/* ]]> */
Aug 222011
 

துலாம்

துலா ராசி

இதுவரை உங்கள் ராசிக்கு விரயஸ்தானத்தில் சஞ்சரித்துவந்த சனிபகவான்  இப்போது ஜென்மஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். இதற்குமுன் விரயஸ்தானத்தில் இருந்தபடி உங்களுக்கு கடுமையான பலன்களைக் கொடுத்த சனி பகவான் இனி இரண்டாவது இரண்டரையில் அதாவது ஜென்ம ஸ்தானத்தில் பிரவேசிப்பது எப்படியிருக்கும் என்பதைப் பார்க்கலாம்.

இதுகாறும், குடும்பத்திற்காகவும், தன்னை அண்டியிருக்கும் பெற்றோர், சகோதர சகோதரிகளுக்காகவும், மாமன், அத்தை, பாட்டி. தாத்தா இவர்களுக்காகவும் ஏதோ ஒரு வகையில் விரயம் செய்து , கடன் காட்சி என்று அவஸ்தையுற்றிருந்தால், இவற்றுக்கு ஒரு விமோசன காலம் பிறந்துவிட்டது. கடன்கள் பைசலாகும். நஷ்டங்கள் மறைந்து தன வரவுகள் பெருகி  கடன் நிவாரணம் கிடைத்து நிம்மதி காண்பீர்கள். வருவாய் பெருகி சொத்துக்களின் மேல் உள்ள கடன்களைத் தீர்த்து பத்திரங்களை மீட்பீர்கள். தன வரவு தாராளமாகக் கிடைத்து உங்களை பெருத்த மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

பணம் மட்டுமே வாழ்க்கையாகாது இல்லையா? சனி பகவான் ஜென்ம சனியாகச் சஞ்சரிக்கும்போது உங்களுடைய உடம்பைத்தான் அதிகமாக பாதிப்படையச் செய்வார். உங்கள் உடம்பின் நிறம் மங்கும். ஆரோக்கியம்தான் வெகுவாக பாதிக்கப்படும். உடம்பில் ஒரு சோம்பேறித்தனம் குடிகொள்வதால், எந்த வேலையையும் எடுத்தோம் முடித்தோம் என்று முடிக்கமாட்டீர்கள்.  உங்களை ஒப்பனை செய்துகொள்வதைக்கூட வெறுப்பாக உணர்வீர்கள். உடம்பில் ஒரு பொலிவின்மை தோன்றும். நோய் நொடிகள் வேறு தொல்லைப்படுத்தும். ஜென்ம சனி என்பது திரேக பாதிப்புகளை ஏற்படுத்தத் தயங்காது. ஆனால், அதே சமயம், முறையான வைத்தியம் செய்துகொள்வதின் மூலம், சரீர பலவீனம் நீங்கி ஆரோக்கியத்தைப் பெற முடியும். இக்காலக்கட்டம் அறுவை சிகிச்சைக்கான அவசியத்தைக்கூட  ஏற்படுத்தலாம்; ஏற்படுத்தாமலும்  போகலாம். ஆனாலும் நிவாரணம் கிடைக்கும். சனீஸ்வரருக்குரிய ஆயுஷ் ஹோமம், ஷேத்ராடனம் முதலியவை பெரிய பாதிப்புகள் ஏற்படாவண்ணம் உங்களைக் காப்பாற்றும். சனியால் நோய் வாட்டமும், மனவேதனையும் ஏற்படும், என்றாலும் உரிய பரிகாரங்களை மேற்கொண்டால், நன்மை கிடைக்கலாம்.

பொதுவாக சூழ்நிலைகள் உங்களுக்கு அநேகமாக சாதகமாக இருக்காது. காரியங்களைச் செய்து முடிப்பதில், தடைகளும் தடங்கல்களும் ஏற்பட்டு செயல்களைச் செய்யவிடாமலும், காரியங்களை முடிக்க முடியாமலும்,  போகும். எல்லாவற்றையும் நிதானமாகத்தான் முடிக்க முடியும் என்ற நிலை ஏற்படும்.

