/* ]]> */
Dec 082011
 

இன்று காலை முதல் நடந்த பரபரப்புகள் எல்லாம் நினைக்கையில் களைப்பாக இருந்ததாலும் , இந்த நாள் இனிய நாள் .இதற்காக தானே இந்த ஓட்டம் .போய் முகம் கழுவி , தலை வாரி , சிறிய மேக் அப் செய்ய செய்ய சந்தோசமாக இருந்தது.

எல்லாம் முடித்து கண்ணாடியில்  ஒருமுறை சரி பார்த்து கொண்டேன். மெதுவாக நடந்தேன் . கதவை திறந்தேன். உள்ளே நுழைந்து மூடினேன் .

A/C சுவிட்ச் போட்டேன் .  இந்த சூழ்நிலையில் ஒரு இதமான இசை பின்னனியில்  கேட்டால் நன்று என்று தோன்றவே, அதையும் ஆன் செய்ய, அது ” வசீகரா என் நெஞ்சினிக்க …..” என்று பாட  தொடங்கியது. மெதுவாக நகர்ந்தேன் , A/C குளிரிலும் வியர்க்கத் தான் செய்தது. ஏனோ புரியவில்லை சற்றே சிறிய சஞ்சலம் இருந்து  கொண்டே இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறினேன் ,  வளைந்து நெருங்கினேன் . எது  நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ , அது நடக்க போகிறது.சட்டென்று சர்வ நாளமும் அடங்கிவிட்டது  போல்  இருந்தது  .  உள்ளுக்குள்  ஒரு துடிப்பு  .

நெருங்குகிறேன் , மிக மிக நெருக்கத்தில் , என்னையும் மீறி, என் கட்டுக்குள் அடங்காமல், தொட்டு மோதி நின்றேன்  . கண்ணை இருக்கமாய் மூடிக் கொண்டேன். திறக்க நினைத்தாலும்   முடியவில்லை. அப்ப்டியே சாய்ந்து கிடந்தேன். எழும்ப வேண்டும் என்று தோன்றவில்லை. மனம் “ ஏன் எந்த பதட்டம் ?” என்று அதட்டியது இருப்பினும் என்னால் சுய கட்டுபாட்டுக்குள் வரமுடியவில்லை. இதயம்  இன்னும் அதிவேகமாக அடிக்க தொடங்கியது.அதிகமாய் வியர்த்து கொட்டியது. நாக்கு மேலன்னதோடு ஒட்டி கொண்டது.

 சட்டென்று யாரோ கதவை தட்டுகிறார்கள் , கண் திறந்தேன் .

ஒரு பெண்மணி .  ”ஹாய் ! டோன்ட் டிஸ்டர்ப் தி டிராபிக் , கம் டு தி சர்வீஸ் லேன் ” .

மெதுவாய் ஓரங்கட்டினேன் என் வண்டியை .

நான் முட்டி மோதிய காரை ஒட்டி கொண்டு வந்தவள் இவள் தான்  என்று புரிந்தது.பார்ப்பதற்கு இந்நாட்டை சேர்ந்தவள் என்று தோன்றியது .

முழுவதும் மூடி இருந்தாள், என் பார்வை அவள் கையில் கட்டி இருந்த வாட்ச் , ஹன்ட்பாக் , செருப்பு என்று கவனித்து ” ராயல் ஃபாமிலி ” என்று முடிவுக்கு வந்து இருந்தது

அவள் அவளுடைய வண்டியின் பின்பக்கம் சென்று நோட்டமிட்டு  கொண்டு இருந்தாள் .

அவள் வண்டிக்கு அடி ஒன்றும் பெரிதாக இல்லை தான்.  இருந்தாலும் இத்தனை விலை உயர்ந்த கார் . கருப்பு கலர் ஆடி .

மனம் அரற்றியது

” அடித்தது ஆடி , நான் இன்று காலி . அடுத்து என்ன நடக்க போகிறது ? “

ஒன்றும் புரியவில்லை. பார்த்து முடித்து விட்டாள். அவள் என்னை நோக்கி வருகிறாள். இங்கிலிஷ்ல இருக்கும் அத்தனை கெட்ட வார்த்தையிலும் திட்டுவாளோ ?

நான் நினைத்ததற்கு மாறாக , சிரித்து கொண்டே கையை நீட்டுகிறாள் ,

“  வாட் ஹப்பெண்ட்  டார்லிங் ? கான்ட் கண்ட்ரோல் யூர்செல்ப் ? ஹௌ மனி யீர்ஸ் ட்ரிவிங்? “ .

நான் “2 யீர்ஸ்” என்றேன் குற்ற உணர்ச்சியுடன் . மேலும் கேட்டாள்

“  இஸ் திஸ் யுவர் பஸ்ட் ஆக்சிடென்ட் ? . “எஸ் ” என்றேன் . ஆம் . 2 வருடம் வண்டி ஒட்டி இருக்கிறேன். இதற்கு முன் இப்படி ஒரு போதும் ஆனதில்லை . இதுவே என் முதல் ஆக்ஸிடென்ட்.

அவள் போலிசுக்கு போன் செய்தாள். கார் டிக்கி திறந்து ஒரு சேர் எடுத்து போட்டு உட்கார்ந்து யாருக்கோ போன் செய்து எதுவுமே நடக்காத மாதிரி யாரோடோ பேச ஆரம்பித்தாள். சிரித்து சிரித்து பேசினாள்.

அவள் கணவனோ ? தெரியவில்லை . அப்போது தான் நான் என் காரை பார்த்தேன் . வெள்ளை நிற , டொயோட்டா ” யாரிஸ் “, ப்ரோன்ட் பானெட் மொத்தமும் கழண்டு நெளிந்து இருந்தது . நம்பர் ப்ளேட் நசுங்கி போயிற்று.  அங்கங்கே கருப்பு கருப்பாய் பெய்ன்ட் ஒட்டி கொண்டு இருந்தது. ஒரு பக்க லைட் உடைந்து இருந்ததை பார்க்க , ஒரு கண் குருடானத்தை போல் இருந்தது.

என் சிறிய வெள்ளை  பல்லக்கு,அந்த  பெரிய கருப்பு ரதத்தை தொட்டதால் வந்த  வினை.

விழுப்புண்ணின் வீரத் தழும்புகள். பார்த்த உடன் கண் கலங்கியது . இருக்காதா பின்னே ? 2 வருடமாக தினம் என்னை சுமந்து சென்ற என்  தோழி. இதுவரை எனக்கு  ஒரு சிறு தொந்தரவு கூட தந்ததே இல்லை. தொட்டு தடவி கொடுத்தேன் . காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு தானே.

என்னை பார்த்து பரிதாபமாகக் கேட்டது

”  என்னை இப்படி அடிக்க உனக்கு எப்படி மனசு வந்தது ? “

ஒரு நொடியில் தவறு செய்து விட்டேன் தோழி , மானசீகமாக மன்னிப்பு கேட்டேன்

போலீஸ் வண்டி வரும் சத்தம் எங்கோ தொலைவில் கேட்டது , எல்லா வண்டிகளும் ஒதுங்கி வழி விட வழி விட , சத்தம் அருகில் வந்தது , அதிலிருந்து போலீஸ் இறங்கி , 2 பேரிடமும் நடந்ததை கேட்டு அறிந்து, வண்டியை சுற்றி இன்ஸ்பெக்ஷேன் செய்தது . இருவரிடமும் “ முல்கியா  ” மற்றும் “பத்தாக்கா” வாங்கி சரி பார்த்து விட்டு எனக்கு “முக்ஹலிபா”  கொடுத்தது . கையில் வாங்கி பார்த்தேன் . ஒன்றுமே புரியவில்லை , எல்லாமே அரபியில் இருந்தது. என்ன எழுதி இருக்கிறது ? போலிசிடமே கேட்டேன் . பதில் வந்தது . ” 400 டிரகாம்  பைன் , அண்ட்  4 ப்ளாக் பாயிண்ட்”. பின்னாலிருந்து வண்டியை தட்டியதற்காய்.

மனம் ஓலமிட்டது ” அட பாவமே , இப்படியா போக வேண்டும் ?

வார 5 நாட்களிலும் ஓடி ஓடி உழைத்து விட்டு ,காத்து இருந்த வியாழகிழமை வந்து , வந்த வேகத்தில் இப்படியா வீணாக வேண்டும் .

இனி இன்சூரன்ஸ் கம்பெனி, வோர்கஷப் என்று 2 விடுமுறை நாளைக்கு வேலை வந்தாயிற்று. இனிய வியாழன் மாலை வெறுதே வீணாக போகிறதே , மனம் சலித்தது.

