எஸ். ராவின் உறுபசி..
தலைப்பினால் உந்தப்பட்டு தான் நாவலை வாங்கினேன். உயிர் உள்ள வரையிலும் உடலில் ஊறிக்கொண்டேயிருக்கும் வயிற்றுப்பசியும் காமமும் கதை நெடுகிலும் முக்கிய பாத்திரங்களாகவே உலா வருகின்ற ஓர் நாவல். சீழ் கொண்டு விட்ட புண்ணில் சதா நெளிந்து கொண்டிருக்கும் வலியைப் போல் எப்போதும் மனிதனின் மனதிலும் உடலிலும் நெளிந்து கொண்டிருக்கும் காமம் அணையாத கங்காக எரிந்து கொண்டேயிருந்து “ஓவாப்பிணியாகி” அழிந்த போன ஒரு மனிதனைப் பற்றிய கதை இது.
அன்றாட வாழ்வில் நாம் அத்தனை எளிதில் பார்த்து விடாத ஒரு வித்தியாசமான மனநிலை கொண்டவனாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றான் முக்கிய கதாபாத்திரம் சம்பத்… அல்லது நம் அனைவருக்குள்ளும் இருக்கும் ,ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளப்படாமலேயே இறக்கும் ஒரு சராசரி தானா அவன்?
கதை சொல்லப்பட்டிருக்கும் முறையும் வழமையான முறையல்ல தான். நான்-லீனியர் வகையிலானது. கதை ,சம்பத்தின் நண்பர்கள் மற்றும் சம்பத்தின் மனைவியின் வாயிலாக சொல்லப்படுகின்றது..சம்பவங்களின் வரிசைப்பிரகாரத்தில் அல்லாமல் முன்னுக்குப் பின்னான வரிசையில். இந்த முறையில் கதை சொல்லப்பட்டிருப்பது நிச்சயமாக வாசகனுக்கு ஒரு பிரமிப்பையும் பரபரப்பையும் உண்டாக்குகிறது தான் என்றாலும் பல இடங்களில் தடுமாற்றம் தெரிவது போல் இருக்கிறதே? என் பார்வையில், வாசிப்பில் தான் கோளாறா? இல்லை..யானைக்கு தான் அடி சறுக்கி விட்டதா?
கதைச்சுருக்கம்
சம்பத்தின் கல்லூரி நண்பர்கள் அழகர், ராமதுரை, மாரிமுத்து, யாழினி மற்றும் அவன் மனைவி ஜெயந்தியின் பார்வையில்- பல கோணங்களில்-கதையின் துவக்கத்திலேயே இறந்து போயிருக்கும் சம்பத், நம் முன் உலா வருகிறான்.சம்பத்தின் இறப்பினால் கடுந்துயர் கொள்ளும் மூவரும் மனமாற்றத்துக்காக ஒரு வனப்பகுதியில் தங்கச்செல்கிறார்கள். அங்கு அவர்கள் மூவருக்கும் உண்டாகும் வாழ்வு மற்றும் மரணம் பற்றின சிந்தனைகளும் கேள்விகளும் மற்றும் சம்பத்தின் மரணம் அவர்களிடத்து உண்டாக்கும் தாக்கங்களுமாக நீளுகின்றது கதை..மூவரும் சம்பத்தின் மனைவிக்கு ஏதாவது வழி செய்ய வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு வனம் நீங்கி அவரவர் குடும்பம் நோக்கி புறப்படும் பயணத்தில் நிறைவு பெறுகிறது நாவல்.
