/* ]]> */
Oct 112011
 

ஆண் பெண் நட்பு

இப்போதெல்லாம் காலை விடிந்தாலே, மூன்றாம் கோணம் பக்கம் வந்து ஷஹி “காலைப்பனியும் கொஞ்சம் இசையும்”மில் என்ன பாட்டு பதிவிட்டிருக்கிறார் என்று பார்க்கத் தோன்றுகிறது.. ஷஹியும் நம்மை ஏமாற்றாமல் ஏதாவது ஒரு இனிமையான பாட்டைத்தந்து விடுகிறார். பாட்டு என்பது பாட்டு மட்டுமில்லை… ஏதோ ஒரு நினைவு ஏதோ ஒரு நிகழ்வு ஏதோ ஒரு உறவு ஒவ்வொரு பாட்டிலும் கலந்தே இருக்கிறது… அந்தப் பாட்டை பல நாட்கள் கழித்து கேட்கும்பொழுது நம் மனசு அந்த பாட்டோடு சேர்த்து அந்த பழைய நினைவுகளையும் உறவுகளையும் மீட்டெடுக்கிறது. அந்த வகையிலும் ஷஹியின் காலைப்பனி பல நினைவுப் பூக்கள் மேல் பெய்திருக்கிறது…

ஷஹி என்னுடைய பள்ளி கால தோழி… இப்போது அவர் மூன்றாம் கோணத்தின் முதுகெலும்பாய் இருப்பதால் இலக்கிய வட்டத் தோழியாகவும் ஆகிவிட்டார்.  ஆனால் இந்தப் பதிவு அவரைப் பற்றியதல்ல.. இது அவர் இன்றைய காலைப் பனி மூலம் தூண்டிய என் பழைய நினைவுகளையும் தோழியையும் பற்றியது…

தென்றல் வந்து தீண்டும் போது… என்ற பாடல்.. இளையராஜாவின் இன்னொரு இசைக் கோலம்… ஜானகியும் இளையராஜாவும் சேர்ந்து பாடியது கேட்பதற்கு அவ்வளவு இனிமையாக இருக்கும்.. அதை மிஞ்ச ஆளேது என்று சொல்பவரா நீங்கள்? அப்படியானால் நீங்கள் இன்னும் அந்தப் பாட்டை என் தோழி புவனா பாடி கேட்கவில்லை!

புவனா… மதுரை தந்த மல்லிகைப்பூ ! மல்லிகைப் பூ சிரிப்போடு அவள் அலுவலகம் வருவதே அவ்வளவு அழகு. நானும் புவனாவும் சந்தித்தது பூனாவில் உள்ள எங்கள் அலுவலகத்தில்… சுற்றிலும் மராத்தியும் ஹிந்தியும் பட்டையைக் கிளப்ப

“நீங்கதான் அபியா?” என்ற இனிய தமிழ் கேட்டு தலை திருப்பினேன்.. புவனா நின்றிருந்தாள்…

கல்லூரி முடித்து அப்போதுதான் இருவருமே வேலைக்கு வந்திருக்கிறோம்.. சாஃப்ட்வேர் கனவுகள் ஆயிரம் ஆயிரம்.

“நீங்க எந்த காலேஜ்?”

நான் ஏதோ கேட்க வேண்டும் என கேட்டேன்..

அவள்  படித்த கல்லூரியை சொன்னாள்..

“ஓ, அந்த காலேஜுக்கெல்லாமா கேம்பஸ் இன்டர்வ்யூ வர்ராங்க?”

நான் கேட்டுவிட்டு அப்புறமாய் வருந்தினேன்…

புவனாவின் கண்களில் ஒரே ஒரு நொடி ஒரு புண்பட்ட எக்ஸ்பிரஷன் வந்து போனது.. ஆனால் அது ஒரே ஒரு நொடிதான்…

“ஆமாம். இந்த வருஷத்திலேர்ந்து வர்ராங்க!” அவள் ஏதோ சொல்ல வேண்டும் என சொல்லிவிட்டு போய்விட்டாள்..

அதற்கப்புறம் புவனா இந்த “திமிர் பிடித்தவனிடம்” இருந்து கொஞ்சம் தள்ளியே இருந்தாள்…

அப்புறம் ஏதோ ஒரு பிரேக்கில் ஏதோ ஒரு காஃபியில் சகஜமானாள். மீண்டும் அவளும் நானும் நட்பாய் பழக ஆரம்பித்த போது..

நானும் எனது இன்னொரு தமிழ் நண்பனும் ( எனது ரூம் மேட்.. அலுவலகம் அல்ல) ஒரு பூனாவில் அதிசயமாய் ரிலீசான ஒரு தமிழ் படத்திற்கு போகலாம் என முடிவெடுத்தோம்.. ( முத்து என நினைக்கிறேன்) புவனாவை ஏன் கூப்பிடக் கூடாது? மனதில் தோன்றியதை செயல்படுத்தினேன்..

அவள் ஹாஸ்டல் நம்பருக்கு ஃபோன் செய்தேன்..

“படத்துக்கா ? நானா ? உன் கூடயா?”

மூன்றே கேள்விகளுக்குப் பிறகு ஒரு மெகா தயக்கம்..

“இல்ல அபி… இன்னைக்கு எனக்கு தலை வலிக்குது… நான் இன்னொரு நாள் வர்ரனே”

என்றாள்..

நானும் சரியென்று சொல்லி நண்பனுடன் கிளம்பினேன்…

திடீரென வழியெங்கும் “தில்வாலே துல்ஹானியா  லே ஜாயேங்கே” போஸ்டர் எங்கள் கண்ணைக் கவர திட்டத்தை மாற்றி ரஜினியை காற்றில் விட்டு ஷாரூக் கானையும் கஜோலையும் ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றினோம்..

தியேட்டரில் படம் இன்டர்வல் வரை போனதே தெரியவில்லை. அந்த அளவிற்கு ரசித்துப் பார்த்தோம்.. இன்டர்வெல்லில் தான் அந்த அதிர்ச்சி காத்திருந்தது. நான் பாப்கார்ன் வாங்கித் திரும்புகையில் ஹாஸ்டல் தோழிகளுடன் புவனாவைப் பார்த்தேன்.. டீ ஷர்ட் ஜீன்ஸ் என வித்தியாசமாய் இருந்தாள்.. அவள் செய்துகொண்டிருந்த கலாட்டாக்களில் தலைவலிக்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை..

அதற்குப் பிறகு நான் புவனாவிடம் இரண்டு வாரம் பேசவில்லை. அவளாய் வந்து பேசினாலும் நான் ஒற்றை வரியில் பதில் சொன்னேன்…

புவனாவே ஒரு நாள் வந்து நான் சாப்பிடுகையில் என்னருகே உட்கார்ந்தாள்…

“என்ன ப்ராப்ளம் அபி?”

“ஒண்ணும் இல்லையே”

“இல்லையே ! நீ நார்மலா இல்ல.. சொல்லு ! நீ என் ஃப்ரண்டு தான ! அப்புறம் ஏன் இப்படி இருக்க?”

“இல்லம்மா… உனக்கு எப்ப தலைவலி வரும் எப்ப போகும்னு தெரியாது.. அதுதான் உன்ன எதுக்கு டிஸ்டர்ப் பண்ணனும்னு …”

நான் வார்த்தைகளில் ஊசி குத்தினேன்…

புவனாவிற்கு சட்டென்று புரிந்தது…

“அன்னைக்கு தியேட்டர்ல என்ன பார்த்தியா?”

நான் பதில் சொல்லவில்லை..

“இங்க பாருடா.. நீயும் நானும் தான் தமிழ் இங்க.. யாருகிட்டயாவது மனசு விட்டு பேசணும்னா நான் உன் மாதிரி ஸ்டைலா இங்கிலீஷ்ல எல்லாம் பேச முடியாது.. அதனால உங்கிட்டத்தான் பேசியாகணும் நான்.. ஆமாம்.. அன்னைக்கு உன் கூட தியேட்டருக்கு வர்ர தயக்கமா இருந்தது வரல.. பொய் சொன்னேன்.. இப்ப என்னங்கிற? “

“அப்ப நீ என்ன நமபல.. ஃப்ரண்டு ஃப்ரண்டுன்னு சொன்ன.. ஒரு படத்துக்கு வர முடியல.. அவ்வளவுதான் நீ என் மேல வச்சிருக்கற ட்ரஸ்ட்.. இல்ல?”

நான் கோபமாகவே கேட்டேன்..

அவள் மௌனித்தாள்…

“சரி, அத விடு, அது கூட பரவாயில்ல.. ஏதோ ஒரு ஃபீமேல் சேஃப்கார்டுன்னு விட்டுடலாம்.. ஆனா அதுக்கு எதுக்கு தலைவலி ட்ராமா போடணும்.. எனக்கு வர பிடிக்கலேன்னு ஒரே வார்த்தைல சொல்ல வேண்டியதுதான.. நான் உன் ஃப்ரண்டுதான… எங்கிட்ட உனக்கு உண்மை சொல்லறதுக்கு என்ன தயக்கம்?”

புவனா என்னையே ஆழமாக பார்த்தாள்..

“சாரிடா.. இனிமே நான் உங்கிட்ட உண்மையத்தான் சொல்லுவேன் சரியா…”

சமாதானமாய் அன் கை பிடித்து குலுக்கினாள்..

அதற்குப் பிறகு எனக்கும் புவனாவுக்குமான உறவு இன்னும் விஸ்தீரணம் அடைந்தது.. புவனா என்னிடம் எல்லாமும் பேசலானாள்… எல்லாமும்!

கோயிலோ சினிமாவோ.. நானும் புவனாவும் சேர்ந்துதான் போவோம்…

ஒரு ஆண் பெண் இடைவெளியே எங்களிடையே இல்லை…

திடீரென என் மனதில் பூதம்…

ஒரு வேளை இது லவ்வாக இருக்குமோ…

ரூம்மேட் வேறு ஆணீத்தரமாய் சொன்னான்..

