/* ]]> */
Sep 232011
 

தி.ஜானகிராமன்:

“தமிழின் நெடும்பரப்பில் தி. ஜானகிராமன் ஓர் அற்புதம் , பூரணமான ஓர் இலக்கிய அனுபவம் என்பது ஒரு முழு உண்மையே “  என்று சிலாகிக்கிறது தமிழ் இலக்கிய உலகம் . திஜா வின் ஏனைய நாவல்களைப் போல் மனிதர்களின், உறவுகளின் ,ஆண் பெண், உறவுச்சிக்கல்களை நுணுக்கமாக அணுகும் இன்னுமொரு நாவல் தான் செம்பருத்தி.

கதைச் சுருக்கம்:

கதாநாயகன் சட்டநாதன். வாசிப்பில் மிகுந்த ஆர்வம் உள்ளவன். படிக்கும் பருவத்தில்ஆசி ரியரின் மகள் குஞ்சம்மாவின் மீது காதல்  கொண்டு விடுகிறான். விதிவசமாக குஞ்சம்மாள் சட்டநாதனின் அண்ணன் முத்துசாமியை திருமணம் செய்து கொண்டு விட நேர்கிறது. மூத்த அண்ணன் குடும்பத்துடன் தனியாக வசிக்க, இளைய அண்ணனின் ஆதரவில் வாழ்ந்து வருகிறான் சட்டநாதன். அண்ணியின் மீது அன்பும் இரக்கமும் கொள்ளும் அதே நேரம் மரபுகளை மீறி விடாமல் கவனமாக வாழ்கிறான் நாயகன்.

பெண் குழந்தை ஒன்று பாப்பா என்ற பெயரில் இருக்கிறது முத்துசாமிக்கு. திடீரென ஏற்படும் சுகவீனம் காரணமாக அல்பாயுசில் இறந்து போகிறான் முத்துசாமி, மனைவியையும் குழந்தையையும் தம்பியின் பாதுகாப்பில் ஒப்புவித்து விட்டு. இறக்கும் தறுவாயிலும் தம்பிக்காக ஒரு சம்பந்தத்தை நிச்சயம் செய்து வைத்திருப்பதை சொல்லி விட்டு இறக்கிறான். அண்ணன் பார்த்து வைத்த பெண்ணையே மணந்து கொள்கிறான் சட்டநாதன்.

செம்பருத்தி மலர்களின் மீதும் செடிகளின் மீதும், மிகுந்த ப்ரீதி கொண்டவள் சட்டநாதனின் மனைவி புவனா. அன்றாட நிகழ்வுகள் அனைத்தையும் மனைவியிடம் ஒன்று விடாமல் ஒப்புவித்து விடும் வழக்கம் கொள்ளும் சட்டநாதன், தான் தன் அண்ணன் மனைவியிடம் இளம் பிராயத்தில் கொண்டிருந்த காதலையும் சொல்லி வடுகிறான். அசாதாரணமான மனப்போக்கும், அழகும், புத்தி கூர்மையும், பொறுமையும் கொண்டவள் புவனா.கணவனின் பழைய காதல் விஷயத்தையும் மிகுந்த பக்குவமாக ஏற்றுக்கொள்கிறாள். கிட்டத்தட்ட ஈருடலும் ஓருராக வாழ்கிறார்கள் சட்டநாதனும் புவனாவும். இடையில் பெரியண்ணனின் வியாபாரம் நொடித்துப் போக, அவர் குடும்பத்தையும் சேர்த்துத் தாங்க வேண்டிய கட்டாயம் சட்டநாதனின் தோள்களில் விழுகிறது. புவனாவின் காதலும் பொறுமையும் அவனைத்தாங்கிப்  பிடிக்க, சுமைகளை சுகமாக நினைத்து வாழ்கிறான் சட்டநாதன்.

குஞ்சம்மாள் விதவையாகி விட்ட நிலையில் தாய் வீடு செல்லாமல், கணவன் வீட்டிலேயே வாழ்ந்து விட முடிவெடுப்பது சட்டநாதனைப் பார்த்துக் கொண்டாவது இருப்பதற்குத் தான் என்பதும் ,அவளே விரும்பியும் ,அதைத் தெரிவித்தும் கூட சட்டநாதன் அவளை நெருங்கவேயில்லை என்பதும் முக்கியமான செய்திகள்.