ஆமை ஓடும் பயவலையும்
சிறுபிராயத்தில் தன்னுடைய கவனக்குறைவால் இறந்து விட்ட தங்கையின் நினைவால் மனநிலையில் மாறுபாடு கொண்டவனாக வளர்கிறான் சம்பத். மரணம் குறித்த, மற்றும் தனிமை பற்றின அவனுடைய பயமே அவனை அச்சமற்றவனாகவும் மென் உணர்வுகள் அற்றவனாகவும் வெளிக்காட்டிக்கொள்ள அவனை உந்துகின்றன. நாம் பல சமயங்களில் சந்திக்கும் நபர்களை சம்பத்தின் இந்த நிலைப்பாடு நினைவுப்படுத்துகின்றது. மிகக்கோழையாகவும் தொட்டார்சிணுங்கியாகவும் இருக்கும் சில நபர்கள் தம்மைச்சுற்றி இப்படியான ஒரு வலையைப்பின்னிக் கொள்வதைம் ஒரு பாதுகாப்பு ஓட்டுக்குள் தம்மை ஒடுக்கிக் கொள்வதையும் பார்த்திருக்கிறோம் தானே?
நிராகரிப்பு
தங்கள் தமிழ் இலக்கிய வகுப்பில் படிக்கும் ஒரே பெண்ணான யாழினியின் பால் ஈர்க்கப்படுகிறார்கள் நண்பர்கள். அவளுடைய குடும்பக் கொள்கையான கடவுள் மறுப்பில் தீவிரமாக ஈடுபட்டு , பல்வேறு கூட்டங்களில் பேசியும் வீரம் காட்டியும் அவளுடைய காதலைப் பெறுகிறான் சம்பத். மேடைப்பேச்சு அரசியல் கூட்டம் பேசுவது வரையில் அவனைக் கொண்டு சேர்கின்றது..கூடவே குடிக்கும் பழக்கமும் தன்னைத்தானே சிதைத்துக் கொள்வது மற்றும் தனிமைப்படுத்திக் கொள்வது என்று மனநோயின் விளிம்பில் இருக்கிறான் சம்பத்.
“மென்உணர்ச்சிகளுக்கு இடம் கொடுப்பதுதான் மனிதனின் வீழ்ச்சிக்கு முதல் காரணம் . குகை மனிதனைப்போல எப்போதுமே மூர்க்கமாகத்தானிருக்க வேண்டும்.——–எல்லா மனிதர்களுக்கும் மாமிசம் கிழிக்கும் இரண்டு கோரைப்பற்கள் இருக்கின்றன—-நம் வீட்டில் உள்ளவர்கள் நம்மைக் கொஞ்சம் கொஞ்சமாக பிய்த்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள் – ஆகவே மெல்லிய உணர்ச்சிகளுக்கு நாம் இடம் கொடுக்கவே கூடாது”
இம்மாதிரியான ஒரு மனநிலையில் இருப்பவன் தான் சம்பத் . இப்படியான ஒருவனை புத்திசாலியான எந்தப்பெண்ணால் தான் நெடுங்காலத்துக்கு சகித்துக் கொள்ள இயலும் ? யாழினி அவனை நீங்குகிறாள்..இதுவும் முன்னரே வாழ்வு மற்றும் மனிதர்கள் மீது மிகுந்த கசப்புணர்வு கொண்டிருக்கும் சம்பத்தின் மனச்சிதைவுக்கும், அடங்காக்காமத்துக்கும் இன்னமோர் காரணமாக ஆகிறது.
சம்பத்தின் கட்டற்ற மனப்பாங்கு
மனதில் நினைப்பதை எல்லாம் பேசவும் செய்யவும் கூடியவனாக சித்தரிக்கப்படுகிறான் சம்பத் . உதாரணமாக தன் நண்பன் பார்க்க ஒரு விலைமாதுவுடன் சினிமாவுக்கு சென்றதுமல்லாமல் அவன் மனைவியின் உடல்கட்டு பற்றி அவனிடமே கேலி பேசும் அவன் ,கல்லூரிக்காலத்தில் பயம் அறியாமல் பேராசிரியர்களிடம் வம்பு செய்யவும் கடவுள் மறுப்பு பேசி கலகம் செய்யவுமாக இருக்கிறான்.
(காதலில் இருக்கும் சமயம் ஒரு முத்தத்துக்காக யாழினியிடம் வம்பு செய்கிறான் சம்பத் என்றொரு சீக்வென்ஸ் வருகிறது கதையில்..அதே போல மனைவி ஜெயந்தியிடம் ஒரு சமயம் (முதல் முறை அல்ல!) உறவு கொள்ளும் போது அவளுக்குக் குருதி பெருக உறவு கொண்டான் என்றொரு செய்தி – இதுவும் மனச்சிதைவு நோயின் அறிகுறி என்பதற்கான செய்தி தானா?)
முற்றும் மனநோய்
இப்படியாகப் போகும் வாழ்க்கையில் லாட்டரிசீட்டு வாங்கும் மோகம் உண்டாகிறது சம்பத்துக்கு..அதே சமயம் அறிமுகம் ஆகும் பெண் தான் ஜெயந்தி..அவர்கள் திருமணமும் முடிகிறது..அச்சகம் ஒன்றில் வேலை செய்து வந்த அவன் பணம் கையாடி விடுகிறான், போலீசுக்கு பயந்து பதுங்குகிறார்கள் இருவரும். பலவாறு இன்னல்களும் துயரங்களுமான வாழ்வில் ஒரு புலனாய்வு வார இதழில் பிழைதிருத்தம் செய்யும் வேலையில் சேர்கிறான் சம்பத் . பல கொடூரமான செய்திகளை பிரசுரிக்கும் இதழான அதில் அவன் பார்க்கும் வேலை அவனை மேற்கொண்டு கலங்கச்செய்து விடுகிறது. மனநோய் முற்றி அலைக்கழிகிறான்.
இத்தனை துயரிலும் அவனோடு கூடவே போராடுகிறாள் ஜெயந்தி. கடைசியாக செடிகள் வளர்த்து வியாபாரம் செய்கிறார்கள்..அதில் சிறிது காலம் அமைதி காணும் சம்பத் மீண்டும் அமைதி இழக்கிறான்.
இறுதியாக மஞ்சள்காமாலை கண்டு, நோய் முற்றி அரசு ஆஸ்பத்திரியில் இறந்து போகிறான். நண்பர்கள் செலவில் இறுதி காரியங்கள் நடைபெறுகின்றன.
ஜெயந்தியின் அவலம்
கணவனைப் பறிகொடுத்த துயரை எண்ணி அழகூட இயலாதவளாக இருக்கிறாள் ஜெயந்தி. அவளே தான் பிணத்தைக் குளிப்பாட்ட பொதுக்குழாயிலிருந்து தண்ணீர் பிடித்து வர வேண்டியிருக்கிறது. வாரக்கணக்கில் அவனோடு தனியாக ஆஸ்பத்திரியில் கிடந்து அவதியுற்றதால் கணவன் சடலத்தின் அருகே அமர்ந்திருக்கும் போதே சற்று உறங்கமாட்டோமா என்று ஏங்கிப்போகிறாள் . வாழ்வின் நிலையற்ற தன்மையையும் அதன் துயரத்தையும் இதை விடத்துல்லியமாக எவரும் பதிந்து விட முடியுமா?
கேள்விகள்
நண்பர்கள் மூவரும் தாமும் சம்பத்தின் மரணத்துக்கான ஒரு காரணமோ என்றெண்ணுவதும் துயறுற்று கலங்குவதும் மிக நெகிழ்ச்சியான விஷயங்கள். ஆனால் சம்பத்தைப்போல நாம் இல்லையே என்று அவன் மீது பொறாமை கொண்டுள்ளதாக வரும் இடங்கள் பல கேள்விகளை எழுப்புகின்றன.
1.மன நலம் கெட்டு, அமைதியிழந்து, மரணம் தான் அவனுக்கு மிகப்பிடித்தமானது என்று எண்ணி அதை வரவேற்று இறந்து போகும் ஒருவனைப்போல இல்லையே என்று ஆதங்கம் கொள்வது எதைக்குறிக்கின்றது?
2.இயல்பாகவே மனிதனுக்கு உலகம் மற்றும் வாழ்வு குறித்து ஆழ்மனதில் இருக்கும் பயம்- மற்றும் மரணம் தான் அமைதிக்கான வழி என்ற நினைப்பா?
அல்லது
3.தங்களால் முடியாத,ஆனால் செய்ய மிக விருப்பமுற்ற சில செயல்களை அவன் சாதாரணமாகச் செய்து முடித்தான் என்பதா?
4.இப்படியான காரியங்களை மனஓர்மையில்லாத ,லேசான பிறழ் மனப்பாங்கு கொண்டவர்கள் தாம் செய்ய இயலும் என்பது இவர்களுக்குத் தெரியாதா?
இல்லை
5. மனநோயாளிகள் மீது உண்மையிலேயே நம் எல்லோருக்கும் பொறாமை ஏற்படத்தான் செய்கிறதா?
கோணங்கள்
ஒவ்வொருவரின் வாயிலாகத் தெரியவரும் சம்பத் ஒவ்வொரு மாதிரியானவன். பிரிந்திருக்கும் உறவுகளோடு சேர்ந்து விடத்துடித்து வீடு செல்லும் அதே சம்பத்..தன் தகப்பனை கட்டையால் அடித்துக் காயப்படுத்துகிறான். கடவுள் மறுப்பில் மிகத்தீவிரமான கொள்கை உடையவன், தன் பாவத்தை மன்னிக்கச்சொல்லி ஒரு கன்னியாஸ்த்ரீயை வேண்டுகிறான். எப்போதுமே மகிழ்ச்சியற்றவனாக இருக்கக்கூடியவன் …எப்போதுமே மகிழ்ச்சியோடு இருந்தான் என்று அவன் மனைவி எண்ணும்படியாகவும் தோன்றுகிறான். அறிய வருவது என்னவென்றால்..ஒவ்வொரு மனிதனின் கண்ணோட்டமும் வெவ்வேறானது. அவனவன் பிறப்பு, வளர்ப்பு ,வாழ்சூழல் இவற்றுக்கு ஏற்றார்போல் தான் பார்வையும் இருக்கும் என்பது தான்.
நாவலில் ,மனிதனின் மன விகாரங்கள் மற்றும் இயல்புகளை ரொம்பவும் உணர்ச்சிவயப்பட்டு விடாமல் ஒரு வெற்றுக்குரலில் பல இடங்களில் பதிந்திருக்கிறார் எஸ்.ரா. அவற்றில் சில:
“ராமதுரை நான் கூடக் கொல்லவேண்டியவர்களின் பட்டியல் ஒன்றை மனதிற்குள் தயாரித்துக் கொண்டுதானிருக்கிறேன்,ஆனால் அந்தப் பட்டியல் முடியவேயில்லை என்றான்”
“சம்பத் அணிந்திருந்த சட்டைக் காலரிலிருந்து கழுத்தை நோக்கி ஒரு சிவப்பு எறும்பு ஊர்ந்து போய்கொண்டிருந்தது. அதை அவன் மனைவி கவனித்த போது இனி தட்டிவிடத் தேவையில்லை என்று நினைத்தவளைப் போல அந்த எறும்பு எங்கே செல்கிறது என்று வெறுமே பார்த்துக் கொண்டேயிருந்தாள்.”
முடிவாக
இத்தனை மாறுபட்ட அம்சங்களும் குணங்களும் உருவாக சம்பத் இருக்கும் போதும் அவன் நண்பர்களுக்கும் மனைவிக்கும் பிரியத்துக்கு உகந்தவனாக இருந்திருக்கின்றான் என்பது தான் அவன் பற்றின பொதுவான ஒரு செய்தி. கதை சொல்வதிலும், கதையேவுமே மிக விசித்திரமான ஒன்றாக இருந்த போதிலும் என்றைக்கும் மனதில் ஒரு அழியாத பாத்திரமாக இருப்பான் சம்பத். ஒரு சடலமாகத் தான் நமக்கு அறிமுகம் ஆகிறான் என்றாலும் என்றும் மனங்களில் அவன் வாழும் வகையாக மிக அழுத்தமான ஒரு பாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார் எஸ்.ரா.
..ஷஹி..
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments