/* ]]> */
Dec 302012
 

“அனி…பட்ட கஷ்டம் எல்லாம் தீர போகுது கையில் பிரிண்ட் அவுட் படபடக்க வீட்டுக்குள் நுழைந்தான் முரளி . கையில் வாங்கி பார்த்தவளுக்கோ கண்ணில் இருந்து கரகரவென நீர் சொரிந்தது.இதற்கு தானா இவ்ளோ கஷ்டம் ?ஏன் எங்களை இவ்ளோ சோதிக்கிறாய் ஆண்டவா?என்று பலமுறை முறையிட்டதன் பலனோ ? நேற்றிரவு கூட மொட்டைமாடியில் டீ குடிக்கும் போது எங்கோ தூரமாய் நட்சத்திரங்களுக்கு நடுவே புள்ளியாய் தெரிந்த விமானத்தை காட்டி “என் தேவதையை  கூடிய சீக்கிரம் அதில் ஏற்றி கொண்டு பறக்க போகிறேன்” என்று முரளி சொன்னதற்கு, ஆமா வானத்துல இருக்குற மொத்த நட்சத்திரத்தையும் காட்டிட்டீங்க. இப்படியே வெறும் கையில முழம் போடுறத விட்டுட்டு மொதல்ல இங்க இருக்குற மெரினா பீச்சுக்கு டவுன் பஸ்ல கூடி கிட்டு போற வழிய பாருங்க .அப்புறம் யோசிக்கலாம் மத்ததெல்லாம் …..என்றேனே. அவனை நோக்கி திரும்பி “இது அன்னிக்கு டெய்லர்ஸ் ரோட்ல இன்டெர்வியு போயிட்டு வந்தீங்களே அதுவா? அவன் “ம்ம்” என்றான்.

அன்று இன்டெர்வியு போனது நினைவில் வந்தது. அன்று கூட போகும் முன்,இருக்கும் சில்லறை காசை எல்லாம் பொறுக்கி சேர்க்க அது போய் வர பஸ் செலவுக்கு மட்டுமே சேர்ந்தது அங்கே சென்ற பின் செலக்ட் ஆனதால், பாஸ்போர்ட் மற்றும் சான்றிதழ்களின் போட்டோகாபி கேட்கவே மிச்ச சொச்ச சில்லரையும் போய் , டெய்லர்ஸ் ரோட்ல இருந்து நடந்தே வீட்டுக்கு வந்தது வீண் போகவில்லை.

“எப்போ போகணும் ? “அனிதா. “நவம்பர் 26 “

பதில்  தந்தான் முரளி. இன்னிக்கு 23 , 26 னா இன்னும் 3 நாள்ல..” இன்னும் 3 நாள் தான் . மூணே முணு நாள் தானா ? என்று இவள் யோசிக்கும் போதே…..

ஆமாம். நீங்கள் நினைப்பது சரி தான் . இவர்கள் இருவரும் வீட்டை பிரிந்து வந்த காதல் ஜோடி தான். கல்லூரி காதல், கல்யாணத்தில் முடிந்தது .அனிதாவை திருமணம் செய்யும் வரை முரளி வேலையில் இருந்தவன் தான். வெளிநாட்டில் கை நிறைய சம்பாதித்து மாதம்  தவறாமல் வீட்டுக்கு பணம் அனுப்பியவன் தான். என்ன செய்வது ? அனிதாவை கை பிடித்த நேரம் , வேலை காலி ஆகி விட்டது . சுற்றி இருந்த சுற்றமும், நட்பும் கூட காணாமல் போய் விட்டது. அதன் பின் கிடைத்த சிறுசிறு வேலைக்கும் படிப்புக்கும்  எந்த சம்பந்தம் இல்லாமல்  போக முரளியின் மனம் அந்த வேலையில்   ஒட்ட மறுத்தது .எனவே வேறு வேலை தேடி கொண்டே இருக்கிறான் . அதே நேரம் அன்றாட தேவைகளுக்காய் அவன் ஆருயிர் நண்பனை நம்பி இருந்தான். நண்பனோ சுமாரான  மாத சம்பளத்தில் ஒரு கம்பனியில் வேலை பார்த்து வந்தவன் . சில சமயங்களில் அவனிடமும் பணம் இல்லாமல் போவதுண்டு.

அனிதாவுக்கோ அவள் பிறந்த வீட்டில் போய் உதவி கேட்க  தன்மானம் இடம் கொடுக்கவில்லை. தன் கண்முன்னே கணவன்  கஷ்டபடுவதையும் பார்க்க  முடியவில்லை. ஒருநாள் காய்கறி  கடையில் சந்தித்த பெண்மணி  , நட்பாகி , பின் இவளிடம் தன் குழந்தைகளுக்கு டியூஷன் சொல்லி தர கேட்டாள். இவளும் கணவனிடம் சொல்லி விட்டு அவர்கள் வீட்டுக்கு போய் டியூஷன் எடுக்க ஆரம்பித்தாள். அந்த அம்மாவே நாளாகாக  இவளுக்காக , அந்த தெருவில் உள்ள , இன்னும் ஓரிரண்டு குழந்தைகளை சேர்த்து விட , வீட்டு வாடகைக்கான பணம் தேறியது. ஒருநாள் புதிதாக ஒரு குழந்தையை சேர்க்க வந்த பெண்மணி , தான் துணி வியாபாரம் செய்வதாகவும் , தானே இவளுக்கு உதவி செய்வதாகவும் கூறவே , தன் கணவனிடம் கேட்டு சொல்வதாக சொல்லி விட்டு வந்தாள். அன்றிரவு ” முரளி, நான்  புடவை , சுடிதார் சேல்ஸ் பண்ணட்டுமா?”.முரளி எப்படி? என்றான். இன்னிக்கு  டியூஷன்ல  ஒரு புது பொண்ணு வந்து சேர்ந்தது . அவங்க அம்மா காஞ்சிபுரம் போய் கூட்டுறவு   சங்கத்துல இருந்து பட்டு புடவை எடுத்து வந்து விற்கிறாங்களாம்  அப்புறம் வண்ணார பேட்டை”சௌந்தர்” இவங்களுக்கு ஹோல் சேல் விலைல  கடன் வசதியோட சுடி க்ளோத் குடுப்பானாம். அவங்க தான் எனக்கும்  ஹெல்ப் பண்ணுறதா  சொல்றாங்க .

முரளி கண் கலங்கி இருந்தது ” நீ வேற என்ன கொல்லாதே , நான் ஏற்கனவே செத்து நடை பொணமா தான் வாழ்ந்து கிட்டு இருக்கேன் . உன்ன கட்டின நாள் முதலா உனக்கு கஷ்டத்த தவிர வேற எதையுமே காட்டல. இப்போ கூட உன் டியூஷன் பணத்துல தான் வாடகை, வீட்டு செலவு  எல்லாம் ஓடுது. அதுவே எனக்கு கஷ்டமா இருக்கு. நீ வேற பத்தாததுக்கு புடவை யாவரம்  அது இதுன்னு கிட்டு என்ன கேவலப்படுத்தாத . நான் மற்ற செலவையெல்லாம் என் ப்ரண்ட்  கிட்டே சொல்லி பாத்துப்பேன் ” என்றான்.

அனிதா,”இல்லங்க,இது கொஞ்ச நாள் தானே,உங்களுக்கு நல்ல வேலை கிடச்ச உடனே விட்டுட போறேன். அதும் இல்லாம அடிக்கடி  ஒரே ப்ரண்ட தொந்திரவு பண்ணுறதும்  அவ்ளோ நல்ல இல்லல. இப்ப  என்ன நம்ப பொய் சொல்றமா? திருடுறோமா ? இதும் ஒரு தொழில் தானே? இதுல என்ன கேவலம்  ? படிச்ச படிப்புக்கு வேல கிடைச்சதும் இத விட்டுட்டு அத பாக்க போறோம். உங்க பிரெண்ட்  பண்ற ஹெல்ப் நான் உங்களுக்கு பண்ண கூடாதா? என்று எப்படியோ அவனை சமாதானம் செய்து விட்டாள் .அரைகுறை மனதாக அவளின் பிடிவாதத்தை ஜெயிக்க விட்டான் முரளி .