என்னால் முடிந்த வரை பனெட்டை தட்டி மூடி விட்டு , ‘ சண்டே வேலைக்கு போகும் முன் கார் ரெடி ஆக வேண்டும், சண்டேயே பைனும்

மறக்காது  கட்டி விட வேண்டும்  ‘என்று எண்ணியபடியே ,கதவை திறந்து உள்ளுகேறி ரேடியோ ஆன்  செய்ய ,

அது வேறு ” சோதனை மேல் சோதனை ……” FM-இல் ஒலி பரப்பி கொண்டு இருக்க, ஏனோ நினைவுக்கு வந்தது  ,கடந்த ஆண்டு விடுமுறைக்கு என் சொந்த ஊர் வந்த போது, யாரோ இருவர் ஆக்ஸிடென்ட் செய்து விட்டு , சாலையில் ஒருவர் சட்டையை மற்றவர் பிடித்து ஒருவரையொருவர் மாற்றி மாற்றி அடிக்க , இதை ஒரு கூட்டம் நின்று வேடிக்கை பார்க்க , மொத்த டிராபிக்கும் ஸ்த்தம்பிது நின்றது. இதை சிந்தித்த படியே , கடிகாரத்தை பார்த்தேன் , நேரமானதை உணர்ந்து இன்டிகேடர் போட்டு, 5 பாயிண்ட் செக் அப் செய்து  , ஸ்பீட் ட்ராக்குக்கு மாறி, வேகமெடுத்தேன் வீட்டை  நோக்கி என் முதல் அனுபவத்துடன் .

இப்போது FM-இல் ஒலிபரப்பாகி கொண்டு இருந்த பாட்டு “சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரை போல வருமா ? “

பின் குறிப்பு :

வளைகுடா நாடுகளில் புழங்கும் பதங்கள்

முல்கியா – லைசென்ஸ்

பத்தாக்கா- வேலை செய்வதற்கான அனுமதி அடையாள அட்டை

முக்ஹலிபா – அபராத சீட்டு

ப்ளாக் பாயிண்ட் – நாம் செய்யும் விபத்தை பொருத்து கருப்பு புள்ளிகள் மாறும். சிறிய விபத்துக்கு என்றால் 2 ப்ளாக் பாயிண்ட், பெரியது விபத்துக்கு என்றால் 4 ப்ளாக் பாயிண்ட் .

ஒரு வருடத்தில் 24 ப்ளாக் பாயிண்ட் வாங்கி விட்டால், போலீஸ் நமக்கு லைசன்சை அவர்கள் வசம் ஒப்படைக்க சொல்லி குறுஞ்செய்தி அனுப்பும் . நாமே சென்று நம் லைசென்ஸ் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். செய்ய  தவறினால்  அதற்கும் தண்டனைகள் உண்டு.

5 பாயிண்ட் செக் அப் – முதலில் நடுவில் இருக்கும் மிரர் , பின் சைடு மிரர் , பின் ஷோல்டர் செக் அப் ( தலையை வளைத்து தோளில் நாடி படும் படி திரும்பி பின்புறம் உள்ள ஜன்னல் வழியே வெளியே பார்ப்பது ) மீண்டும் சைடு மிரர், பின் சென்டர் மிரர் பர்ர்த்து , அந்த நொடியே ட்ராக் மாற வேண்டும்.

மற்ற அபராதங்கள்

ஸ்பீட் லிமிட் 120 ட்ராக்கில் 140 யில் போவது – ஒவ்வொரு 10 km கும் 200 டிரகாம் வைத்து கூட்டி  கொள்ள வேண்டியது தான்.

குடித்து விட்டு வண்டி ஓட்டினாலோ , ரெட் சிக்னல் ஜம்ப் செய்தாலோ ( லைப் டைம் பான்) அப்படி என்றால் நம் ஆயுசுக்கும் திரும்ப இங்கு வர முடியாது  செய்து நாட்டை விட்டு அனுப்பி விடுவார்கள் .அனுப்பும் போது கைரேகைக்கு பதில், கண்ரேகை (ஐஸ் ஸ்கேன் ) பண்ணுவதால் எந்த வழியிலும் திரும்ப நாட்டுக்குள் நுழைய முடியாது.

இக்கதையின் நீதி போதனை :

வெளிநாடுகளுக்கு சென்றால் நம்மால் பின்பற்ற முடியும் விதிகளை , நாம் ஏன் நம் ஊரிலேயே பின் பற்ற கூடாது ?

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>