/* ]]> */
Aug 222011
 

கன்னி ராசி

கன்னி ராசி

 

இந்த சனிப் பெயர்ச்சியில் சனி பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாமிடமான துலா ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். ஏழரைச்சனியின் கடைசி இரண்டரையில் அடியெடுத்து வைக்கிறீர்கள்.  இதுவரை நடந்துவந்த ஜென்ம ராசியில் நீங்கள் பட்ட கஷ்டங்களும் , அனுபவித்த தொல்லைகளும்  உங்களுக்கு மட்டும்தான் தெரியும்.  வெளியில் சொன்னது பாதி சொல்லாமல் விட்டது பாதி என்று மனதுக்குள் அடைத்து வைத்துப் புழுங்கியது கொஞ்சமா நஞ்சமா?.  இப்போது வரப் போகும் சனிப் பெயர்ச்சி அந்த அளவுக்கு வாட்டி எடுக்காது என்றாலும். கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கலாம் என்பது போலவும் இருக்கும். இவ்வாறு ராசி மாறிவரும் சனி பகவானை முழுமனதுடன் வரவேற்க முடியாவிட்டாலும், ஓரளவு நிம்மதியுடன் வரவேற்கலாம்.  இதுவரை ஜென்ம ராசியிலிருந்த சனி பகவான் இனி பாதச்சனியாக சஞ்சரிக்கப் போகிறார். இது ஏழரைச் சனியின் மூன்றாவது பகுதியும் இறுதிப் பகுதியுமாகும்.
பொதுவாக சனி பகவான் விரயச் சனியாகவும், ஜென்ம சனியாகவும் சஞ்சரித்ததால் ஏற்பட்ட இழப்புகளை பாத சனியாக சஞ்சரிக்கும் காலத்தில் ஈடுசெய்து விடலாம் என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன.  அது மட்டுமல்லாமல், சனி பகவான், விரயச் சனியாகவும், ஜென்ம சனியாகவும் சஞ்சரிக்கும் காலத்தில், ஒருவர் உருக்குலைந்துபோய்விடுகிறார். சனி பகவான் பாதச்சனியாக சஞ்சரிக்கும் காலத்தில், அவர் பழைய நிலையை அடைந்துவிடலாம் என்று  ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

இந்த சமயத்தில்  நீங்கள் செய்யவேண்டிய காரியங்களில் இதுவரை இருதுவந்த தடைகள், அலைச்சல், திரிச்சல்கள் எதுவும் இருக்காது..  எனவே எண்ணிய காரியங்களை எளிதாகச் செய்து முடிக்கலாம்.   மறதி, மந்தத்தனம், அவநம்பிக்கை, சந்தேகம் முதலியவை உங்களிடமிருந்து அறவே விடைபெற்றோடிவிடும். சங்கடம், சஞ்சலம், சோம்பல் இவை பறந்தோடிவிடும். உங்கள் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்களுடைய தோற்றத்திலும் சற்று பொலிவு ஏற்படும். சுறுசுறுப்பாகக் காணப்படுவீர்கள்.

தன்-குடும்ப- வாக்கு ஸ்தானமாகிய இரண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் ‘ குடும்பச் சனி ‘ என்று குறிப்பிடப்படுவதும் உண்டு. பொருளாதார நிலையில் எப்போதும் பற்றாக்குறையே இருந்து வரும். பற்றாக்குறை பிரச்சினை, கொடுக்கல் வாங்கலில் குளறுபடிகள், கடுமையான பேச்சு வார்த்தைகள், வீணான வாக்குவாதங்கள், குடும்பத்தில் கோபதாபங்கள், ஏற்பட்டு குடும்ப நிம்மதி பறிபோகும். வீடு, மனை, தோட்டம். துரவு, வாங்குவதிலும் தடை ஏற்படும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாது. நாணயம் தவறும். வீடு போன்ற சொத்துக்களை சீரமைப்பதில், சிரமம், பழுதுபார்ப்பதில் சிக்கல் போன்றவை ஏற்படும். மனைவியின் உடல்நலம்  கெடும்.
இரண்டாமிடத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதால், சேர்த்துவைத்த பொருள்களையெல்லாம் இழக்கவேண்டிவரும். குடும்பத்தில் பிரச்சினை காரணமாக குடும்பத்தை விட்டு வெளியேற  நேரிடும்.  உறவினர்களால், தொல்லையும் தொந்தரவும் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதி குறையும். பொருள்கள் திருடு போகும். தன்னம்பிக்கை, தைரியம் குறையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். உங்கள் தாயின் உடல் நலம், தந்தையின் உடல்நலம்  சிறப்படையும். மனைவியின் உடல்நலனில் கவனம் தேவை.   குழந்தைகள் நலனில் அக்கறை தேவை. கல்வித் தடை ஏற்படலாம். பயணங்களில் கவனம் தேவை.  தாய்மாமன் வகையில் வம்பு வழக்குகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. நண்பர்களிடம் பிணக்கு ஏற்படும். உங்கள் தொழிலுக்கு காரியத் தடை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும்.

