/* ]]> */
Aug 212011
 

சிம்மம்

சிம்ம ராசி

இதுவரை கன்னி ராசியில் சஞ்சரித்துவந்த சனிபகவான் இப்போது  நடைபெற இருக்கும் சனி பெயர்ச்சியில் சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த பெயர்ச்சியின் இரண்டரை ஆண்டு காலமும் உங்களுக்கு ஏற்றமானதாக இருக்கும்.  முதலாவதாக உங்கள் ஆரோக்கியம் அபிவிருத்தி அடையும். நோய் நொடிகள் ஏற்பட்டாலும் உடனுக்குடன் குணமாகும். உள்ளத்திலும் ஊக்கமும் ஏற்பட்டு புதிய எழுச்சியுடன் காணப்படுவீர்கள். முயற்சியில் வேகமும் செயலில் தீவிரமும் கூடும். உழைக்கும் ஆற்றல் உங்களுக்கு அதிகமாவதால், கடினமாக உழைத்து பல சாதனைகளைப் புரிவீர்கள். வருமானத்துக்கு அதிகமான உழைப்பை அனைத்து செயல்களிலும் ஆர்வமாகக்  காட்டுவீர்கள். உங்களுடைய உழைப்பை உபயோகமான வழியில் செலுத்த உங்கள் அறிவு ஒத்துழைக்கும். வளமை நிறைந்த பல வசதிகளும் வாய்ப்புகளும் வந்து சேரும். வறுமைப் பிடிகள் தளரும். சிறுமைகளும் வாட்டங்களும் நீங்கும். சுக போகங்களும், மகிழ்ச்சிகளும், சௌகரியங்களும் இனி ஒவ்வொன்றாக அபிவிருத்தி ஆகிக்கொண்டிருக்கும். போட்டிகளும் பொறாமைகளும் தலைதூக்க முடியாமல் தரையோடு தரையாக அமுங்கிப் போகும். வம்பு வழக்கு, பகை, விவகாரம் போன்றவை முறியடிக்கப்படும். கடமைகளையும் காரியங்களையும் சிறப்பாக நிறைவேற்றி உங்கள் முக்கியத்துவத்தை உணரச் செய்வீர்கள். பல சாதனைகள் புரிந்து உங்கள் செல்வாக்கை உயர்த்திக்கொள்வீர்கள். தொழில், வியாபாரம் அமோகமாக நடைபெற்று ஏராளமான லாபம் கிட்டும். உத்தியோகம் பார்ப்பவர்கள் சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு பெறுவார்கள்.
கணவன் -மனைவிக்கிடையே நிலவிவந்த கருத்துவேற்றுமை நீங்கும். புத்திர புத்திரிகளுக்கும் அபிவிருத்திகள் ஏற்படும். திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு இந்தக் காலக் கட்டத்தில் திருமணமாகும். அல்லது நிச்சயமாகும்.
இந்த சனிப் பெயர்ச்சியில் முக்கியமாக மூன்றாமிடத்துப் பலன்கள் நடைபெறும். செய்யும் காரியங்கள் யாவும் வெற்றியடையும்.  நோய்கள் குணமடையும். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். எதிரிகளை எளிதில் வெற்றி கொள்ளலாம். மதிப்பு, மரியாதை, கௌரவம் உண்டாகும். பணிக்கு புதிய பணியாட்கள் கிடைப்பார்கள். . தன்னம்பிக்கை, தைரியம் உண்டாகும். பங்காளிகள் ஒற்றுமை உண்டாகும்.
உங்கள் தாயின் நலனில் கவனம் தேவை. உயர் கல்வியில் வீடு, வாகனம், நிலம் வகையில் கவனம் தேவை. உங்கள் குழந்தைகளால், நன்மை உண்டாகும். தெய்வ அருள் உண்டாகும். பூர்வீக பலன்கள் நன்மையைத் தரும். உங்கள் தாய்மாமன் உடல்நலம்  பாதிக்கப்படும். உங்கள் உடல்நலம்  பாதிக்கப்படலாம். கவனம் தேவை. உங்கள் மனைவியின் தந்தை வகையில் பிரச்சினைகள் இருக்கும். அவருடைய உடல்நலம் பாதிப்படையும். போக்குவரத்துகளில் கவனம் தேவை. பதவி மாற்றம், இட மாற்றம் நன்மை உண்டாகும். மூத்த சகோதரர் வகையில் அனுசரணையாகப் போகவும்.
சனிபகவானின் பார்வை பலம்தான் அவரது சஞ்சார பலத்தைவிட சக்தி வாய்ந்தது என்று பலமுறை கூறியிருக்கிறோம். சனிபாகவான் தன்னுடைய 3,7, 10ம் பார்வயால், உங்களுடைய பூர்வ புண்ணிய ஸ்தானம், பாக்கிய ஸ்தானம், விரய ஸ்தானம்  ஆகிய ஸ்தானங்களைப் பார்க்கிறார். இந்தப் பார்வை நல்ல பார்வை என்பதால், உங்களுக்கு யோக பலன்கள் அதிக அளவில் நடைபெறும்.
சனிபகவானின் மூன்றாம் பார்வை உங்களுடைய பூர்வ புண்ணீய ஸ்தானத்தில்  பதிவதால், உங்கள் மறதி, மந்தம்., கவனக்குறைவு ஆகியவை நீங்கும்.  இனி எல்லாவற்றிலும் நல்ல முடிவு எடுப்பீர்கள். தெளிவாகச் சிந்திப்பீர்கள். தயக்கமில்லாமல்,  முன்னேறுவீர்கள். அலை பாயும் மனதை ஒரே இடத்தில் நிறுத்தி பலத்துடன் காட்சியளிப்பீர்கள். எதையும் உடனுக்குடன் செய்ய முடியும். மனதில் எப்போதும் நம்பிக்கை நிறைந்திருக்கும்.
சனி பகவானின் ஏழாம் பார்வை உங்களுடைய பாக்கிய ஸ்தானத்தில் பதிவதால், ஆதாயமான வரவுகள் அதிகப்படும். வீடு, நிலம், தோட்டம்-துரவு ஆகியவற்றை வாங்கும் முயற்சி தீவிரப்படும். வேதனைகளும் சோதனைகளும் நீங்கி சாதனைகள் பல புரிந்து புகழ் பெறுவீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். வம்பு சண்டைக்கு வருபவர்கள் முறியடிக்கப்படுவார்கள். தான தருமங்கள் செய்வீர்கள்.  தைரியமும் தெம்பும் அதிகமாகும். தகப்பனாரின் ஆரோக்கியம் சீராக இருக்கும்.
சனி பகவானின் பத்தாமிடத்துப் பார்வை உங்கள் விரய ஸ்தானத்தில் விழுவதால், உங்கள் ஆரோக்கியமும் உங்கள் மனைவியின் ஆரோக்கியமும் பலப்படும். ஏமாற்றங்கள், இழப்புகள் என்பவை இல்லாமல், நினைத்த காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.  ஆதாயமும் தேடுவீர்கள். செலவுகளும் விரயங்களும் கட்டுப்படும். எல்லாவகையான செலவுகளையும் சமாளிக்கும் அளவுக்கு வருமானம் வரும். இரவில் குறுக்கீடு எதுவுமில்லாமல், நிம்மதியாகத் தூங்க முடியும்.
