ரசிகனின் ரசிகனே ரஜினி – வெற்றிக் கொடி கட்டு!

கோடி கோடியாக ஒரு செல்வந்தர் சொத்து வைத்திருப்பதைப்போல ரசிகர்களைக் குவித்து வைத்திருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இசபெல்லா மருத்துவமனையும் ராமச்சந்திரா மருத்துவமனையும் நோயைத் தீர்க்க முடியாததால், சிங்கப்பூர் சென்று குணமடைந்தார். ரசிகர்களின் பிரார்த்தனையால் குணமடைந்தேன் என்று அவ்ர் நெகிழ்ந்துபோய்க் குறிப்பிட்டதை நினைத்து இங்குள்ள ஒவ்வொரு ரசிகனுக்கும் புல்லரித்துப் போகிறது. அவர் சிங்கப்பூரிலிருந்தபோது ‘ காதல் மன்னன் ‘ படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடித்த நடிகை மானு ரஜினியின் குடும்ப உறுப்பினர் போல், இன்னும் மூன்று உதவியாளர்களூடன் ரஜினி குடும்பத்தினருடனேயே தங்கியிருந்து ரஜினிக்கு பணிபுரிந்தார். அவருடைய உதவியில் மகிழ்ந்து அவரை தன்னுடைய இன்னொரு மகளாக ஏற்றுக் கொண்டார் ரஜினி. அவர் இன்னும் சில நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கியிருக்கவேண்டும் என்றுதான் மருத்துவமனை டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் ரஜினி சென்னை திரும்பியே தீரவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்துள்ளார். தனது சொந்த இடத்தையும், தனது ரசிகர்களையும் பார்க்காமல் தன்னால் இருக்க முடியவில்லை சொந்த மண்ணை எப்போது மிதிக்கப் போகிறோமோ என்று மனம் துடித்ததால், சென்னைக்கு புறப்பட்டே ஆக வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்துள்ளார். அவரது கட்டாயத்தின் பேரில்தான் டாக்டர்களும் அவர் சென்னை திரும்புவதற்கு சம்மதித்தனர். குடும்பத்தினரும் வேறு வழியில்லாமல், ரஜினியின் முடிவுக்குக் கட்டுப்பட்டு, அமைதியாக இருந்துவிட்டனர். எனவே சென்னை திரும்பினார் ரஜினி. அவருடன் கூடவே இருந்து அனைத்து உதவிகளையும் செய்த மானுவும் ரஜினியுடன் சென்னை வந்தார். நடிகை மானுவை ரஜினியுடன் பார்த்ததும் ரசிகர்களுக்கு ஒரே வியப்பு. இவர் எப்படி ரஜினியுடன் என்று புருவத்தை உயர்த்தியவர்களுக்கு மானுதான் அனைத்து உதவிகளையும் ரஜினிக்கு சிங்கப்பூரில் செய்தவர் என்று தெரிந்துகொண்டதும் அவர்கள் மனதில் மானுவுக்கு தனியிடம் கிடைத்து விட்டது.
ஆனால் வேதனையான விஷயமாக சென்னை வந்த ரஜினியை வரவேற்க விமான நிலையத்தில் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்யவில்லை என்பது மிகப் பெரிய குறை. முக்கிய பிரமுகர்களுக்கு அளிக்கப்படும் மரியாதை எதுவும் ரஜினிக்கு தரப்படாதது வருத்தத்துக்குரியது. லட்சக்கணக்கான ரசிகர்கள் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார். அவர் ஒரு சாதாரண ம்னிதரல்ல. அவருக்கென்று தனி அந்தஸ்து இருக்கிறது. ஆனால், அந்த அந்தஸ்து அவருக்குத் தரப்படவில்லை. சிங்கப்பூர் ஏர்லைன்ஸிலிருந்து இறங்கிய ரஜினியும் மற்ற பயணிகளைப் போல ஏரோ பிரிட்ஜ் மூலம் தான் வெளியில் வந்தார்.
வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு இமிக்ரேஷன் சோதனை நடத்தப்படும். முக்கிய பிரமுகர்களாக இருந்தால், விமானத்தில் இருந்து இறங்கும் இடத்துக்கே அதிகாரிகள் சென்று வரவேற்று அங்கேயே இமிக்ரேஷன் முடித்து சிறப்பு வாகனத்தில் 6-வது வாயில் வரை வந்து வழியனுப்புவது வழக்கம். ஆனால், ரஜினி என்ற சூப்பர் ஸ்டாரை இமிக்ரேஷன் சோதனைக்கு நடத்தியே அழைத்து வந்தனர். அவரும் மூச்சிரைக்க நடந்து வந்தார். மேலும் இதுபோன்ற நேரங்களில் முக்கிய பிரமுகர்களை அழைத்துச் செல்ல டாட்டா சுமோ வரும். ஆனால், ரஜினி மற்ற பயணிகளுடன் ஒரு பழைய பஸ்ஸில் அழைத்துவரப்பட்டு ஆறாவது வாயிலில் இறக்கிவிடப்பட்டுள்ளார். ஒரு நோயாளி என்பதையாவது கருத்தில் கொண்டு விமான நிலைய அதிகாரிகள் அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யாதது வேதனைக்குரிய விஷயம். ரஜினி தனது வழக்கமான புன்னகையுடன் விமானத்திலிருந்து இறங்கி நடந்து வந்து விமான நிலைய நடைமுறைகளை முறைப்படி முடித்துக்கொண்ட பிறகு விமான நிலையத்தை விட்டு வெளியில் வந்தது அவரது பெருந்தன்மையைக் காட்டியது. குடும்பத்தினரும் உடன் வந்தவர்களும், ரசிகர்களுக்கு அவரைக் காட்டாமல் அழைத்துச் சென்றுவிடவேண்டும் என்றுதான் நினைத்தார்கள். ஆனால், அதற்கு ஒப்புக்கொள்ளாத ரஜினி தனது உயிரினும் மேலான ரசிகர்களைப் பார்க்காமல் வரமுடியாது என்று கூறிவிட்டார். வெளியில் வந்து ரசிகர்களைப் பார்த்ததும் ரஜினிக்கு கண்களில் லேசாக நீர் துளிர்த்தது. ஈரமான கண்களுடன், தனது வழக்கமான பாணியில் இரு கரங்களையும் தலைக்கு மேல் குவித்து நன்றி தெரிவித்துவிட்டு காரில் ஏறி அவர் வீட்டுக்குப் புறப்பட்டது உணர்ச்சி மிகு காட்சியாக இருந்தது. சென்னை மண்ணில் தனது காலடி பட்டதுமே தனது பழைய உற்சாகத்துக்கு மாறிவிட்டார் ரஜினி.
கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்குப் போக ரஜினிக்கு மனமில்லை. தனது பேரக் குழந்தைகளுடன் பொழுதைப் போக்கவே விரும்பினார். பேரக் குழந்தைகள் பள்ளிக்குப் போவதற்கு ஏற்ற இடமாகவும், தன்னுடன் எப்போதும் விளையாடுவதற்கு வசதியாகவும் இருப்பதுபோல வீடு அமைய வேண்டும் என்று விரும்பினார். இதனால், போயஸ் தோட்டத்துக்கு அருகிலேயே ஆழ்வார்ப்பேட்டையில் வீனஸ் அடுக்கு மாடிக் கட்டடம் ஒன்றைத் தேர்ந்தெடுத்தார். அந்தக் குடியிருப்பில் 4-வது மாடி முழுவதும் ரஜினி தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தக் குடியிருப்புக்கு பக்கத்தில் ஒரு குடியிருப்பில் வசித்து வந்த தனுஷ் தனது 2 மகன்களுடனும் மனைவியுடனும் ரஜினியின் குடிருப்புக்கே வந்து விட்டார். இப்போது 2 பேரக் குழந்தைகளுடனும், மகள் -மருமகனுடனும் தங்கியிருக்கும் ரஜினி 2 மாத ஓய்வுக்குப் பின் ராணா படப்பிடிப்பில் கலந்துகொள்ளவும் திட்டமிட்டிருக்கிறார். இவருடன் நடிக்கவிருக்கும் தீபிகா படுகோனே தேடி வந்த எல்லா வாய்ப்புகளையும் உதறித் தள்ளிவிட்டு ராணா படப்பிடிப்புக்காகக் காத்திருக்கிறாராம். இது தீபிகாவுக்கு ரஜினி மீது இருக்கும் அபிமானத்தையே காட்டுகிறது என்கிறது சினிமா வட்டாரம் . ராணா தொடங்கப்பட்ட நேரம் சரியில்லை என்ற கருத்து வலுத்துவிட்டதால் படத்தின் பெயர் மாற்றப்படலாம். ரஜினி என்ற சாதனையாளருக்கு வந்த சோதனை பனிபோல் ஓடிவிடும். மீண்டும் ஒரு ரஜினி பட சில்வர் ஜூப்ளிக்காக அவரது கோடான கோடி ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் நிச்சயம் கொடுப்பார் ரஜினி! வெற்றிக் கொடி கட்டு தலைவா!
Tags : Article on the health of Tamil Superstar Rajinikanth and the health problems of Rajini, Vastu in Rajini house, Rajini fans and latest movie news about the Rajini and Deepika starrer Rana
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments




Please comment with your real name using good manners.