/* ]]> */
Aug 272011
 

சனீஸ்வர பகவானின் திருத்தலம்:

ஸ்ரீ ஏரிக்குப்பம் எந்திர சனீஸ்வர பகவான் :

ஏரிக்குப்பம் சனீஸ்வரர் கொவில்  Erikuppam saneeswarar temple

சனீஸ்வரனின் திருத்தலங்கள் சிலவற்றைப் பற்றி வாசகர்கள்  அறிந்த்திருப்பீர்கள். அவற்றுள் ஒன்றுதான் , ஏரிக்குப்பத்தில் அமைந்துள்ள எந்திர சனீஸ்வரரின் ஆலயம்.  உலோகத்தால் செய்யப்பட்ட சனிபகவான் யந்திரத்தை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். கல்லில் எந்திரம் செதுக்கப்பட்டு சித்தர் பெருமக்களால் பூஜிக்கப்பட்ட ஒரு திருத்தலம் உண்டு. அதுதான் ஆரணி-ஏரிக்குப்பம் என்ற ஊர்.  திருவண்ணாமலை மாவட்டம் , போளூர் வட்டத்தில் அமைந்துள்ளது இந்த ஏரிக்குப்பம். ஆரணி– படவேடு சாலையில் சந்தவாசலுக்கு 3 கிலோமீட்டர் கிழக்கே அமைந்துள்ளது. ஆரணியிலிருந்து நடுக்குப்பம்  வழியாக படவேடு செல்லும் பஸ்களில் ஏரிக்குப்பம் கூட்டுரோடு இறங்கி ஒரு கிலோமீட்டர் உள்ளே சென்றால் இத் தலத்தை அடையலாம். ஆரணியிலிருந்து பிரதி சனிக் கிழமைகளில் ஏரிக்குப்பத்திற்கான சிறப்பு பஸ்கள் விடப்படுகின்றன. திருவண்ணாமலை மற்றும் போளூரிலிருந்தும் இங்கு வருவதற்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆரணியில் தங்கும் வசதி மற்றும் உணவு வசதி உள்ளதால், ஆரணியில் தங்கியும் இவ்வாலயத்தை தரிசிக்கலாம். மகாராஷ்ட்ரத்தில் உள்ள சின்காபூரில் அமைந்துள்ள சனி பகவானின் அமைப்பும், ஸ்ரீஏரிக்குப்பம் ஆலயத்தில் உள்ள சனிபகவானின் அமைப்பும் ஒரே வடிவில் உள்ளது. ஆனாலும் ஸ்ரீஏரிக்குப்பத்திலுள்ள சனிபகவான் யந்திர வடிவ அமைப்பில் மந்திர எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளதால், சக்தி வாய்ந்த ஆலயமாகத் திகழ்ந்து ஓங்கி வருகிறது.

இவ்வாறு யந்திர வடிவில் அமைந்து அருள்பாலித்து வரும் சனிபகவான் பக்தர்களின் குறை தீர்த்து வருகிறார். உடன் அவரது அன்னை சாயாதேவியும் யந்திர வடிவில் தரையில் புதைக்கப்பட்டு அருள்பாலிக்கிறார். சனீஸ்வர பகவான் அவருடைய மனைவியின் சாபத்தினால், இவருடைய பார்வை வக்கிரமாக அமைந்தது. இதனால் சனீஸ்வரரின் தாய் சாயாதேவி சனீஸ்வரரைத் தன் அருகிலேயே  வைத்திருக்கிறார். தாய் அருகிலேயே இருப்பதால் சனீஸ்வரர் எப்போதும் சாந்தமாகவே இருப்பார்.

