/* ]]> */
Dec 202011
 

எஸ் . ரா வின் துயில் அறிந்தவரையில் மிக வித்தியாசமான , சமூகநல நோக்கோடு எழுதப்பட்ட ஒரு நாவல் .

அட்டைப் படம் :

நடை , கதை , சொல்லப்பட்ட விஷயங்கள் இவற்றோடு அட்டைப்படமும் வெகுவாகக் கவர்ந்தது . நீண்ட தோகையுடன் கூடிய ஒரு சேவல் கூவுகிறது அட்டையில் . பிணி , நோய்மை குறித்து சரியான விழிப்புணர்வோ அக்கறையோ இல்லாத ஒரு உலகத்தின் துயிலை எழுப்பும் நோக்கோடு கூவும் சேவலோ இது ? ஜென்னியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் எஸ் .ரா ..சேவலின் முதுகில் இருந்தே வளர்ந்து தொங்கும் நீண்ட தோகை அடர் நீலமும், வெண் நிறத்திலுமானதாக இருக்கிறது. குறிப்பாய் உணர்த்துவது இருளையும் விடியலையுமா ?

கதைச்சுருக்கம் :

கதாநாயகன் அழகர் , இது  எஸ்.ரா வுக்கு மிகப்பிடித்தமான ஒரு பெயர் போலும் , உறுபசியில் வரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தின் பெயரும் அழகர் தான் . பிள்ளைப்பிராயம் மிக மோசமான ஒன்றாக அமைந்து விடுகிறது அழகருக்கு . தகப்பனை நீங்கி ஹோட்டல் ஒன்றில் வேலை செய்துகொண்டிருக்கும் போது வேசை ஜிக்கியின் அறிமுகம் கிடைக்கிறது அவனுக்கு . அவளுடன் செல்கிறான் ஒரு உதவியாளனாக . ஜிக்கி தன் தங்கை டோலி  மற்றும் இன்னம் பிற பெண்களுடன் ஒரு விடுதி நடத்துகிறவள் . மிக இளம் வயதிலேயே பெண் இன்பம் அறிமுகம் செய்விக்கப்படுகிறது அழகருக்கு அங்கே இருக்கும் ராமியால் . ஒரு கட்டத்தில் அங்கிருந்தும் விலகும் அழகர் ராமியோடு சேர்ந்து வாழ்கிறான் . அவளுக்கு நாகக்கன்னி வேடமிட்டு ,ஷோ நடத்தி பிழைக்கிறார்கள் . ராமியை சகித்துக்கொள்ள முடியாத சூழல் உண்டாகிறது , தானே ஒரு பெண்ணைக்கட்டி அவளுக்கு கடல் கன்னி வேடமிட்டு பிழைத்துக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வருகிறான் .

சிக்குவது சின்னராணி . அவளைத்திருமணம் செய்து கொண்டு கடல்கன்னி வேடமிட கட்டாயப்படுத்தி பிழைப்பு நடத்துகிறான் அழகர் . பிழைப்புக்கு பங்கம் வரும் என்ற எண்ணத்தில், உண்டாகும் கருவைக்கலைக்க முயன்றதில், கலையாமல் , குறையோடு பிறக்கிறாள் செல்வி . மனைவி மகளோடு தெக்கோட்டில் நடக்கும் துயில்தரு மாதா கோவில் திருவிழாவில் ஷோ நடத்தக் கிளம்புகிறான் அழகர் ரயிலில் .

