/* ]]> */
Nov 252011
 

23.11.2011 அன்று சென்னை ரஷ்ய கலாச்சார மையம்/ ஜெயகாந்தன் – புஷ்கின் இலக்கியப் பேரவை மற்றும் உயிர்மை இணைந்து நடத்தும் ஏழு நாள் உலகஇலக்கியக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அருமையான மிக அரிய வாய்ப்பு கிடைத்தது. முதல் நாள் “அன்னா கரீனினா”, பிறகு அடுத்த நாள் “குற்றமும் தண்டைனையும்” பேசி இருக்கிறார் எஸ்.ரா.

அன்றைய மாலையில் பாஷோவின் ஜென் கவிதைகள் குறித்து பேசினார் எஸ்.ரா . அருமையான ஒரு கவிராத்திரியாக இருந்தது அது.  இருக்கைகள் அனைத்தும் நிரம்பி , மாணவர்களில் இருந்து பேராசிரியர்கள், பெரிய அதிகாரிகள் என்று பலரும் நின்று கொண்டும் , தரையில் அமர்ந்த வண்ணமும் எஸ்.ராவின் உரையைக் கேட்டனர். தமிழ் இனி உரத்து வாழும் என்று தான் தோன்றியது இத்தனை அருமையான விழாக்கள் கொண்டாடப்படுவதையும் அதற்கு இவ்வளவு வரவேற்பு இருப்பதையும் பார்க்கும் போது.

நேரம் ஆகிவிட்டதோ என்று அடித்து பிடித்து சென்றேன் வாயிலிலேயே திரு. மனுஷ்யபுத்திரன அவர்கள் காஃபி அருந்திக்கொண்டிருந்ததைப் பார்த்ததும் தான் நேரத்துக்கு சற்று முன்னமே வந்திருக்கிறேன் என்று கொஞ்சம் ஆசுவாசம் கொண்டேன். அழகாக வரவேற்று மிகவும் பிரியமாகப் பேசினார் மனுஷ்யபுத்திரன். காஃபி அருந்துமாறு அவர் எவ்வளவோ சொல்லியும் கூச்சம் காரணமாக மறுத்து விட்டு அரங்கினுள் சென்றேன். எஸ். ரா நின்றிருந்தார், சுற்றிலும் கூட்டமாக ரசிகர்கள் நின்று கொண்டு மினி நேர்காணள் ஒன்றைப்பார்க்கும் வாய்ப்பை அளித்தனர். பொறுமையாக சிரித்த வண்ணம் அனைவரின் கேள்விகளுக்கும் பதில் அளித்துக்கொண்டிருந்தார் எஸ்.ரா.

 

சரியாக 6.15 மணிக்கு நிகழ்ச்சி துவங்கியது. பாஷோ மற்றும் ஜென்னியம் பற்றின எளிய அறிமுகத்துடன் உரையைத் துவக்கினார் எஸ்.ரா. ஜென் கவிதைகள் பற்றின அடிப்படை விஷயமே அதிகம் பேசக்கூடாது என்பது தான் என்றும் அது பற்றித்தான் அன்றைய உரையே எனவும் சொல்லி அரங்கையே சிரிப்பில் குலுங்க வைத்தார்.

எஸ்.ரா பற்றின ஒரு முக்கிய சேதி என்னவென்றால் இயல்பாக அவர் பேசும் போதே பேச்சில் , தொனியில் ஒரு சிரிப்பு இருக்கிறது அவருக்கு என்பது தான்.

அவருக்கு ஜென் கவிதைகளை அறிமுகம் செய்தது தேவதச்சன் எனவும் ஒரு சமயம் அவர்கள் சந்தித்த போது மேஜையில் இருந்த ஒரு கண்ணாடிப்பேழைக்குள் (பேப்பர் வெய்ட்) இருந்த மரத்தைப்பற்றி இருவரும் உரையாடினதைப் பகிர்ந்தார். அசையாமல் ஒரு பேழைக்குள் இருந்த அந்த ப்ளாஸ்டிக் மரம் எப்படி ஒரு ழென் படிமமாக விளங்குகிறது என்று அவர் விளக்கியது வியப்பான ஒரு விஷயமாக இருந்ததது.

“ஜென் என்பது இயற்கை, தனிமை , எளிமை என்பதாக பொருள் படும். மின்னல் வெட்டுப் போன்ற ஒரு நிமிடத்தின் பதிவு தான் ழென் கவிதை ஒன்றின் விளக்கம். ஜப்பானையும் ஜப்பானியர்களையும் அவர்கள் கலாச்சாரத்தையும் அறிந்து கொள்ளாமல் ழென்னை அறிவது சிரமம்.

கியாட்டோ எனப்படும் ஒரு ஜப்பானியக் கோவிலின் நுழைவாயிலைத் தாண்டிச் செல்லும் பக்தர்களுக்கு தரிசிக்கக் கிடைப்பது ஒரு முடிவற்ற வெளி மட்டுமே! அதை வெறுமை எனக் கொள்ளாமல், எல்லையற்ற தன்மை எனத்தான் கொள்ள வேண்டும்.

இப்போது ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம வெகுவாக  அறியப்படும் போதி தர்மர் தான் ஜென்னியத்தின் ஆசான்.”