இனி சனி பகவானின் வக்கிர சஞ்சாரத்தைப் பற்றிக் காண்போம்:
(1). 9.2.12. முதல் 24.6.12. வரையிலான 4 மாதங்கள் 15 நாட்கள்:
இப்போது சனி பகவான் வக்கிர கதியில் சஞ்சரிக்கிறார். அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசத் தொடங்கிவிட்டது.  அதற்கான அறிகுறிகள் உங்களுக்குத் தெரியும். உங்களுக்குத் தேவைப்படும் உதவிகள் உடனுக்குடன் கிடைக்கும். சிலர் வலிய வந்து உதவி செய்வார்கள். வேறு சிலர், உங்கள் நட்பை நாடி வருவார்கள். கையில் பணப் புழக்கம் தாராளமாக இருக்கும். கடன்களை எளிதில் தீர்த்து விடுவீர்கள். விலையுர்ந்த பொருட்கள், வீட்டுக்குத் தேவையான எலெக்ட்ரிக்  பொருட்கள் போன்றவற்றை வாங்குவீர்கள். வெளிவட்டாரங்களில் உங்களுக்கு சாதகமான போக்கு காணப்படும். மிகவும் கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிக்க முடியும். உங்கள் உழைப்பிற்கு எதிர்பார்ப்பதை விட அதிக ஊதியம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தை விரிவுபடுத்த இது சரியான நேரம். உத்தியோகம் பார்ப்பவர்களின் நேர்மையும் திறமையும் மேலதிகாரிகளுக்குத் தெரியத் தொடங்கும். மாணவ மாணவிகள் விளையாட்டுகளிலும் வெற்றி பெற்று வருவார்கள். படிப்பிலும் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள், குதர்க்கங்கள், கருத்து வேற்புபாடுகள் போன்றவை நீங்கி மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலவும். உங்கள் உடல்நலம் தேறும். நோய்கள் அகலும். பயணங்கள் நன்மையைக் கொடுக்கும். 19.4.12க்குப் பிறகு 26.6.12 வரை கொஞ்சம் எதிர்மறையான பலன்களாக இருக்கும்.
(2). 16.2.13. முதல் 12.7.13 வரையிலான 4 மாதங்கள் 26 நாட்கள்:
இந்தக் கட்டத்தில் சனி பகவான் இரண்டாம் முறையாக வக்கிர சஞ்சாரம் செய்கிறார்.  நீங்கள் எடுக்கும் காரியங்கள் யாவும் சுலபமான வெற்றிகள் உண்டாக்கும். தங்க நகைகள் வாங்கலாம். உங்களிடம் பணி செய்யும் வேலையாட்களால் உபரியான வருமானம் உண்டாகும். புதிய தொழில் முயற்சிகள் துவங்கலாம். சகோதரர்களால், மிகவும் நல்லது நடக்கும்.  முட்டுக்கட்டைகளாக எந்த விவகாரங்கள் குறுக்கிட்டாலும்,  அவற்றையெல்லாம்  தாண்டிக்கொண்டு முன்னே செல்வீர்கள். ஆக்கப்பூர்வமான காரியங்களையும் அவசியமான கடமைகளையும் அடுத்தடுத்து செயல்படுத்திக்கொண்டு வருவீர்கள்.
உங்களுடைய பொருளாதார நிலையில் சிறப்பான முன்னேற்றம்  ஏற்படும். கொடுக்கல்- வாங்கல்களை ஒழுங்குபடுத்திக்கொள்வீர்கள். கடன் சுமை பெரிதும் குறையும். ஆதாயங்கள் அதிகமாகக் கிடைக்கும். பொன் பொருள் சேரும். பழைய வாகனத்தை விற்றுவிட்டு புது வாகனம் வாங்குவீர்கள். சிலர்  இருக்கும்  பழைய வீட்டை திருத்தம் செய்வார்கள்.
வருமானம் வரும் எந்த வேலையை நீங்கள் செய்தாலும் நீங்கள் எதிர்பார்த்ததைவிட  அதிக வருமானம் வரும். பலவழிகளிலிருந்தும் பணம் வந்து சேரும். ஆடைகள், ஆபரணங்கள், ஆடம்பரப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள், வசதியை அதிகப்படுத்தக்கூடிய சாதனங்கள், நவீனமான கருவிகள் புதுமைக் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை வாங்குவீர்கள்.