பணவரவு சீராக இருக்கும் என்று ஏற்கெனவே கூறியிருந்தோம். திருப்திகரமான வருமானம் கிடைக்கும் என்பதால், செலவுகளைச் சமாளிப்பதில் சிக்கல் இருக்காது. குடும்பத்தில் பலவித பிரச்சினைகள் ஏற்பட்டு குழப்பநிலை நீடிக்கும். நீங்கள்தான் எல்லோரையும் சமாதானப்படுத்தி, ஒருசேர இணைக்கும் வேலையைச் செய்யவேண்டியிருக்கும். நீங்கள் கோபப்டாமல் இருக்கவேண்டியிருக்கும்.  எல்லோரையும் தைரியப்படுத்தவேண்டியிருக்கும்.

இனி சனி பகவானின் பார்வை பலன்களைப் பற்றி பார்க்கலாம். சனி பகவான் தனது பார்வைகளான அ3,7,10-ம் இடத்து பார்வைகளின் மூலம்  உங்களது தைரிய-பராக்கிரம-ஜெய ஸ்தானம்; களத்திரஸ்தானம்;  ஜீவன காரியஸ்தானம் ஆகிய இடங்களைப் பார்வையிடுகிறார்.
சனி பகவானின் மூன்றாம் பார்வை உங்கள் தைரிய ஸ்தானத்தைப் பார்வையிடுவதால், உங்களுடைய உடல்சக்தி குறைந்துவிட்டது போன்ற உணர்வு ஏற்படும்.  தைரிய உணர்ச்சி குன்றும். எதையும் செய்யப் பயந்து பின்வாங்கும் நிலையே காணப்படும்.  உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் அடிக்கடி பலவித நோய்கள்  ஓடிவந்து தொற்றிக்கொண்டு உறவு கொண்டாடும்.  நோய்ப் படுக்கையை நிரந்தரமாகப் போட்டுவைத்துக் கொள்வீர்கள். மனதைரியம் குறைவதும் இதற்கு ஒரு காரணமே. மனதில் தைரியம் குறைவதால், எதிர்த்து நிற்கவேண்டிய நேரத்தில்கூட பணிந்து சென்றுவிடுவீர்கள். உந்துசக்தி குறைவதால், உங்கள் செயல்களில் வேகம் இருக்காது.  அதனால் பல வெற்றிகளை இழப்பீர்கள்.  எந்தப் பிரச்சினை வந்தாலும் நம்மால் முடியப்போவதில்லை என்று ஆரம்பத்திலேயே பின்வாங்கிவிடுவீர்கள். தைரிய ஸ்தானத்தில் சனி பகவானின் மூன்றாம் பார்வை பதிவதே இதற்கு முக்கிய காரணமாகும்.

சனிபகவானின் ஏழாம் பார்வை உங்களது களத்திர ஸ்தானத்தைப் பார்வையிடுவ்தால், மனைவி/கணவனின் ஆரோக்கியம் அடிக்கடி பாதிக்கப்படும். கணவன்-மனைவிக்கிடையே கருத்துவேற்றுமை தலை தூக்கும். அடிக்கடி வாக்குவாதங்கள் சண்டை சச்சரவுகள்  என்று இருந்துகொண்டே இருக்கும்.  கணவன்- மனைவிக்கிடையே ஒரு மகிழ்ச்சியான சூழலைப் பார்க்க முடியாது. ஒருவரையொருவர் விரோதியாகப் பார்ப்பார்கள். வீட்டு நிர்வாகம் தொடர்பான வாக்குவாதங்கள் உண்டாகும். குடும்பத்திலோ உங்களுக்கோ  திருமணம் பேச்சுவார்த்தை அளவிலேயே நின்று போகும்.  நிச்சயிக்கப்பட்டவைகூட தள்ளிப்போகும். அதிகப்படியான் உழைப்பு காரணமாக கணவன்- மனைவி இருவரும் சோர்ந்து போகக்கூடும். இருவருக்குமிடையில் சிறு பிரிவு ஏற்படும். குடும்பத்தில் குதர்க்கம், குழப்பம்  போன்றவை ஏற்படும்.  மூன்றாம் மனிதர் குறுக்கே புகுந்து இருவரையும் ஆட்டிவைத்து பிரித்துவிடுவர். எல்லாவற்றையும் தங்கள் முன்யோசனையாலும், பொறுமையினாலும் தவிர்க்கலாம்.