என்றெல்லாம் வெகு எளிமையாக ஜென்னியம் பற்றி பேசினார் எஸ்.ரா.

தண்ணீரில் கிடக்கும் ஒரு நிலவின் பிம்பம் நனைவதில்லை, கரைவதுமில்லை!”

மேலும்

“கண்ணால் கடலைப் பார்த்து அதன் உவர்ப்பை அறிய முடியுமா?”

“அதாவது இயற்கையின் ஒரு பகுதி தான் மனிதன் மனிதனின் உள்ளும் புறமும் நிரம்பி இருப்பது இயற்கை என்பது தான் அதன் சாரம். இயற்கையை தனியான ஒன்றாகப் பாராமல் அதனோடு ஒன்றி வாழ்தல் தான் ஜப்பானியர்களின் வழமை. ஆங்கில மொழியின் ஆதிக்கம் மிகும் வரையில் ஜப்பானிய மொழியில் இயற்கை என்பதற்கு தனியான ஒரு வார்த்தையே இல்லையாம்!அவ்வளவிற்கு தாங்களும் இயற்கையும் வேறல்ல என்ற எண்ணம் கொண்டவர்கள் ஜப்பானியர்கள்.”

ஜென் கவிதை மாஸ்டர்களில் மிக முக்கியமானவரான ரியோகானின்

“திருடன் விட்டுச் சென்றிருக்கிறான் நிலவை என்னுடைய ஜன்னலில்”

என்ற கவிதையின் விளக்கம் அத்தனை ஆர்வமூட்டுவதாகவும் ஆச்சர்யம் கொள்ளச்செய்வதாகவும் இருந்தது.

எஸ்.ராவுக்கே உரிய வார்த்தையாடல்களில்..” ஒரு பட்டாம்பூச்சி என்பது அலையும் பூ..பூ என்பதே கிளையில் ஒட்டியுள்ள ஒரு பட்டாம்பூச்சி தான்”

என்றது அத்தனை அழகான கவி ராத்திரிக்கு மெருகு சேர்த்த நட்சத்திரங்களில் ஒன்று.

.

மனுஷ்யபுத்திரனின் இடமும் இருப்பும் கவிதைத் தொகுப்பில் உள்ள சிவப்புப்பாவாடை எனும் தலைப்பிலான கவிதை

“சிவப்புப் பாவாடை

வேண்டுமெனச் சொல்ல

அவசரத்திற்கு

அடையாளமேதும் சிக்காமல்

விரலைக் கத்தியாக்கி

தன் தொண்டையறுத்து

பாவனை இரத்தம் பெருக்குகிறாள்

ஊமைச் சிறுமி “

என்ற கவிதையைச் சொல்லி அதில் உள்ள ஜென்னியம் பற்றியும் பிரமிளின் “எல்லையற்ற பூ “கவிதை ஒன்றினையும் சொல்லி தமிழ் கவிதைப் பரப்பில் காணப்படும் ஜென்னியக் கருத்துக்களையும் பேசினார் எஸ். ரா.

மொத்தத்தில்  இன்பம் என்பதும் இயற்கை என்பதும் நிறைவு என்பதும் வெவ்வேறல்ல எல்லாம் நமக்குள் என்பதன் சாரம் தான் ஜென் கவிதைகள் தம் வழி அடையச்செய்யும் ஞானத்தாமரை. சென்னை செல்ல கிடைத்த ஒரு நாள் வாய்ப்பை மனம் மகிழும் வண்ணம் எஸ்.ரா வின் சொற்பொழிவைக் கேட்டு நிறைவு செய்து கொண்டேன். அங்கேயே வசிப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

27 ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த சொற்பொழிவை அவசியம் சென்று ரசியுங்கள். எஸ்.ராவின் ஆத்மார்த்தமான பேச்சில் லயித்து உலக இலக்கியப் பூஞ்சாரலில் நனையுங்கள்.

(இன்றைக்கு அதாவது வெள்ளி 25.11.11 அன்று”  ஹோமரின் இலியட்”

நாளை சனி 26.11.11 அன்று ஆயிரத்தோரு இரவுகள் ,

நிறைவாக ஞாயிறு 27.11.11 அன்று ஹெமிங்வேயின் “கிழவனும் கடவுளும்”

பேச இருக்கிறார்.)

..ஷஹி..

 

 

 

tags

s.ramakrishnan, literature,eliyot, crime and punishment, dostoevsky, anna karenina, kizavanum kadavulum, thousand and one arabian nights,hemingve, zen, zen poetry, zen poems, manushaya puthiran, uyirmmai, pramil, tamil poetry, tamil poems, reo con

 

எஸ்.ரா, எஸ்.ராமகிருஷ்ணன், இலக்கியம், உலக இலக்கியம், தஸ்தாயெவ்ஸ்கி, அன்னா கரேனினா, குற்றமும் தண்டனையும், கிழவனும் கடவுளும், ஜென்னியம், ஜென் கவிதைகள், ஆயிரத்தியோரு அராபிய இரவுகள், ஹெமிங்வே, மனுஷ்யபுத்திரன், ரியோ கான், பிரமிள், தமிழ் கவிதைகள், தமிழ் இலக்கியம்

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>