1873  இல் தெக்கோட்டுக்கு மருத்துவ சேவை செய்ய வரும் ஏலன் பவர் இன்னமொரு மிக முக்கிய கதாபாத்திரம் . 1982 இல் ஆரம்பிக்கும் கதை இலகுவாக 1873 க்கு செல்கிறது . உறுபசி போல் இதுவும் நான்- லினியர் வகையிலான கதை சொல் முறை தானா ? தெக்கோடு ஊர் மட்டும் அல்ல , வாழும் மக்களும் வெய்யிலின் கடுமை ஏறிப்போனவர்கள் . சேவை செய்ய வரும் ஏலன் பவரை புரிந்து கொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும் அத்தனை எளிதில் முன் வருவதில்லை அவர்கள் . என்றாலும் தன் கருணையாலும் சிகிச்சை முறையாலும் மிக நீண்டதொரு போராட்டத்துக்குப் பின் அவர்களில் ஒருத்தி ஆகிறாள் ஏலன். ஏலனின் கதாபாத்திரம் மூலம் இந்தியாவில் கிருத்துவத்தின் வருகை , அவர்களின் மருத்துவ முறை இவை எல்லாம் வெகு நுணுக்கமாக ஆய்வு செய்யப்படுகிறது . தெக்கோடு மாதா ஆலயம் கட்டப்பட்டு , நோய் நீக்கும் மாதாவாக அந்த ஆலயத்தின் அன்னை கருத்தப்படுவதன் காரணமும் ஏலனின் மூலம் உணர்த்தப்படுகிறது .

மற்றொரு பாத்திரம் கொண்டலு அக்கா . தங்கள் பிணி தீரவேண்டி தெக்கோடு மாதா ஆலயத்துக்கு நடைப்பயணமாக போகும் வியாதியஸ்தர்கள் வழியில் இளைப்பாறுவதற்கான ஒரு விடுதியை நடத்தி வருபவர் கொண்டலு அக்கா . வரும் பிணியாளர்களுக்கு உணவு இட்டு , இருக்க இடம் தருவதோடு அவர்கள் மனதை ஆற்றி வியாதியைப் போக்க முயற்சிக்கும் சேவையைச் செய்து வருகிறாள் கொண்டலு .

முக்கிய அவதானிப்புகள் :

நாவலின் கதைச்சுறுக்கம் , எழுதப்பட்டிருக்கும் விதம் இவற்றை விட எஸ். ரா வின் மிக முக்கிய அவதானிப்புகளை , நாவலில் அவர் கூறியுள்ள முக்கியச் செய்திகளைப் பற்றிப் பேசுவது மிக முக்கியமானது என்று கருதுகிறேன் . அவற்றுள் முதன்மையான கவனிப்புக்கு உரிய விஷயம் ஏலன் பவர் இந்தியாவில் நோய்மைக்குரிய , தனது மருத்துவப்பணிக்கு தடையாக உள்ள முக்கிய காரணங்களாகப் பட்டியல் இடுவது:

1. முதல் காரணமாக ஒரு பெண்ணை ஆண் நடத்தும் விதத்தைக் குறிப்பிடுகிறார் . சதா உருமாறிக்கொண்டே இருக்கும் பெண்ணின் உடலுக்கு ஏற்படும் நோய்களை, சரி செய்து கொள்ளத் தடையாக இருக்கும் ஆணின் அதிகாரம் , கட்டுப்பாடு , கலாச்சாரம் மற்றும் குடும்ப அமைப்பின் அறுக்க முடியாத விதிகள் .

2. வியாதியைத் தீமையின் அடையாளமாகப் பார்ப்பது . இது சர்வசாதாரணமாக நாம் காணும் விஷயம் தானே . ‘நான் என்ன பாவம் செய்தேன் இந்நோய்க்கு ஆளாக ‘என்னும் மனதைக்குடையும் கேள்வி ஒவ்வொரு நோயாளியின் இதயத்தையும் கிழித்தவண்ணமே தானே இருக்கிறது ?

3 . நோய்மை தன்னுடனே அழைத்துவரும் பாதுகாப்பின்மையும் அதனால் விளையும் சாவு பற்றின அச்சமும் .

4. கடவுளின் பெயரால் நடைபெறும் நோய் நீக்கும் சடங்கு முறைகள்.

5. நோய்மை குறித்த விழிப்புணர்வு இன்மை .

இவற்றுள் இங்கு நான் ஒரு பெண்ணாக ,ஆணின் கட்டுப்பாடு மற்றும் குடும்ப அமைப்பின் காரணமாக நோய் இருப்பது தெரிந்தும் அதைப்பற்றிப் பேசவோ நீக்கிக்கொள்ளவோ இயலாமல் அவதியுறும் நான் அறிந்த எத்தனையோ பெண்களின் கதைகளைத் தான் பதிய விரும்புகிறேன் . தானும் பிள்ளைகளும் நோயுற்று விட்டால் பதறி கவனித்துக்கொள்ளும் கவனம் கொள்ளும் ஆண் , அதே மனைவி பிணியாளியாக இருக்கும் போது எத்தனை அலட்சியம் காட்டுகிறான்?

எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணியின் தங்கை மகள் ஒரு இளம் வயதுப் பெண் . மாதவிலக்குச்சமயம் கடுமையான வலியினால் அவதியுறும் ஒரு கொடூர வியாதி கொண்டவள் . பிள்ளைப்பேறும் வாய்க்கவில்லை அவளுக்குநோயின் காரணமாக . ஒவ்வொரு முறையும் அந்த மூன்று நாட்களுக்கு அவளுடைய  கணவன் அவளை  அவளின் பெரியம்மா வீட்டில் விட்டுச்செல்கிறான் . அந்தப் பெரியம்மா அலுவலகம் செல்பவர் . தனியாக அந்த வீட்டில் சதா அழுகையும் அலறலுமாக, அந்தப் பெண் மூன்று நாட்களையும் கழிக்கிறாள் . என்ன மாதிரியான ஒரு காட்டுமிராண்டித்தனம் ? இத்தனைக்கும் படித்த குடும்பம் அது . அவள் வீட்டில் இருப்பவர்களால் அவளின் அலறலை சகித்துக்கொள்ள முடியாதாம் .

பி. சி . ஓ. டி , பாலிசிஸ்டிக்ஒவேரியன் டிசீஸ் எனப்படும் ,சகஜமாக இப்போது காணப்படும் ஒரு நோய் தான் அது . எளிதாகக் கட்டுக்குள் வைக்கலாம் , குறைந்த பட்சம் அவள் வலியில்லாமல் வாழ வகை செய்யலாம் . ஒரு கடுமையான மனோவியாதிக்காரியை நடத்துவதைப் போல அவளை நடத்தாமல் அவளுக்குரிய , பெண்மைக்குரிய கண்ணியத்தைக் காக்கலாம் கட்டினவன் ! இதில் எதுவும் நடக்கவில்லை . இன்னமும் மாதந்தோறும் வந்து செல்கிறாள் . இப்படியான பெண்களைப் பற்றி நினைவு கொள்ளச் செய்து அதற்கு தீர்வு ஏதும் உண்டா என யோசிக்க வைக்கும் எஸ். ராவின் எழுத்துக்கு வந்தனம் .

மேலும் கடவுளின் பெயரால் நடக்கும் கொடூரமான நோய்நீக்கு சடங்குகள் பற்றி படிக்கும் போது  ஏர்வாடியை விட இதற்கு சரியான ஒரு உதாரணமாக வேறெதையும் சொல்ல முடியவில்லை . விலங்குகளை விட மோசமாக நடத்தப்படும் நோயாளிகள் . ஆணி கொண்டு அறையப்பட்டும், சங்கிலிகளால் பிணிக்கப்பட்டும் மகா ஆரோக்கியக்கேடான நிலையில் இருத்தப்படும் ஆயிரக்கணக்கானோர் ! எத்தகைய கொடூரம் இது !

“மதம் என்ற மாளிகைக்கு நான்கு தூண்கள் அடிப்படையாக இருக்கின்றன.அதில் ஒன்று நோய்.மற்றது பசி.மூன்றாவது காமம்.நான்காவது அதிகாரம்.இந்த நான்கிலுருந்தும் உலகில் எந்த மதமும் விலக முடியாது.”

தத்துவார்த்தமாக, அறிவியல்ரீதியில், ஆன்மீகப்பார்வையில் என்று நோய்மை குறித்த தன் சிந்தனைகளை நம் முன் வைத்திருக்கிறார் எஸ் . ரா . ஜென்னியம் , பௌத்தம் , கிறித்துவம் , ஹிந்துத்துவம் என எல்லாமும்  துயில் எனும் இந்தத் தடாகத்தில் பூத்த தாமரைகளாக அழகுற மிளிர்கின்றன .

இஸ்லாமிய இறை வேதமான அல்குரான், அஷ்ஷிஃபா என்று புகழ்ந்துரைக்கப்படுகிறது . அதாவது” நிவாரணமளிப்பது ” என்று .

எஸ். ரா ,மதம் நோய்மையைக் காட்டி அச்சுறுத்தி மனிதனை தன் வசப்படுத்துகிறது என்று பேசியிருப்பது எத்தனை கூரிய பார்வை !

“லா பஃஸ தஹூருன் இன்ஷா அல்லாஹ் ”

என்பது வியாதியஸ்தனைக் காணச்செல்லும் இஸ்லாமியன்  பேசவேண்டிய ஒரு வசனம் .
“கவலை இல்லை , இன்ஷா அல்லாஹ் இந்த வியாதியானது உங்களை பாவங்களை விட்டும் தூய்மையானதாக்கி விடும் ” என்று அர்த்தமாகிறது . மேலும்

“அஸலுல்லாஹல் அளீம ரப்பல் அர்ஷில் அளீம் அன்ய்யஷ்பியக்க ”

“நாயனே ! மகத்துவமுள்ள அர்ஷின் ரப்பே ! உன்னிடத்தில் நான் இவரின் வியாதி சுகமடைய வேண்டுகிறேன் .”

என்றும் இறைஞ்ச வேண்டியவனாகிறான் . ALL ROADS LEAD TO ROME என்பது போல் எல்லா மதங்களும் நோய்மை பற்றின, சாவு பற்றின பயம் நீக்கும் நிவாரணங்களாகத்தான் முன்னிருத்தப்படுகின்றன .

“நம் தவறுகள் நம்மை எப்போதுமே பின்தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன . அவை விதையைப் போல நமக்குள்ளாகவே வேர்விட்டு முளைக்கத் துவங்குகின்றன . இந்த உபாதைகள் யாவும் அதன் பூக்கள் . தம்பீ ..நமது கைகள் நமக்கு மட்டும் உரியதல்ல . அதை மற்றவருக்காகவும் பயன்படுத்த முடியும் . அணைக்கவும் ஆறுதல் படுத்தவும் துணை செய்யவும் , தாங்கிப்பிடிக்கவும் கைகள் முன்வர வேண்டும் .”

சிவபாலன் எனும் ரோகி ஒருவருக்கு ஆறுதல் சொல்லும் கொண்டலு அக்காளின் வசனம் இது . ஆன்மீகம், தத்துவார்த்தம் , உளவியல் கூறு என்ற அத்தனையும் இருக்கிறது இந்த ஒரு பத்தியில் . சொல்லப்போனால் துயில் முழு நாவலின் சாரம் இது தான் என்றும் கூடச் சொல்லலாம் .

முக்கியத்துவம்  வாய்ந்த பிற வசனங்கள்:

” நோயாளிகளின் கண்ணீர் கொதி மிக்கது . அதை எந்த சமாதானமும் தேற்றிவிட முடியாது ”

” நம்மை நாம் உணரத் தவறினால் அதன் இழப்பு நமக்கு  மட்டுமானதில்லை . உலகத்திற்கும் சேர்த்து தான் ”

“உனக்கு மட்டும் தான் உன் கடந்தகாலம் முக்கியமானது ; உலகிற்கு இல்லை . ஆகவே அதிலிருந்து விலகி உனக்கான அடையாளங்களை நீ உருவாக்கிக்கொள்ளும் போது கடந்தகாலம் மெலல எடையற்றுப் போய்விடும் . ”

போன்றவை .

