/* ]]> */
Feb 202012
 

பழமொழிகளில் விருந்தும் விருந்தோம்பலும்

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar.sethu@gmail.com

virundu, pazhamozhi, விருந்து, பழமொழி,

விருந்து

தமிழர்களின் தனித்த பண்பு விருந்தோம்பல் பண்பாகும். பிறநாட்டினரைவிட விருந்தோம்பல் பண்பில் நமது மக்கள் என்றென்றும் சிறந்து விளங்குகின்றனர். தம்மில்லத்திற்கு வந்த விருந்தினருக்கு எப்பாடுபட்டாவது சிறந்த உணவு வகைகளைச் சமைத்து உண்ணச் செய்து அவர்கள் மகிழ்ச்சியடையச் செய்வர். விருந்தினர்களின் மனம் வருந்தாத வகையில் நடந்து கொள்ள வெண்டும் என்று கருதி அதன்படி நடப்பர். அன்றிலிரந்து இன்றுவரை தம் இல்லத்திற்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியுடன் வரவேற்று வேண்டுவன கொடுத்து மகிழ்வுறச் செய்து அவர்கள் போகும்போது மலர்ச்சியுடன் விடைகொடுத்து வழியனுப்பி வைப்பது இடையீடுயின்றித் தமிழர்கள் வாழ்வில் நடைபெற்றுக் கொண்டிருப்பது போற்றுதற்குரியதாகும்.
தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் இதனை முதன்மையான அறமாக வலியுறுத்தி வருகின்றன. வள்ளுவப் பெருந்தகை விருந்தோம்பலுக்குத் தனி அதிகாரம் வகுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்விருந்தோம்பல் குறித்த பண்பாட்டுச் செய்திகளைப் பழமொழிகளாக நமது முன்னோர்கள் வழங்கியுள்ளனர். அவை விருந்தின் சிறப்பை மட்டுமல்லாது விருந்தினர்கள் நடந்து கொள்ள வேண்டிய பண்பாட்டு நெறிகளையும் எடுத்துரைக்கின்றன.

விருந்தோம்பல்

நாள்தோறும் விருந்தினருடன் உண்பதே சாலச்சிறந்தது என்று தமிழர்கள் கருதினர். தமிழகத்து வீடுகளின் வெளியில் திண்ணைகள் வைத்துக் கட்டினர். அத்திண்ணை வழிப்போக்கர்கள் தங்கிச் செல்வதற்காகக் கட்டப்பட்டன. இரவில் உணவு உண்டு முடித்த பின்னர் படுக்கப்போவதற்கு முன்னர் திண்ணையில் யாராவது இருக்கின்றார்களா? என்று பார்த்துவிட்டு அவ்வாறிருந்தால் அவர்களுக்கு உணபவிட்டு உபசரித்துவிட்டுப் படுக்கச் செல்வர். விருந்தினர் தம்வீட்டுக்கு வந்தால் மகிழ்வர். விருந்தினர் வரவில்லையெனில் வருந்துவர். சிலப்பதிகாரத்தில் வரும் கண்ணகி, கோவலன் பிரிந்ததற்காகக் கூட வருந்தவில்லை. ஆனால்,
‘‘அறவோர்க்களித்தலும் அந்தணர் ஓம்பலும்
விருந்தெதிர்கோடலும் இழந்த என்னை’’
என்று தேவந்தியிடம் கூறி வருந்துகிறாள். அதுபோன்று இராமயணத்தில் இராமன் விருந்து வரும்பொது எண்ணுருமோ?’’ என்று சீதை வருந்தியதாகக் கம்பர் குறிப்பிடுகிறார். இலக்கியங்களைப் போன்றே நம்முன்னோர்களும் விருந்தினர்கள் வருவதை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இதனை,

‘‘விருந்தில்லாச் சோறு மருந்து’’
என்ற பழமொழி குறிப்பிடுகின்றது.
நம்முன்னோர்கள் விருந்தினருடன் உண்பதை மிகச் சிறந்ததாகக் கருதினர். விருந்தினரையும், விருந்தோம்பலையும் நமது முன்னோர்கள் எவ்வாறு உயர்ந்தவர்களாகக் கருதினர் என்பதற்கு இப்பழமொழி சான்றாக அமைந்துள்ளது.

விருந்தும் மருந்தும்

விருந்து என்பதற்குப் புதுமை, புதியது எனத் தொல்காப்பியம் விளக்கமளிக்கின்றது. ‘‘விருந்தே தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே’’ என்பது தொல்காப்பிய நூற்பாவாகும். வீட்டிற்கு யார் எத்தனை முறை வந்தாலும் அவர்களை அன்று கண்ணட புதியவர்களைப் பொன்று வரவேற்று நம் முன்னோர்கள் உபசரித்தனர்.

விருந்தினரை வரவேற்று உபசரித்தாலும் விருந்தினர் அதிக நாள்கள் வந்த இடத்தில் தங்கக் கூடாது. அவ்வாறு தங்கினால் மதிப்புக் கிடையாது. மதிப்பிழக்க நேரிடும். தெரிந்தவர், உறவினர் என்று அதிகநாள் தங்கினால் அவர்கள் மனதில் தரம் தாழ்ந்து போக நேரிடும். இதனை உணர்ந்து விருந்தினராகச் செல்பவர் நடந்து கொள்ளல் வேண்டும். அதிகபட்சமாக மூன்று நாள்களுக்குமேல் விருந்தினராகத் தங்கி இருப்பது தவறான ஒன்றாகும். நோய்க்கு மருந்துண்டால் மூன்று நாள்களுக்குள் நோய் குணமாக வேண்டும். அல்லது குணமாவதற்குரிய அறிகுறி (செயல்பாடுகள்) தெரிதல் வேண்டும். இல்லையெனில் அம்மருந்தினைப் பயன்படுத்தக்கூடாது. அது சரியானதல்ல. அதுபோல் விருந்தினரும் மூன்று நாள்களுக்கு மேல் ஒருவரது வீட்டில் தங்குதல் கூடாது. இது மதிப்புக் குறைவை ஒருவருக்கு உண்டாக்கும். இதை உணர்ந்து தன் மதிப்பைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதனை,

‘‘விருந்தும் மருந்தும் மூன்று நாள்தான்’’
என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது. மதிப்புடன் விருந்திற்குச் சென்று மதிப்புடனேயே திரும்புதல் வேண்டும் என்று இப்பழமொழியில் நம்முன்னோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் ஒரு சிலரே எத்தனை நாள்கள் விருந்தினர் தங்கி இருந்தாலும் சலியாது அவர்களை உபசரிப்பர். பலர் அவ்விதம் இருக்கமாட்டார்கள். முதல் நாள் தடபுடலாக வாழையிலையில் விருந்தினைப் பரிமாறுவர். முதல் நாளில் இவ்வளவு மதிப்புக் கிடைத்ததைக் கண்டு மகிழ்ந்துபோன விருந்தினர் மறுநாளும் தங்க நேரிட்டால் வாழை இலை கிடைக்கவில்லை அதனால் தையல் இலையில் சாப்பிடுங்கள் என்று கூறி தையல் இலையில் சாப்பிடுங்கள்என்று கூறி தையல் இலையில் சாப்பாடு பறிமாறுவர். மறுநாளும் தங்கினால் தட்டில் பரிமாறி கையில் பிடித்துக் கொள்ளக் கூறி உண்ணுமாறு செய்வர். இதில் கையில் மிளகாயோ. வெங்காயமோ கொடுத்து உண்ணச் சொல்வதும் உண்டு. இதனால்தான் மூன்றாம் நாளுக்கு முன்னதாக விருந்து முடித்துச் சென்றுவிடவேண்டும் என்று கூறினர் எனலாம். இதனை,
‘‘முதல் நாள் வாழை இலை
இரண்டாம் நாள் தையல் இலை
மூன்றாம் நாள் கை யெலை(இலை)’’
என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது. விருந்து உபசரிப்பவர் மனதில் நம்மைப் பற்றிய மரியாதை இருக்கின்றபோதே அவ்விடத்திலிருந்து நாம் விடைபெற்றுக் கொண்டு வந்துவிடவேண்டும் என்ற பண்பாட்டு நடைமுறை வாழ்க்கை நெறியை இப்பழமொழி தெளிவுறுத்துகிறது.

விருந்தும் – முகமும்

விருந்தினர் வரும்போது முகம் மலர வரவேற்க வேண்டும். அம்மலர்ச்சியே நாம் விருந்தினர் மீது வைத்திருக்கும் மதிப்பை வெளிப்படுத்திவிடும். விருந்தினரும் மலர்ச்சியுடன் வருவார். முகம் மாறுபட்டு வரவேற்றால் விருந்தினர் உடன் திரும்பிச் சென்றுவிடுவார். இதனை வள்ளுவர்,
‘‘மேப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து’’
என்று எடுத்துரைக்கின்றார். விருந்தினர் நம்மை முகம்மலர வரவேற்கிறாரே என்று அங்கேயே பலநாள்கள் தங்கிவிடக் கூடாது. உரிய மதிப்புடன் விடை பெற்றுக் கொண்டு வந்துவிடவேண்டும் என்பதை,
‘‘விருந்துக்குப் போனால் தம்முகந் தனக்குத் தெரியறதுக்கு
முன்னாடியே(முன்பே) வந்துடணுமாம் (வந்துவிடவேண்டும்)’’
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
இப்பழமொழியை விளக்கும் வகையில் பின்வரும் நாட்டுப்புறக் கதையொன்று மக்களிடையே வழங்கப்பட்டு வருகின்றது.
‘‘ஒரு கிராமத்தில் புதிதாகத் திருமணம் செய்து கொண்ட ஒருவன் தனது மாமியார் வீட்டிற்கு விருந்திற்குச் செல்வதற்காகப் புறப்பட்டான். புறப்படும்போது தனது தந்தையைப் பார்த்துச் சொல்லிவிட்டுச் செல்லலாம் என்று நினைத்துத் தன் தந்தையிடம், ‘‘நான் மாமியார் வீட்டிற்கு விருந்திற்குச் செல்கிறேன் அப்பா’’ என்று கூறினான்.
தந்தையோ தன் மகனிடம், ‘‘தம்பி உன் முகம் உனக்குத் தெரியறதுக்குள் நீ வந்துவிடப்பா’’ என்று கூறி போக அனுமதி தந்தார். அவரது மகனும் சரி என்று, தந்தை கூறியதைப் புரியாது கேட்டுக் கொண்டு மாமியார் வீட்டிற்கு விருந்திற்குச் சென்றான். அவன் மனதில் அப்பா கூறிய, உன்முகம் உணக்குத் தெரிவதற்குள் நீ வந்துவிடு’’ என்று கூறினாரே அதற்கு என்ன பொருள் என்று சிந்தித்துப் பார்த்துக் கொண்டே மனைவியுடன் சென்றான். அவனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒன்றும் விளங்காமலேயே தனது மனைவியுடன் மாமியார் வீட்டைச் சென்றடைந்தான்.
மாமியார் வீட்டில் மருமகனைக் கண்டவுடன் விருந்தினைத் தடல்புடலாகச் செய்தனர். மருமகன் அவர்கள் உபசரித்த முறையைக் கண்டு அயர்ந்துபோய்விட்டான். ஒருநாளாயிற்று. இரண்டு நாளாயிற்று. நம்மை நன்கு உபசரித்துக் கொண்டே இருப்பார்கள் என்று நினைத்த மருமகனின் நினைப்பிற்கு அதிர்ச்சி காத்திருந்தது மூன்றாம் நாள். ஏனெனில் அன்றுதான் அவன்தந்தை கூறியதன் பொருளும் விளங்கியது.
இரண்டு நாள்கள் நன்கு கவனித்த மாமியார் வீட்டில் மூன்றாம் நாள் ஒரு தட்டில் சோற்றைப் போட்டுத் தண்ணீரை ஊற்றி வைத்தார்கள். அதனைக் கண்ட மருமகனுக்கு வெறுப்பு ஏற்பட்டது. இருப்பினும் வெறுப்பை அடக்கிக் கொண்டு தட்டில் ஊற்றப்பட்ட கஞ்சியைப் பார்த்தான். அதில் அவனது முகம் தெரிந்தது. அப்பொழுதுதான் அவனுக்குத் தனது தந்தை சொன்ன ‘உன்முகம் உனக்குத் தெரிவதற்கு முன்பே நீ வந்துவிடு’ என்பதன் உட்பொருள் விளங்கியது. உடனே அவன் சிறிதும் தாமதியாது தனது மனைவியை அழைத்துக் கொண்டு தனது வீட்டிற்குப் போய்ச்சேர்ந்தான். நமது மதிப்புக் குறைவதற்குள் விருந்தினர் உடன் திரும்பி வந்துவிட வேண்டும் என்ற விருந்தினர்க்குரிய பண்பாட்டு நெறியை இப்பழமொழியும் இக்கதையும் தெற்றென விளக்குகின்றன.

காலையும் – விருந்தும்

விருந்தாக வந்தவர்கள் காலையில் வந்துவிட்டால் அவர்கள் உடன் கிளம்பிவிடுவார்கள். அவர்கள் பெரும்பாலும் தங்குவது கிடையாது. ஏதேனும் ஓரிரு சந்தர்ப்பங்களிலேயே தங்குவர். இதனை,
‘‘காலையில வந்த விருந்தாளி வீடு தங்கமாட்டாக’’
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. மாலையில் வருபவர் உறுதியாகத் தங்குவர் என்பதை தெளிவுபடுத்துவதாக இப்பழமொழி அமைந்திருப்பது நோக்கத்தக்கது. இப்பழமொழி காலையில் மழை வந்தால் நீடித்து நிற்காது என்பதைக் குறிப்பிடுவதற்கும் மக்களிடையே வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
விருந்தினர்களை மதித்துப் போற்றி அகமும் முகமும் மலர விருந்தினரைப் பொற்றுதல் பண்பட்ட வாழ்வாகும். விருந்தினர்களும் தம் மதிப்புக் குறைவதற்குள் விடைபெறுதல் வேண்டும் என்பன போன்ற பண்பாட்டு நெறியை விளக்குவதாக இப்பழமொழிகள் அமைந்திலங்குகின்றன. விருந்தினைப் போற்றி தமிழ்ப் பண்பாட்டில் தடம்பதித்து வாழ்வோம்.

tags : pazhamozhi galil virundu, pazhamozhi, virundu, விருந்து, விருந்தோம்பல், பழமொழி, பழமொழிகள்,pazhamozhigal

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

  One Response to “பழமொழிகளில் விருந்தும் விருந்தோம்பலும் – முனைவர் சேதுராமன்”

  1. I like your TamilNadu style of virundombal so much.

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>