“அவ உன்ன லவ் பண்றாடா மச்சி !”

நான் பயப்பட காரணம் இருந்தது.. நான் அப்போது வேறொரு பெண்ணைக் காதலித்துக் கொண்டிருந்தேன்… புவனாவின் மனதில் ஏதாவது?…….

என் காதலியின் ஃபோட்டவை புவனாவிடம் ஒரு நாள் தயங்கித் தயங்கி காட்டினேன்…இவளைத்தான் நான் திருமணம் செய்யப் போகிறேன் என்றேன்…

புவனா அந்த ஃபோட்டோவை ஆசையாய் பார்த்ததும் வாஞ்சையாய் என் கை பிடித்துக் குலுக்கியதும் என் நண்பனின் லவ் தியரியையும் என்னுடைய முட்டாள் பயத்தையும் தூக்கி குப்பையில் போட்டது !

புவனாவைப் பற்றி சொல்லுகையில் அவள் குயில் குரலைப் பற்றி சொல்ல வேண்டும்…

பொதுவாகவே என் நண்பர்கள் மத்தியில் நான் தான் பாடுவேன் .. அவர்கள் கேட்பார்கள்… ஆனால் புவனாவின் குரலுக்கு நான் ரசிகன்… அதுவும் ஜானகி பாடல்களை புவனா பாடி கேட்க வேண்டும்.. ஆஹா. … அவ்வளவு இனிமை…

இந்த “தென்றல் வந்து தீண்டும்போது ” பாட்டு புவனாவுக்கும் எனக்கும் ஃபேவரிட்…

அவளைப் பாடச் சொல்லி கேட்பேன்…

“தென்றல் வந்து தீண்டும் போது என்ன பண்ணுமோ” என்று பாடல் வரிகளை நான் நினைக்க

புவனா அதை

“தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணுமோ ” என பாடுவாள்…

நான் புவனாவிடம் சண்டை பிடிப்பேன்..

“ஏய் புவனா சரியா பாடு..”

“போடா.. பாட்டுல அப்படித்தான வருது !அது மதுரை ஸ்லாங்கு உனக்கு புரியாது என்பாள்… “

நான் சண்டையைக் கைவிட்டு புவனாவின் குரலில் மூழ்குவேன்…

எனக்கு மேற்படிப்பு படிக்க அட்மிஷன் கிடைத்த போது நான் ரிசைன் செய்யப் போகிறேன் என புவனாவிடம் தான் முதலில் சொன்னேன்.. நான் போகிறேன் என வருத்தப்பட்டவள் என் எதிர்காலத்தை நினைத்து சந்தோஷமாய் கை குலுக்கினாள்.

ரயில்நிலையத்திற்கு வந்து இரவு எட்டு மணிக்கு ரயில் கிளம்பும் வரை இருந்து என்னை வழியனுப்பி வைத்தாள்…

அப்புறம் அவளுக்கு லீவ் கிடைத்தபோது சென்னையில் என் வீட்டிற்கு ஒரு முறை வந்தாள்…

என் அம்மா முன் புவனா என் மீது எடுத்துக் கொண்ட உரிமையில் என் அம்மாவே கொஞ்சம் பயந்து தான் போனார்கள்…

கிளம்புகையில் ஆட்டோ பிடித்து பஸ் ஸ்டாப் வரை கொண்டு போய் விட்டேன்…

என் முதுகில் அடித்து புவனா சொன்னாள்…

“ரெண்டு வருஷத்துல நீ மாறவே இல்லடா!”

அதுதான் நான் புவனாவை கடைசியாய் பார்த்தது…

அதற்கப்புறம் வாழ்க்கையின் பக்கங்களைப் புரட்டுவதில் இருவருமே மூழ்கி விட்டோம்..

இன்றைய ஃபேஸ்புக்கும் ட்விட்டரும் மொபைலும் இல்லாததால் தொடர்புகளும் துண்டித்து விட்டன…

என்னைப் பொறுத்த வரை ஒரு காலத்தில் தூய்மையான ஆண் பெண் நட்பே சாத்தியமில்லை என்று நினைத்ததுண்டு… அதை தகர்த்து எரிந்தவள் என் தோழி புவனா. !

வாழ்க்கையில் ஆணுக்கு காதலிகள் கிடைப்பார்கள்… உண்மையான தோழிதான் அரிதிலும் அரிது…

எங்கே இருக்கிறாய் என் தோழி? … இந்தப் பதிவை படித்தாவது என்னைத் தொடர்பு கொள்வாயா? ….

எதிர்பார்ப்புடன் நான்…

பின் குறிப்பு : புவனா! அந்தத் தென்றல் பாடலைப் பொறுத்தவரை  நானும் நீயும் சொன்னது ரெண்டுமே தவறு ! அது “தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ…” வாம்… ஷஹியின் பதிவில் தெரிந்து கொண்டேன்… உனக்கு சொல்லத்தான்  முடியவில்லை !

Tags : tamil article on boy girl friendship | office friendship| ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் நட்பு பற்றிய உண்மை அனுபவம் | நட்பு | தோழி| பெண் தோழி |

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>