எப்படியோ  ஆரம்பித்த அவர்கள் வாழ்கை இப்படி தான்  ஓடி கொண்டு இருந்தது. பணம்  . பலபேர் வாழ்கையை புரட்டி போடும் என்று  கேள்வி பட்டிருந்தார்கள் .ஆனால் இப்போதோ அது சுழற்றி சுழற்றி போடுவதை கண் கூடாய்  கண்டு வாழ்க்கைப் பாடம் படித்து கொண்டு இருந்தார்கள் . கல்லூரிக்கும் , கல்யாணத்துக்கும் உள்ள 6  வித்தியாசங்களை கண்டு பிடித்து மருகி கொண்டு இருந்தார்கள் . இவர்களின் மனநிலையை மறந்து சற்றே வெளியே வர உதவியது நண்பன் வாங்கி கொடுத்த டிவி , பாதி நாள் பால்காரனுக்கும், மீதி நாள் கேபிள்காரனுக்கும் , மற்ற நாள் முனைகடை மளிகை ஸ்டோருக்கும் பாக்கி சொல்லி சொல்லி , ருசியை மறந்து பசிக்காக பாதி வயிறாய் கழுவி கொண்டு இருந்தார்கள் .எந்த உறவினரும் இவர்கள் வீட்டுக்கு  வருவதும் இல்லை, போவதும் இல்லை. அவ்வளவு ஏன்? நாலு  தெரு தள்ளி இருக்கும் அம்மாவை கூட முரளி ஒருநாள் குமரன் ஸ்டோர் வாசலில் , கடைபையனோடு தள்ளுவண்டியில் அரிசி மூட்டை, பருப்பு , பாயச சாமான் வகையோடு பார்த்தான். பாயச சாமான் பார்த்ததும் யாரோ சொந்தகாரர்கள் ஊரில் இருந்து வந்து இருப்பது புரிந்தது . அன்னையோ பார்த்தும் பார்க்காத மாதிரி கிளம்பி விட்டாள். இவனுக்கோ அழுகை முட்டி கொண்டு வந்தது , வெளிநாடில் இருக்கும் போது, மாதம் பிறந்தால்  சம்பள பணத்தை மொத்தமாய் அனுப்புவேனே அம்மா  ? இன்று உன் மகன்  பாதி நாள் பட்டினி  கிடக்கும் போது எப்படி அம்மா உன்னால்  இப்படி போக முடிகிறது ? அப்படி  நான் செய்த குற்றம் தான் என்ன  ? வீட்டிற்கு   வந்தவன் இதை அனிதாவிடம் சொல்லி அழ வேண்டும் போல் தோன்றியது .வேண்டாம் . இவள் பங்குக்கு அம்மாவை திட்டுவாள் . என்ன தான் ஆனாலும் பெத்த  தாய் ஆயிற்றே. அனிதாவும் பாவம் தான் ,வந்த 3  மாதத்தில் பொறுப்புகளை அவள் தலையில் போட்டாகி விட்டது. அவளுக்கு அவள் கவலை. மனைவியே ஆனாலும்  அடுத்தவர் பேசினால் மனம் வலிக்கத் தான் செய்கிறது. ஆயிரம் தான்  ஆனாலும் அம்மா  ஆயிற்றே . என்ன கொடுமை . பெத்த மனம் பித்து , புள்ள மனம் கல்லு என்னும் பழமொழி, உண்மையிலேயே பழம் மொழியாக தான் ஆகி விட்டது. ஏனெனில் இங்கே பெத்த மனம் தான் கல்லாக இருக்கிறதே.

இப்படியாக வாழ்க்கையை ஓட்டி கொண்டு இருந்த நேரத்தில் தான் , முரளி இன்டெர்வியு செலக்ட் ஆனான் . அனிதாவுக்கு தலை கால் புரியவில்லை , சந்தோஷத்தில் கால் தரையில் படாமல் மிதந்தாள் . நான் பட்ட கஷ்டம் எல்லாம் தீர போகுது . நாளை காலை சிக்கிரமே கிளம்பி சேலுக்கு போய்டணும். இன்னும் இரண்டு , மூணு நாளைக்கு , கொஞ்சம் அலைச்சல் பாக்காம சுத்தினா, கிடைக்குற காசுல, 2 செட் புது பாண்ட், ஷர்ட் வங்கி கொடுக்கணும். புது வேலை, அதும் வெளிநாட்டில். இப்போ போனா இனி எப்போ லீவ் கிடைக்குமோ ?அப்புறம் , கல்யாணத்துக்கு பின்  நான்வெஜ் சமைத்துப் போட்டதே இல்லை. இனி இருக்கும் 2 நாட்களும் கணவனுக்கு பிடித்ததாய் சமைத்துப் போட வேண்டும் .நிம்மதியாக தூங்க போனாள் அனிதா

.தூங்கும் அவளையே பார்த்து கொண்டு இருந்த முரளி … கல்யாணம் ஆனா நாள் முதலா இவள் ஒரு சினிமா கூட்டி கொண்டு போ என்றோ, பீச் போலாமா ? என்றோ , இவ்வளவு ஏன் ஒரு முழம் பூ கூட வாங்கி தாங்க என்றோ கேட்டதில்லை. மாறாக என்னை தன் குழந்தை போல் தாங்கினாள்  . இவளுக்கு நான் என்ன செய்து விட்டேன். இனியாவது இவளை ஒரு பூ போல தாங்க வேண்டும் மனதுக்குள் நினைத்து கொண்டான் .

காலை  சீக்கிரமே எழுந்து பரபரக்க ஆரம்பித்தாள் அனிதா . அவள் முகத்தில், புது தெளிவையும் , வெகு நாட்களுக்கு பின் சந்தோசத்தையும் பார்த்த முரளிக்கும் சந்தோசமாய் இருந்தது . சேலுக்கு கிளம்பிய அனிதா அவள் நினைத்ததை விட அதிக ஏரியா சுற்றவும் முடிந்தது, விற்கவும் முடிந்தது. மகிழ்ச்சியும் , நம்பிக்கையும் தந்த உற்சாகம் உடம்பிலும் , மனதிலும் தொற்றி கொண்டதாலா ?விற்பனையை முடித்து விட்டு புரசைவாக்கம் போய், கணவனுக்கு தேவையான டவல் , பாண்ட், ஷர்ட் இதர வகையறாக்களை எடுத்தாள் . வீட்டுக்கு சென்று முரளியிடம் காட்டியபடியே , சப்பாத்தி மாவு பிசைய ஆரம்பித்தாள்..சாப்பிட்டு முடித்து, கணவன் கையில் தலை சாய்த்து படுத்த படியே , நிறைய நேரம் கதை  பேசியவளுக்கு ,நேரம் போனதே தெரியவில்லை . மணியை பார்த்து விட்டு , விடிந்து விடப் போகிறது என்று  நிம்மதியாய் தூங்கப் போனவளுக்கு அப்போது தெரியவில்லை அவளுக்கு விடிவு காலமே இல்லை என்பது. காலையில் நியூஸ் பேப்பர் எடுக்க போனவளுக்கு , பைக்கில் வந்த ஒருவர் தன் கணவர் பற்றி விசாரிப்பது தெரிந்தது , அவளே போய் அவனை கூட்டி கொண்டு  வரும் போது தேவையே இல்லாமல் இவளை முறைத்தபடியே வந்தான் ,வந்து கணவரையும் எழுப்பி விட்டாள் .

இவள் காபி வைக்க கிச்செனுக்குள்   இருந்த போது முரளி அவனிடம் கெஞ்சுவது கேட்டது. வந்தவனோ குரலை உயர்த்தி பேசினான் . முரளி “எங்க அப்பா ரிட்ய்ர்மெண்ட் வாங்கி இரண்டு மாசம் தான் ஆகுது . அந்த பணம் வந்து இருக்கும் . தான் எப்படியாவது தன் அப்பாவிடம் கேட்டு சரி செய்வதாக கூறவே, வந்தவனோ , மொதல்ல உன் அப்பன்காரன பாத்துட்டு தான் உன் அட்ரஸ் கண்டு புடுச்சி இங்க வந்து இருக்கோம் .நீ தான் உனக்கு ஒரு கஷ்டம்னா உங்க அப்பன் துடிப்பான்னு சொல்றே . அவன் எனக்கு அப்படி ஒரு மகனே இல்ல . அவன் செத்து பல நாள் ஆச்சி . நான் என்னிக்கோ தல முழுகிட்டேன் அப்படிங்குறான் . இவரு போய் அப்பா கிட்டே வாங்க போறாராம்…அப்பா கிட்டே ….. என்று கெட்ட வார்த்தைகளில் திட்ட ஆரம்பித்தான் .அனிதாவுக்கு அட்சர சுத்தமாக அவன் பேசிய மிக மோசமான கெட்ட வார்த்தைகள் காதில் தெள்ளத் தெளிவாக வந்து விழுந்தது . கோபமாக சமையலறையிலிருந்து வெளியே வந்தவள்,என்ன இப்போ? அவரு தான் இவ்ளோ சொல்றார் இல்ல, சொன்ன படி செய்வார் . நான் பொறுப்பு , இனி இங்க இருந்து எதுவும்  பேச வேண்டாம் . இன்னைக்கு நவம்பர் 23 , இருபத்தி ஆறாம் தேதி வந்தா நான் செட்டில் பண்ணிடுறேன் என்றாள் . வந்தவனும் பெண் வந்து குறுக்கிட்டு பேசவே, இனி இந்த கதையை வளர்க்க வேண்டாம் என்று எண்ணி , இருபத்தி ஆறாம் தேதி வருவேன் , செட்டில் பண்ணலேனா , அப்போ வச்சிக்குறேன் என் கச்சேரியை ,தெருவில இறங்கி மானத்தை  வாங்கிடுவேன் என்று விட்டு  போனான் .

அவன் வெளியே சென்றதும்  முரளியை முறைத்தாள் , இது என்ன புது கதை ? எப்போ ? யாருக்கு ? எதுக்கு வாங்கியது ?. இன்னும் என்ன எல்லாம் என்  கிட்டே இருந்து மறச்சி வச்சி இருக்கீங்க ? முரளி அழாத  குறையாக அவளை பார்த்து , இது கல்யாணத்துக்கு வர்றதுக்கு முன்னே , அம்மா LCD  வாங்கி கேட்டாங்க , தங்கச்சி ப்ரேஸ்லெட் வாங்கிட்டு வர சொன்னா .வாங்கினேன் திருப்பி  கட்டிரலாம்னு நினச்சேன் அதுக்கு முன்னே வேல போய்டுச்சி அப்புறம் நடந்த கிளேபரத்துல இது சுத்தமா மறந்து போச்சி . கையிலும் காசு இல்லாம போய்டுச்சி , அதுக்கு பிறகு இத பத்தி யோசிச்சி  பலன்  இல்ல ,அதுனால வர்றது வரட்டும்னு விட்டுட்டேன் !

எவ்ளோ கட்ட வேண்டி இருந்துச்சி லாஸ்ட் பில்லுல ? 50, 000 ரூபா என்றான் முரளி. இப்போ இவன் என்ன சொல்றான் ? அனிதா. இப்போ இவன் அதுக்கு 3 லக்க்ஷம் கட்ட சொல்றான் என்றான் முரளி . அனிதாவுக்கோ  தலை சுற்றியது , நிற்க கூட முடியவில்லை , இது என்ன புது கஷ்டம் என்று புரியவில்லை . முரளி அவன் அப்பாவுக்கு போன் அடித்தான் . பேங்க் ஆளுங்க வந்து போனதை பற்றி சொன்னான் . அவன் அப்பவோ தெரியும் என்றார் . “அப்பா ! எப்படியாவது கட்டனும்பா , 26 லாஸ்ட் டேட்பா “.அப்பா  “அதுக்கு நான் என்ன செய்ய ? என் கிட்டே இப்போ பணம் இல்ல” , கூசமால் பொய் சொன்னார் . தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறு வேறு தான் என்று முரளிக்கு புரிந்தது . அனிதாவும் முரளியும் அவரவருக்கு தெரிந்த நண்பர்களுக்கு , மாற்றி மாற்றி போன் செய்தது தான் மிச்சம் , எல்லாரும் சொல்லி வைத்தார் போல் ஒரே பதிலைத் தான் வேறு வேறு வகைகளில் சொன்னார்கள் . ஒரே பதிலை கேட்டு கேட்டு காதே புளித்து போனது , கண்ணீர் வழிந்தது , வழியறியாமல் அன்றைய பொழுது அழுகையோடே கழிந்தது.

நவம்பர் 25 , வாடிய முகத்துடன் இருந்த முரளியை நெருங்கிய அனிதா என்ன இப்படி உட்காந்து இருக்கீங்க ? கிளம்புற வழிய பாருங்க என்றாள்.எனக்கு என்ன பண்ணுறதுன்னே புரியல அனிமா ! நவம்பர் 25…. எப்படி உன்ன இப்படி பிரச்சனயில மாட்டி விட்டுடு நான் மட்டும்  என் பாட்டுக்கு கிளம்பி போறது

. நான் பேசாம போகாம இங்கேயே இருந்துடவா ? , அனிதா  சற்றும் யோசிக்காமல் ,என்னங்க பேசுறிங்க நீங்க ? இங்கேயே இருந்தா பிரச்சனை தீர்ந்திடுமா ?எவ்ளோ கஷ்ட பட்டு இந்த வேல கிடைச்சி  இருக்கு, இதையும் விட்டுட்டு அப்புறம் என்ன பண்ணுறதா உத்தேசம் ?இந்த ப்ராப்ளம் நான் சால்வ் பண்ணிக்குறேன் . நீங்க ஒன்னும் மனச போட்டு அலட்டிக்காம பாக்கிங் பண்ற வேலைய ஆரம்பிங்க என்றாள்.

அவன் அரைமனதாக சூட்கேஸ் எடுத்து வைத்து , துணிகளை அடுக்க தொடங்கினான் .அனிதா பேஸ்ட் , ப்ரஷ் மற்ற பொருட்களை தேடி எடுத்து வந்து கொடுக்க ஆரம்பித்தாள்  . முரளி , அனி ! நாளைக்கு விடிஞ்சா  அவன் வருவான் , நானும் இருக்க மாட்டேன் , நீ எப்படி சமாளிக்க போறே , என்ன வேற கிளம்பு கிளம்புன்னு படுத்துறே , மனசே கேக்கல அனிமா …சொல்லு என்ன செய்ய போறே. அனிதா , நான் தான் சொன்னேனே நான் சமாளிச்சிக்குறேன்னு, எங்க வீட்டுல கேக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கேன் , இதுவரை கேக்கல. இப்போ வேற வழி தெரியல என்றாள் . அது அவனுக்காக சொன்ன சமாதானம் என்று அவளுக்கு மட்டுமே தெரியும் .

முரளி , “நானும் உன்ன இப்படி விட்டுடு போக கூடாதுன்னு எல்லா பிரெண்ட்ஸ் கிட்டயும் கேட்டு பார்த்துடேன். பத்தாததுக்கு எங்க வீட்டிலும் போய் கெஞ்சி பார்த்துட்டேன் . யாருமே அசைய மாட்டேனுறாங்க. சாரிப்பா . இனி என்னால இப்படி ஒரு கஷ்டம் வராது” .அனிதா , சரி விடுங்க இப்படி எல்லாம்  நடக்கும்னு தெரிஞ்சா நீங்க செஞ்சீங்க , ஏதோ நம்ப போறதா நேரம் . எல்லா கஷ்டமும் பட்டுட்டோம். இனி நமக்கு ஒரு கஷ்டமும் வராது என்றாள். முரளி பாக்கிங் முடித்து , தெருமுனை சென்று ஆட்டோ கூட்டி வந்தான் .