சனி பகவான் தன்னுடைய பத்தாம் பார்வையினால் உங்களுடைய ஜீவன -காரிய ஸ்தானத்தைப் பார்ப்பதன்மூலம் வேலை தேடுபவர்களுக்கு எளிதில் வேலை கிட்டாது. ஏதாவதொரு காரணத்தால் தள்ளிக்கொண்டே போகும். ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களுக்கு ஏதாவதொரு காரணத்தால், மேலதிகாரிகளிடமிருந்து  மெமோ வரும். வேலை நீக்கம் செய்யப்படுதல், விருப்பமில்லாத பணியிட மாற்றம்  தற்காலிக -பணிநீக்கம் முதலியவை ஏற்படும். புதிதாக தொழில் ஏதாவது தொடங்கலாம் என்றாலும் அதற்கான சமய சந்தர்ப்பங்கள் சரியாக அமையாமல், முகாந்திர வேலைகளிலேயே நஷ்டத்தை ஏற்படுத்திவிடும்.  தொழில் வியாபாரத்தை ஏற்கெனவே நடத்திக்கொண்டு இருப்பவர்கள் சிறிசிறு தொந்தரவுகளையும் இடையூறுகளையும் சந்திப்பீர்கள். வேலையாட்கள் , உதவியாளர்கள் தொழிலாளர்களிடமிருந்து நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு உதவியும், ஒத்துழைப்பும் கிடைக்காது.  தொழிலில் எதிர்பார்த்த லாபம்  கிடைக்காது .  முடிந்தவரை உங்கள் வேலைகளை நீங்களே செய்துகொள்வது நல்லது. பெருத்த லாபத்தையோ பெரும் மாற்றங்களையோ எதிர்பார்க்க முடியாது.

இனி சனி பகவானின் வக்கிர சஞ்சார பலன்களைப் பார்க்கலாம்:சனி பகவான் மூன்று முறை வக்கர சஞ்சாரம் செய்கிறார்.

(1) 9. 2. 12  முதல் 24.6.12. வரையிலான 4 மாதம் 15 நாட்கள்:

இப்போது சனி பகவான் தனது முதலாவது வக்கிர சஞ்சாரத்தில் இருக்கிறார். சனி பகவான் ஜென்மத்தில் சஞ்சரிக்கும்போது வெற்றியை மட்டுமே எதிர்பார்க்க முடியாது. தோல்வியையும் சேர்த்தே எதிர்பார்க்கவேண்டும். அதாவது தோல்வியும் ஏற்படலாம் என்ற எண்ணம் இருந்தால்தான், தோல்வி ஏற்பட்டால் ஒரேயடியாக துவண்டு போகாமல் இருக்கலாம். ஓரளவு பணப்புழக்கம் இருக்கும் என்றாலும்,  கொடுக்கல்-வாங்கலில் குழப்பமும் குளறுபடிகளும் காணப்படும். சில ஏமாற்றங்களைச் சந்திக்க நேரும். அதனால், பெரிய பாதிப்புகள் ஏற்படாது. ஆனாலும் எதையும் முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ள முடியாது. நீங்கள் நினப்பதுபோல் எதுவும் ந்டக்காது. உங்கள் எண்ணத்துக்கு எதிர்மாறாகத்தான் எல்லாம் நடக்கும்.  மனதில் எப்போதும் குழப்பம் நிறைந்திருக்கும். குழப்ப சிந்தனையின் விளைவாக உங்களால் சரியாகச் சிந்திக்க முடியாது. தவறான சிந்தனைகளால், உங்கள் முடிவுகள் அனைத்தும் தவறானவையாகவே இருக்கும்.  தவறான முடிவுகளையே நீங்கள் சரியான முடிவுகளாக நினைத்து ஏமாந்துபோவீர்கள்.  அந்த முடிவுகளின்படி நடந்துகொண்டு சில இழப்புகளை தேடிக்கொள்வீர்கள்.   உத்தியோகம் பார்ப்பவர்கள் மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாக நேரும். தொழிலாளர்கள் சம்பள உயர்வுக்காகப் போராட வேண்டியிருக்கும்.

உடன்பிறந்தவர்களால் பல தொல்லைகள் ஏற்படும். குடும்பத்தில் அனைவரையும்  அனுசரித்துக்கொண்டும், அரவணைத்துக்கொண்டும் செல்ல வேண்டும்.  தாழ்ந்தும், விட்டுக்கொடுத்தும் செல்லவில்லையென்றால்,  குழப்பங்கள் தலைதூக்கும். குடும்பத்தினர் உங்களைவிட்டுப் பிரிந்து சென்று விடுவர். எனவே பெருந்தன்மையாகப் பணிந்துபோய்விடுவது நல்லது.

