<
நீரஜாட்சீ பெயருக்கு ஏற்றார் போல ஒரு தேவதையாக ,தெய்வமாக… கருப்பி என்று தந்தையாலேயே அழைக்கப்படும் கதாநாயகியால் ஆராதிக்கப்படுகிறாள் அவளின் தாய் . அழகான உடல் வாகும் நீள மயிரும் மட்டும் நம் சமூகத்தில் ஒரு பெண்ணை அழகியாக ஒப்புக்கொள்ள போதுவதில்லையே . தகதகவெனும் தங்க நிறம் வேண்டும் நமக்கு . இந்த சமூக நிலைப்பாடு பெண்களை எப்படி, எத்தனை தூரம் பாதிக்கிறது என்பதை அம்பை தெளிவு செய்திருக்கும் கதை தான் “அம்மா ஒரு கொலை செய்தாள் “.
நிறம் மட்டாக இருக்கும் இந்தச் சிறுமியை கொஞ்சி, அன்பு செய்து செல்லமாக வளர்க்கிறாள் அம்மா . யார் ஏது சொன்னாலும் வைதாலும் அம்மா அதைசரி செய்வாள் , தன்னை வாழ்வின் துயரங்களில் இருந்து காப்பாள் என்று திடமாக நம்புகிறாள் சிறுமி. வெள்ளை வெளேரென்ற அழகு அம்மா தன் மாநிற மகள், “அம்மா உன் நிறம் எனக்கு இல்லையே” என்று ஏங்கும் போதெல்லாம் அவளின் உடல் வாகையும் அடர்ந்த தலை மயிரையும் சிலாகித்துப் பேசி ஏக்கம் மறக்கச் செய்கிறாள். தன் தங்கை மகளுக்குத் திருமண ஏற்பாடு நடக்க, அம்மா மக்களை அப்பாவிடம் விட்டு விட்டு ஊருக்குப் போகிறாள்.
பருவம் அடைந்து விடுகிறாள் சிறுமி. ஏதோ நிகழக்கூடாத சம்பவம் ஒன்று தனக்கு நேர்ந்து விட்டதாக எண்ணி அஞ்சி, நடுங்குகிறாள். அப்பா மற்றும் சகோதரியின் அண்மை ஒரு சிறிதும் ஆறுதல் அளிக்கவில்லை அவளுக்கு . அம்மா எப்போது வருவாள் தனக்கு நேர்ந்திருக்கும் இந்த துயரம் போக்குவாள்..”இதுவும் அழகு தானடி உனக்கு” என்று சொல்வாள் என ஏங்கிக்கிடக்கிறாள்.
தங்கை மகளை, மாப்பிள்ளைக்காரன் கருப்பு என்று நிராகரித்துவிட்டானே என்ற ஆதங்கத்தோடே வீடு வந்து சேரும் அம்மா , ஆவலாய் எதிர்நோக்கிக் காத்திருக்கும் மகளைப் பார்த்து ” உனக்கு இந்த இழவுக்கு என்னடீ அவசரம் ? இது வேறே இனிமே ஒரு பாரம் .” என்று ஈரமில்லாச் சொற்களை உதிர்க்க அவள் மீதிருந்த தேவ ஸ்வரூபம் உதிர்ந்து வெறும் மனிதப் பெண்ணாகத் தெரிகிறாள் மகளுக்கு. அம்மா கொலை செய்தது மகளின் ஆன்ம நம்பிக்கையை மட்டும் அல்ல …தன்னில் மகள் கண்டு வந்த தேவ ரூபத்தையும் தான்.
இம்மாதிரியான கொலைகள் உலகெங்கும் தாய்மார்களால் செய்யப்பட்டு வந்திருக்கின்றன என்பது தான் எத்தனை அதிர்சிகரமான துயர்தோய்ந்த செய்தி?
சீனாவில் கடைபிடிக்கப்பட்டு வந்தது ஃபூட்பைன்டிங் எனப்படும் கால் பாதங்களைக் கட்டி வைக்கும் முறை .சீனமுதுமொழி ஒன்று;
” உன் மகனின் மேல் உனக்கு அக்கறையிருந்தால், அவனுடைய கல்வியைச் சுலபமாக்காதே. உன் மகளின் மேல் உனக்கு அக்கறையிருந்தால், பாதங்களைக் கட்டுவதைச் (foot binding) சுலபமாக்காதே”, என்கிறது.
ஆணின் இச்சையத் தூண்டுவதாகக் கருதப்பட்ட உறுப்புகளில் ஒன்றாக தாமரைப் பாதங்களை கருதி வந்தனர் ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய சீனர்கள் .
இளஞ்சிறுமியரின் பாதங்களைக் கட்டி வைக்கும் இந்த சடங்கை ஒரு விழாவாகவே கொண்டாடி வந்திருக்கின்றனர். சிறுமியின் பாதங்கள் மூலிகைகள் கலந்த நீரில் அமிழ்த்தி வைக்கப்படும். நகங்களை வெட்டி, பிறகு கால் கட்டை விரலை மட்டும் விட்டு விட்டு மற்ற நான்கு விரல்களையும் உட்புறமாக வளைத்து ,மிக இறுக்கமான துணி கொண்டு கட்டிவிடுவர். விளைவாக பாத எலும்பு உடைந்து (புண் உண்டாகி, அழுகல் ஏற்பட்டு விடுவதும் உண்டாம்) வளர வழியில்லாமல் தானாகவே மிகச்சிறியவையாகப் போகும் பாதங்கள். தினமுமோ ..இரு தினங்களுக்கு ஒரு முறையோ.. கட்டு பிரிக்கப்பட்டு மாற்றிக்கட்டப்படும்.
இதை மகளுக்கு செய்து வந்தவள் அவளுடைய தாயே தான். எத்தனை சிறிய பாதங்களோ அத்தனை அழகியாகவும் , அந்தஸ்த்து மிக்கவளாகவும் கருத்தப்பட்டாள் பெண். கொடூரமான இந்த வழக்கத்தினால் அவளுக்கு உடல் பாரம் முழுவதையும் தன் சின்னஞ்சிறு பாதங்களில் சமன்செய்ய வேண்டிய கட்டாயம் உண்டானது. விளைவாக உடல் எடை கூடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கும். தத்தித்தத்தி நடக்கப்பழகிக்கொண்டாள் .
ஆணுக்கு இதனால் உண்டான அணுகூலங்கள் ஏராளம்.
அவற்றில் ஒன்று மட்டும் தான் பாலுறவுக்கிளர்ச்சி..
மற்ற படி உள்நோக்கம்… அவள் எந்தவிதத்திலும் சுதந்திரமாக இருப்பதைத் தடை செய்து விட்ட திருப்தி தான்.
உடைந்து, வீட்டினுள் மட்டுமே நடக்க உபயோகப்படும் பாதங்களோடு அவள் பொருள் ஈட்டவோ, கணவன் கொடுமைப்படுத்தினால் ஓடவோ இயலுமா? 1911 இல் தான் இந்த வழக்கத்தை ஒழிக்க சட்டம் இயற்றப்பட்டது. இன்னமும் கட்டப்பட்டு , மரணித்த பாதங்களோடான பெண்கள் சீனாவில் உயிரோடு இருக்கின்றனர்.
இந்தக் கொடூரம் வழக்கொழிந்து விட்டது ஆறுதலான செய்தி என்றாலும் இன்னமும் வழக்கத்தில் இருக்கும் மற்றொரு கொடுமை காமரூனில் நடைமுறையில் உள்ள பிரெஸ்ட் ஐயர்னிங்.(breast ironing)இதுவும் தாய்மார் தம் பெண் மக்களுக்கு செய்து வரும் கொடுமை தான்.
மார்பகங்கள் வளரும் பிராயத்தில் இருக்கும் சிறுமியரின் அன்னையர் தினந்தோறும் சூடு உள்வாங்கக்கூடிய கற்களையோ, இரும்புப் பொருட்களையோ அடுப்பில் இட்டு அனலேற்றி மகளின் மார்பகங்களின் மீது ஆமாம் ….தம் மகளின் மார்பின் மீது வைத்து அவற்றின் வளர்ச்சியைத் தடை செய்துவிடத்துடிக்கின்றனர். இப்படி செய்வதால் மார்பகம் தீய்ந்து, உருக்குலைந்து பெண்கள் படும் துயரம் வார்த்தைகளால் விவரிக்க இயலாது..
இளகிய, மென்மையான மனம் கொண்டவர்கள் கீழ்காணும் விடியோப் பதிவை தயவு செய்து பார்க்க வேண்டாம்…
இந்தப் பழக்கத்திற்கான காரணமாகச் சொல்லப்படுவது ஆணின் வெறியிலிருந்து தம் பெண்களைக் காக்க வேண்டியிருக்கின்றது என்பது தான் . திரட்சியான மார்பகம் ஆணைக் கவரும் என்பதால் ..
அவனிடம் இருந்து தம் பெண் மக்களைக் காக்க ,
குடும்ப கவுரவம் காப்பாற்றப்பட,
பதின் பருவத்திலேயே பெண்கள் கர்ப்பம் அடைந்து விடாமல் காத்துக்கொள்ள என காரணங்கள் கற்பிக்கப்படுகின்றன. கற்பழிப்பு விகிதாச்சாரம் அதிகமாக உள்ள ஒரு பகுதி காமெரூன் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய செய்தி..
ஆண்கள் மட்டுமேவா ஒரு சமூகமாக இருக்க முடியும்?
அவனவன் வீட்டில் பெண்கள் இருக்கத்தானே இருப்பார்கள்?
சீனாவில் திருமணம் ஆகவேண்டும் என்பதற்காகவும் ,ஆணுக்கு அழகாகத் தெரிய வேண்டும் என்பதற்காகவும்..
காமரூனில் ஆண் கண்ணில் அழகாய்த் தெரிந்து விடலாகாது என்பதற்காக ..
இங்கு சிவப்புத்தோல் மோகம்…
மொத்தத்தில் ஒரு பெண்ணின் உறுப்புகள் இயற்கையாக எப்படி இருக்கிறதோ அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் ஆணிடம் முற்றிலும் இல்லை. அவளின் ஒவ்வொரு உறுப்பும் வெவ்வேறு வகைகளில் குறைக்கவும் கூட்டவும் பட்டுவந்துள்ளது.
கல்வியும் ,சீரான சமுதாய விழிப்புணர்வும் மட்டுமே அம்மாக்கள், தாம் பெற்ற மக்களுக்கு செய்யும் கொடுமைகளுக்குத் தீர்வு .
சரி நமக்குள் பேசிக்கொள்வோம்—-கொலையாளி மட்டுமாதானா தண்டிக்கப்பட வேண்டியது?கொலை செய்யத் தூண்டியவர்களை என்ன செய்யலாம்?
..ஷஹி..
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments