/* ]]> */
Aug 212011
 

கடகம்

கடக ராசி

களத்திர ஈன ஸ்தானாதிபதியான சனீஸ்வர பகவான், சுகஸ்தானத்தில் உச்ச நிலையில் பெயர்ந்து, ஜீவனத்தில் நிற்கும் வக்கிர குருவை பார்க்கவும், குருவும் சனியை மறுபார்வை செய்யவும், அர்த்தாஷ்டம சனியாய் செயல்படுகிறார். மேலும் தன் பார்வையால், சத்ரு ஸ்தானத்தையும் ஜென்ம ராசியையும் பார்வையிடுகிறார். இதனால், உங்களுக்கு சனியினால் அதிகமாக நன்மைகள் கிடைக்கும் என்று சொல்ல முடியாது.   கொஞ்சம் சோதனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். வீண் விரயங்களும் தண்டச் செலவுகளும் ஏற்படும். வசதி வாய்ப்புகள் குறையும். பெற்றோர்களின் சொத்துக்களைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படும். தாயின் உடல்நலம் கெடும். உயர்கல்வி பெறுவதில் தடை ஏற்படும். ஏதேனும் சொத்துகள் வாங்கினாலும், அதை விற்பதிலும் வாங்குவதிலும் இன்னல்கள் வரும். வார்த்தைகளில் தெளிவும் இருக்காது.   வார்த்தைகளே வம்புச் சண்டைக்கு வழி வகுக்கும்.  பிறர் விரோதங்கள் தேவையில்லாமல் வந்து சேரும்.

உங்களுடைய சுக சௌகரியங்கள் குறையும். இரவில் அதிக நேரம் கண் விழித்து வேலைகளை முடிக்க வேண்டியிருக்கும். சிறு நோய்கள் அடிக்கடி ஏற்பட்டு தொல்லை கொடுக்கும். வெயிலில் அலைந்து திரிந்தும் பிரயோஜனங்கள் எளிதாக வராது. ஊக்கமும் உற்சாகமும் குறையும். நன்கு உடை உடுத்திக்கொள்ளவும் தோன்றாது. ஏதாவதொரு காரியம் செய்ய வேண்டியிருந்தால், அதை செய்து முடிக்க முடியுமா என்ற மலைப்பு தோன்றி பின்வாங்க வைக்கும். மறதி, மயக்கம், தயக்கம், குழப்பம், மந்தம், தடுமாற்றம், தேக்கம், அலுப்பு, சலிப்பு, அலட்சியம், அவனம்பிக்கை அசதி, அசௌகரியம் போன்றவையே வாழ்க்கையாகிவிட்டது போலிருக்கும்.  பித்தம் சம்பந்தப்பட்ட நோய்களும், கால்பிடிப்பு, மூட்டுவலி, சக்கரை நோய் போன்றவை தோன்றும்.  பக்கத்து வீட்டுக்காரர்களுடன் பிரச்சினைகள், அடிக்கடி வீடு மாற்றிக்கொண்டே இருத்தல், வீடு அல்லது மனை வாங்கும் முயற்சி தாமதப்படுதல்,  வீடுகட்டும் திட்டம் தள்ளிக்கொண்டே போதல், போன்ற  பாதிப்புகள் ஏற்படும். குடும்பத்தில் எப்போதும் சண்டை சச்சரவுகள் நிலவும். உங்கள் பொறுமையால் மட்டுமே சமாளிக்க முடியும்.

குழந்தைகளினால், வீண் விரயச் செலவுகள் உண்டாகும். பூர்வீகச் சொத்துக்களில் சிக்கல்கள் உண்டாகும்.
திருமணங்களைத் தள்ளிப் போடவும். வம்பு வழக்குகள்  கோர்ட்டுக்குப் போனாலும் தீராது. கோர்ட் வரை செல்வதை தவிர்ப்பது நல்லது. தந்தையின் உடல்நலம் கவனிக்கப்படவேண்டியதாகிறது. வண்டி வாகனங்களில் கவனம் தேவை.
உங்களுடைய உடல்நலத்திலும், மன நலத்திலும் கவனம் தேவை. உங்களுடைய அந்தஸ்து, கௌரவ பாதிப்புகள் ஏற்படலாம். கவனம் தேவை. சகோதர வழியில் பிரச்சினைகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும். தன்னம்பிக்கையும் தைரியமும் குறையாமல் இருப்பது மிகமிக  அவசியம்.

இனி, சனி பகவானின் பார்வை பலன்களைப் பார்க்கலாம். சனி பகவானுக்கு அவருடைய சஞ்சார பலத்தைவிட அவருடைய பார்வை பலம் பெற்று விளங்கும் என்று  ஏற்கெனவே கூறியிருந்தபடி, துலா ராசியிலிருக்கும் சனி, தன்னுடைய 3, 7, 10 ஆகிய பார்வைகளினால், உங்கள் ராசிக்கு, 1,6, 10ம் இடங்களைப் பார்க்கிறார். 1-ம் இடத்துப் பார்வையினால் உங்கள் உடல்நிலையில் கோளாறுகள் வரலாம். ஆயுதத்தினாலும், நெருப்பினாலும், விபத்தினாலும் உயிருக்கு ஆபத்துகள் வரலாம். கோர்ட்டுக்கு செல்வதைத் தவிர்க்கவும். வீண் அலைச்சல்கள் தவிர்க்க முடியாதவை. உங்களுடைய பகைவர்கள் சிறுசிறு தொல்லைகளைக் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்காது. மாதத்திற்கு இரு முறையாவது மருத்துவரிடம் செல்ல வேண்டியிருக்கும். மருத்துவச் செலவுக்கு என்று தனியாக பணம் ஒதுக்க வேண்டியிருக்கும். நெருக்கடியைச் சமாளிக்க கடன் வாங்கவேண்டியிருக்கும். ஆனால், வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாது.

சனி பகவானின் ஏழாம் பார்வை ஜீவன காரிய ஸ்தானத்தில் பதிவதால், உங்களுடைய வருமானம் பலவழியிலும் பாதிக்கப்படும். அது மட்டுமில்லாமல், உங்களுடைய உழைப்பும் பாதிக்கப்படும். கை நிறயச் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்துடன் புறப்பட ஆயத்தமாகும் உங்களை, திடீரென நோய் தாக்கி படுக்கையில் தள்ளும். பல சமயம் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காது. மனம் சோர்ந்து போகும். எந்த ஒரு வேலையையும் எடுத்தோம் முடித்தோம் என்று இருக்காது. எல்லாமே இழுபறியாக இருக்கும். சின்னச் சின்ன காரியங்களைக்கூட செய்து முடிக்க முடியாது.
சனி பகவானின் பத்தாம் பார்வை உங்கள் ஜென்ம ராசியைப் பார்ப்பதால், உங்கள் தன்னம்பிக்கை குறையும். சிறு பிரச்சினை இருந்தால்கூட அதை ஒருவர் உதவியுடன் முடிக்கலாமா என்று நினைப்பீர்கள். நீங்களே அதை முடித்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் ஏற்படாது. முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் ஏற்படும் . தவறான முடிவெடுத்துவிட்டு தடுமாறுவீர்கள். உங்களைச் சுற்றி இருப்பவரின் சொற்படி நடப்பீர்கள்.

பொதுவாக நீங்கள் செய்யும் தொழிலில் பல சிக்கல்கள் ஏற்படலாம். பிரச்சினைகள் உருவாகலாம். உங்கள் வேலையாட்களினால், அதிகமான இடையூறுகளும் வருமானக் குறைவுகளும்  ஏற்படும்.  உயர் அதிகாரிகளிடமும் உடன் பணிபுரிபவர்களிடமும் மனக் கஷ்டம் உருவாகலாம். காரியங்களில் தடை ஏற்படும். கௌரவத்துக்கு இழுக்கு வரலாம்.

இனி சனிபகவானின் வக்கிர சஞ்சாரங்களைப் பார்க்கலாம்: இந்த சனிப் பெயர்ச்சியில் மூன்று முறை சனி பகவான் வக்கிர கதியில் சஞ்சரிக்கிறார்.

(1) 9.2.12 முதல் 24.6.12 வரையிலான 4 மாதம் 15 நாட்கள் ( சனி  வக்கிரம் ):

பாபக் கிரகம் வக்கிர சஞ்சாரம் செய்யும்போது எச்சரிக்கை மிகமிக அவசியம். முன்னெச்சரிக்கையோடு இருந்தால், ஆபத்து வரும்போது தடுமாறிப்போக வேண்டியதில்லை.  இந்தக் காலகட்டத்தில் பொறுப்புகள் பெருஞ்சுமையாகி உங்களைத் திணற வைக்கும். வருமானத்துக்கு ஆதாரமான அத்தனை விஷயங்களிலும் சிரமங்கள் இருக்கும். ஊக்கமும் உடல்நலமும் அவ்வப்போது பின்னடையும்.  பணத் தட்டுப்பாடுகளும் திடீர் செலவினங்களும் உண்டு. குடும்பத்தினரின் உடல்நலம் பாதிக்கப்படலாம். தொழில் செய்யும் இடத்தில் மனஸ்தாபம் உண்டாகும். கணவன்-மனைவிக்கிடையே பிணக்குகள் வரும். எந்த வேலையாக இருந்தாலும் தாமதமாகத்தான் செய்து முடிக்க முடியும். வக்கிர கதியில் பின்னோக்கிச் செல்லும் சனி பகவான், 18.5.12 அன்று சித்திரை நட்சத்திரம் கன்னி ராசியில் சஞ்சரிக்கத் தொடங்குகிறார். அதனால் சற்று உற்சாகமான பலன்களைச் சந்திக்க நேரும். குறிப்பாக உங்களுடைய பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றமான பலன்களைக் காணமுடியும். நீங்கள் தேடிச் சென்றும் கிடைக்காத  பணம் இப்போது உங்களைத் தானாகத் தேடி வரும். எல்லாவகையான செலவுகளையும் எளிதாக சமாளிப்பீர்கள். இழுத்துக்கொண்டே சென்ற வேலைகளை எளிதாக முடிக்க முடியும். எதிர்பாராத இடங்களிலிருந்து நல்ல உதவிகள் கிடைக்கும்.  உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். வெளியூர்ப்பயணங்கள் ஆதாயத்தைத் தேடிக் கொடுக்கும்.

(2). 16.2.13 முதல் 12.7.13 வரையிலான 4 மாதம் 26 நாட்கள் (சனி வக்கிரம்):

இந்தக் காலக் கட்டத்தில் சனி இரண்டாம் முறையாக வக்கிர சஞ்சாரம் செய்கிறார். இந்தக் காலத்தில் தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை. வீடு, வாகனம், நிலம் பொன்றவைகளைக் கையாளும்போது கவனம் தேவை. வீண் அலைச்சல்களைத் தடுக்க முடியாது. உயர் கல்வித் தடை ஏற்படும்.  கடமைகளையும் காரியங்களையும் செயல்படுத்துவதற்கு வாய்ப்புகள் ஏதுவாக இருக்காது என்றாலும், வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. வீட்டு வசதிகளும் குடும்ப சுபிட்சமும் அதிகரிக்கும். ஆனால், தாமதக் குறிக்கீடுகள், எந்த வேலையையும் விரைந்து செய்ய முடியாதபடியான தடங்கல்களை ஏற்படுத்தும். எதிலும் நிதானம் தேவை. உங்களுக்கு நம்பிக்கை ஏற்படாத எந்த செயலிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. பொதுவான விரயங்கள், செலவினங்கள்,  சிரமங்கள் ஆகியவற்றுக்கு இடையிலும் வீடு, வாகனம், சொத்து, பத்து என்று வசதிகளைப் பெருக்கிக்கொள்ள முடியும். திடீரென்று பெரும் பணம் வந்து கடன் சுமைகளைக் குறைக்கவும் வாய்ப்புண்டு.  தொழில், வியாபாரத்த்ல் போட்டி பொறாமை ஏற்படும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு அலுவலகத்தில் மறைமுக எதிர்ப்பு ஏற்படும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் ஏற்பட்டாலும் வருமானம் அதிகரித்துவிடாது. குடும்பத்தில் கணவன்- மனைவிக்கிடையே அன்னியோன்னியம் உருவாகும். தாய்வழி உறவினர்கள் மூலமாகவோ அல்லது உறவினர்கள் மூலமாகவோ  நல்ல உதவிகள் கிட்டும்.

(3). 3.3.14 முதல் 23.7.14வரையிலான 4 மாதம் 20 நாட்கள்( சனி வக்கிரம்):