இறைவழிபாடு மிகவும் அவசியம். இதுவரை இறை நம்பிக்கை இல்லாதவர்கள்கூட இப்போது ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.

வீண் அலைச்சல்கள், வீண்செலவுகள் உண்டாகும். உங்கள் உடல்நலம் பாதிக்கப்படலாம்.  உயர் அதிகாரிகளிடம் நல்ல பெயர் உண்டாகும். புதிய தொழிலில் தொழிலாளர்களின் மூலம் நடக்கும் காரியயங்கள் யாவும் பலிதமடையும். உங்களுக்கு தொழிலில் கிடைக்கும் லாபத்தில் வீடு, வாகனம் போன்றவைகளில் தடைகள், தாமதங்கள் ஏற்படலாம். சகோதரர் வழியில் சுபவிரயம் நடக்கும். அதனால், பணத்தை சகோதரர் வழியில் செலவழிக்க வேண்டும்.

சனியின் சஞ்சார பலன்களைப் பார்த்தோம். இனி சனி பகவானின் பார்வை பலன்களைப் பார்க்கலாம். சனியின் 3,7,10-ம் பார்வைகள், உங்கள் ராசிக்கு 4, 8, 11-ம் இடங்களைப் பார்வையிடுகிறார்.  அதாவது உங்களுடைய மாத்ருபந்து ஸ்தானம், அட்டம ஸ்தானம், லாப ஸ்தானம்  ஆகிய ஸ்தானங்களைப் பார்க்கிறார். சனி பகவானின் மூன்றாம் பார்வை உங்கள் மாத்ரு பந்துஸ்தானத்தைப் பார்ப்பதால் உங்கள் தாயாரின் ஆரோக்கியம் பாதிப்படையும். உங்களுக்கும் உங்கள் தாயாருக்குமிடையே அடிக்கடி கருத்துவேற்றுமை ஏற்படும். உறவினர்களிடம், சண்டைகள், மனக் கசப்புகள் ஏற்படும். உறவினர்களால் சில விரயங்களும் ஏற்படும். இந்த நான்காமிடம் உங்களுடைய சுக சௌகரிய ஸ்தானமாகவும் விளங்குவதால்,  உங்களுடைய சௌகரியங்கள் குறையும். உங்களைக் கவனித்துக்கொள்ள உங்களுக்கு நேரம் இருக்காது. அலைச்சல் காரணமாக நேரத்துக்கு சாப்பிடக்கூட முடியாது. காரியத் தடைகள் ஏற்படலாம். சனி பகவானின் ஏழாம் பார்வை உங்களுடைய அட்டம ஸ்தானத்தில் விழுவதால், உங்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடலில் ரத்தக்காயம் ஏற்படலாம். நண்பர்களுடன் கருத்து மோதல்கள் ஏற்பட்டால், வாக்குவாதம் செய்துகொண்டிருக்காமல், பெருந்தன்மையுடன் விட்டுக்கொடுத்துவிடுங்கள். இந்த நேரத்தில் யாருக்கும் கடன் கொடுத்துவிடாதீர்கள். கடன்பணம் திரும்பக் கிடைக்காது என்பதோடு, விரோதத்தையும் வளர்க்கும். போக்குவரத்துகள் எளிதாக இருக்காது. சில சிரமங்களை சந்திப்பீர்கள். வண்டி பழுது பார்த்தல், பராமரித்தல் போன்றவற்றிலும் சிரமங்கள் ஏற்படலாம். பயணங்களில் விபத்துகள் ஏற்படலாம்.   சனியின் பத்தாமிடத்துப் பார்வை உங்கள் லாப ஸ்தானமான பதினோராமிடத்தில் பதிவதால், உங்களுக்குக் கிடைக்கவேண்டிய ஆதாயம் தடைப்படும்.  கடினமாக உழைத்து கணிசமான லாபம் வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் எதிர்பார்க்கும் ஆதாயமும் வந்து சேரும். ஆனால், முழுமையாக வந்து சேராது. அரைகுறையாக வந்துசேரும். மூத்த சகோதர சகோதரிகளும் இந்தப் பார்வையால் பாதிக்கப்படுவார்கள். அவர்களுடைய ஆரோக்கியமும் சீராக இருக்காது. அவர்களுடைய அலுவல்களில் சிரமங்கள், ஏமாற்றங்கள் போன்றவை ஏற்படும். உங்களுக்குப் பதவி உயர்வும், வேண்டிய இடமாற்றமும் , வீடுமாற்றமும்  கிடைக்கும்.  உங்கள் செல்வாக்கு, கௌரவம்,. புகழ், அந்தஸ்து கூடும்.