(3) 3.3.14. முதல் 23.7.14 வரை யிலான 4 மாதங்கள் 20 நாட்கள்:
இப்போது சனி மூன்றாம் முறையாக வக்கிர சஞ்சாரம் செய்கிறார். இந்தக் காலத்தில் தொழில் சிறப்பாக இருக்கும். பதவி உயர்வும் விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் நல்ல பெயர் உண்டாகும். காரியங்கள் யாவும் வெற்றியடையும். தொழிலில் நல்ல லாபம் உண்டாகும்.  உங்களின் நெருங்கிய உறவினர்களின் காரியங்கள் நல்லபடியாக முடிவையும். தீர்த்த யாத்திரை செல்லலாம். உடல்நலம் சிறப்படையும். வீடு.நிலம் வாகனம் வாங்கலாம். அல்லது புதுப்பித்துக்கொள்ளலாம். அடுத்ததாக சுப விரயசெலவுகள் உண்டாகும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணம் நடக்கும். உடல்நலம் சிறப்படையும். குடும்பத்துக்குத் தேவையான பொருட்கள் வாங்கலாம்.  இந்தக் காலத்தில் உங்களுடைய அறிவுக்கூர்மை, புத்தித் தெளிவு, தனிப்பட்ட திறமை போன்றவை அதிகரிக்கும். அற்புதமான பல சாதனைகளை உங்களால் செய்ய முடியும். புகழும் பாராட்டுகளும் பரிசுகளும் கிடைக்கும். உயர்மட்ட மனிதர்கள் உங்களை நாடி வருவார்கள். உங்களுடைய சிந்தனைகளும் செயல்களும்  சரியான பாதையில் செல்லும். நன்மைகளும் மேன்மைகளும் கிடைக்கும்.  எதையும் திறம்பட திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். பொருளாதார நிலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கும். ஆடம்பரச் செலவுகளில் பணம் வேகமாகக் கரையும். செலவுகளைக் கொஞ்சம் கட்டுப்படுத்திக்கொள்ளவேண்டும். உத்தியோகம் பார்ப்பவர்கள், கூட வேலை பார்ப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டும். தொழிலில் போட்டி பொறாமை ஏற்படும். குடும்பத்தில் மனைவியின் ஆர்ப்பாட்டம் பெரிதாக இருக்கும் அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட வேண்டும். கலைஞர்களுக்கு வருமானம் சுமாராக இருக்கும். பெற்றொரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மறந்து விடாதீர்கள்.

பொதுவாக சனியின் மூன்றாமிடத்து சஞ்சாரம் உங்களுக்குப் பல வழியிலும் நன்மையாகவே இருக்கும்.
பரிகாரம்:
1. காக்கைக்கும், நாய்க்கும் சிவப்பு நிற பிராணிகளுக்கும், உணவு வைப்பது, ஏழை எளியவர்களுக்கு உணவோ மருத்துவ உதவிகளோ ஏதேனும் செய்வது நல்லது.
2. ஆவணி ஞாயிற்றுக் கிழமை விரதம், சத்ய நாராயண பூஜை , ஞாயிற்றுக் கிழமையில் வரக்கூடிய பௌர்ணமி திருவண்ணாமலை கிரிவலம், பௌர்ணமி பூஜை, பைரவர் வழிபாடு சிறந்தது.
3. ஜோதி பிள்ளையார் திருக்கருக்காவூர், திருநெல்வேலி, தாமிர நடராஜர், காந்திமதியம்மை, திருமோகூர் சக்கரத்தாழ்வார், சுதர்சன மூர்த்தி, சிம்ம வாகினியான மூகாம்பிகை சிம்மவாகன பைரவராகிய நாகை போன்ற ஸ்தலங்களுக்குச் சென்று குறிப்பாக அர்ச்சனை, ஆராதனை, அன்னதானம் செய்து உள்ளன்புடன் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபடுவது மிக உத்தமம்.
இவை தவிர , குச்சானூர், திருநள்ளாறு, வேலூர் – திருவண்ணாமலை சாலையில் உள்ள ஏரிக்குப்பம் ஆகிய இடங்களில்  எழுந்தருளியுள்ள சனீஸ்வரனின் திருத்தலங்களுக்குச் சென்று உரிய வழிபாடுகளைச் செய்வது நலம் பயக்கும்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>