பெரியண்னனின் மனைவி துர்குணி என்பதாகவும், சட்டநாதன் பால் குஞ்சம்மாளுக்கு இருக்கும் காதலைக் கண்டு கொண்டு ஓயாது பேசி அவர்கள் வதையை வாங்குபவளாகவும் சித்தரிக்கப்படுகிறாள். கதையின் ஓட்டத்தில் சட்டநாதனின் தாய் இறந்து போகிறாள், பெரியண்ணனின் குழந்தைகள் மற்றும் முத்துசாமியின் மகளுக்கு என்று குடும்பத்தின் பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்விக்கிறான் சட்டநாதன். ஒரு கட்டத்தில் பூர்வீக சொத்து ஒன்றிலிருந்து பணம் கைவரப்பெறுகிறது சட்டநாதன் குடும்பத்துக்கு அதன் காரணமாக குழப்பங்களும் நேர்கின்றன.

பெரியண்ணனின் மனைவி தன் துர்குணத்தை எண்ணி குமைந்து பட்டினிகிடந்து  மரணிக்கிறாள், சில காலத்திலேயே பெரியண்ணனும் போய் சேர்கிறார்.

அது வரையிலும் புகுந்த வீட்டின் பால் மிகுந்த ஒட்டுதல் கொண்டிருந்த குஞ்சம்மாள், தன்னைப்பற்றின எல்லா விபரங்களையும் கொழுந்தன் தன் மனைவியிடம் கூறிவிட்டிருக்கின்றான் என்று தெரிய வந்த  நொடியிலேயே வெறுப்புண்டாகி மகள் வீட்டோடு போய் விடுகிறாள்.

மாதவிலக்கு நின்று போகும் மெனோபாஸ் சமயம் வருகிறது புவனாவுக்கு. அதுகாறும் பொறுமையின் உறைவிடமாக வாழ்ந்து வந்த அவள் சிடுசிடுப்பை மொத்த குத்தகைக்கு எடுத்து விட்டார் போல , சட்டநாதனைப் படுத்தி எடுக்கிறாள். கணவனுக்கு குஞ்சம்மாளுடன் தொடர்பு இருந்திருக்கிறது என்று சர்வநிச்சயமாக நம்பி ஓயாது சண்டையிட்டும் அழுதும் தானும் நொந்து சட்டநாதனையும் நோகச்செய்கிறாள்.

நாவலின் மூன்றாம் பாகத்தில் சட்டநாதனின் பிள்ளைகள் அனைவரும் வேலைகளிலும் திருமணத்திலும் நல்ல நிலையில் இருக்கிறார்கள், மீண்டும் சட்டநாதனும் புவனாவும் மட்டும் தனியாக வாழ்வு நடத்தும் சூழல் உண்டாகிறது. புவனாவின் உடலும் மனமும் தேறி எப்போதும் போல் கணவனின் மனமறிந்து நடக்கிறாள்..சட்டநாதனின் ஆப்த சிநேகிதர் கொலை செய்யப்படுகிறார். இடிந்து போகும் அவரை ஆற்றுப்படுத்துவதில் முனைகிறாள் புவனா..நிறைகிறது.

ஆசிரியர்:

பொதுவாக திஜா நாவல்களில் வந்து போகும் எல்லா அம்சங்களும் செம்பருத்தியிலும் உண்டு. அழகான கதாநாயகியர், ஆம்..பெண்கள் அதுவும்  கதாநாயகியர் அழகாக மட்டும் தான் இருப்பார்கள் திஜா நாவல்களில், அதிலும் இறுகக் கட்டினார் போன்ற  உடல் வாகும்,பிலுபிலுவெனும் பூனை மயிர் விரவியிருக்கும் மென்தோலும் , ஒன்றா அசாதாரணமான பொறுமையும் நற்குணமும் வாய்க்கப்பெற்றவர்களாக அல்லது துர்குணத்தின் உச்சகட்டமாக. இப்படியே பெண்களை எக்ஸாஜெரேட் செய்து காண்பிப்பதில் திஜா வுக்கு நிகர் அவரே தான்.

“இளம் விதவையர்” இந்த கான்செப்ட்டும் அவரின் மிக விருப்பமான ஒன்று. “அம்மா வந்தாள் இந்து” வை யார் மறக்க முடியும்? அதிலும் கதாநாயகனின் பால் அவர்களுக்கு இருக்கும் காதலும் மோகமும் அவர்களாகவே சென்று விருப்பம் தெரிவித்தும் மிரண்டு, பண்பாட்டைக் காக்கப் போராடும் நாயகன் என்று செம்பருத்தியிலும் அதே காட்சிகள். தான் விரும்பிய பெண், அண்ணன் மனைவியாகிவிட்டாள் என்பதால் அவளைக் காக்கும் பொறுப்பு ஏற்று விடும் சட்டநாதன்அவள் கண்ணெதிரிலேயே மனைவியுடன் கூடிக்குலவி வாழ்வதும் , யாருமற்ற ஒரு சமயத்தில் குஞ்சம்மாள் ஆவலாய் தன்னைக் கட்டிக்கொண்டு மகிழ்வதையும் கூட மனைவியிடம் கூறி விடும் சட்டநாதன் என்ன மாதிரியான ஆண் பிள்ளை என்று  வெறுப்பேற்படுகிறதே ஒழிய கொஞ்சமும் அவனை கதாநாயகனாக எண்ணிவிட முடியவில்லை. ஆசிரியர் நாவலை எழுதிய கால கட்டம் அத்தகையது என்பது ஒரு சாக்காகத் தான் தோன்றுகிறது.

குஞ்சம்மாளின் கேரக்டரைசேஷன் ஆசிரியர் எண்ணமிட்டு எழுதியது எப்படியோ..ஆனால்  வலிமை மிக்க, அசாதாரணாமான மன உறுதியும் , தெளிவும் கொண்டதாகத்தான் என் வரையில் படுகிறது.

பெரியண்ணி, ஏதேதோ எதிர்பார்ப்புகள் அவளுக்கு…கணவன் நிலை தாழ்ந்ததும், அதைத் தாங்கிக்கொள்ளவியலாமல் வீட்டை ரெண்டு செய்கிறாள். உடல் பசி அதிகம் அவளுக்கு என்பதாக வரிகள் வருகின்றன ? ஏன் ? பெண் என்பதால் மட்டும் அவளுக்கு தேவைகள் இருக்கக் கூடாதா ? அவள் கணவன் முன்னமே திருமணமாகி மனைவியைப் பறி கொடுத்து , இரண்டாவதாக இவளை மணந்து கொண்டவன். அப்படியும் ஆண்டாள்  என்னும் தாசியின் தேவையும் அவனுக்கு இருக்கிறது! ஆனால் மனைவிக்கு மட்டும் கணவன் தேவைப்பட்டால் அவள் அடங்காக் காமம் பிடித்து அலைபவள்?

தலைப்பின் நியாயம்:

புளியமரம் என்று விளிக்கப்படுகிறாள் பெரியண்ணி…அடுத்தவர்களை நிம்மதியாக வாழவிடாமல் அவர்கள் சுவாசத்தைத் தடை செய்யும், மூச்சடைக்கச்செய்யும் ஒன்றின் குறியீடு இது. அதே சமயம் புவனா எல்லோருக்கும் பிரியமானவள், அழகானவள் , உபயோகமானவள் ஆகவே அவளுக்கான குறியீடு செம்பருத்தி. இப்படியாக தலைப்பின் நியாயம் புரிந்துகொள்ளப்படுகிறது.

புவனாவின் தகப்பனார் ஒரு பெரிய மகானைப் போல் சித்தரிக்கப்பட்டுள்ள ஒரு பாத்திரம்..அவர் பெண்களைப் பற்றி உபதேசம் செய்ததாகக் கூறப்பட்டுள்ள வரிகள் “பெண்கள் பூனைகள் ,அடிக்கக் கூடாது ..பூனையி்ன் ஒரு உரோமம் உதிரச்செய்தால் கூடப் பாவம். ஆனால் அது மட்டும் இஷ்டத்திற்குப் பாத்திரங்களை உருட்டும். பண்டங்களைச் சூறையாடும். நாசப்படுத்தும். எஜமானிடமோ, அவன் சுற்றத்திடமோ எந்தவிதப் பாசமில்லாதது, ஆனால் அவனுக்கு வேண்டிய அத்தனை நாசூக்குகளையும் கோரும்” .திஜா சொல்ல விரும்புவது என்ன?

பெரியண்ணனின் மனைவி, துஷ்டையாக சித்தரிக்கப்படுபவள்..ஆனால் பெரியண்ணனுக்கு ஆண்டாள் என்ற தாசியுடன் சிநேகம் இருக்கலாம்? ஆண்டாள் பாத்திரம் ஒரு பெரிய கதாநாயகி ஸ்தானத்துக்கு உயர்த்தி வைக்கப்படுகிறது? ஏன்? பெரியண்ணி துஷ்டை ,அதனால் தான் அண்ணனுக்கு அவளுடன் தொடர்பு உண்டாகி விட்டது என்பதை நியாயப்படுத்தவா?

புவனாவால் தான்.. தான் இவ்வளவுக்கு பளு சுமக்க முடிகிறது , அவள் அழகின், பொறுமையின் சிகரம் என்றெல்லாம் சட்டநாதனால் தூக்கி நிறுத்தப்படும் புவனா பாத்திரமும் அநியாய உயரத்திலிருந்து போட்டு உடைக்கப்படும் ஒன்று.

“ஏழெட்டு சாண வரட்டித் தீயின் முன் கைப் பிடித்ததற்காக ஒரு மூன்றாவது இத்தனை காலமும் தீயில் வெந்திருக்கிறது, இது எந்த தர்மத்தில் சேர்ந்தது ? குஞ்சம்மா எதற்கோ பயந்து வேண்டாத மாலைக்குக் கழுத்தை நீட்டி விட்டாள் ! அதற்காக எத்தனைக் காலம் இந்தப் பொசுங்கல் ! உலகம் முழுவதும் நாசமாகிவிடும்  என்று இப்படிக் கட்டுப்போட்டு வைத்தான்களா?”

“மனிதன் சுதந்திரமாக வாழ வேண்டும் . தன்னுடைய பொறாமை , அன்பற்ற சுயநலம் – இவற்றுக்கெல்லாம் தான் மனிதத் தன்மை என்று பெயர் வைத்திருக்கிறானா? யார் முதலில் கொடுங்கோலன் ? ஆணா பெண்ணா ? பெண் தனக்கு அடங்கியிருக்க வேண்டும் என்று ஆண் படைத்த கற்பு , அதற்கு வஞ்சம் தீர்த்துக்கொள்வது போலப் பெண் ஆணுக்குத் தூய்மையைக் கற்பித்து விட்டாளா ? ஒருவருக்கொருவர் இப்படி நம்பிக்கையோடு இருந்து விட்டால் நிம்மதியாகச் சமையலைக் கவனிக்கலாம் . கடையைக் கவனிக்கலாம் ! கடையும் சமையலும் அவ்வளவு உயர்ந்தவை – காதலை விட , காதல் . அன்பு , – இவையெல்லாம் இடைஞ்சல் பண்ணாமல் ஒரு மூலையில் ஒதுங்கி வளர வேண்டிய வஸ்துக்கள் ! ..”

படிங்குந்தோறும் ஆ வெனப் பதற வைக்கும் வரிகள் . எப்படியான தத்துவ விசாரணை ? எத்தனை தெளிவும் ஆதங்கமும் ? எத்தனை உண்மை ? திஜா கொண்டாடப்படுகிறார் இத்துணை வருடங்களுக்கு அப்புறமும் என்றால் இது போன்ற வரிகளால் தானே ? பெண்களை இத்தனை மோசமாக சித்தரிக்கிறாரே என்ற எரிச்சலை கொஞ்சம் போல் குறைக்க முயல்வது இம்மாதிரியான தத்துவ விசாரணைகள் தான்.

சட்டநாதன் தனக்குத்தானே செய்து கொள்ளும் ஆத்ம விசாரணையின் போது கூட குஞ்சம்மா  தன் வீட்டில் இருந்த போது எப்போதும் தன் பால் அவளுக்கு இருந்து வந்த பிரியத்தை காட்டிக்கொள்ள முனைந்து வந்ததை எத்தனை ரசித்திருக்கிறான் ? ” அவள் என்னைப் பழைய கண்ணோடு பார்க்க வேண்டும் . தாய்மையும் பரிவும் கலந்து அதே மயக்கத்தோடு பார்க்க வேண்டும் . நான் அவளை எப்படி மீட்கப் போகிறேன் ? முடியுமா? “ என்றெல்லாம் வாதித்துக்கொள்கிறான் . எத்தனை அநியாயம் ? தான் மட்டும் மனைவியோடு முயங்கி , மயங்கிக் கிடப்பானாம்…அதுவும் பத்தாமல் குஞ்சம்மாளும் இவனை விழுங்குவது போல் பார்த்துக்கொண்டு மட்டும் வாழ்ந்து விட வேண்டுமாம் ! ஆசிரியருக்குள் இருக்கும் ஆண் மனம் தான் எத்தனை பேராசையும் மனத் தடைகளும் நிரம்பியது ?

சர்வநிச்சயமாக குஞ்சம்மாள் குற்றஞ்சாட்டுவது போல் சட்டநாதன் ஒரு சுயநலவாதி தான் . ஆனால் இம்மாதிரியான எண்ணங்களை , விவாதங்களை வாசகனின் மனதில் தோற்றுவிப்பது தான் திஜா வின் நோக்கம் என்றால் கண்டிப்பாக அவர் நோக்கம் உயரியது , அதில் அவர் வெற்றியும் பெற்று  விட்டார் .

சட்டநாதன், புவனா உறவில் ஆசிரியர் மீண்டும் மீண்டும் சொல்வது சட்டநாதன் தன் அன்றாட செயல்பாடுகளை, விவரணைகளை ஒன்று விடாமல் அவளிடம் ஒப்புவித்து வந்தான் என்பது தான். புவனா அவனிடம் சண்டை பிடித்து வந்தது  மனநிலை மற்றும் உடல் நிலை மாறுபாட்டினால் தானா ? அல்லது  பெண்களே அப்படித்தான்…மேலும் கணவன் மனைவியே ஆனாலும் அப்பட்டமாக மனதில் உள்ள அத்தனையையும் பகிர்ந்து கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறுவது தான் எண்ணமா ?

முடிவாக:

நாவலின் இறுதிப் பத்தியில் சட்டநாதனும் புவனாவும் அணைத்துக் கொள்கிறார்கள் ….“ஈஸ்வரனால் தான் முடியும் போலிருக்கிறது . ஈஸ்வரனுக்கும் முடியாது . ஒரு முலையும் ஒரு மூக்குத்தியும் ஒரு கொலுசும் நசுங்கிவிடவில்லை . மறைந்து விடவில்லை “ என்று சட்டநாதன் நினைக்கிறார் . திஜா சொல்ல வருவது என்ன ? எத்தனை முயன்றாலும் ஓருயிர் ஈருடல் என்பது அர்த்தநாரீஸ்வராலும் அடைந்து விட முடியாத நிலை என்பது தானா ? அகத்தனிமை தான் முழு உண்மை என்பதே தானா ?

..ஷஹி..

பிரசுரித்தது ஐந்திணைப் பதிப்பகம்..நாவல் மறுபதிப்பு செய்யப்பட்டது 2003 இல்..ஆசிரியர் வாழ்ந்த காலம் 1921- 1982. அவருடைய மிகப் புகழ் பெற்ற நாவல் மோகமுள் பிரசுரமானது 1956 இல்..செம்பருத்தி முதலில் பிரசுரமான வருடம் தெரியவில்லை. தெரிந்தவர்கள் தயவு செய்து பின்னூட்டம் இடவும்

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>