இனி சனி பகவானின் மூன்று  வக்கிர சஞ்சாரங்களைப் பார்க்கலாம்:

(1): 9.2.2012 முதல் 24.6.2012 வரையிலான  4 மாதம் 15 நாட்கள்:
இந்தக் காலத்தில் 19.4. 2012. வரையில் வீண் விரயச் செலவுகள் அனைத்தும் சுப விரயச் செலவுகளாக நடக்கும். நீங்கள் எடுக்கும் செயல்கள் அனைத்தும், தடைகள், முடக்கம் இல்லாமல், வெற்றி பெறும். அக்கம்பக்கம் உள்ளவர்களிடம் நல்ல பெயர் கிடைக்கும். உடல் நலம் சிறப்படையும்.   19.4.12க்குப் பிறகு மேலே கூறப்பட்ட  பலன்களுக்கு எதிர்மறையான பலன்களாக நடக்கும். கவனமாக இருந்துகொள்ளவும். இந்தக் காலக் கட்டத்தில், அவசர செலவுகள் , அவசிய செலவுகள், மருத்துவ செலவுகள், எதிர்பாராத செலவுகள் என்று பலவகையிலான செலவுகளை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும். அலைச்சல்களும் அலைக்கழிப்புகளும் அதிகமாகக் காணப்படும். எதிர்பாராமல் ஏற்படும் பிரயாணங்கள் ஏமாற்றத்தைத் தரும். விருப்பமில்லாத வகையில் இடமாற்றம் ஏற்படும். உங்களுக்குப் பொருளாதார நிலை திருப்திகரமாகத் தோன்றினாலும்,  அவசர செலவுகள் ஏற்படும்போது சமாளிக்க முடியாமல் திணறிப் போவீர்கள். கைக்கு நிறைய பணம் வருவதுபோல் தோன்றும். ஆனால், வராது. அதனால் மனச் சோர்வு ஏற்படும்.  எந்தக் காரியத்தைத் தொட்டாலும் ஏதாவது தடை ஏற்படும். இரண்டு நாட்களில் செய்து முடிக்க வேண்டிய காரியத்தை இருபது நாட்களில் செய்து முடிப்பீர்கள். அடிக்கடி சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவீர்கள். சில சமயங்களில் காவல்நிலையம் வரை செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்படும். கொஞ்சம் எச்சரிக்கை அவசியம்.
தொழில், வியபாரத்தில், புதிதாக சில நெருக்கடிகள் தோன்றும்.  பொறுமையாகச் சமாளிக்கவேண்டும். உத்தியோகம் பார்ப்பவர்கள் வேலையில் தவறு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கலைஞர்களுக்குப் புதிய  தொடர்புகளால் வீண் விரயங்கள் ஏற்படும்.
குடும்பத்தில் வீட்டு நிர்வாகம் தொடர்பாக கணவன்-மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்படும். சொந்த பந்தங்கள் மூலமாக செலவுகள் அதிகரிக்கும்.
(2). 16.2.13. முதல் 12.7.13. வரையிலான 4 மாதம் 26 நாட்கள்:
இந்த காலகட்டத்தில் சனி பகவான் இரண்டாவது முறையாக வக்கிர சஞ்சாரம் செய்கிறார். இந்தக் காலத்தில் உங்கள் குடும்பத்தில் பணத் தட்டுப்பாடுகள் வராமல் பார்த்துக்கொள்ளவும். மற்றவர்களுக்குத் தேவையில்லாமல் வாக்குறுதிகளைக் கொடுப்பது ஆபத்து. குடும்பத்தில், கல்வித் தடைகள் போன்றவை ஏற்படும். வீண் செலவுகளும், அக்கம் பக்கத்தாருடன் சண்டை சச்சரவுகளும் ஏற்படும். உங்களுக்கு ஊக்கமும் உந்து சக்தியும் சற்றுக் குறையும். அலுப்பு, அசதி, சோம்பல், சுகவீனம் போன்றவை அடிக்கடி தலைகாட்டும். சின்னச்சின்ன அசௌகரியங்கள்கூட பெரிய சிரமங்களை  ஏற்படுத்தும். இப்போது உங்களுக்கு சாதகமான செலவுகளும் ஏற்படும். கடுமையான செலவுகளும் ஏற்படும் எவ்வளவு முயன்றாலும் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாது.   உங்களால் பணத்தை இறுக்கிப் பிடிக்கவே முடியாது. பணம் கைக்கு வந்ததும் பறந்துவிடும். நகை நட்டுகள், வீட்டுக்குத் தேவையான விலைஉயர்ந்த பொருள்கள், எலெக்ட்ரானிக் பொருள்கள், போன்றவற்றையும் வாங்குவீர்கள்.
உங்களுடைய பணம் எதிலாவதுபோய் முடங்கிக்கொள்ளும். அது சமயத்திற்கு கிடைக்காமல் சங்கடப்படுத்தும். நாளை தருகிறேன்  என்று பணம் கடனாக வாங்கிச் செல்பவர்கள் அப்படியே காணாமல் போய்விடுவார்கள். அவர்களைத் தேடிக்கண்டிபிடிப்பதே சிரமமாக இருக்கும். சில ஏமாற்றங்களும் விரயங்களும் ஏற்படும்.
தொழில், வியாபாரம்  மந்தமாக நடைபெறும். கூட்டு வியாபாரத்தில் அதிக முதலீடு தேவைப்படும். உத்தியோகம் பார்ப்பவர்கள் அன்றாட வேலைகளை முடிக்கமுடியாமல் திண்டாடுவார்கள். கலைஞர்களுக்கு மருத்துவச் செலவுகள் சற்று அதிகமாகவே ஏற்படும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகளும் பூசல்களும்  தலைதூக்கும்.   பிள்ளைகளின் படிப்பு திருப்திகரமாக இருக்காது. திருமணப் பேச்சுவார்த்தை தடைப்படும்.
(3). 3.3.14.முதல் 23.7.14 வரையில் $ மாதம் 20 நாட்கள்:
இந்தக் காலக் கட்டத்தில், சனி பகவான் மூன்றாவது முறையாக  வக்கிர சஞ்சாரம் செய்கிறார். தொழில் நஷ்டம் ஏற்படும். காரிய முடக்கம் ஏற்படும். தொழிலில் தொழிலாளர்களால் பிரச்சினைகள், அரசால் பிரச்சினைகள் வீண் செலவுகள், உடல்நலக் குறைவுகள், நெருங்கிய உறவுகளில் அசுப செலவுகள்  அவமானப்படல் என்ற கெட்ட பலன்கள்தான் ஏற்படும்.
இந்தக் காலத்தில்  நீங்கள் செய்யும் தொழில் சிறப்படையும். நல்ல பதவி உயர்வு இடமாற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் நல்ல பெயர் உண்டாகும். காரியங்கள் வெற்றியடையும்.
தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கும். நல்ல பதவி உயர்வு இடமாற்றம் போன்றவை உண்டாகும். உறவுகளில் சுபகாரியம் ஏற்படும். தெய்வ தரிசன்ம், தீர்த்த யாத்திரை ,  உடல் நலம் சிறப்பு  வீடு, நிலம் வாகனம் வாங்குதல் போன்ற நல்ல பலன்கள் உண்டாகும்.
குறிப்பாக பொருளாதார நிலை ஏற்றமும் இறக்கமும் நிறைந்ததாக இருக்கும். ஒரு நேரம் கை நிறைய பணம் வைத்திருப்பீர்கள்; ஒருநேரம் கையில்  பைசா இல்லாமல்  ஈயடித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பீர்கள். ஆனால், செலவுகள் மட்டும் வழக்கம்போல் ஏற்படும். கையில் பணம் இருக்கும்போது சமாளிப்பீர்கள். பணம் இல்லாதபோது யாரிடம் கடன் வாங்கலாம் என்று யோசிப்பீர்கள். ஆனால், நேரத்துக்குக் கடன் கிடைக்காது, கடன் கிடைத்தாலும் சமாளிக்க முடியாமல் இருக்கும். நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கண்ணுக்குத் தெரியும் எதிரிகளைவிட கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து நிற்கும் எதிரிகள் உங்களுக்கு தொல்லை கொடுப்பார்கள்.
சில காரியங்கள் நீங்கள் நினைத்தபடி முடியும். சில காரியங்கள் நீங்கள் நினைத்தபடி முடியாது.   பல இடையூறுகள் தோன்றி உங்களைக் கட்டிப்போட்டுவிடும். உதவி செய்வதாக வாக்களித்தவர்கள் ஒதுங்கிக்கொள்வார்கள். மூன்றாம் மனிதர்கள் யாராவது சிறுசிறு உதவிகள் செய்வார்கள். கால் தடுக்கி விழுதல், வாகனத்திலிருந்து கீழே விழுதல் போன்றவற்றால், ரத்த காயங்கள் ஏற்படலாம். கொடுக்கல்- வாங்கலில் பிரச்சினைகள் ஏற்படும். குடும்பத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் சண்டை போட்டுக்கொண்டிருப்பதற்கே நேரம் சரியாக இருக்கும். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படலாம்.
வக்கிரமில்லாத காலங்களில்  உங்களுடைய சில செயல்கள் உங்கள் சாதனைகளை வெளிப்படுத்தும். உங்கள் மதிப்பு உயரும். உத்தியோகம் பார்ப்பவர்களின் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். தொழில் சிறந்து வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள். கலைஞர்களுடைய திறமை வெளிப்பட்டு அவர்கள் வருமானம் பெருகும்.சிலருக்கு விருது கிடைக்கலாம். கணவன்- மனைவிக்கிடையே ஒற்றுமை ஏற்படும். உறவினர்களின் ஆதரவு கிட்டும். பெற்றோர் வழியில் சொத்துக்கள் வந்து சேரும். ஆக இந்த சனிப் பெயர்ச்சியில், துன்பங்கள்  மலிந்திடினும்,  பாதிப்புகள் அதிகம் தோன்றா  நிலையிலும்,   நன்மைகளே அதிகம் இடம்பெறுவதால், ராசிநேயர்கள் நிம்மதி காண்பார்கள்.

