/* ]]> */
Mar 052012
 

நாடோடித் தடம்

” தமிழினி ” யில்  தொடராக வெளி வந்து  மிகுந்த வரவேற்பைப் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு கவிஞர் ராஜசுந்தர ராஜனின்  நாடோடித்தடம் . ஜி. நாகராஜனின் படைப்புகள், மா. தட்சிணாமூர்த்தியின் ‘திவ்ய தரிசனம்’, மகுடேஸ்வரனின் ‘காமக்கடும்புனல்’ ஆகியவற்றின் வரிசையில் பேசப்படுகிறது  நாடோடித்தடம்.

ஆசிரியர்  ஸ்பிக் நிறுவன ஊழியராக இருந்து இந்தியாவின் ஒவ்வொரு ஊராகவும் ( குஜராத்தில் துவங்கி ஆந்திரம் , தூத்துக்குடி , தில்லி , கான்பூர் , ஒரிசா என்று பயணிக்கிறது நாவல் ) வளைகுடாவிலும் கூட பணி நிமித்தம் அலைந்து திரிந்ததையும் அச்சமயங்களில் தனக்கு ஏற்பட்ட பெண் நட்புகள் மற்றும் பரத்தையரிடம்  தான் கொண்டிருந்த ஆர்வத்தையும், தன் மண வாழ்வு பற்றின விபரங்களையும் கூட மிக்க அழகு தமிழில் , ஆன்மீகம் , தத்துவம் மற்றும் அரசியல் , சமூகம் , தொழில் நுட்ப அறிவு இவற்றின் வண்ணங்களின் கலவையிலான ஓவியமாகப் படைத்திருக்கிறார் .

ஒரு மாடெர்ன் ஆர்ட்டுக்கு ஒப்பிடலாம் நாடோடித்தடத்தை

கலைஞனுக்கு  வாழ்வு குறித்த பார்வையில் இருக்கும் நம்பிக்கை , தன் சொந்த வாழ்வையே பாடு( ஒவியப் )பொருளாக்கும் துணிவு மற்றும் அதிலும் எத்தனை  இயலுமோ அத்தனை விடுதலை உணர்வு மற்றும் புதுமை சேர்த்தல் – இது அத்தனையும் இந்நூலுக்கும் பொருந்தும் .வாசகனுக்கும் ஒரு மாடெர்ன் ஓவியம் கொடுக்கும் அத்தனை இன்பமும் கிடைக்கிறது. மேலோட்டமாக வாசிக்க அதன் நிறம் மற்றும் அழகில் லயிப்பு , ஓரளவுக்கு புரிதல் கொண்டவனுக்கு அதன் நுட்பம் மற்றும் நயம் தரும் மகிழ்ச்சி  இன்னொரு ஒவியனுக்கோ வரைந்தவன் பார்வைக்கும் மேலாய் விரியும் சூட்சமங்கள் .

வகை

ஆட்டொஃபிகஷன் வகையிலான எழுத்து தான் நாடோடித்தடத்திலும் காணப்படுகிறது . நான் லினியர் – அல்வரிசை முறையிலானதும் கூட .  அறிந்த வரையில் தமிழில் இம்மாதிரியான முயற்சிகள் மிகவும் குறைவு தான் . ஆனால் கவிஞர் புதுமையாக செய்து விட வேண்டும் என்ற எண்ணம் ஏதும் அற்று தானாக அப்படி அமைந்த நூல் இது என்பது குறிப்பிட்டாக வேண்டிய அம்சம் . எஸ் . ராமகிருஷ்ணன் மற்றும் சாருவின் உறுபசி , துயில்,  ஜீரோ டிகிரி , எக்ஸைல் ஆகிய நாவல்கள் இம்மாதிரியாக எழுதப்பட்டவை என்று விதந்து பேசப்பட்டு வரும் இத்தருணம் நாடோடித்தடமும் அம்மாதிரியான எழுத்துக்கு க்ளாசிக்கான ஓர் உதாரணம் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று !

சாரம்

கவிஞரின்  மரபுவழி துறந்த , (கம்மிங்ஸின் எழுத்துமுறையை வெகுவாக ஒத்திருக்கும்) நான்லினியர்- அல்வரிசை வகையைச்சார்ந்த வெளிப்பாடு ஆர்வமூட்டுவதாக இருக்கிறது மேலும் தத்துவ மற்றும் ஆன்மவிசாரணையே தான் நாடோடித்தடம் நம் முன் வைக்கும் வரைகோடு . எவ்விதமான முன்திட்டமும் இன்றி நாடோடித்தனமாக  நாடெங்கும்  சுற்றி அலைந்ததை அதே ரீதியில் ( தான் தோன்றித்தனமாகவும் தாவும் மனப் போக்கு கொண்டதாகவும் ) எழுதியிருப்பதை தற்செயல் என்று கொண்டு விட முடியவில்லை . தன் நூலின் சாரத்தையே கம்மிங்க்ஸின் ஒரு கவிதையின் மூலம் சொல்லியிருப்பதைப் பார்க்கும் போது – கவிஞரின் மீது  கம்மிங்ஸூக்கு இருக்கும் ஆளுமை தெரிகிறது .

“அவரவர் விழி ஈட்டம் “

எனும் அத்தியாயத்தில் கவிஞர் , கம்மிங்க்ஸின் புகழ்பெற்ற கவிதை ஒன்றை மேற்கோளிட்டிருக்கிறார் .

maggie and milly and molly and may
went down to the beach (to play one day)
and maggie discovered a shell that sang
so sweetly she couldn’t remember her troubles,and
milly befriended a stranded star
whose rays five languid fingers were;
and molly was chased by a horrible thing
which raced sideways while blowing bubbles: and
may came home with a smooth round stone
as small as a world and as large as alone.
For whatever we lose(like a you or a me)
it’s always ourselves we find in the sea

மேலோட்டமாகப் படிக்க ஒரு நர்சரி ரைமை ஒத்திருக்கும் இந்தக் கவிதை பேசும் விசயங்கள் ( ஈழத்தமிழர் போல் விடயம் என்று சொல்வதில் கவிஞருக்கு விருப்பம் இல்லை – விசயம் என்றால் கரும்புசாறு என்று பொருளாம் ) மகத்துவமிக்கவை . இவ்வுலகம் நம்மை பிரதிபலிக்கும் கண்ணாடி ( இங்கு கடல் ) போன்றது ..அவரவர் நாடுவதை , விரும்புவதை , தேடுவதை உலகில் காண்பர் அல்லது அடைந்து கொள்வர் என்பது தான் மேற்கண்ட ,கம்மிங்ஸின் கவிதையின் ,நான் புரிந்து கொண்ட ஒரு வரிச்சாரம்.

மேலும் துயரமும் அகத்தனிமையும் உற்ற ஓர் ஆன்மா அதைத்தீர்த்துக் கொள்ள , தொலைத்து விட வாகான இடமோ ,உயிரோ தேடி அலைந்து திரிவது தான் இந்த நாடோடியின் வாழ்க்கை என்பதும் தான் .

“மறிந்துயிர்த்து மறுபடியும் “ எனும் அத்தியாயத்தில் வேசை ஒருவளுடன் கூடி இருந்த பொழுதில் கவிஞர் தன் தாயை , மனைவியை அவளிடம் கண்டு கலங்கும் இடத்தில்  ஃப்ராய்டின் ” தாய்மை –மற்றும் ஆண்களின் பாலுறவுத் தேட்டம்” பற்றின கருத்துக்கள் தாம் எண்ணத்தில் முட்டின. மேலும் கனவுகள் பற்றின குறிப்பும் பல இடங்களில் ஃப்ராய்டை நினைவு கூறச்செய்தன . உளவியல் ஆய்வுகளில் விருப்பம் உள்ளவர்களை மிக்கவும் வசீகரிக்கக் கூடிய புத்தகம் இது .
“Murder is a crime. Describing murder is not. Sex is not a crime. Describing it is.”

என்பார் Gershon Legmon . பாலுறவு மற்றும் உடல் பற்றின வர்ணனைகள் வரும் இடங்களில் எல்லாம் பழந்தமிழ்ச்சொற்களும் ஒசை நடையுமாக மெழுகி இருப்பதால் கொச்சையாகத் தெரியவில்லை . மேலும் இலைமறை காயாகத்தான் இருக்கின்றன விபரங்களும் ஆகவே அதிர்ச்சி ஏதும் ஏற்படுவதில்லை . தன்னுடைய அல்வழி வாழ்க்கையை ஒரு நாட்குறிப்பில் பதிந்து கொள்ளுவார் போல எழுதிவிடும் ஆர்வம் தான் மேலோங்கித் தெரிகிறது .

பெண்களிடம் தான் அனுபவித்த இன்பம் மற்றும் தான் தொடர்பு கொண்ட பல பெண்களைப் பற்றியும் பேசும் சந்தர்ப்பங்களிலும் சரி, தன்னுடைய பல்மொழி மேலும் தொழில் நுட்ப அறிவு வெளிப்படும் இடங்களிலும் சரி ,கொஞ்சமும் ” பார்  நான் இத்தனை அனுபவித்தேன் இவ்வளவு தெரியும் எனக்கு” எனும் மார்தட்டிக் கொள்ளும் ரீதியிலான எழுத்தில்லை .  “இப்படி இருந்தேன் , இதெல்லாம் பட்டேன் , இவ்வாறு இருக்கிறது என் நிலை இப்போது !பார்த்துக் கொள்ளப்பா ” என்பதான , பகிர்ந்து கொள்ளும் தொனி மட்டுமே .  எங்குமே அது தன்னிலை விளக்கமாகவும் இல்லை , பாவமன்னிப்பு வேண்டும்படியான குற்ற உணர்வும்  தெரிவதில்லை .

 கேள்விகள்

“ஒரு மனிதன் அல்லது மனுஷியின் காதல் மற்றும் காமம் பற்றின விவகாரங்களில் மூன்றாம்மனிதன் பேச எதுவும் இல்லை” என்ற பெரியாரின் பேச்சை கேள்விகள் இல்லாமல் ஒப்புக்கொள்ளும் அதே சமயம்–

திருமண பந்தத்துக்குள் இருக்கும் ஒரு ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் மூன்றாம்மனிதரா இல்லையா ?

சில இடங்களில் மட்டுமே வந்தாலும் கூட முக்கிய பாத்திரமான முத்துப்பேச்சி என்ன ஆனாள் ?

ஆசிரியரின் மணவாழ்வில் உண்டான விரிசலுக்கு அவருடைய கிறித்தவத்தின் , பைபிளின் மேலான பற்று மட்டும் தான் காரணமா ? (இதற்கான பதிலை அவர் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை என்றாலும் கூட . )

தான் பல பெண்களிடம் மையல் கொண்டவர் என்றாலும் கூட மனைவியின் பேரில் மிகுந்த காதல் உண்டு தான் என்று பல இடங்களில் பிரஸ்தாபிக்கிறார் ஆசிரியர் ..ஆனால் அது திருமண பந்தத்தினால் மட்டும் உண்டான பிரியம் போலத் தெரியவில்லை ! சாந்தி அவரின் அக்காள் மகள் என்பது தான் முக்கிய காரணம் என்று தான் நினைக்கிறேன் !

” யாயும் ஞாயும் யாரோ அல்லர் ;

எந்தையும் நுந்தையும் தலைமுறைக் கேளிர் ;

யானும் நீயும் பிறவி தொட்டு அறிதும் ;

வன்புலப் பரல்நீர் போல

அன்புவடு நெஞ்சம் தாம் புலந்தனவே . “

என்று குறுந்தொகைப் பாடலின் இன்ஸ்பிரேஷனில் கவிஞர் எழுதி நூலின் பின் அட்டையில் இடம் பிடித்திருக்கும் பாடலும் அதையே தான் நிரூபிக்கிறது !

ரசித்தது

பெண்களை , பெண்மையை பல இடங்களில் உயர்த்திப் பேசி இருப்பதும் , ஜோதிடத்தை ரொம்பவும் சைன்டிஃபிக்காக அணுகியிருப்பதும் , அரசியலை, அரசியல்வாதிகளை மிகுந்த துணிவோடு விமர்சனம் செய்திருப்பதும் , சாதீய முறைகளைக் கிழித்துக் கோர்த்திருப்பதும் எனக்கு தனிப்பட்ட முறையில் நூலில் மிகவும் பிடித்தமான விபரங்கள் . ஆனாலும் வெகுவாக சிலாகிக்கப்பட வேண்டியது  நூலில் பயின்று வரும் ,நயமிக்க , புழக்கத்தில் அதிகமும் இல்லாத , பழந்தமிழ் மற்றும் கலைச்சொற்களின் உபயோகம் தான் . உதாரணத்துக்கு சில வார்த்தைகள் :

பயல் நண்பன் – boyfriend !

சொடுக்கி – switch

துயனுதல் – இயங்குதல்

நாவுதல் – navigate

நயவுதல்- ரசித்தல்

நூவலியர் – novelist

தானி – auto rikshaw

உறழ்வு – logic

ஒப்புரவு – support , charity

வீளை – whistle

தெவிளுதல் – manifest

வட்டிடைக்குறை – traffic circle

செறிவுயவு – seriousness

அதர் – valve

தேரம் – duration

நிழறுகள் – shades

ஒரேயடியாக உயர்த்திப்பிடித்துவிட்டால் அது என்ன விமர்சனம்? அது என்ன மதிப்புரை ? நாடோடித்தடத்தில் துணுக்குறச்செய்த சில இடங்கள் ..

ராமாயணம் என்பது “இலியட்”  மற்றும்  “ஒடிஸ்ஸி ” போன்றவற்றின் தாக்கம் மேவி நிற்கும் ஒரு இட்டுக்கட்டப் பட்ட கதை மட்டுமே என்று ,

“Some people say that Ramayana is an imaginary story . And some people say it is based on history . I would like to say that it is an imaginary portrayal of historical incidents . Poets need not stick to history . They can make a make – believe history .”

எனத்துவங்கும் ஒரு கடிதத்தில் பேசுகிறார் கவிஞர் ..இது பற்றி விபரம் ஏதும் அத்தனைக்கு நான் அறிய மாட்டேன் .பதில் அறிந்தவர்கள் அவசியம் பேசுங்கள்.

ஆனால்,

“திருத்தமுடியாதபடி முதலிலேயே அல்லாஹ் தன் வேதத்தை இறக்கியிருக்கக் கூடாதா ? தவறுகளால் தன்னைத் திருத்திக்கொள்ளவேண்டிய நிலைமை அவருக்குமா ?”

எனும் கவிஞரின் கேள்விக்கு என்னால் நிச்சயம் பதிலிறுக்க முடியும் . இஸ்லாமின் அடிப்படையே  நம்பிக்கை தான் எனும் போது அது அல்லாமல் கேட்கப்படும் கேள்விகளுக்கு நூறு பக்க விடைகளும் விளக்கம் தரா ? முயல்கிறேன் ..சூரா காஃபிரூன் எனும் இது தான் கவிஞரின் கேள்விக்கான சரியான விடை என் வரையில் ..ஆசிரியரின் பல் மொழி அறிவு இதை விளங்கிக் கொள்ள அவருக்கு உதவும் !

“குல்யாஐயுஹல் காஃபிரூன் லாஅவுபுது மாதவுபுதூன்
வலாஅன்தும் ஆபிதூன மாஅவுபுது வலாஅன ஆபிதும் மாஅபத்தும்
வலாஅன்தும் ஆபிதூன மாஅவுபுதூ லகும் தீனுகும் வலியதீன்”

சுருக்கமாக விளக்க வேண்டும் என்றால் “உன் மதம் உனக்கு என்னது எனக்கு ” அவ்வளவே ! இறைவன் மனிதனுக்காக திட்டங்கள் பல தீட்டியுள்ளான் என்பதும் ..காலகட்டங்களின் தேவைக்கேற்ப இறை வேதங்களையும் நபிமாரையும் இறக்கினான் என்பதும் இஸ்லாமியரின் நம்பிக்கை . இதையும் தாண்டி இறைவன் தவறுகளே செய்யாதவனாக , மரணம் வாராதவனாக மனிதனைப் படைத்திருக்கலாம் அல்லவா என்றெல்லாம் கூட குதர்க்கம் பேசலாம் தானே ?

முடிவாக

எழுத்தில் தளும்பி வழியும் நேர்மையும் ,தன் செயல்களை எந்த இடத்திலும் நியாயப்படுத்தாத, க்ளோரிஃபை செய்து விடாத தன்மையும் , வெகுவாக வசீகரிக்கும் அழகுத் தமிழும் நாடோடித்தடத்தைத் தவற விட்டு விடக் கூடாத ஒரு புத்தகமாக  நமக்கு அடையாளம் காட்டுகின்றன.

வயது மற்றும் பக்குவம் , பட்டறிவு இவற்றின் காரணம் வாசகனுக்கு ஒரு சில அறிவுரைகளும் இருக்கின்றன ” பிறன் மனை நாடாமை ” அதில் முக்கியமான ஒன்று . தன்மை நுவலலில் (first person narration) நெடுக பேசும் ஆசிரியர் இறுதியில் படர்க்கையில் (third person narration) பேசக் காண்கிறோம் ” நம்மையே நமக்கொரு காட்சிப்பொருள் ஆக்கி நம்மிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்கிறோம் ” எனும் தத்துவார்த்தம்  மிக அழகாக புரிபடுகிறது இதில் .

உடல் மற்றும் பாலுறவு பற்றியும் பேசுகின்ற புத்தகமாயிற்றே பெண்களுக்குப் பிடிக்குமா என்றால் ..எனக்கு மிகவும் பிடித்தது . வேலைகளுக்கு இடையே கிடைக்கும் நேரத்தில் எல்லாம் கீழே வைக்க விடாமல் படிக்கத் தூண்டிய புத்தகம் என்று தான் சொல்வேன் . பிள்ளைகளை படிக்க அனுமதிக்கலாமா என்றால் லாம் – என் மகனைப் படிக்கச்சொல்லி இருக்கிறேன் .

..ஷஹி..

 

 

நாடோடித்தடம் , ராஜசுந்தர ராஜன் , கவிஞர் ராஜ சுந்தரராஜன் , பரத்தையர் கூற்று , அல்வரிசை , நான் லீனியர் , ஆட்டோ ஃபிக்ஷன் , ராமாயணம் , குரான் , திருக்குரான், ஃப்ராய்ட் , கம்மிங்க்ஸ் , தமிழினி , எஸ். ராமகிருஷ்ணன் , சாரு நிவேதிதா, சாரு

 

Nadodith thadam , raja sundararajan , kavignar raja sundararajan , nonlinear, autofiction, charu niveditha, s. ramakrishnan , ramayan, kuran, alkuran, cummings, thamizini

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>