2. (16.2.2013 முதல் 12.7.2013 வரையிலான 4 மாதங்கள்::

சனி பகவானின் இரண்டாவது வக்கிர சஞ்சாரம் இந்தக் காலக் கட்டத்தில் நடக்கிறது. இந்தக் காலத்தில் உங்கள் வேகம் குறைந்து போகும். எதையும் விரைந்து செய்து முடிப்போம் என்ற எண்ணம் உங்களிடம் காணாமல் போகும். வாழ்க்கையில் மற்றவர்களை முந்திக்கொண்டு முன்னேறிச் செல்லவேண்டும் என்ற எண்ணம் உங்களிடம் இல்லாமல் போகும். எந்தக் காரியமாக இருந்தாலும் சாவகாசமாகச் செய்துகொள்ளலாம் என்ற எண்ணமே மேலோங்கும். உங்களுடைய ஊகங்களும்  கணிப்புகளும் அடிக்கடி தவறிப்போகும்; திட்டங்கள் தவறிப் போய்  திரும்பவும் செய்யும்படி நேர்ந்து, அதன்மூலம் பொருள் நஷ்டமும் ஏற்படும். வருமானம் தொடர்பான முயற்சிகளில், தடைகள், தவறுகள் நேரும்.  கவனக் குறைவு காரணமாக எந்த முயற்சியையும் சரியாகச் செய்யாமல் எல்லாவற்றிலும் குறை வைப்பீர்கள். உங்களுடைய முக்கியத்துவம் குன்றிப் போகும். சாண் ஏறினால் முழம் வழுக்கும் என்கிற கதையாக ஆயிரம் ரூபாய் லாபம் வந்துவிட்டால் பின்னாலேயே ஐயாயிரம் ரூபாய் செலவு வந்து சேரும். சில செலவுகளை சமாளிக்க நகை நட்டுகளை அடமானம் வைக்க வேண்டிவரும். பூர்வீக சொத்து கைக்கு வராது. சொத்து விவவகாரங்களில் பாதகமான போக்கு காணப்படும். தொழில், வியாபாரத்தில் எல்லாமே இழுபறியாக இருக்கும். உத்தியோகம் பார்பப்வர்களுக்கு அலுவலகத்தில் மறைமுக எதிர்ப்புகள் தோன்றும். சக ஊழியர்களின் ஒத்துழைப்போ, மேலதிகாரிகளிடம் பாராட்டுகளோ கிடைக்க வாய்ப்பில்லை. குடும்ப செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். உற்றார்-உறவினர்களிடமிருந்து சில உதவிகள் கிடைக்கும்.

(3). 3.3.14. முதல் 23. 7. 14 வரையிலான 4 மாதம் 20 நாட்கள்:

