/* ]]> */
Aug 252011
 

தனுசு

 

தனுசு ராசி

இதுவரை சனி பகவான் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருந்து பதினோராமிடத்துக்கு மாறி வருகிறார். இது உங்களுக்கு ஒரு நல்ல மாற்றமே. இந்த மாற்றத்தை நீங்கள் இருகரம் நீட்டி வரவேற்கலாம்.  ஏனென்றால் பதினோராமிடம் என்பது லாபஸ்தானம்  ஆகும்.  பதினோராம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் உங்களுக்கு அதிர்ஷ்டமான பலன்களை அள்ளிக் கொடுத்து உங்களை ஆனந்தத்தில் ஆழ்த்துவார். உங்கள் வாழ்க்கைத் தரத்தை சனி பகவான் உய்ர்த்திக் காட்டுவார். இந்த இரண்டரை ஆண்டுக் காலமும் உங்களுக்கு யோகமான பலன்களாக நிகழப் போகிறது.

முதலாவதாக, உங்களுடைய ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். அதனால், நோய் நொடி வந்தால், உடனே குணமாகிவிடும். உங்களுடைய நடையில்கூட ஒரு துள்ளல் இருக்கும். சோர்வு, தளர்வு எல்லாம் ஓடிப் போயிருக்கும். பேச்சில்கூட விஷயம் எதுவும் இல்லாவிட்டாலும் புதிய உற்சாகத்துடன் பேசுவீர்கள்.

இந்தக் காலக்கட்டத்தில் சனிபகவான் உங்களுக்கு அள்ளிக் கொடுத்து உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் போகிறார். லாப ஸ்தானமான பதினோராமிடத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் இந்த இரண்டரை ஆண்டுக் காலமும் உங்களுக்கு  ஏற்றமான -யோக காலமாகவே இருக்கும்.

உழைப்புக் கிரகமான சனி இப்போது லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், உங்களுடைய உழைப்பு எதுவுமே தற்போது வீண்போகாது. உங்களுடைய உழைப்பு அனைத்தும் இப்போது ஏற்றத்தையும், யோகமான நல்ல பலன்களையும் கொடுக்கும். நிறைய ஆதாயங்களைத் தேடிக் கொடுக்கும். பொன் பொருள் வாங்குவீர்கள். ,  சொந்த வீடு, மனை வாங்கும் ஆசை இருந்தால், அது இப்போது நிறைவேற உங்கள் நிதி வசதி கை கொடுக்கும்.  வீட்டுக்குத் தேவையான பொருட்கள், வசதிகளைப் பெருக்கும் கருவிகள், மின் சாதனங்கள் வாங்கவும்,  பணவசதி இருக்கும்.   புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கவும்  பணம் தாராளமாக இருக்கும். ஏற்கெனவே வாங்கி வைத்திருக்கும் சொத்துக்களில் ஏதாவது வில்லங்கம் இருந்தால், அது இப்போது விலகி, நல்ல ஸ்திர உரிமை ஏற்படும். தேவைப்படும் சமயங்களில் தகுந்த உதவிகள் தாமதமில்லாமல் கிடைக்கும். பெரிய மனிதர்களுடனும், பிரபலங்களுடனும்  உங்களுக்கு பரிச்சயம் ஏற்பட்டு, அதனால், உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். அவர்களால் ஏற்றம் பெறுவீர்கள். வருமானம் சம்பந்தமான அனைத்து விஷயங்களும் தொல்லை, தடை எதுவுமின்றி சுலபமாக நடைபெறும்.  போட்ட முதலுக்கு வரவேண்டிய வருமானம் இரு மடங்காக வரும். கொடுத்த கடனும் உடனுக்குடன் வசூலாகும். நீங்கள் எதிர்பார்க்கும் .
கடனுதவி தாராளமாகக் கிடைக்கும்.

மனைவி- கணவனின் உடல் நலம் சிறப்படையும்.  குடும்பத்தில் நிலவி வந்த வாட்டம், பிணி- பீடைகள், கருத்து வேற்றுமைகள் போன்றவை  அகலும். பங்காளித் தகறாறு- உறவினரின் வேற்றுமை போன்றவை அகலும்.  உங்களைச் சுற்றி  எப்போதும்  மகிழ்ச்சி தவழும். மயங்கியும் பின்னடைந்தும் இருந்த நிலை மாறும். வெற்றி வாய்ப்புகள் உண்டாகும். பிள்ளைகளுக்கும் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் எப்போதுமே மகிழ்ச்சி நிலவும்.

உத்தியோகம் பார்ப்பவர்களின் கடின உழைப்பை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். தகுந்த பாராட்டுப்பத்திரங்களும் , பதவி, உயர்வும். விருப்பமான பணி இட மாற்றமும் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் நிலவி வந்த கருத்து வேறுபாடு நீங்கும். தொழில், வியாபாரம் சிறக்கும். கணவன் -மனைவிக்கிடையிலிருந்த கருத்து வேறுபாடு நீங்கும்.
இனி சனிபகவானின் பார்வை பலன்களைப் பார்ப்போம். அவரது சஞ்சார பலன்களைவிட பலம் பெற்றது, பார்வை பலம.:

சனி பகவான் தனது 3, 7, 10-ம் இடத்துப் பார்வைகளை உங்கள் ஜென்ம ராசி, பூர்வ புண்ணீய ஸ்தானம், அட்டம ஸ்தானம் ஆகிய இடங்களைப் பார்க்கிறார்.  இந்தப் பார்வைகள் நல்ல பார்வைகள் என்பதால்,  உங்களுக்கு மிகமிக நல்ல யோக பலன்களாகக் கிடைக்கப் போகின்றன.

சனி பகவானின் மூன்றாம் பார்வை உங்கள் ஜென்ம ராசியில் பதிவதால் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி நோய் நொடிகள் வந்தால், உடனுக்குடன் குணமாகிவிடும். உடம்பில் தெம்பு நிறைந்ததால், மனதிலும் சக்தி நிறையும். எந்தக் காரியத்தை எடுத்துக்கொண்டாலும் அதை உடனே செய்து முடித்துவிடுவதில் குறியாக இருப்பீர்கள். அதற்குரிய சாத்தியக்கூறுகள்  நிறைந்திருக்கும்.  வழிவகைகளும் உங்களுக்கு க்ளியராக இருக்கும்.  வெற்றிகரமாகச் செய்து முடித்துவிடலாம் என்ற நம்பிக்கை உங்களுக்குத் தோன்றும். அவநம்பிக்கை என்ற பேச்சிற்கே இடமில்லை. எப்போதும் நம்பிக்கையும் தைரியமும் நிறைந்திருக்கும். உங்களுடைய உற்சாகமான பேச்சு பல நல்ல நண்பர்களைத் தேடிக் கொடுக்கும்.

சனி பகவானின் ஏழாம் பார்வை உங்களுடைய பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பதிவதால், உங்களிடம் காணப்பட்டுவந்த மந்தத் தன்மை , மறதி, மயக்கம், தடுமாற்றம் போன்றவை நீங்கும். உங்கள் மனதை நீங்கள் செய்யும் காரியங்களில் நிலை நிறுத்தி அந்தக் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும். எப்போதும் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எதையாவது செய்துகொண்டே இருப்பீர்கள். உங்களுடைய செயல்கள் ஒவ்வொன்றும் உங்களுக்கு ஏற்றம் கொடுக்கும் ஏணிப்படியாக இருக்கும். உங்களுடைய திட்டங்கள் அத்தனையும் செயலாகும் நேரம் இது. புத்திசாலித்தனமாகத் திட்டமிடுவீர்கள். பலவித குழப்பங்களும் ,சிக்கல்களும் நிலவிய  விஷயங்களைக்கூட தெளிவான முடிவு வரும் அளவுக்கு நிறைவேற்றி முடிப்பீர்கள். மற்றவர்கள் வியக்கும் அளவுக்கு வெற்றியைக் குவிப்பீர்கள். நல்ல லாபத்தையும் ஈட்டுவீர்கள்.  வெற்றி வீரராக உங்களைக் காட்டும் நேரம் இது.

சனி பகவானின் பத்தாம் பார்வை உங்களுடைய அட்டம ஸ்தானத்தில் பதிவதால், உங்களுடைய உழைப்பில் ஒரு சதவீதம்கூட வீணாகாது.  உங்களுடைய உழைப்பு முழுவதும் உங்களுக்கு பெரும் லாபத்தைத் தேடிக் கொடுக்கும். வேலை தேடுவோருக்கு நல்ல சம்பளம் கிடைக்கக்கூடிய நல்ல வேலை கிடைக்கும். புதிதாகத் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இப்போது அதற்கான வாய்ப்பு உருவாகும். வம்பு சண்டைகள் வந்தாலும் ஒதுங்கிப் போகவேண்டிய அவசியமின்றி, ஒரு கை பார்த்துவிடுவீர்கள். கடமைகளையும் பொறுப்புகளையும் குறைவில்லாமல் நிறைவேற்றுவீர்கள்.

இனி சனி பகவானின் வக்கிர சஞ்சாரங்களைப் பற்றிப் பார்க்கலாம்: இந்த இரண்டரை வருட சனி சஞ்சாரத்தில்,   மூன்று முறை சனி பகவான் வக்கிர சஞ்சாரம் செய்கிறார்.

(1). 9.2.12. முதல் 24.6.12. வரையிலான 4 மாதம் 15 நாட்கள் :

இப்போது சனி பகவான் வக்கிர சஞ்சாரம் செய்கிறார். எதற்கும் தயங்காமல், நல்ல நல்ல முயற்சிகளை மேற்கொண்டு வெற்றியைக் குவிப்பீர்கள். ஈடுபடும் அனைத்து விஷயங்களிலும் ஈடுபாடு காட்டி அபிவிருத்தி காண்பீர்கள். பொறுப்புகள் நிறைவேறும். கடமைகளை நிறைவேற்றுவதிலும் தனிக்கவனம்  காட்டுவீர்கள். எந்தக் காரியத்தை எடுத்துக் கொண்டாலும் அதைச் செய்து முடிக்கும் வரை ஓய மாட்டீர்கள். வேலை தேடுபவர்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.  உங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். பிரபலங்களும் முக்கிய மனிதர்களும் உங்களைத் தேடி வருவார்கள். உங்களுடைய செல்வாக்கு உயரும். உங்களுடைய பொருளாதாரம் நல்ல நிலையில் காணப்படும்.  பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமிருக்காது. பல வழிகளிலிருந்தும் பணம் கைக்கு வந்துகொண்டே இருக்கும். வருமானத்தைப் பெருக்கிக்கொள்ளவும் பல வாசல்கள் உங்களுக்குத் திறந்திருக்கும்.  கொடுக்கல் வாங்கலில் நிலவி வந்த குளறுபடிகளை சரிப்படுத்திக்கொள்வீர்கள்.  தொழில், வியாபாரத்தை விரிவுபடுத்திக்கொள்ள இது சரியான நேரம். அதிகமாக முதலீடு செய்துகொள்ளலாம். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு குறையும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து குவியும்.  குடும்பத்தில் உற்சாகம் பொங்கும். நின்றுபோன திருமணப் பேச்சுவார்த்தை திரும்பவும் தொடங்கும்.

(2). 16.2.13. முதல் 12.7.13.வரையிலான 4 மாதம் 26 நாட்கள்:

இப்போது சனி பகவான் இரண்டாவது முறையாக வக்கிர சஞ்சாரம் செய்கிறார். இந்தக் காலக்கட்டமும் உங்களுக்கு யோகமாகத்தான் இருக்கும். பேச்சில் தெளிவும் செயல்களில் வேகமும் இருக்கும். உங்களிடம் சாமர்த்தியமும் மனதில் தைரியமும் நிறைந்திருக்கும். வெளிவட்டார சுழ்நிலையும் மிகவும் சாதகமாக இருப்பதால் நீங்கள் அத்தனையையும் உபயோகித்துக்கொண்டு எல்லாவற்றையும் சாதகமாக்கிக்கொண்டு ஆதாயம் காண்பீர்கள்.    புத்திசாலித்தனமான அணுகு முறைகளால், கடினமான காரியங்களையும் எளிமையாகச் செய்து முடிப்பீர்கள். தேவைப்படும் உதவிகள் உடனுக்குடன் கிட்டும்.  மனம் அலைபாய்ந்துகொண்டே இருப்பதால் ஆன்மீகத்தில் அதிக கவனம் செலுத்துவீர்கள். சிலசயம் செய்துகொண்டிருக்கும் கைக்காரியத்தைக்கூட பாதியிலேயே விட்டுவிட்டு போய்விடுவீர்கள். நண்பர்களுடன் ஈடுபடும் வாக்குவாதங்களில்கூட உங்கள் பக்கம் எவ்வளவு ஸ்ட்ராங்காக  இருந்தபோதும், பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்துவிடுவீர்கள். வாக்குவாதத்தில் தொடர்ந்து ஈடுபடமாட்டீர்கள்.  ஆனால், உங்கள் மனதுக்குள் நீங்கள் சொன்னதுதான் சரி என்ற எண்ணம் இருக்கும்.  தொழில், வியாபாரத்தில் புதுப்புது உத்திகளைக் கையாண்டு நிறைய லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகம் பார்ப்பவர்கள் சக ஊழியர்களை அனுசரித்துப் போவது நல்லது. கலைஞர்களுக்கு வருமானமும் நன்றாக இருக்கும். செலவுகளும் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு சந்தேகங்கள் தலைதூக்கும். அவற்றை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடுவது நல்லது. சுபச் செலவுகள் அதிகமாக ஏற்படும்.  அந்தவரையில் திருப்திப்பட்டுக்கொள்ளலாம்.

(3). 3.3.14, முதல் 23.7.14.வரையிலான 4 மாதம் 20 நாட்கள்:

இப்போது  சனி பகவான்  மூன்றாவது முறையாக வக்கிர சஞ்சாரம் செய்கிறார். இந்தக் காலக் கட்டத்தில் சில பிரச்சினைகள் உங்களுக்குப் பாதகமாகத் தோற்றமளிக்கும். உணர்ச்சிவசப்பட்டால், பல குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பொறுமையாகப் பிரச்சினைகளைக் கையாளவேண்டும்.  கோபப்படக்கூடாது. வாக்குவாதங்களுக்கும் இடம் கொடுக்கக் கூடாது. விஷயங்களை வெற்றிகரமாக முடிக்க வேண்டுமானால், ஜாக்கிரதையாகக் கையாளவேண்டும். உங்களுடைய பொறுளாதாரமும் சற்று தேக்கமாகத்தான் இருக்கும். முன்போல் பணம் சரளமாகக் கைக்கு வராது. தடை, தாமதங்கள் ஏற்படும். கைக்கு வரவேண்டியது வராமல் தடைப்படும். கொடுக்கல்-வாங்கலில் இழுபறி ஏற்படும். கடன் விவகாரங்கள் கட்டுக்கடங்கி இருக்கும். நண்பர்களால், சில விரயங்கள் ஏற்படும்.  முக்கிய மனிதர்களிடமிருந்து முன்போல உதவிகள் கிடைக்காது. உங்கள் செல்வாக்கு சற்று குறையும். உங்களுடைய தகுதிக்குக் குறைவானவர்களிடம் நட்பு வைத்துக்கொள்வதையும் அவர்களுடைய ஆலோசனைகளைக் கேட்பதையும் தவிர்ப்பது நல்லது. . வெளியூருக்குச் செல்லும்போதும் வெளியூரிலிருந்து திரும்பும்போதும் உங்கள் உடைமைகளைக் கவனமாகப் பார்த்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரம் இறங்குமுகமாக இருக்கும். போட்டி பொறாமைகளும் அதிகம் இருக்கும். உத்தியோகம் பார்ப்பவர்கள் மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாக நேரும். கலைஞர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவேண்டும். தாயார், மனைவியால் சில பிரச்சினைகள் ஏற்படும். உடன் பிறந்தவர்களால், வீண் செலவுகளும் விரயங்களும் ஏற்படும்.

மூன்று வக்கிர சஞ்சாரங்களில்  மூன்றாவது சற்று கடுமையாகத் தென்படுகிறது. இந்த மூன்று சஞ்சாரங்களும் முடிந்தபிறகு மீண்டும் நல்ல பலன்கள் தெரிய ஆரம்பிக்கும்.  இடையில் ஏற்பட்ட மந்தத் தன்மை நீங்கும்.  பணம் எதிர்பார்த்த இடங்களிலிருந்தும் வரும்; எதிர்பாராத இடங்களிலிருந்தும் வரும். திட்டமிட்ட காரியங்களையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். திட்டமிடாத காரியங்களையும் வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். எல்லா விஷயங்களிலும் வெற்றி உங்களுக்குத்தான் என்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.

பரிகாரம்:

1. பிரதி சனிக் கிழமை சனி பகவானுக்கு கருங்குவளை மலர் சாற்றி வன்னி இதழ்களால் அர்ச்சித்து வணங்கவும்.
2. குருப் பிரதோஷம், சனிப் பிரதோஷம். சோமப் பிரதோஷமாகிய காலங்களில் சிவாலயத்தில் காராம் பசுவின் பாலினால், அபிஷேகம் செய்க.
3. சனீஸ்வரரின் திருத் தலங்களான திருநள்ளாறு, குச்சானூர், ஏரிக்குப்பம் முதலிய ஸ்தலங்களுக்கு சென்று  சனீஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு செய்து வழிபடவும்.
வாழ்க வளமுடன்!

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>