பரிகாரம்:

1. பிரதி சனிக்கிழமை விஷ்ணு ஆலயம் சென்று அங்குள்ள பெருமாளையும், தாயாரையும் பக்தி சிரத்தையுடன் வணங்கியபின்பு சக்கரத்தாழ்வாரை துளசிமாலை சாற்றி உள்ளன்புடன் வழிபட உள்ளக் கவலைகள் விலகும்.
2. மாலையில் நவக் கிரகத்துக்கு தீபம் ஏற்றி வழிபட்டு 9 முறை வலம் வரவும்.
3. இயன்ற அளவு ஏழைகளுக்கு உதவுங்கள். தர்மம் தலை காக்கும்.
4. தினசரி காக்கைக்கு அன்னமிடவும்.
5. பிரதி சனிக்கிழமை சனி பகவானுக்கு எள்தீபம் ஏற்றவும்.
6. சனி பகவானுக்கு கருங்குவளை மலர் சாற்றி வன்னி இதழ்களால் அர்ச்சனை செய்க.
6. ‘ சுதர்சன  யந்திரம் ‘ தக்கவர் மூலம் பெற்று , அதனை மந்திர உபதேசத்துடன் வழிபட நன்று.
7. திருநள்ளாறு சென்று அங்குள்ள  நவ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், அகத்தியர் தீர்த்தம், அம்ச தீர்த்தம்  என்னும் ஐந்து வகை  தீர்த்தங்களில்  நீராடி,  சனீஸ்வரரை தரிசித்து, , இயன்ற அளவு  பரிகார வழிபாடுகளை செய்து வரவும்.
8. குச்சானூர் சனிபகவானை தரிசித்தல் நலம்.
9. வேலூர்- திருவண்ணாமலை சாலையில் உள்ள ஏரிக்குப்பத்தில் அமைந்திருக்கும் சனி பகவானை தரிசித்து வரவும்.

வாழ்க வளமுடன்!

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>