/* ]]> */
Sep 172011
 

பழமொழிகளில் வாக்கும் போக்கும்

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

மகாபாரத கர்ணன்

     சொல், நாணயம், நேர்மை, நன்மை பயக்கும் மொழிகள் ஆகியவை வழக்கில் ‘வாக்கு’ என்று வழங்கப்படுகிறது. வாங்குத் தவற மாட்டான் என்றால் சொன்ன சொல்லில் இருந்து தவறாமல் நேர்மையாக நடப்பான் என்று பொருளாகும். அது போன்று ஒருவரைப் பார்த்து இவர் ஒருவருக்கு வாக்குக் கொடுத்து விட்டார் எனவும், வாக்குத் தத்தம் செய்துவிட்டார் எனவும் குறிப்பிடுவர். இங்கு உறுதி கொடுத்துவிட்டார், சத்தியம் செய்தல் என்ற பொருள்களிலும் வாக்கு என்பது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

     பெரியவர்களைப் பார்த்து, ‘எனக்கு நீங்கள் நல் வாக்கு சொல்ல வேண்டும்’ என்று கேட்பர். அதுபோன்று, ‘தெய்வ வாக்கு’ என்றும் வழக்கில் மக்கள் குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது. இத் தொடர்களில் ‘வாக்கு’ என்பது நல்லறிவுரைகள் என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது. அதுபோல் இறக்கும்போது ஒருவர் ‘வாக்கு விட்டு விட்டு இறந்து விட்டார்’ என்றும் கூறுவர். இதில் ‘வாக்கு’ என்பது ‘சாபம்’ என்ற பொருளில் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

     வாக்கு என்பது இடத்திற்கு ஏற்றாற்போன்று பல்வேறு பொருள்களில் வழங்கப்டுவது சிந்தித்தற்குரியதாகும். இவ்வாக்கினைப் பற்றி,

     ‘‘வாக்கு உண்டாம் நல்ல மனம் உண்டாம்’’

என்று ஔவையார் விநாயகப் பெருமானை வணங்குபவர் அடையும் பயன்களில் குறிப்பிடுவது நோக்கத்தக்கது.

     ‘‘வாக்கு’’ என்பது இன்று தேர்தலில் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக மக்கள் அளிக்கும் வாக்கினைக் (Vote) குறிக்கின்றது. வாக்கு என்பதற்கு ஏற்ப போக்கு என்பதும் வழக்கில் மக்களால் வழங்கப்பட்டு வரும் சொல்லாகும். போக்கு என்பது போதல் எனும் பொருளில் வழங்கப்டுகிறது. இவ்விரு சொற்களும் பழமொழிகளில் பல்வேறு சூழல்களில் பல பொருள்களில் வழங்கப்டுகின்றன.

வாக்கு – போக்கு

     சிலருக்கு நல்லவற்றை எத்தனை முறை யார் எடுத்துக் கூறினாலும் கேட்கமாட்டார்கள். அவர்கள் என்ன செய்ய நினைத்தார்களோ? அதனையே செய்து முடிப்பர். இவர்கள் அவர்கள் செய்ய முடிவெடுத்தவற்றை எக்காரணம் கொண்டும நிறுத்த முடியாது. அவர்களது செயல் தீங்கு பயக்கக் கூடியது என்று பலமுறை அவர்களிடம் கூறினாலும் அதனை அவர்கள் கேட்கமாட்டார்கள்.

     இவர்களை வாக்கால் கெட்டவர்கள் என்றும் குறிப்பிடலாம். அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் வாமனன் வடிவில் வந்திருப்பது திருமாலே என்று மகாபலிச் சக்கரவர்தியிடம் எடுத்துக் கூறியும் கேட்காது மூன்றடி மண்ணைத் தாரை வார்த்துக் கொடுத்து அதனால் அழிந்தான்.

     மகாபாரதத்தில் வரும் மாவீரனான கர்ணனிடம், ‘‘இந்திரனே உனது கவச குண்டலங்களைக் கவர அந்தணன் வடிவில் வந்திருக்கிறான். அதனால் உனது உயிருக்கு ஊறு நேரிடும். கவச குண்டலங்களைக் கொடுக்காதே என்று சூரியக் கடவுள் பல முறை அறிவுறுத்தியும், கர்ணன் கொடுப்பதாக வாக்குக் கொடுத்துவிட்டேன் எனக் கூறிக் கவச குண்டலங்களை அறுத்துக் கழற்றிக் கொடுத்தான்’’.

     மகாபாரதப் போரில் நகாஸ்திரத்தை அர்ச்சுனனின் மார்புக்கு நேராகக் குறி வைத்து விடு என்று சல்லியன் கூறிய பொழுது அதனைக் கேளாது கர்ணன் அர்ச்சுனனின் தலையைப் பார்த்துக் குறி வைத்து அவ்வஸ்த்திரத்தை வீணடித்துத் தனது அழிவைத் தேடிக் கொண்டான்.

     குந்திக்கு கொடுத்த வாக்கினை மீறாது கர்ணன் நடந்து கொண்டதாலும், அவன் அழிவைச் சந்திக்க நேர்ந்தது. இவ்வாறு மூத்தோர் சொல்வதைக் கேளயாமல் இருப்பவர்களை அவர்களது போக்கிலேயே சென்று திருத்துதல் வேண்டும். அதிலும் அவர்கள் திருந்தாவிடில் அழிவையே தேடிக் கொள்வர். இத்தகைய கருத்துக்களை,

     ‘‘வாக்குல கெட்ட மாட்டை போக்குல விட்டுத் திருப்பு’’

என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. வாக்கு – சத்தியம், பிறர் சொல்லுகின்ற நல்லுரைகள் என்ற பொருளில் இப்பழமொழியில் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. வயதில் மூத்தோர், அனுபவம் வாய்ந்தோர் கூறுவதைக் கேட்டு நடத்தல் வேண்டும் என்பதை இப்பழமொழி வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.

ஆசிரியர் பணி, காவல் பணி

     ஆசிரியராக ஆவதற்கு நன்கு கல்வி கற்றிருக்க வேண்டும். அவ்வாறு கல்வி கற்றவரால்தான் சிறந்த ஆசிரியராக இருக்க இயலும். இல்லையெனில் அவரால் ஆசிரியப்பணியில் நற்பெயர் எடுக்க இயலாது. நன்னூலாரும்,

‘‘கலைபயில் தெளிவு, கட்டுரை வன்மை’’

என்று ஆசிரியர் கல்வி கேள்விகளில் மேன்மையுற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றார்.

     அதுபோன்று மனிதர்கள் எப்படிப்பட்டவர், அவர்களின்இயல்பு என்ன? என்று மனிதர்களின் போக்குகள் பற்றி காவலர் பணியில் இருப்போர்அறிந்திருக்க வேண்டும். அத்தகையோரால் தான் காவற் பணி சிறப்படையும். இத்தகைய கருத்துக்களை,

      ‘‘வாக்குக் கற்றவனுக்கு வாத்தியார் வேலை

      போக்குக் கற்றவனுக்குப் போலீஸ் வேலை’’

என்ற பழமொழித் தொடர் தெளிவுறுத்துகின்றது.

சித்தன் போக்கு

     ‘சித்தன்’ என்பவன் யார்? அவரை ஏன் அவ்வாறு அழைக்கின்றனர்? அதற்குரிய காரணம் என்ன? எனச் சித்தன் பற்றிய வினாக்கள் நம் உள்ளத்துள் எழுந்த வண்ணம் உள்ளன. ‘சித்தரை’ ‘சித்தன்’ என்று குறிப்பிடுவர். சித்தன் என்பதில் உள்ள ‘அன்’ விகுதிக்குப் பதிலாக உயர்வு சிறப்புப் பன்மை விகுதியான ‘அர்’ விகுதியை இட்டு ‘சித்தர்’ என்று வழக்கில் மக்கள் வழங்கி வருகின்றனர்.

     சித்தம் – மனம், சித்தத்தை – மனதை அடக்கியவரை சித்தர் என்கின்றனர். அவர்கிளன் போக்கம், அவர்களின் வாக்கம் என்றும் யாராலும் புரிந்து கொள்ளம் நிலையில் இராது. புதிராகவே இருக்கம். சிவனின் பால் சித்தத்தை வைத்து சிவனை எண்ணித் திரிபவர்கள் சித்தர்கள்.

     இச்சிவபெருமான் பிறவா யாக்கைப் பெரியோனாகவும், அனைத்துத் தெய்வங்களுள்ளும் முதன்மையான மூலமாகவும் விளங்கிக்ன்றார். இச்சிவனின் போக்கையும், வரவையும் யாராலும் கணித்தறிய முடியாது. அதனால்தான்,

     ‘‘போக்கும் வரவும் இலாப் புண்ணியனே’’

என்று திருவாசகத்தில் மாணிக்கவாசகர் குறிப்பிடுகின்றார். இச்சிவபெருமானை ஒத்தவர்கள் சித்தர்கள். இச்சித்தர்கள் போக்கினை (செயல்பாட்டினை) யாராலும் ணர முடியாது. இதனை,

      ‘‘சித்தன் போக்கு சிவன் போக்கு’’

என்ற பழமொழி தெளிவுறுத்துகின்றது.  போக்கு என்பது ஒருவரது செயல்பாட்டினைக் குறிக்கும். சித்தர்களின் செயல்பாட்டினை இப்பழமொழி புலப்படுத்துவதாக அமைந்துள்ளது.

     வாக்கும் போக்கும் சீராக இருந்தால் மட்டுமே வாழ்வு சிறக்கம். வாக்கும் பொக்கும் மனிதனின் முன்னேற்றத்தை நிர்ணயிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிக்னறது என்பன போன்ற வாழ்வியல் நெறிகளை பழமொழிகள் நன்கு எடுத்துரைத்து நாம் நன்கு வாழ வழிகாட்டுகின்றன.

Tags : Article on old classical tamil literature sayings and quotes from famous tamil literature with anecdotes from tamil classical books | pazhamozhi | palamozhi | tamil pazhamozhi | tamil sayings |  தமிழ் பழமொழி | பழமொழி | கர்ணன் | மகாபாரதம்

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>