/* ]]> */
Nov 082012
 

மன்னிக்க வேண்டும். இதை ஏன் உங்களுக்கு எழுதுகிறேன் என்று எனக்கே தெளிவில்லை. இப்படித்தான் தெளிவில்லாமல் இருந்து இருக்கிறது தமிழ் எழுத்தாளர்களின் நிலைமை.

தமிழர்களாகிய நம் இயக்குநர்களும், ஹோலிவுட் படங்களை நகலெடுக்காமல் ஒரு படமெடுக்க முடியாது என்னும் நிலைமைக்குச் சீரழிந்துவிட்டார்கள் என்று எனக்குத் தோன்றுவதால் இதைச் செய்கிறேன் போலும். நீங்கள் உங்கள் மூளைப்புலம் முளைத்த தமிழ்மண்ணிய விளைச்சலில் கதிரறுத்து உமிநீக்கிச் சமைப்பவராக இருந்தால் என்னை மன்னிக்க!

ஹோலிவுட் படக் காதலர்களுக்காவே இதை எழுதுகிறேன். அருள்கூர்ந்து பைபிளை ஒருமுறை படியுங்கள்! போதகராக விரும்புகிற ஓரொருவரும், விவிலியத்தை (பழைய + புதிய ஏற்பாடு) ஆண்டுக்கு ஏழு முறை வாசிக்க வேண்டுமாம். நாம் ஒன்றும் போதகராகப் போவதில்லையே, அதனால் ஒரே ஒரு முறை வாசித்தால் கூடப் போதும். அருள் கூர்ந்து அதையாவது செய்யுங்கள்! “டைடானிக்’ போன்ற எல்லா ஹோலிவுட் படங்களுக்கும் திறவுகோல் கிடைத்துவிடும்.

கருந்தேள் எழுதிய விமர்சனத்தை வாசித்துவிட்டு, “Skyfall” படத்தை உடனே பார்த்துவிடத் துடித்தேன், ஆனால் கேபிள் சங்கர் எழுதிய விமர்சனம் என்னை ஐந்து நாட்கள் சுணக்கிவிட்டது.

Fiat justita ruat caelum. (Justice must be done, even if it means the sky falls.) உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும், அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பது இல்லையே!

‘ஸில்வா’ என்பது ஒரு பெண்பாற் பெயர். அது இப் படத்தில் எதிர்நாயகனுக்கு உரியது. அவன் தனது அறிமுகக் காட்சி, ஏனைப் பிற காட்சிகளிலும் தன்னை ஒரு திருநங்கை போலவே உருவகிக்கிறான். விவிலியம் சொல்கிறது, ‘தேவதைகள் ஆணும் இல்லை பெண்ணும் இல்லை’ என்று. என்றால், ஸில்வியா ஒரு தேவதை, ஆனால், an angel of death! A very clean-shaven person who happens to be rotten on the inside.

எம்.ஐ.6-இன் முன்னைத் துப்பறி வல்லுநர்களில் ஒருவனான ஸில்வா தன் முன்னைத் தலைவி M-இடம் சொல்கிறான், “நீங்கள் என்னை எதிரிகளுக்குத் தாரை வார்த்துக் கைகழுவினீர்கள்,” என்று. படத்துத் திறப்புத்-தொடர்நிகழ்-விரட்டலின் முடிவில் தவறுதலாகச் சுட்டு வீழ்த்தப்பட்ட ஜேம்ஸ் பாண்டும் தன் தலைவி M-இடம் சொல்கிறான், “நீங்கள் என்னை என் போக்கில் அந்தக் காரியத்தை முடிக்கவிடவில்லை,” என்று. ஆக, இருவரும் குற்றப் படுத்துவது பழைய ஏற்பாட்டின் கடவுளாகிய ‘யெஹோவா’வை. இருந்தும் இயேசு, யெஹோவாவின் இருப்பை நீட்டிக்கப் பாடுபடுகிறார், ஆனால் லூஸிஃபரோ அதை ஒரு முடிவுக்குக் கொண்டுவர முற்படுகிறான். லூஸிஃபர் வீழ்த்தப்பட்டாலும் அவனது குறிக்கோள் வாகை சூடுகிறது. Hereafter, the Kingdom is of the New Testament!

முந்திமுந்தி, ஐரோப்பாவைத் தன் ஆட்சிக்குக் கீழ் வைத்திருந்த துருக்கியில் எதிரிகளை விரட்டத் தொடங்கி, இன்று அந் நிலைக்கு உயர்ந்துகொண்டு இருக்கும் சீனாவின் கண்ணாடிச் சுவர்களுக்கும், பிறகு சாக்காட்டுத் தீவின் தொழில்நுட்பத்திற்கும் கதை நகர்கிறது. லண்டனில் Q-இன் தொழில்நுட்ப ராஜ்ஜியம் தகர்க்கப்படுவதின் மூலம், புதிய ஏற்பாடு எதிர்நாயகனுக்கு ஒரு பொருட்டல்ல என்று நிறுவப்படுகிறது. எனவே யூத உதவி என்னும் பழைய சவரக் கத்தியின் பயன்பாடு நினைக்கப் படுகிறது. பாதுகாப்புத் தேடி பழைய கோட்டைக்குள் பதுங்குகையில், பழைய ஏற்பாடும் தனக்கு ஒரு பொருட்டல்ல என்று அதே போர்முறையைக் கையில் எடுக்கிறான் எதிர்நாயகன். அவன் படையை ஆனால் சுரங்க வழித் தப்பித்தல் (சுரங்க வழி = loophole), உறைந்த ஏரியில் ஆழ்த்துதல் (ஏரி = மனவெளி), புறமுதுகில் குத்துதல் (முதுகு = புரளி) முதலிய உத்திகளால் வெல்லுகிறான் நாயகன். என்றாலும் தற்காலத்தின் இழுபறிகளுக்கு ஈடுகொடுக்க முடியாத பழைய தலைமையை இழக்கிறான். திறப்புத் தொடர்நிகழ்வில் அவர் தன்னைக் கைவிட்டதிற்கான poetic justice அது.

மெண்டிஸ் இயக்கிய படம் என்றதும் அவரது நக்கலுக்குக் குறைவிருக்காதே என்று எதிர்பார்த்துத்தான் போனேன். அப்படியே கதை நெடுகச் சிரிக்கவைக்கிறார். கூடவே, what a visual treat! தேர்வுகளில் தோற்றுப்போன நாயகனுக்கு assignment கொடுத்ததின் வழி, வழக்கமான ஜேம்ஸ்பாண்ட் drama ஒரு thriller-ஆகி இருக்கிறது. மசாலாக் கஃபே விருந்தாடிகளுக்கு இது பிடிக்காமல் போனதும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் புளித்த மாவிலும் புதுப்பனியாரம் செய்ய முயன்றிருப்பதைப் பாராட்ட வேண்டுமா இல்லையா? பாராட்டுகிறேன்!

…ராஜசுந்தரராஜன்

tags

raja sundara rajan , skyfall ,  thriller , drama , james bond , cinema review

ராஜசுந்தர ராஜன் , ஸ்கைஃபால் , த்ரில்லர் , ட்ராமா, ஜேம்ஸ்பாண்ட் , விமர்சனம் , சினிமா விமர்சனம் , ஸில்வா

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>