ராகுல் ட்ராவிட் -
கிரிக்கெட் உலகின் கண்ணிய சகாப்தம்
ராகுல் டிராவிட். இந்தியாவின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன். பலர் இதனை மறுக்கலாம். இவரை விட அதிக ரன் குவித்தவரே சிறந்த வீரர் எனவும் கூறலாம். அந்த ஒரு காரணமே இவரை அந்த ஜாம்பவானின் நிழலில் வைத்துள்ளது என்றும் கூறலாம். உலகின் தலைசிறந்த வீரர்களுள் ஒருவரான சச்சினை விட ஒரு படி உயர்ந்த்தவர் என்று கூறாமல் இருவரும் சமமானவர்கள் என்று கூறலாம். முன்னவரின் தீவிர ரசிகர்கள் இக்கருத்தை விரும்ப மாட்டார்கள்! தென் ஆப்பிரிக்க அணியின் காலிஸ் ஒருமுறை, “இவர் (ராகுல் டிராவிட்) மட்டும் எங்கள் நாட்டவராயிருந்தால் தலையில் தூக்கிவைத்து கொண்டாடியிருப்போம்” என்றார். கிரிக்கெட் வரலாற்றின் பிதாமகன் சச்சின் வாழ்கின்ற காலத்தில் பிறருக்கு மாற்றான் தாய் வரவேற்பு கிடைப்பது இயல்பே. இவருக்கு கிடைக்க வேண்டிய வரவேற்பும், பாரட்டும் மிகக் குறைவாகவே இருந்துள்ளது. தான் ஆடிய முதல் போட்டியிலிருந்து இன்றுவரை அவரது சாதனைகள் நிழலிலேயே இருந்துள்ளது வருத்தப்பட வேண்டியது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன்களுள் ஒருவரான சவுரவ் கங்குலியுடன் டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய ராகுல் டிராவிட் தனது முதல் போட்டியில் 95 ரன்கள் குவித்தார். படிப்படியாக திறமையான ஆட்டங்களால் அணியில் இடம் பிடித்த டிராவிட் ஒரு நாள் போட்டிகளிலும் சிறப்பாக ஆட ஆரம்பித்தார். 1999 உலகக் கோப்பையில் 461 ரன்கள் எடுத்து அனைவரயும் ஆச்சர்யப் படுத்தினார். 2001ல் கங்குலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. வெற்றி தளபதியாக ராகுல் டிராவிட், லக்ஷ்மன் விளங்க, சச்சின் தயவில்லாத இந்திய வெற்றி சாத்தியம் என்று உணர்த்தினர். வெளிநாடுகளில் பூனை என்று சித்தரிக்கப் பட்ட இந்திய அணி சில வெற்றிகளை பெற ஆரம்பித்தது. வெளிநாடுகளில் இந்தியா பெற்ற ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னால் சத்தமில்லாமல் உழைத்த பெருமை இவருக்கு உண்டு. ராகுல் டிராவிட் இரட்டை சதம் அடிக்க அடிலெய்டில் இந்தியாவின் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை யார்தான் மறக்க முடியும்.
அணியின் புதிய பயிற்சியாளர் மூலம் வந்த பூதம் இவரை 2005ல் காப்டன் ஆக்கியது. யாரிடமும் அதிர்ந்து பேசாத டிராவிட் ,சேப்பல் கங்குலியை அணியை விட்டே தூக்கியபோதும் அமைதியாகவே இருந்தார். டிராவிட் நினைத்திருந்தால் தன்னை காப்பாற்றியிருக்க முடியும் என்பது கங்குலியின் கருத்து. ஒருமுறை ராகுல் டிராவிட் தலைமையில் பாகிஸ்தான் சென்றது இந்திய அணி. ஒரு போட்டியில் சச்சின் 194 ரன்கள் குவித்திருந்த பொழுது ஆட்டத்தை டிக்ளேர் செய்தார் டிராவிட். இதில் இருவருக்கும் மனக் கசப்புகள் இருந்த்தாகவும், அப்போதைய பயிற்சியாளை அதனை தீர்த்து வைத்ததாகவும் தகவல்கள் உண்டு. இந்த ஒன்றிரண்டு சம்பவங்களைத் தவிர தனது 16 வ்ருட கிரிக்கெட்வாழ்க்கையில் அணிக்கு நம்பிக்கையாகவே இருந்தார்.
அசைக்க முடியாத நிதானம், பதட்டமில்லாத ஆட்டம், வசீகரப் புன்னகை என அணியின் முக்கிய தூணாக விளங்கிய ராகுல் டிராவிட்டை கோபமாக பார்ப்பது மிகச் சிரமம். இவரது தந்தை கிசான் நிறுவனத்தில் பணியாற்றுவதால்,சக வீரர்களால் ஜாமி(Jammy) என்று அழைக்கப்பட்ட இவரை பிடிக்காதவரே இல்லை. இவர் ஆடும் ஒன் டவுன்(One down) நிலை மகவும் சவாலானது. அணியின் தொடக்கத்தைப் பொறுத்து தன் ஆட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய கடினமான நிலை. ஒருமுறை சேவாக் முதல் பந்திலேயே ஆட்டமிழக்க, களத்திற்கு வந்த டிராவிட், ஆட்டமிழந்த போது இந்தியா 595 ரன்களை குவித்திருந்தது. இவர் 270 ரன்கள் எடுத்தார். மேலும் 2003 உலகக் கோப்பையில் தான் விக்கெட் கீப்பராக பணியற்றினால் அணியில் இன்னொரு பேட்ஸ்மேன் இடம் பெறலாம் என்ற காரணத்தால் தனக்கு சற்றும் அறிமுகமில்லாத பணியை குறைவில்லாமல் செய்தார். இந்தியா உலகக் கோப்பை இறுதியை எட்டியது.
இவ்வாறு அணிக்காகவே தன்னை அர்ப்பணித்த ராகுல் டிராவிட் இனி தான் அணிக்கு தேவை இல்லை என்பதை உணர்ந்து சரியான சமயத்தில் ஒய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். செய்தியாளர்கள் கூட்டத்தில் உருக்கமாக பேசிய டிராவிட் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார், “உங்களால்(ரசிகர்கள்) இந்த விளையாட்டிற்கு பெருமை. உங்கள் முன் ஆடியது எனக்கு பெருமை” என்றார் அசத்தலாக. ஆட்டத்தை தொடங்க வேண்டுமா? சரி. விக்கெட் கீப்பிங்க் செய்ய வேண்டுமா? சரி. நிலை மாறி ஆட வேண்டுமா? சரி. இப்படி அணியின் நன்மைக்காக உழைத்து இந்திய அணியின் டெஸ்ட் தரத்தை உயர்த்திப் பிடித்த நீங்கள் அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டு. நன்றி ராகுல் டிராவிட். வாழ்த்துக்கள்.
ARJUN…
tags : Rahul dravid india’s best test batsman an article in tamil to honor the wall
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments