/* ]]> */
Dec 052012
 

நிழல் சொல்லும் நிஜம் – கட்டுரை – செந்தமிழன்

 

nizhal tamil essay on shadow spirituality  நிழல்

nizhal tamil essay on shadow spirituality நிழல்

நம்முள்ளிருந்து உரித்தெடுக்கப்பட்ட உருவமாய் மண்ணில் வரையப்பட்டிருக்கும் நிழல், உண்மையில் வெறும் வடிவமல்ல. அது ஒரு மனிதனின் மறைக்கப்பட்ட உண்மைகளின் அச்சு. நாம் விலகி ஓட நினைக்கும் பரிமானம். நம் மனதிற்குள் வாழும் பல மனிதர்களின் கோர முகம். நிழல் ஒரு வெறுமை, ஒரு ஒளியின்மை. நிழல் கற்பிப்பதெல்லாம் நம்மை நாமாகவே ஏற்றுக்கொள்ள; உண்மையிலிருந்து விலகி ஓடாமல், உள்ளுக்குள் அதை ஒடுக்காமல் அனுமதிக்க. நிழல் நம் எதிரி இல்லை, அது உண்மைகளின் பிரதிபலிப்பு. உள்மனதின் உரைகல்.

நிழல் தவிர, நாம் சொந்தம் என்று கொண்டாடும் எதுவுமே நம் சொந்தமில்லை. நாம் பிறக்கையில் நம்முடனே பிறந்து, இறக்கையில் மறைந்து போகும் இந்த நிழல் தான் நாம் உணராத நம் சொந்தம். யாராலும் பிரிக்க முடியாத, அழிக்க முடியாத, துரத்த முடியாத ஒரே சொந்தம். நம்மால் ஒதுக்கப்பட்டாலும் என்றும் நம்மை பிரிவதில்லை. எந்த உறவுக்கு நடுவிலும் ஒரு எல்லை வேண்டும் என்று ஒரு விதி உண்டு. நிழலுக்கும் அது புரிந்தே இருக்கிறது. ஒளியில்லா நேரங்களில் நம் தனிமைக்கு வழிவிடுகிறது. நிழல் நம் வழிகாட்டி, நம் உறுதுணை. மனம் தளராமல் வாழ்க்கையை எதிர்க்கொள்ள நம்மால் உருவான உதாரணம். இன்ப துன்பங்களை ஒருங்கே அனுபவித்து மீண்டும் உயித்தெழ செய்யும் அபூர்வம்.

நிழல் ஒரு நாளின் வெவ்வேறு நேரங்களில் நாம் பெற்றிருக்கும் மனநிலையை பிரதிபலிக்கிறது. வெயில் குறைந்திருக்கும் காலையும் மாலையும் புத்துணர்வுடன் இருக்கும் நம்மை போலவே வளர்ந்து நீண்டிருக்கும். பகலில் அயர்ந்து சோர்ந்திருக்கும் நம்மை போலவே குறுகி போயிருக்கும். வெயிலில் தாகத்தை தணிக்க நாம் கால் வழியே அருந்தும் நீராகவே உணர்கிறேன் நிழலை. நாம் குடித்த மிச்சம் தான் நிழலாய் நிலத்தில் கிடக்கிறது போலும். அதனால் தான் சற்று சிறுத்து போகிறதென்றே தோன்றுகிறது. இரவென்பது பூமியின் நிழல். அதன் நிழலில் தான் நாம் அனைவரும் நம் நிழலை விழுங்கி உறங்குகிறோம். ஆனால்  விடியலில் நம்முன்னே எழுந்து நமக்காக காத்திருக்கிறது நிழல். பகலில் வழிகாட்டும் தந்தையாகவும், மாலையில் தோள் சேரும் தோழனாகவும், இரவில் நம்முள் உறங்கும் குழந்தையாகவும் துணை நிற்கிறது நிழல். இரவில் ஒரு சிறு விளக்கின் முன்னே நமக்கு சேவை செய்ய காத்திருக்கும் பூதம் போல் வளர்ந்து நின்று வணங்குகிறது. என்றாவது ஒரு காலை நாம் எழுகையில் நம்மைவிட்டு இந்நிழல் பிரிந்திருந்தால், அன்று நாம் இறந்திருப்போம்.

நம்மை படைத்த இயற்கையுடன், நாம் வாழும் இந்த மண்ணுடன் நம்மைவிட அதீத உறவு கொண்டிருப்பது நிழல். நாம் வாடகை தாயாக இருக்க, சூரியனுக்கும் பூமிக்கும் பிறந்த சிசுவே நிழல். அது மொத்த பூமியையும் கவர்ந்திருக்கும் போர்வை. இயற்கை தினமும் நிழல்களை அழித்து அழித்து வரைந்து கொண்டே இருக்கிறது, ஒரு ஓவியனை போல. இயற்கையின் நிழல் புத்தகத்தில் நமது பக்கங்களும் இங்கு வாழ்ந்து மறைந்த எண்ணற்ற உயிர்களின் பக்கங்களுடன் சேர்ந்திருக்கிறது. நாம் எழுந்து நிற்கையில் இந்த மண்ணுக்கும் கதிரவனுக்கும் நடுவில் நிற்கிறோம் என்பதை எடுத்துக்காட்டுவதே நிழல். இந்த உயிருக்கும், உடலுக்கும், நிழலுக்கும் நாம் மட்டுமே பொறுப்பல்ல. சூரியனும் பூமியும் நம் மூலம் நிழலை உருவாக்குவதை போல நம்மை உருவாக்கியதும் இந்த இயற்கை தான். அது ஒரு குறியீடு. நாம் என்றுமே இயற்கையால் ஆட்கொள்ளப்பட்டுள்ளோம் என்பதர்கான குறியீடு. நாம் நாமாகவும் பூமி பூமியாகவும் அதன் மேல் நம் வாழ்வையும் காட்டும் குறியீடு. ஒளிக்கு இணையான வேகத்துடன் எதுவுமே செல்ல முடியாது என்கிறது அறிவியல். ஆனால் நிழலால் முடியும் என்பது சாமானியன் கூட அறிந்த உண்மை.

என் உருவத்தையும், என் அசைவுகளையும் என்னுடன் சேர்ந்து தூக்கி சுமக்கிறது என் நிழல். நிழல் தன் உருவத்தை மாற்றிக்கொண்டே இருக்கிறது. சில சமயம் முழுவதுமாக மறைந்தும் விடுகிறது. ஆனால் மீண்டும் எங்கிருந்தோ பிறக்கிறது. அதற்கு நிலையான உருவமில்லை, குரலில்லை, வண்ணமுமில்லை. ஆனால் உலகின் எண்ணற்ற பரிமாணங்களையும் ,ஓசைகளையும், வண்ணங்களையும் தன் இருளுக்குள் ஒளித்து வைத்துள்ளது. பல தருணங்களில் என் தோழனாகவும், ஆசானாகவும், சில சமயங்களில் எதிரியாகவும் கூட துணை நிற்பது நிழல். என்னை விட ஒரு பெரிய பொருள் எனக்கும் சூரியனுக்கும் இடையில்  வரும்போதெல்லாம் எனக்கு மூச்சு முட்டுகிறது. அதன் நிழல் என்னை மறைக்கிறது. என் நிழல் அங்கே தொலைந்து போகிறது. மறுபடி அதன் வருகை எனக்கு இயற்கையின் இருப்பை நினைவூட்டுகிறது.

குழந்தையாய் இருந்த பொழுது நிழலுடன் நாம் விளையாடுகிறோம். அது ஒரு பொம்மையாக தோன்றுகிறது. நிழலை துரத்திக்கொண்டே இருக்கிறோம். நாம் அதை பிடிக்க முனையும் போதெல்லாம் நம்மை விட்டு விலகி செல்கிறது. ஆனால் நாம் வளர்ந்தபின், நம்  புரிதலுக்கு பின் அது நம்மை விட்டு நிழல் பிரிவதே இல்லை. தோளோடு தோள் சேர்த்து நடமாடுகிறது. நம்முடனே வாழ்கிறது. மரணத்தின் பொருள் புரிந்த நாளிலிருந்தே அதன் நிழல் நம் மேல் தோய்கிறது. மரணத்தின் நிழலே வாழ்க்கை. மரணத்தில் நம் உடல் மட்டுமே அழிகிறது, ஆனால் நம் வாழ்வின் நிழல் இங்கேயே தங்கிவிடுகிறது. நாம் மறைந்த பின்னும் வாழ்வது, இந்த மண்ணில் நாம் வரைந்து சென்ற நிழல்கள் மட்டுமே.

- செந்தமிழன்

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>