முரளியை ஆட்டோவில் ஏற்றி  விட்டு , அது கண்ணுக்கு தெரியும் வரை நின்று பார்த்து கொண்டே இருந்தாள் அனிதா.கண்களில் நீர் முட்டியது. காலேஜ் , காதல் , தன் வீட்டில் வீராப்பாய் பேசியது , முரளியை அத்தனை எதிர்ப்பை தாண்டி கைப்பிடித்தது, அதன்  பின் அவன் வீட்டில் வந்த பிரச்சனைகள், 3 நாள் முன்னே வந்த புது பிரச்சனை , அவன் கத்தி விட்டு சென்ற பின் , ஹவுஸ் ஓனர் இவளை கூப்பிட்டு என்ன பிரச்சனை ? இது நாலு குடித்தனம் இருக்குற கம்பவுண்ட் இங்க இப்படி எல்லாம் கண்ட ஆளுங்க வந்து கத்திட்டு போறது  நல்லா இல்ல. இதுவே கடைசியா இருக்கட்டும் சொல்லிட்டேன் ஆமா என்று திட்டியது, அப்போது பக்கத்து குடித்தனக்காரர்கள் பார்த்தது ,இவளை அவமானம் பிடுங்கி தின்றது என்று ஒன்றொன்றாய் நினைத்து பார்த்து கண்ணில் கரகரவென நீர் சுரந்தது. அப்படியே  எவ்வளவு  நேரம் தான் நின்றாளோ தெரியவில்லை ,மணியைப் பார்த்தாள் ஒன்று என்றது ,நவம்பர் 26 – 1 மணி – இந்நேரம் ப்ளைட் டேக் ஆப் ஆகி இருக்கும் . படுக்கையில் சென்று விழுந்தவளுக்கோ உறக்கம் வரவில்லை. காலையில் அவன் வந்தால் என்ன பதில் சொல்வது , ஏதோ கணவனிடம் அம்மா வீட்டில் வாங்குவதாக சமாதானம் சொல்லி அனுப்பினாலும் , அவளுக்கு அதில் உடன்பாடில்லை .இத்தனை நாள் பிறந்த வீட்டில் கையேந்தாமல் வாழ்ந்தாகி விட்டது . இனி இப்போ போய் உதவி என்று நின்றால் , எனக்கு முன்னமே தெரியும் , அவன் உன்ன இங்க பிச்சை எடுக்க அனுப்புவான் என்று பேசி என் கணவனை அசிங்கபடுத்துவாங்களே , அந்த அவமானத்தை எப்படி தாங்குவது ? அழுது அழுது முகம் வீங்கிவிட்டதுமல்லாமல் , தலை வலி வேறு . காபி போட எழுந்தவள் மணியை பார்த்தாள் 6 மணி . காப்பியை நிதானமாக உறிஞ்சி உறிஞ்சி குடித்தவள் , முகம் கழுவி, தலைவாரி , பொட்டு வைத்தாள் , கண்ணாடியில் சற்று நேரம் முகத்தை பார்த்து கொண்டு இருந்தவளுக்கு , எப்போது கண்ணாடி முன் நின்றாலும் பின்னே இருந்து வந்து கட்டி அணைக்கும் கணவன் முகம் கண் முன் வந்தது. இதுவரை அரை வயிறோ , கால் வயிறோ , கஞ்சியோ , கூழோ , தன் வீட்டு கூரைக்குள் தன்மானத்தோடு குடித்து வாழ்ந்தாகி விட்டது. எத்தனையோ பிரச்சனைகளை தைரியமாய் எதிர் கொண்டவள் , இப்போது தான் முதன்முறையாய் தெருவில் நின்று ஒருவன் ஏச கேட்டு இருக்கிறாள் . என்ன ஒரு அவமானம் ? இது இனியும் வேறு தொடரப் போகிறதா ? இவன் விடவே மாட்டான் என்று தோன்றிற்று தான் படித்த பாரதி பாட்டும் , இத்தனை நாள் வாழ வைத்த  நம்பிக்கையும் துணிவும்  தன்னை வந்து தடுக்கும் முன்,சட்டென கிச்செனுக்குள் சென்று அங்கிருந்த மண்ணெண்ணெய் டப்பா எடுத்து தன் மேல் சரித்தாள். மனம் மாறி விடும் முன் மானமே முக்கியம் என எண்ணியவளாய் குச்சியை எடுத்து சர்ரென பற்ற வைத்து காற்றாய் வாழ வேண்டியவள் கற்பூரமாய் எரிய ஆரம்பித்தாள் . வலித்தது, கதறினாள் , எரிந்தது ,துடித்தாள் , துடித்து அடங்கினாள் .

இது ஏதும் அறியாமல் ,விண்டோ சீட் கேட்டு வாங்கி உட்கார்ந்து  இருந்த முரளி ஏதோ டெக்னிக்கல் ப்ராப்ளம் என்று லேட்டாக கிளம்பிய விமானம் முரளி வீட்டின் மேல் பறக்கும் போது மணி பார்த்தான் “6.30 ” .  A /C  குளிர் தாங்காது, ஷால் எடுத்து மூடினான்  . கொழுந்து விட்டு எரிந்த கற்பூரம்  இல்லையில்லை காதலி அனிதா விமானத்தை தொட போட்டி   போட்டு கொண்டு உயர எழும்பி வந்து கொண்டிருந்தாள் கரும்புகையாய். இருவருமே ஒன்றாய் உயர எழும்பிய நேரத்தில்  எங்கோ தூரமாய் ஒற்றை நட்சத்திரம் கண் சிமிட்டி கொண்டிருந்தது. பேங்க்கில் அவனோ டைரியை புரட்டி நவம்பர் இருபத்தியாறாம் தேதியில் குறிக்கபட்டிருந்த கிரெடிட் கார்டு கலெக்சன் லிஸ்ட் எடுத்து பார்த்து விட்டு அவனுடைய அன்றைய வசூலுக்கான முகவரிகளை வரிசைப் படுத்தத் தொடங்கினான் .

… சபீனா …

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>