இந்தக் காலத்தில் முதலில் 19.6.14 வரையில் வீண் விரயச் செலவுகள் ஏற்படலாம். ஆனால் உங்கள் முயற்சியின் பேரில் சுப விரயங்களாக மாற்றிக் கொள்ளலாம். உடல் நிலையில் ஏற்படும் கோளாறுகளையும் மருத்துவ ஆலோசனை மூலமாக மனநலத்தையும் உடல்நலத்தையும் காப்பாற்றிக் கொள்ளலாம். புத்திசாலித்தனமாக நடந்துகொண்டால் மட்டுமே கௌரவம் அந்தஸ்தைக் காப்பாற்றிக்கொள்ளலாம். 19.6.14க்குப் பிறகு உங்கள் உடல்நலனிலும் மன நலனிலும் கவனமாக இருந்துகொள்ளவும். உங்கள் கௌரவம், அந்தஸ்து, மரியாதை இவைகளுக்குப் பங்கம் ஏற்படலாம்.  இந்தக் காலக் கட்டத்தில்  நீங்கள் எதற்கும் இரண்டு முடிவை எடுப்பீர்கள். அதில் எந்த முடிவை மேற்கொள்வது என்று குழம்பிவிட்டு கடைசியில் எதையுமே செய்யாமல் விட்டுவிடுவீர்கள். அடுத்த பிரச்சினைபற்றி சிந்திக்கத் தொடங்கிவிடுவீர்கள். பொருளாதார நிலை ஒரு அளவுக்கு சீராக இருந்தாலும், மன நிம்மதி குறையும். ஒரு தொகை கைக்கு வரும். ஆனால், அது முழுவதுமாகக் கரைந்தபிறகே அடுத்த தொகை சாவகாசமாகக் கைக்கு வரும். புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும்போது ஒரு முறைக்கு இரு முறை யோசித்தபிறகே செய்ய வேண்டும். உங்களை சுற்றியிருப்பவர்களை அனுசரித்து நடந்துகொண்டால்தான், நினைத்ததை சாதித்து ஆதாயம் காணமுடியும். வீடு, நிலம் ஆகியவைகளை விற்றுவிட்டு புதிதாக வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில், வியாபாரத்தில் பெரிய லாபத்தை எதிர்பார்க்க வேண்டாம். கூட்டுத் தொழிலில் அதிக முதலீடு செய்ய வேண்டியிருக்கும். உத்தியோகம் பார்ப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துக்கொண்டு சென்றால் மட்டுமே பிரச்சினையில்லாமல் சமாளிக்கலாம். குடும்பத்தில் உங்களையும் மீறிய அளவில் செலவுகள் மிக அதிகமாக ஏற்படும். உறவினர்களுடன் ஏற்பட்டிருந்த மனக் கசப்பு நீங்கும். சுபச் செலவு ஏற்படும்.

பொதுவாக நீங்கள் இந்த சனிப் பெயர்சிக் காலத்தில் உடல்நலத்தில் கவனத்துடன் இருக்கவேண்டியது அவசியம். எதிலும் கவனமும் எச்சரிக்கையும் மிகமிக அவசியமாகிறது.

பரிகாரம்:

1. சனியின் குருவான பைரவரைப் போற்றி  சரணடைந்து அஷ்டமி திதியில்  உரிய பரிகாரங்களைச் செய்யவும்.
2. பிரதோஷ காலத்தில் சிவாலயத்தில் சிவ பெருமானுக்கு காராம் பசுவின் பாலினால் அபிஷேகம் செய்யவும்.
3. பிரதி சனிக் கிழமை  சனி பகவானுக்கு எள் தீபமேற்றி இயன்ற அளவு தான தருமம் செய்க.
4. உங்கள் பிறந்த கிழமையில் அகதிகளுக்கு  அன்னம் அளிக்கவும்.
5. சந்திர தரிசனம், பௌர்ணமி, பிரதோஷம், ஏகாதசி, சஷ்டி, சங்கடஹர சதுர்த்தி காயத்ரி ஜெபம், நாக பஞ்சமி இதன் விரத வழிபாடுகளை உள்ளன்போடு செய்யவும்.
6. நான்கு திசை கணபதி  ( நாகை ), ஸ்ரீவைகுண்டம் சனீஸ்வரர், திருக்கடையூர் அம்மன், அமிர்தகடையேஸ்வரர், யோக நரசிம்மர், கிருஷ்ணர், தேரெழுந்தூர், சதூர்கல பைரவர் திருவீச்சநள்ளூர், பஞ்சமுக ஆஞ்சநேயர்-சிவகாசி காளி, விசாலாட்சி, சுடலேஸ்வரர், ஜாம்பவான், ஆகர்ஷண பைரவர் ஐந்து கடவுள்களும் ஒன்றாக இணைந்த விருதுநகர் ஸ்ரீ ஜாம்பவான் சுவாமிகள்  ஆலய பௌர்ணமி தரிசனம் இதன் ஆலயங்களுக்கு சென்று குறிப்பாக அர்ச்சனை, ஆராதனை, அன்னதானம் செய்து உள்ளன்புடன் சனி, திங்கள் கிழமைகளில் வழிபடுவது மிக உத்தமம்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>