் வழங்குகின்றனர்.

     இதிலும் சூது என்பது சூதாட்டததைக் குறிக்கும் சொல்லாகவும் அமைந்திருப்பது நோக்கத்தக்கது. சூதாட்டம் என்பது வாழ்வினைத் துன்பத்திற்குள்ளாக்கும். அதனால் அதனை ஒதுக்க வேண்டம் என்று நமது முன்னோர்கள் வற்புறுத்தினர். அதுபோன்று வீணான விவாதங்கள் பல பிரச்சனைகளை உருவாக்கி வாழ்வில் இன்னல்களைக் கொணரும் தன்மை உடையதாகும். அதனால் எவ்விடத்திலும், எச்சூழலிலும், எந்நேரத்திலும் வாதம் செய்வதில் ஈடுபடக் கூடாது.  அங்ஙனம் செய்வது பிறருக்கும், வாது செய்வோருக்கும் சொல்லொணா மனக்கசப்பை ஏற்படுத்தும். அதனால் வீணான விவாதங்களைக் கைவிடுதல் வேண்டும் என்ற அரிய கருத்தை,

     ‘‘சூதும் வாதும் வேதனை செய்யும்’’

என்ற பழமொழி வாயிலாக நமது முன்னோர்கள் கூறிப் போந்துள்ளனர்.

     ‘வாது’ என்பதற்குச் சிலர் உறவினர் என்று பொருள் கொண்டு உறவினர்களால் எப்போதும் வேதனையாகிய துன்பமே நேரும். அதனால் உறவினர்களைவிட்டுத் தூரத்தில் வாழ்ந்திடுவதே நலம் பயக்கும் என்றும் கூறினர். இத்தகைய கூற்றுப் பொருந்தாது எனலாம். உறவினர்களுடன் இணைந்து வாழ வேண்டுமென்று வலியுறுத்தும் தமிழ்ப் பெரியோர்கள் இங்ஙனம் கூறியிருப்பார்களா? என்பது சித்னைக்குரிய ஒன்றாகும். வீண் விவாதமும் சூதும் கூடாது என்பதையே மேற்கண்ட பழமொழி வலியுறுத்துகின்றது.

முயலுக்கு மூன்று கால்

     முயலுக்கு நான்கு கால்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. சிலர் தாம் நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்பதற்காக அனைவரும் அறிந்த உண்மையாக இருப்பினும் தாங்கள் கூறியதையே கூறுவர். அவர்களைப் பார்த்து,

     ‘‘நான்புடிச்ச முயலுக்கு மூணுகால் என்று சொல்கிற மாதிரி’’

சொல்கின்றான் என்ற பழமொழியைக் கூறுர். இத்தகைய வீண் பிடிவாதம் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.அதனால் பிடிவாதத்தைக் கைவிட்டுப் பிறர் கூறும் உண்மையைக் கேட்டு நடத்தல் வேண்மு் என்ற வாழ்க்கை நெறியை வலியுறுத்துவதாக இப்பழமொழி அமைகின்றது.

முதலை – மூர்க்கன்

     முதலை நீரில் வாழும் உயிரினமாகும். நீரில் வாழும் உயிர்களில் அதிக வலிமையானதும் ஆகும்.  இது இரையாக எந்த ஒரு உயிரினத்தையும் கவ்விப் பிடித்து விட்டால் விடவே விடாது. அதனைக் கொன்று உண்டுவிடும். அதுபோல் மூர்க்க குணம் உடைய மனிதர்கள் தாங்கள் கொண்ட கருத்தை விடமாட்டார்கள். மற்றவர்கள் எதைக் கூறினாலும், பிடிவாதமாகத் தங்களை எந்த நிலையிலும் மாற்றிக் கொள்ள மாட்டார்கள். தாங்கள் கைக் கொண்ட கருத்திலிருந்து மாறமாட்டார்கள் இவர்களின் குணத்தை,

     ‘‘முதலையும் மூர்க்கனும் கொண்டது விடார்’’

என்ற பழமொழி எடுத்துரைக்னிறது.

     முதலை கவ்விய இரையை விடாததைப் போன்று மூர்க்க குணம் கொண்டவர்கள் தாங்கள் கொண்ட கருததைப் பிடிவாதத்துடன் விடமறுத்துவிடுவர். இதற்கு மகாபாரதத்தில் இடம்பெறும் துரியோதனனை உதராணமாகக் குறிப்பிடலாம். போர் வேண்டாம், பாண்டவர்களுக்குரிய பங்கினைக் கொடுத்துவிடு என்று பலரும் எடுத்துக் கூறியும் தான் கொண்ட கருத்தை அவன் இறுதிவரை மாற்றிக் கொள்ளாது மூர்க்கத்தனமாகவே நடந்து கொண்டான். அதனால் மனிதர்கள் எத்தருணத்திலும் மூர்க்கத்தனத்துடனும் பிடிவாத குணத்துடனும் நடந்து கொள்ளக் கூடாது என்று பழமொழி வாயிலாக நமது முன்னோர்கள் வலியுறுத்தினர் எனலாம்.

     பிடிவாதம் வாழ்க்கையில் பல துன்பங்களை விளைவிக்கும். அதனை உணர்ந்து வாழ்க்கையில் நாமும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்ச்சியடையச் செய்வோம். வாழ்வு வசந்தமாய்த் திகழும்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>