இப்பொது சனி பகவான் மூன்றாவது முறையாக வக்கிர சஞ்சாரம் செய்கிறார். இந்தக் காலக் கட்டத்தில் வரவுகளை விட செலவுகளே அதிகமாக இருக்கும்.  கிடைக்கும் ஆதாயங்களை விட ஏற்படும் விரயங்களே அதிகமாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் குளறுபடிகள் இருக்கும்.  யாரிடமும் கடுமையாகப் பேச வேண்டாம். விஷயங்கள் இன்னும் சிக்கலாகிவிடும். வருமானம் தடைப்படும். எந்தவிதத்திலும் யாரிடமிருந்தும் உதவி கிடைக்காது.  பலர் இனிக்க இனிக்கப் பேசுவார்கள்.  ஆனால், எந்த உதவியும் செய்யமாட்டார்கள்.  சமயத்தில் நழுவி விடுவார்கள். நீங்கள் நிறைய காரியங்களை செய்துமுடிக்க திட்டமிடுவீர்கள். ஆனால், செயலிழந்து போனதுபோல் எண்ணிக்கொண்டு இரண்டு காரியங்களை செய்து முடித்தால் போதும் என்ற நிலைக்கு ஆளாகி விடுவீர்கள்.
முக்கியமான  மனிதர்களை சந்திக்க முடியாமல் திண்டாடுவீர்கள்.  ஒருமுறைக்கு பலமுறை  முயன்றும் முடியாமல் போகும். அப்படியே சந்திக்க முடிந்தாலும் எண்ணிப்போன  காரியம் இடறும்.  நண்பர்களே உங்களுக்கு சாதகமாக இருக்கமாட்டார்கள். நீங்கள் மலைபோல் நம்பிக்கை வைத்திருந்த நண்பர்கள் எல்லாம், உங்களைப் பற்றி தவறாகப் பேசுவார்கள். வாகனத்தில் செல்லும்போது மிகுந்த கவனம் தேவை. கீழே விழுந்து ரத்தக் காயம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. உத்தியோகம் பார்ப்பவர்கள் வேலையில் சில தவறுகளைச் செய்துவிட்டு அதை சரிபண்ண முடியாமல் தவிப்பார்கள். இடமாற்றம் வரலாம். குடும்பத்தில் பல பிரச்சினைகள் ஏற்படும். திருமணமாகாதவர்களும் ,ஆண்களும் பெற்றோரின் ஆலோசனைப்படியும் திருமணமான பெண்கள்  தங்கள் கணவரின் ஆலோசனைப்படியும் நடந்துகொண்டால் பிரச்சினைகளை சமாளிக்கலாம். அறவே ஈகோ பார்ப்பது கூடாது.  கூட்டு வியாபாரத்தில் கருத்து வேற்றுமை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மந்தமான போக்கு காணப்படும். குடும்பத்தார் சம்பந்தமாக சுபச் செலவு ஏற்படும்.  உங்கள் முன்பாக நீங்கள் முடிக்கவேண்டிய பலவித வேலைகள் இருக்கும். நீங்கள் எதைச் செய்வது எதை விடுவது என்று புரியாமல் எதையுமே செய்யாமல் விட்டுவிடுவீர்கள்.

மொத்தத்தில் ஜென்ம சனியாக வரும் சனி பகவான் கஷ்டங்களைக் கொடுக்காமல் போக மாட்டார். ஆனாலும் நியாயவாதியான சனி பகவான், நம்முடைய செயல்பாடுகளைப் பார்த்துத்தான் நமக்குரிய பலன்களைக் கொடுக்கின்றார், என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஆத்மார்த்தமான சனி வழிபாட்டின் மூலம் எதையும் தாங்கி சமாளித்துவிடலாம்.

பரிகாரம்:

1. வழிபாடுகள் வகையில் மகாலட்சுமி பூஜை, சங்கடஹர சதுர்த்தி, வைகாசி விசாக வழிபாடு, அருட்பெருஞ்சோதி வள்ளல் பெருமாள் வழிபாடு, பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி, பைரவர்,காளி வழிபாடு உகந்தது.
2. பாபனாசம் 108 சிவலிங்க வழிபாட்டு ஸ்தலம் திருவாரூர் தசரத சக்கரவர்த்தி வழிபட்ட சனீஸ்வரர், இங்குள்ள ராஜதுர்க்கை புதுக்கோட்டை புவனேஸ்வரி, பஞ்சமுக ஆஞ்சனேயர் தில்லை காளி இவர்களின் ஸ்தலங்களுக்கு சென்று குறிப்பாக அர்ச்சனை, ஆராதனை, அன்னதானம் செய்து உள்ளன்புடன் சனி, வெள்ளிக் கிழமைகளில் வழிபடுவது உத்தமம்.
3. ஸ்ரீரங்கம், ஸ்ரீபெரும்புதூர், திருநாராயணபுரம் ஆகிய இடங்களில் எழுந்தருளிய உடையவரையும், தாயாரையும், நாராயணனையும் தரிசிக்கவேண்டும்.
4. மடப்பள்ளி , மங்கலகிரி( விஜயவாடா) பாகை நரசிம்மரை தரிசிக்கவேண்டும்.
5. இவை தவிர பிரசித்தி பெற்ற சனீஸ்வரனின் திருத் தலங்களான குச்சானூர், திருநள்ளாறு,  திருவண்ணாமலை- வேலூர் சாலையில் அமைந்துள்ள ஏரிக்குப்பம் ஆகிய இடங்கலில் எழுந்தருளியுள்ள சனீஸ்வர பகவானை தரிசனம் செய்து வரவும்.
6. தினசரி காக்கைக்கு அன்னமிடல், சனிக்கிழமைதோறும் சனீஸ்வரருக்கு எள்தீபம் ஏற்றுதல் இவைகளையும் விடாது செய்து வரவும்.

நன்மை உண்டாகும். வாழ்க வளமுடன்!

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>