/* ]]> */
Aug 262011
 

மகரம்:

 

மகர ராசி பலன்

இதுவரை உமது ராசிக்கு ஒன்பதாமிடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான் இப்போது உமது ராசிக்கு பத்தாமிடத்தில் சஞ்சரிக்கப்போகிறார். இதனை நீங்கள் வாழ்த்துக்கூறி வரவேற்க முடியாது. ஏனெனில் பத்தாமிடத்து சஞ்சாரம் உங்களுக்கு நல்லது செய்யப் போவதில்லை.  பலவகைக் கஷ்டங்களைக் கொடுக்கப் போகிறார்.

உங்கள் பத்தாமிடமான துலாம் சனிக்கு உச்ச வீடு. உமது ராசிநாதனும் குடும்ப அதிபதியும் அவரே . அவர் பத்தில் உச்சம் அடைவது சசயோகம் ஆகும்.  தந்தை மூலம் நிதியுதவி பெற்று  தொழில் புரிபவர்கள் ஏற்றம் அடைவர்.  உத்தியோக உயர்வு, பணியிட மாற்றம் முதலியவை கிட்டும். பணிச்சுமை அதிகரிக்கும். தொழில் நுட்ப பணியினர் மிகுந்த மேன்மை அடைவர். தூர தேசத்திலிருந்து  நற்செய்திகள் வரும்.

மற்றபடி, சனி பகவான்  பத்தாம் இடமான ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் வருமானத்திற்கும் செயல்பாடுகளுக்கும்  சிரமங்கள் உண்டாகும். சௌகரியங்கள் பாதிக்கப்படும். எந்த முயற்சிக்கும் உடனே வெற்றி கிடைத்துவிடாது. நீங்கள் வெகு தீவிரமாகப் பாடுபட்டு எடுக்கும் முயற்சிகளுக்கும் போராடித்தான் வெற்றி பெற முடியும்.  வேலை தேடுபவர்களுக்கு உடனே வேலை கிடைத்துவிடாது. ஏகப்பட்ட பாடுகளும் கஷ்டங்களும் பட்ட பிறகு கிடைக்கும் வேலையும் அவ்வளவு பிடித்தமான விதத்தில் இருக்காது. குறைந்த சம்பளத்தில் இப்படியொரு வேலைக்குப் போக வேண்டுமா என்று  நொந்துகொண்டுதான் போக வேண்டும்.  உங்கள் கல்வித் தகுதிக்கு ஏற்ற வேலையாகவும் இராது.  எக்கச்சக்கமாகப் படித்துவிட்டு இந்த வேலைக்கா போகணும் என்று தோன்றும். வேலை கிடைக்காவிட்டால் போகட்டும். சுயதொழில் செய்யலாம் என்றாலோ சொந்தமாக வியாபாரம் செய்யலாம் என்றாலோ  அதற்கும் வாய்ப்புகள் கூடிவருவது அரிதாக இருக்கும். அப்படியே கஷ்ட நஷ்டப்பட்டு தொடங்கிவிட்டாலும்,  தொடர்ந்து நடத்துவது என்பது  பெரிய கஷ்ட காரியமாக இருக்கும். அந்த தொழில்/ வியாபாரம் மூலம் முன்னேறுவது என்பது பெரிய கேள்விக்குறி . ஒவ்வோர் அடி எடுத்து வைக்கும்போதும், பெரும் உபத்திரவங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். நீங்கள் எதைச் செய்தாலும் அதைத் தடுப்பதுதான் முதல் வேலை என்பது சனிபகவானின் விளையாட்டாகும்.  அது ஒரு சிறிய வேலையாக இருந்தாலும் கூட அதைத் தொடங்குவதும் நடத்துவதும் பெரிய மலையைப் புரட்டி எடுப்பது போலாகிவிடும். ஒரு வேலையைச் செய்து முடிப்பதற்குள் பல வேலைகள்  வரிசையாக வந்து பெண்டிங்கில் நிற்கும். எதைச் செய்வது எதைச் செய்யாமல் விடுவது என்று  தடுமாறிப்போய் நிற்பீர்கள். உங்களுடைய உழைப்புக்கு ஏற்ற திருப்தி கிடைக்காது. வெகு பாடுபட்ட வேலைகள் எல்லாம் படு சொதப்பலாகிப்  போய்விடும். உழைப்புக்கேற்ற பலன் கிடைக்காது. பல சமயங்களில் உங்கள் உழைப்பின் பலனை மற்றவர்கள் தட்டிச் சென்று விடுவார்கள். கடினமாக உழைத்து நிறைய பணம் வரும் என்று எதிர்பார்ப்பீர்கள். ஆனால், போட்ட முதல் கூடத் தேறாது.

சனிபகவானின் பார்வை பலன்கள்:

சனி பகவான் பத்தில் இருந்து தனது 3, 7, 10.-ம் பார்வையினால், உமது ராசிக்கு 12, 4, 7. ஆகிய வீடுகளைப் பார்வையிடுகிறார்.  தனது மூன்றாம் பார்வையினால், உமது ராசிக்கு 12-மிடத்தை பார்வயிடுவதால், அந்த விரய ஸ்தானத்துக்குரிய கெடு பலன்கள் மலிந்து காணப்படும். பண விரயம் இருக்கும். தினமும் ஒரு தண்டச் செலவு ஏற்படும். உங்களையும் மீறி நடக்கும் பண விரயத்தை உங்களால் தடுக்க முடியாது. வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக்கொள்ள செலவு செய்ய நினைப்பீர்கள்.  அது முடியாமல் போகும்.  அவசியத்துக்கு  செலவு செய்ய திட்டமிட்டால், அது அனாவசியத்துக்கு கரைந்துபோகும்.  வரவுக்கு மீறிய செலவுகள் வரும் யாருக்கோ எப்போதோ போட்ட ஜாமீன் கையெழுத்து இப்போது பிரச்சினை கொடுக்கும். சிலர் நீதிமன்றம் செல்ல நேரும். பணம் செலவு செய்து அதிலிருந்து விடுபட நேரும்.  பயணம் மூலம் பணி புரிபவர்கள் ஏற்றம் அடைவர்.  நீண்ட தூரப் பயணம் அல்லது வெளிநாட்டுப் பயணத்துக்கு திட்டம் போடுவீர்கள். ஆனால், அது அவ்வளவு சீக்கிரம் நிறைவேறாது. இரவில் நிம்மதியாகத் தூங்க முடியாது. ஏதாவதொரு வகையில் தூக்கம் கெடும்.

சனி பகவான் தனது ஏழாம் பார்வையினால், உங்களது 4-வது வீட்டைப் பார்வை செய்வதால், கல்வியில் கூடுதல் கவனம் தேவை. வீடு கட்டும் பணியில் தகுந்த அனுமதி பெற்று தொடர்வது நன்று. வாகனம், கனரகப் பணியாளர்கள் தகுந்த பாதுகாப்புடன் பணியில் ஈடுபடுவது நன்று. அக்கம்பக்கத்தை அனுசரித்துப் போவது நலம்.   இந்த சனிபகவானின் ஏழாம் பார்வை உங்கள் மாத்ரு-பந்து ஸ்தானத்தில் பதிவதால், உங்களால் நேராநேரத்துக்கு சாப்பிடக்கூட முடியாது. ஆறிப்போன உணவு கிடைத்தாலே போதும் என்றாகிவிடும். நேரம் தவறி சாப்பிடுவதால், வயிற்றுக் கோளாறுகள் ஏற்படும். எதையும் செய்ய ஊக்கம் இல்லாதவர்களாக இருப்பீர்கள். உறவினர்களுடன் பகை ஏற்படலாம். அது தீராப் பகையாகவும் மாறும்.

சனி பகவானின் பத்தாம் பார்வை உங்களுடைய களத்திர ஸ்தானத்தில் பதிவதால், உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்படும். சிறு பிரிவு ஏற்படவும் வாய்ப்புண்டு. மனைவிக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படும். மருத்துவச் செலவுக்கென்று தனியாக ஒரு தொகையை ஒதுக்கவேண்டியிருக்கும்.  திருமணப் பேச்சுவார்த்தைகள் இழுத்துக்கொன்டே போகும்.  அப்படியே முடிவாகி திச்சயதார்த்தம் ஆனாலும், அதன்பின் திருமணம் நடைபெறக்கூடிய ஒவ்வொரு காரியமும் தடைப்படும். திருமணம் நடப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். கூட்டுத் தொழிலில் சிறுசிறு மனஸ்தாபம் உண்டாக ஏதுவாகும். கவனமுடன் பரிசீலித்து நடந்துகொள்வது நல்லது.

இனி சனி பகவானின் வக்கிர சஞ்சார பலன்களைப் பார்க்கலாம். இந்த சனியின் இரண்டரை ஆண்டு சஞ்சாரத்தில் மூன்று முறை வக்கிர அதியில் சஞ்சரிக்கிறார்.

(1). 9.2.12. முதல் 24.6.12.வரையிலான 4 மாதம் 15 நாட்கள்:
இந்தக் காலத்தில் உங்களுக்கு பணத் தட்டுப்பாடு மிகவும் அதிகமாக இருக்கும். எந்த திட்டமும் முன்கூட்டியே போட்டுவிட முடியாது.  கைக்கு வருவது போல இருக்கும் பணம் சமயத்துக்கு வராது. எனவே உங்கள் பட்ஜெட் தடுமாறும்.  திட்டமிட்ட வேலையும் சரிவர நடைபெறாது. வருமானம் சம்பந்தமான அத்தனை காரியங்களும் தடைப்படும். அதுமட்டுமில்லாமல் எந்தக் காரியத்தைத் தொட்டாலும் ஏதாவது தடை வந்துகொண்டே இருக்கும். அந்த இடையூறை நீக்கிவிட்டு முன்னேறுவதில் ஏகப்பட்ட சறுக்கல்கள் இருக்கும். அவசரப்பட்டாலோ அல்லது ஆத்திரப்பட்டாலோ எதுவும் நடக்காது. அன்றாட வேலைகளைக்கூட கவனிக்க முடியாமல், மறதி, தயக்கம், அசதி, அவநம்பிக்கை  என்று நீங்கள் மிகவும் கஷ்டப்படுவீர்கள். அவ்வப்போது ஏதாவது நோய் வாட்டிக்கொண்டே இருப்பதால், ஆரோக்கியமும் சரியாக இருக்காது. உத்தியோகத்திலிருப்பவர்கள் அதிகமான வேலைப் பளுவால், கஷ்டப்படுவார்கள். தொழில், வியாபாரங்கள் நஷ்டத்தில்தான் இயங்கும்.  பெரிய லாபத்தை எதிர்பார்க்கமுடியாது.  குடும்பத்தில் பற்றாக்குறை ஏற்படும்.

(2). 16.2.13.முதல் 12.7.13. வரையிலான 4 மாதம் 26 நாட்கள்:
இப்போது சனி பகவான் இரண்டாம் முறையாக வக்கிரகதியில் இயங்குகிறார். இந்தக் காலத்தில் எப்போதும் முகத்தில் ஒருவித வாட்டம் குடிகொண்டிருக்கும். உடம்பிலும் ஒரு புத்துணர்ச்சியோ சுறுசுறுப்போ இல்லாமல், இருப்பீர்கள். ஊக்கமில்லாமலே எந்தவொரு காரியத்தையும் சரிவர செய்ய முடியாமல் தத்தளிப்பீர்கள்.  மகிழ்ச்சி குறைந்து, சோர்வுடனும் துக்கத்துடனும் காணப்படுவீர்கள்.  மறதி, அலுப்பு, சோம்பல், சுகமின்மை என்று எப்போதும் எந்த வேலைக்கும் லாயக்கற்றவர் போல் இருப்பீர்கள். முகம் பொலிவிழந்து நடமாடுவீர்கள். ஊட்டமும் குறைவாக இருக்கும். மனதில் ஏதேதோ கலக்கங்கள் நிறைந்திருக்கும்.  அதனால், உங்களால் தெளிவான எந்த முடிவுக்கும் வர முடியாது. உடனடியாக எடுக்க வேண்டிய முடிவுகளைக் கூட எடுக்க முடியாமல் தடுமாறுவீர்கள். உங்களுடைய சிந்தனைகள் திசைமாறிச் செல்லும். உங்களுடைய பொருளாதார நிலை ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். சில சமயம் கைநிறைய பணம் புழங்கும். சில சமயம் கையில் பத்து ரூபாய்கூட இருக்காது. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், கையில் பணம் அதிகமாகப் புழங்கும்போது செலவு எதுவும் வராது.  கையில் பத்து ரூபாய்கூட இல்லாதபோது தள்ளவே முடியாத செலவு வந்து படுத்திவிடும். கொடுக்கல்- வாங்கலில் குளறுபடிகளும் ,கடன் நெருக்கடிகளும் ஏற்படும்.  தொழில், வியாபாரத்தில் சில புதிய நெருக்கடிகள் தோன்றும். தொழிலாளர்கள் சம்பள உயர்வுக்காக போராடுவார்கள். உத்தியோகம் பார்ப்பவர்கள் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவார்கள். உங்களுக்கு கீழே வேலை பார்ப்பவர்கள் உங்களுக்கு ஒத்துழைக்க மாட்டார்கள்.  தாய்வழி உறவினர்களால் பிரச்சினை ஏற்படும். கணவன்-மனைவி உறவு சிறப்பாக இருக்கும். சுபச் செலவு ஏற்படும்.

(3). 3.3.14. முதல் 23.7.14 வரையிலான  4 மாதம் 20 நாட்கள்;
இப்போது சனி பகவான் மூன்றாம் முறையாக வக்கிரமடைந்திருக்கிறார். இந்தக் காலக் கட்டத்தில் காரணமில்லாமல் ஒருவித படபடப்புடன் காணப்படுவீர்கள். எதற்கெடுத்தாலும் மற்றவர்கள்மீது கோபப்பட்டு எரிந்து விழுவீர்கள். காரணமில்லாமல் மற்றவர்கள் மீது வெறுப்பும் எரிச்சலும் காட்டுவீர்கள். சில வெற்றிகள் பெற்றாலும் நீங்கள் சந்திக்கும் தோல்விகள் சில உங்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கும். மனதில் குழப்பங்களும் கவலைகளும் தலைதூக்கும். உங்களுக்கு ஏற்படும் பணத்தேவைகளே அதற்குக் காரணமாகும்.  சில செலவுகளை எவ்வாறு சமாளிப்பது என்று தடுமாறிப் போவீர்கள். வாக்குவாதங்கள், வம்பு சண்டைகள் என்று வாழ்க்கை போர்க்களம் போலவே இருக்கும். பக்குவமாக எல்லா விஷயங்களிலும் கொஞ்சம் ஒதுங்கிப் போவது நல்லது. சிறு சிறு திட்டங்களில் கவனம் செலுத்தினால் அவற்றில் ஓரளவு வெற்றியும் கிட்டும்.  பெரிய திட்டங்களாகப் போட்டீர்கள் என்றால், அவற்றில் உங்களுக்கு வெற்றியே கிட்டாது. பெரிய திட்டங்களுக்கு இது உகந்த நேரமல்ல. ஆகைலால் அவற்றை மூட்டை கட்டி வைத்துவிடுங்கள். தொழில் வியாபாரத்தில் நெருக்கடிகளும் பிரச்சினைகளும் ஏற்பட்டுக்கொண்டேதான் இருக்கும். உத்தியோகம் பார்ப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. குடும்பத்தில் மனைவியின் புலம்பல் பலமாக இருக்கும். தாய்வழி உறவினர்களில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படும்.  தாயார் வழியில் மருத்துவச் செலவு உண்டாகும்.

இப்படியாக இந்த மூன்று வக்கிர சஞ்சாரங்களும் முடிவடைந்தபின் சற்று முன்னேற்றம் தெரிகிறது. பொருளாதார நிலை அபிவிருத்தி அடையும். மனதில் தன்னம்பிக்கையும் உற்சாகமும் குடிகொள்ளும். செய்யவேண்டிய வேலைகளை வேகமாகச் செய்து முடிப்பீர்கள். கருத்து வேற்றுமை காரணமாகப் பிரிந்து சென்ற நண்பர்கள் இப்போது திரும்பி வந்து நட்பு பாராட்டுவார்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களின் நிலை மேன்மையடையும்.  குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். பிள்ளைகளின் படிப்பு சிறந்தோங்கும். திருமணப் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் தெரியும்.

பரிகாரம்:

1. தினசரி சூரிய நமஸ்காரம் செய்க.
2. ஆதித்ய ஹிருதயம்(அ) தசரதர் அருளிய  தூரித்ரய தகன ஸ்தோத்திரம் பாராயணம் செய்க.
3. பிரதி சனிக்கிழமை சனி பகவானுக்கு கருங்குவளை மலர் சாத்தவும்.  வன்னி இதழ்களால் அர்ச்சிக்கவும்.  எள்ளு தீபம் ஏற்றவும்.
4. மகாப்பிரதோஷம், சதுர்த்தி, சனிவார அஷ்டமி, பௌர்ணமி பைரவர் அம்பிகை வழிபாடு, விஷ்ணு- லட்சுமி பூஜைகள் காயத்ரி ஜபம், கலைமகள் வழிபாடு யாவும் உகந்தது.
5. சனீஸ்வர ஸ்தலங்களான முக்குருணி வினாயகர் மதுரை; தனி சனீஸ்வரர் பிரம்ம ஸ்தான அம்பிகை திருச்சி : உறையூர் வெக்காளியம்மன்; பைரவன்பட்டி பைரவர்; நந்தியின் திருமண வைபவ ஸ்தலமான திருமழப்பாடி , யோகராமர், விஷ்ணு துர்கை அமைந்த படவேட்டைவேலூர், வட ஆற்காடு மாவட்டம் போன்ற ஸ்தலங்களுக்கு சென்று குறிப்பாக அர்ச்சனை ஆராதனை, அன்னதானம் செய்து உள்ளன்புடன் சனி, வெள்ளிக் கிழமைகளில் வழிபடுவது உத்தமம்.
6. சனீஸ்வரனின் புகழ்மிக்க ஸ்தலங்களான திருநள்ளாறு. குச்சானூர் ஆகிய இடங்களில் அமைந்த சனி பகவானையும்   ஆற்காடு- ஆரணிக்கு  அருகே ஏரிக்குப்பம் என்னும் கிராமத்தில் யந்திர ரூபத்தில் அமைந்த  சனிஸ்வர பகவானையும் தரிசனம் செய்யவும்.
அனைத்து கஷ்டங்களும் நீங்கும் . வாழ்க வளமுடன்!

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>