ஏரிக்குப்பம் சனீஸ்வரர் கோவில்

இங்கு சனீஸ்வரபகவான் யந்திர வடிவில் ஐந்தடி உயரமும் , இரண்டரை அடி அகலமும் கொண்ட அறுகோண வடிவத்தில்  அமைந்துள்ளார். அதன் ஆறு முனைகளில் திரிசூலமும், அடிப்பாகத்தில் மகாலட்சுமி, அனுமார் வடிவங்களும் இடம்பெற்றுள்ளன.  எந்திரசிலையின் மேல்பக்கம் தென்புறமாக சூரியனும்,  நடுவில் ஸ்ரீசனீஸ்வரபகவானின் வாகனமான காகத்தின் உருவமும் வலப்புறமாக சந்திரனும் உள்ளனர். அவற்றின்  இதன் கீழே ஷட்கோண யந்திரமும் நீர், நெருப்பு சம்பந்தப்பட்ட யந்திரமும் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் சிவன், ஆஞ்சநேயர், சனீஸ்வரன்  ஆகியோருக்கான  பீஜாட்சர  மந்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஒரு கண்ணாடியை இந்த யந்திரத்தின் முன் வைத்துப் பார்த்தால், எழுத்துக்கள் நேராகத் தெரிகிற மாதிரி அமைத்திருக்கிறார்கள்.  இதுபோன்றதொரு அமைப்புடைய சிலை வடிவத்தை, அதிலும் சனீஸ்வர அம்ச சிலாரூபத்தை ஸ்ரீஏரிக்குப்பம் தவிர வேறு எங்கும் காண்பதரிது.

யந்திரத்தின் தத்துவம்:

இங்குள்ள யந்திரத்தின் தத்துவம் என்ன? அதனை நிறுவியதன் நோக்கம் என்ன? ஏன் கல்லில் நிறுவினர் என்பதைப் பலவாறு சிந்தித்தால் ஒரு சீரிய உண்மை புலப்படும்.  ” நேத்திரத்தைக் காகம் போல் நிச்சயமாய்க் காக்க, ஆத்துமத்தில் ஆனந்தமாய் “   என்றார் ஔவையார்.  இரு பக்கங்களிலும் சூரிய சந்திரர்களை வைத்து நடுவில் காகத்தை வைத்ததன் அடிப்படை இதுவேயாகும். சூரியனாகிய வலதுவிழி நாட்டத்தையும். சந்திரனாகிய இடதுவிழி நாட்டத்தையும் புருவ மத்தியாகிய முத்தித் தலத்தில் வைக்க { காகம் பார்ப்பதைப் போல் ஒரு மனநிலையில் }ஆறுமுகப்பட்டையான ஸ்ரீ முருகப் பெருமான் ஜோதி  தரிசனம் கிடைத்திடும். இந்த ஆறாவது அவதாரத்தைத் தாண்டி ஏழாவது ஆதாரத்திற்கு சென்றால், சிவனைத் தரிசனம் செய்யலாம். அங்கிருந்து வழியும் யோக -சோம பானத்தை இந்திரன்போல அனுபவித்து மகிழலாம். இதன்மூலம் ஸ்ரீ ஆஞ்சனேயர் போல் நம் உடலை கல்போல காயகற்பம் செய்து காயசித்திக்கான வழியைப் பெற பரிபாஷையாக இந்த யந்திரத்தை ஸ்தாபித்து வழிபட்டிருக்கின்றனர்.

திருத்தலம்  தோன்றிய வரலாறு:

முன்னாளில் வளமும் , போகமும் நிறைந்து செழிப்புடன் விளங்கிய ஏரிக்குப்பத்தை 1535-ம் ஆண்டு இப்பகுதியை ஆட்சி செய்துவந்த ராஜநாராயண சம்புவராய மன்னரின் படைத் தளபதிகளில் ஒருவராக விளங்கிய வையாபுரி என்பவர் இவ்வழியாக குதிரையில் சென்றுகொண்டிருந்தபோது, குதிரை நிலை தடுமாறி கீழே விழுந்ததால், வையாபுரிக்கு இடதுகாலில் முறிவு ஏற்பட்டு, குதிரைக்கும் பலத்த அடி ஏற்பட்டது. அச்சமயம் ஒரு பெண்ணின் வாயிலாக இறவனின் திருவருள் வெளிப்பட்டு அந்த இடத்தில் ஒரு கோவில் எழுப்புமாறு கூறப்பட்டது. உடனே வையாபுரி பிரார்த்தனையில் ஈடுபட்டார். அவருடைய எலும்புமுறிவு குணமடைந்தது. பிறகு அந்த கிராமத்தில் ஸ்ரீசனீஸ்வரபகவானுக்கு கோவில் எழுப்பிட முனைந்தார். அப்போதைய இறையருள் வல்லுனர்கள் சனிபகவானுக்கு யந்திர , பீஜாட்சர வடிவில் சிலை செய்ய ஆலோசனை கூறினர். அதன்படி, 6 சாஸ்திரங்கள், 4 வேதங்கள் மற்றும் 64 கலைகளும் கற்று இறைமார்க்கமாக  வாழ்வை செலுத்தும் வேத விற்பன்ன சிவாச்சாரியர்களின் மந்திர யந்திர வடிவங்களால், ஸ்ரீசனீஸ்வரருக்கு பிரத்தியேக சிலா ரூபம் உருவாக்கப்பட்டு , ஸ்தாபனம் செய்யப்பட்டு , 4 கால பூஜைகளும் நித்திய ஹோம அனுஷ்டானங்களும், செய்யப்பட்டு , அந்த யந்திர ரூபத்திற்கு பலமூட்டி , அதன் தேஜஸினால், அனைத்து மக்களின் வினைகளும் நீங்கி செழிப்புற செய்தனர்.

இவ்வாறு விஷேஷமுடன் நடைபெற்றுவந்த சனீஸ்வர யந்திர வழிபாடு  நாளடைவில் மன்னர்களின் போர், , ஆட்சி மாற்றம் மற்றும் பல்வேறு காரணங்களால், கவனிப்பாரற்றுப் போனது. இதனால், மக்கள் வருகையும் குறைந்தது. கோவில் சிதைவுற்றும் யந்திரச் சிலை கவனிப்பாரற்றும் போனது. இதனால் ஊர்மக்களும் ஒரு குறையுடனேயே வாழ்ந்துவந்தனர்.

சமீபத்தில் சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன் இந்த யந்திரச் சிலையை  ஆடு மேய்க்கும் சிறுவர்கள் கண்டுபிடித்து ஊர் மக்களுக்கு சொன்னார்கள்.  தொல்பொருள் நிபுணர்கள் வந்து ஆராய்ந்ததில் 15-ம் நூற்றாண்டில் இருந்த யந்திர சனிபகவான் என்பது  தொல்பொருள் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. அகழ்வாய்வாளர்களும் இதை ஆய்வு செய்து அதன் தொன்மையை உறுதி செய்தனர். அந்த யந்திர சிலை சிறிய ஒரு இடத்தில் ஸ்தாபனம் செய்யப்பட்டு , இன்றும் சிவாச்சாரியார்களைக்கொண்டு சிலைக்கு நித்திய அனுஷ்டான பூஜைகளும், சனிக் கிழமைகளில் சிறப்பு ஹோமம் மற்றும்  அபிஷேக ஆராதனைக்ளும் நடைபெற்று வருகின்றன.

திருமணப் பிராப்தி, குழந்தைப்பேறு, நோய் நிவர்த்தி, லக்ஷ்மி கடாக்ஷம், சனீஸ்வர ப்ரீத்தி மற்றும் சகல தோஷ நிவர்த்தி வேண்டி பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்து , அபிஷேக அர்ச்சனைகள் புரிகின்றனர். எள் முடிச்சிட்ட தீபம் , நல்லெண்ணெய் தீபம் ஆகியவற்றை ஏற்றி வேண்டுதல் புரிகின்றனர். 9 வாரங்கள் தொடர்ந்து இங்கு வந்து வழிபாடு செய்து, வேண்டும் வரங்களை பெற்றுச் செல்கின்றனர்.  பக்தகோடிகள் கோவிலுக்கு பின்புறத்தில் அமைந்துள்ள ‘ பாஸ்கர தீர்த்தம் ‘ என்ற தீர்த்தக் குளத்தில் நீராடி தலத்தில் வழிபட்டு செல்கின்றனர்.

பக்தர்களின் தரிசனத்திற்காக ஆலயம் காலை 7.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு மாலை 7.00. மணிக்கு நடை சாத்தப்படுகிறது. சனிக்கிழமைதோறும் சிறப்பு பூஜை, ஒவ்வொரு வருடம் காணும் பொங்கல் அன்று பால்குட அபிஷேகம் சனிப் பெய்ர்ச்சியன்று சிறப்பு யாகமும் சிறப்பு அபிஷேகமும் நடைபெறும்.

தடைப்பட்ட சுபநிகழ்ச்சிகள் நடைபெறவும், நோய், தோஷம் அகலவும், ஒன்பது சனிக்கிழமை இங்கு வந்து எள்முடிச்சு தீபம் ஏற்றினால், நன்மை கிடைக்கும். பாஸ்கரதீர்த்தத்திலும் நீராடி பகவானை தரிசிப்பது நலம்.