தொல்ஸ்தோயும் எஸ். ரா வும் :

தொல்ஸ்தோயின் கதாநாயகியரைப் போல எஸ்.ரா வும் ,அன்பே உருவான , சேவை மனப்பான்மை கொண்டவர்களாக கொண்டலுவையும் ஏலன் பவரையும் உருவாக்கியிருக்கிறார் . சின்ன ராணியும் ஏறக்குறைய இப்படிப்பட்ட ஒரு பாத்திரம் தான் . சிறுநீர் கழிக்கக் கூட இரவு வரையில் பொறுத்திருக்க வேண்டிய கொடுமையான உடையை நாளெல்லாம் அவள் கணவனுக்காக அணிந்திருக்க வேண்டியிருந்தும் பொறுத்துக் கொண்டு சேர்ந்து வாழ்கிறாள் .

பெண்ணியக் குறிப்புகள் :

அன்பே  உருவானவள் என்று சொல்லிவிட முடியாமல் சலித்துப் போகும் மனதை கதையின் இறுதியில் வெகுண்டு அவள் செய்து விடும் கொலையில் சமன் செய்து விடுகிறார் எஸ். ரா . தன் துயரத்தைச் சொல்லிக்கொள்ள யாருமில்லாமல் ஒரு புழுவிடம் அவள் பேசுவதாக வரும் வரிகள் பெண்களின் மாளாத்துயரைப் பேசுகின்றன .

மூப்பர் ஒருவர் கடல்கன்னியைப் பார்த்துவிட்டதால்  முக்தி கிடைத்து விடும் தனக்கு என்று நம்புவதும் ,

” அது சாதாரண கடற்கன்னியில்ல . பெண்தெய்வம் . அதைக் கடலில் கொண்டு போய் விட்டுவிடாவிட்டால் அது உன்னைக் காவு வாங்கி விடும் “

என்று கூறுவதும் கதையின் முடிவாக நிகழ இருப்பதை சூசகமாகச் சொல்வதாகத் தானிருக்கிறது.

“அது தன் இருப்பிடத்துக்குப் போக ஆசைப்படுகிறது . நீண்ட நாட்கள் அதை உன்னால் அடக்கி வைத்திருக்க முடியாது . அது தன்னை விடுவித்துக்கொள்ளும் போது துயரமான சம்பவங்கள் நடைபெறும் “

என்றும் அந்த மூப்பர் பேசுவதும் கூட பெண்ணின் நிலை பற்றிய ,அவள் தன்னை விடுவித்துக்கொள்ள எண்ணி விட்டால் நிகழக்கூடியவை என்று  ஆசிரியர் அச்சமுறுவதன் கணிப்பாகத் தான் தெரிகிறது .

காமம் :

காமம் பற்றின எஸ் . ரா வின் பார்வையும் மிகக் கூர்மையானது .

“உடல் நிறைய இடைவெளிகளையும் துளைகளையும் கொண்டிருக்கிறது . அது பூர்த்திசெய்யப்படவேண்டும் என்ற ஆசை உடலுக்கே இருக்கிறதோ என்னவோ , அதனால் தான் அது மற்றொரு உடலைத் தனதாக்கிக் கொள்ள முயல்கிறது . ”

“பெரும்பான்மை நோய்கள் காமத்திலிருந்தே உருவாகின்றன  . காமமும் அது சார்ந்த சிக்கலுமே நோயைத் தோற்றுவிக்கின்றன  . அடக்கப்பட்ட காமத்தைப் போன்ற கொடிய வேதனை வேறு எதுவுமில்லை . அதுதான் நோயின் மூல விதை . “

என்கிறார் எஸ். ரா .