தற்போது சனிக்கிழமைகளில் இந்த ஏரிக்குப்பம் கிராமம் ஒரு திருவிழா கணக்கில் கோலாகலப்படுகிறது. கார்களிலும் வேன்களிலும் அதிக அளவில் பக்தர்கள் குவிகிறார்கள். அன்றைய தினத்தில் புதிதாக கடைகள் வருகின்றன. எள்முடிச்சு விளக்கு , நல்லேண்ணெய் விளக்கு என்று தீபம் ஏற்றி சனீஸ்வரனை வழிபடுகின்றனர்.  சனீஸ்வரனான யந்திர சிலைக்கு அன்றைய தினத்தில் விஷேஷ அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெறுகின்றன. சூரியன், சந்திரன், சனீஸ்வரனின் வாகனமான காகம் மற்றும் ஷட்கோணம் ஆகியவற்றின்மேல் சந்தனம் வைத்து அலங்காரம் செய்கின்றனர். ஒவ்வொரு சனிக்கிழமையும் மூன்று வேளைகளில் அபிஷேகம், ஆராதனை என்று ஜகஜ்ஜோதியாக இருக்கிறது. அபிஷேகம் முடிந்தபிறகு யந்திரச் சிலையின் மேலும் கீழும் கறுப்பு மற்றும் நீல நிற வஸ்திரங்களைச் சாத்துகின்றனர். சனீஸ்வர பகவான் முன்பு இருந்ததாகச் சொல்லப்படும் இடத்தில் சிலை மாதிரி ஒரு கல்லுக்கு சிறப்பு வழிபாடும் செய்யப்படுகின்றது.

சிலவருடங்களுக்கு முன் காஞ்சிகாமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஏரிக்குப்பம் வந்து ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் தன் கைப்பட தீபாராதனை காட்டி நெகிழ்ச்சியுடன் தரிசனம் செய்தார். யந்திர சிலைக்கு விபூதி அலங்காரம் செய்து இதில் உள்ள எழுத்துக்களைக் கண்டறிந்தார்.

ஒருவருக்கு கண்டகச் சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி  இவை மூன்றும்  கோச்சாரத்தில் இருக்கும்போது  நவக்கிரக ஹோமம் , சனிபகவானுக்கு சாந்தியும் செய்வது அவசியம்.  கோசாரப்படி அஷ்டமத்தில் சனி இருக்கும்போது சிவபெருமானே பிச்சை எடுக்கவேண்டிய நிலைமை வந்தது. இரண்டாமிடத்தில் சனி இருந்து ஏழரைச்சனியை அனுபவித்த நேரத்தில்தான் அசுர குருவான சுக்கிரனுக்கு ஒரு கண்பார்வை போனது. சீதைக்கு ஜென்மத்தில் சனி இருந்தபோதுதான் ராவணன் இலங்கைக்கு அவரைக் கவர்ந்துகொண்டு போனான். அரிச்சந்திரனும், நளனும் அஷ்டமத்தில் சனி இருந்து ஆட்டிப் படைத்தபோதுதான் நாடு, மனைவி, மக்கள்  என சகலத்தையும் இழந்து நிர்க்கதியாக நின்றார்கள். பனிரண்டாவது இடத்தில்  சனி இருந்ததால்தான் பாண்டவர்கள் ஆட்சியை இழந்து வனவாசம் போக நேர்ந்தது.  இப்படி அவதாரங்களும் லட்சிய புருஷர்களுமே சனிபகவானால் ஆட்டிப் படைக்கப்பட்டபோது , மானுடர்கள் எம்மாத்திரம்?

ஆனாலும் இவ்வளவு துன்பங்களைத் தருபவராக இருந்தாலும், சனிபகவான் இளகிய மனம் படைத்தவர்.  அதனால், அன்பாக வேண்டிக் கேட்டால், கேட்டதைத் தந்துவிடுவார். சனீஸ்வர அஷ்டோத்திர மந்திரத்தை ஜெபித்து சனி பகவானை சாந்தப்படுத்திய பிறகுதான் பாண்டவர்களுக்கு இழந்த ராஜ்ஜியம் கிடைத்தது. சனீஸ்வர ஸ்தவராஜ ஸ்தோத்திரம் சொல்லித்தான் தனது நாட்டை திரும்பப் பெற்றான் நலன். திருநள்ளாறில் இருக்கும் நள தீர்த்தத்தை நினைத்தாலே போதும்… சனியால் வரும் துன்பங்கள் போய்விடும்.
சனி பகவானை சந்தோஷப்படுத்த பல வழிகள் உள்ளன. சனிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளித்தல், எண்ணெய் தானம் செய்தல்  எள் தானம், நீல நிற வஸ்திர தானம், சனி பகவானுக்கு எள்சாதம் நைவேத்தியம் செய்தல், தர்மசாஸ்த்தா ஐயப்பனை  வழிபடுதல் , ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாம  பாராயணம் செய்தல், ராமாயண பாராயணம் , சுந்தரகாண்ட பாராயணம் , அரச மரத்தை வலம் வருதல்,  ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல் போன்றவை மூலம்  சனி பகவானை சந்தோஷப்படுத்தலாம். இதுபோன்ற நல்ல காரியங்களைச் செய்பவர்களைத் தொந்தரவு செய்யமாட்டேன்  என சனி பகவான் சத்தியம் செய்துள்ளதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன.

இப்படிப்பட்ட சனிபகவான் ஒவ்வொரு ராசியும் உயிர்வாழ்வதற்குக் காரணமான ஜீவநாடியாகும். எனவே சனிபகவானே ஆயுள்காரகன் என்றும் உயிர்காரகன் என்றும் சொல்லப்படுகின்றான். ஒரு குழந்தை பிறக்கிறது என்று வைத்துக்கொண்டால், அதற்குண்டான அற்பாயுள்- மந்திம ஆயுள்- பூர்ணாயுள் என்பன போன்ற ஆயுள் பலத்திற்கு  ஆயுள்காரகனாகிய சனிபகவானே  ஒருவரது  ஆயுளுக்கு  அதிபதியாக அமைகிறார்.  இப்படிப்பட்ட சனி அந்தக் குழந்தையின் ஜாதகத்தில் நல்லவிதமாகவல்லவா அமைந்திருக்கவேண்டும். இல்லாவிட்டால், ஆயுள்  பலத்திற்கு எப்படி உத்தரவாதம் அளிக்கமுடியும்? ஆகவே இப்படிப்பட்ட சனிக்கு எப்படி கோயில்கட்டி கும்பிடாமல் இருக்கமுடியும்? அந்தவகையில் தெய்வாதீனமாகக் கிடைத்த  ஏரிக்குப்ப சனீஸ்வரரை வழிபட்டு தோஷநிவர்த்தியடைவோம்.

ஏரிக்குப்பம் ஸ்ரீ சனிபகவான் துணை:
சங்கடம் தீர்க்கும் சனி பகவானே
மங்கலம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவு இன்றி சனீஸ்வரத் தேவே
இச் சகம் வாழ இன்னருள் தருவீரே!
ஏரிக்குப்பம் சனீஸ்வரா போற்றி
ஏரிக்குப்பம் சனீஸ்வரனே போற்றி
ஏரிக்குப்பம் பொங்கும் சனிபகவானே போற்றி
ஏரிக்குப்பம் அஷ்டம சனி சாந்தம் போற்றி
ஏரிக்குப்பம் ஏழரைநாட்டு சனிபகவானே போற்றி
ஏரிக்குப்பம் நளதீர்த்தம் உடைய சனி பகவானே போற்றி
ஏரிக்குப்பம் வன்னிபுத்ர அர்ச்சனைபிரிய சனிபகவானே போற்றி
ஏரிக்குப்பம் எல்லோருக்கும் நல்லருள் தரும் சனிபகவானே போற்றிபோற்றி!

இதை அனைவரும் பாராயணம் செய்ய அனைத்து நன்மைகளும் உண்டாகும். சனிபகவான் நல்லருள் எப்போதும் கிடைக்கும்.

முகவரி :

Sree Saneeswarar Bhagawan Koil
Thiruerikuppam Village
Kalambur Post Polur Taluk
Tiruvannamalai District – 60690

Tags : tamil article on yerikuppam ( Erikuppam ) Saneeswara Temple situated in Thiruvannamalai Tamilnadu

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>