இது ஆண்களைப் பொறுத்த வரையில் எத்தனை உண்மையோ நான் அறிய மாட்டேன் . தன் மார்பகங்களில் ஏற்படும் ஒரு நோய்க்கட்டியைப் பற்றிக் கூட வெளிப்படையாகப் பேச திராணியில்லாமல் இருக்கும் நம் பெண்களின் நிலையில், எத்தனை உண்மை என்பதை நன்றாக அறிவேன் . காமம் என்பது எத்தனை இயல்பான , இயற்கையான, மனித உணர்வுகளில் ஒன்று என்று கூட உணர்ந்திராத பெண்களின் நிலை இன்னமும் பெரிதாக ஒன்றும் மாறிவிட வில்லை . இதில் இன்பமாவது ஒன்றாவது ! உபயோகமாக இருக்கிறோம் என்பதிலேயே திருப்தி அடைந்து விட்டு, கொந்தளிக்கும் உடலைக் கட்டுப்படுத்தி வியாதிகளை இழுத்துக்கொள்ளும் எம் பெண்களின் சார்பில் எழுதியிருக்கிறார் எஸ். ரா என்று தான் கொள்ள வேண்டியிருக்கிறது .

கொண்டலு அக்காவிடம் வந்து தத்தம் குறைகளை வியாதியஸ்தர்கள் கூறும் இடத்தில் அசர வைக்கிறார் எஸ்.ரா . ஒரு நாவலுக்குள் எத்தனை எத்தனை கதைகள் ! அழகரின் கதை , ஜிக்கியின் கதை , கொண்டலு அக்கா வரும் இடமெல்லாம் அவளை நாடி வரும் ரோகிகளின் எண்ணற்ற கதைகள் , அவை பேசும் தத்துவ , ஆன்ம, உளவியல் குறிப்புகள், ஏலன் பவரின் தியாகக் கதை ..இப்படி போகும் நாவலில் துயில் தரு மாதா கோவில் திருவிழாவும் , விழா நிகழ்வுகள் வெகு நுணுக்கமாகவும் ஒரு புகைப்பட , திரைப்படக்கலைஞனின் கோணத்தில் சொல்லப்பட்ட விதமும் , அழகரின் மகள் செல்வி அண்டரண்டா பட்சிகளைத் தேடி போகும் இடமும் மிகுந்த கவித்துவமும் ஒரு கனவின் அழகும் கொண்டவை .

முடிவாக :

மிகவும் வருந்தத்தக்கதான விஷயங்கள் என்னவென்றால் சரியாக ப்ரூஃப் திருத்தப்படவில்லை , இந்த உலகத்தரமான நாவலின்  பதிப்பில் . பக்கம் 343 இல் தன்மை , படர்க்கை குழப்பங்களும் ,சில இடங்களில் பெயர்க்குழப்பமும் , மிகப்பல இடங்களில் எழுத்துப் பிழைகளும் காணப்படுகின்றன.

தல்ஸ்தோய் , தஸ்தாயெவ்ஸ்க்கி ஆகியோரின் நினைவு அவர்களை நிறைய படித்தவர்களுக்கு துயில் படிக்கும் போது நிச்சயம் எழும் .கிட்டத்தட்ட பேசப்படாத நல்லுணர்வுகளே , தத்துவங்களே , விஷயங்களே இல்லை துயிலில் என்று எண்ணி விடத் தோன்றுகிறது .

நோய்களுக்கான காரணங்கள் , நோயாளியை அணுக வேண்டிய சமூக ,குடும்ப மற்றும் மருத்துவர்களுக்கான அநேக உபதேசங்கள் இருப்பதால் மருத்துவர்களும் , மாணவர்களும் , ஏன் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு கதை அம்சம் கொண்ட , தத்துவார்த்த, அறிவியற் குறிப்பு தான் துயில் .

..ஷஹி..

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>