/* ]]> */
Aug 222011
 

மூக்குத்தி


சிறுகதை [பகுதி 5 of 7]


By வை. கோபாலகிருஷ்ணன்

அந்தத்தரைத்தளத்தின் கிழக்குப்பகுதி முழுவதும் மோதிரங்கள் வியாபாரம் சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருந்தது.  மேற்குப்பகுதியில் கேஷ் கவுண்டர் ஒரு மூலையில், வாயிற்கதவின் அருகே அமைந்திருக்க, மற்றொரு மூலையில் பேக்கிங் + பார்ஸல் ஒப்படைத்தல் நடைபெற்று வந்தது.  

மோதிரம் பார்க்க வந்த ஒருவர் எழுந்திருக்க, அவர் அமர்ந்திருந்த ப்ளாஸ்டிக் ஸ்டூல் ஒன்றைத்தாவிப்பிடித்து, அதில் நான் அமர்ந்து கொண்டேன். 

சற்று நேரம் ஓய்வெடுத்துக்கொண்டேன்.   பணம் கட்டிய இடத்தில் நெடுநேரம் நின்றதில் என் கால்கள் கடுத்தன. மீண்டும் பார்ஸல் வாங்கும் பகுதியில் நிற்க சற்று தெம்பு வேண்டுமே!

புளியங்கொட்டை கலர் சட்டைப்போட்ட பையன் மீண்டும் என்னிடம் வந்தான். 

“ஐயா, வந்த காரியம் முடிந்து விட்டதா? பணம் கட்டிப்பொருளை வாங்கி விட்டீர்களா?” அன்புடன் விசாரித்தான்.

“பணம் கட்டிவிட்டேன், தம்பி.  மூக்குத்தி தான் வாங்கணும். ஒரே கூட்டமாக உள்ளது. அதனால் சற்று நேரம் உட்கார்ந்து விட்டேன்” என்றேன்.

“மெதுவாகப்பார்த்து வாங்கி ஜாக்கிரதையாக வீட்டுக்கு எடுத்துட்டுப்போங்க, எங்கு பார்த்தாலும் கும்பலாகவும், திருட்டு பயமாகவும் உள்ளது” என்று கூறி விடை பெற்றுச்சென்றான். 

நம்ம கிராமத்துப் பக்கப்பையன், நல்ல பையன், நல்ல நேரத்தில் எச்சரித்து விட்டுபோகிறான் என்று நினைத்துக்கொண்டே, பொருட்கள் பார்ஸல் வாங்கும் பகுதியில் போய் நின்று கொண்டேன்.

கூட்டம் குறைவதாகவே தெரியவில்லை. ஒருவர் பின் ஒருவராக க்யூ முறையில் ஒழுங்காக வாங்கிச் செல்வதாகவும் தெரியவில்லை.

மேலும்மேலும் பில்லுக்கான பணம் கட்டிவிட்டு வருபவர்கள் கூட்டமும் சேர்ந்து கொண்டே இருக்கிறது.  

நகையைப்பேக் செய்து கொடுக்கும் முன்பு, மீண்டும் ஒருமுறை தராசுத்தட்டில் வைத்து நிறுத்து, பில்லுடன் சரிபார்த்து, அதற்கான சிறிய பெரிய நகைப்பெட்டிகளில் போட்டு, கிஃப்ட் ஐட்டமாக பில்லில் உள்ள தொகைக்குத்தகுந்தபடி, பலவிதமான ஜிப் பைகள், எவர்சில்வர் பாத்திரங்கள், ஹேண்ட் பேக், சூட்கேஸ் முதலியன தரப்பட்டு வந்தன.

90000 ரூபாய்க்கு நகைகள் வாங்கிய ஒருவர், தனக்கு சூட்கேஸ் வேண்டும் என்று மன்றாடிக்கொண்டிருந்தார். 

ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் நகைகள் வாங்கினால் தான் சூட்கேஸ் தருவோம் என்று கறாராகச் சொல்லிவிட்டார்கள். 

300 ரூபாய் மதிப்புள்ள அந்த சூட்கேஸை எப்படியும் கிஃப்ட் பொருளாகப் பெற்றுவிடத்துடித்த அந்த ஆசாமி, ஏற்கனவே 90000 ரூபாய்க்கு நகைகள் வாங்கிய பின்னும், மேலும் 10000 ரூபாய்க்கு நகைகள் வாங்க ஏ.டி.எம். கார்டு, கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் என தன்னிடமிருந்த எல்லாவற்றையும் குடைந்து ஏதேதோ கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார். அவரைப் பார்க்கவே எனக்கு பரிதாபமாக இருந்தது. 

கிஃப்ட் பொருட்களை இது வேண்டும் அது வேண்டும் என்று மாற்றி மாற்றி கேட்பவர்களால் மேலும் தாமதம் ஆகிக்கொண்டிருந்தது அந்தப்பகுதியின் வேலைகள். 

ஒருவழியாக பெரியவர், வயசானவர் என்ற தகுதியினால் ஒரு சிலர் இரக்கப்பட்டு,  எனக்கு முன்னுரிமை அளித்து,என் மூக்குத்தியை நான் பெற்றுக்கொள்ள என்னை முன்னே அனுப்பினர். 

எனக்கான நகைப்பெட்டியை, ஒரு பெரிய ப்ளாஸ்டிக் பையில் போட்டு, அதனுடன் ஜிப் வைத்த ஒரு சிறிய மணிபர்ஸ் போல ஏதோவொன்று போட்டு, பில், கியாரண்டி கார்டு, வேறு ஏதோ மாதாந்தர நகை சேமிப்புத்திட்டம் பற்றிய வழவழப்பான விளம்பரத்தாள் முதலியன போடப்பட்டு, என் பெயரைச்சொல்லி அழைத்து, ஒரு வழியாக என்னிடம் ஒப்படைத்து அனுப்பி வைத்தனர். 

அதில் போடப்பட்டுள்ள அடசல் பேப்பர்களுடன் முக்கியமான அந்த சிறிய நகைப்பெட்டி உள்ளதா, அதற்குள் முக்கியமாக அந்த மூக்குத்தியும் உள்ளதா என ஒருமுறை சரிபார்த்துவிட்டு, அனைத்தையும் என் மஞ்சள் பைக்குள் திணித்துக்கொண்டு பத்திரமாகக் கடையைவிட்டு வெளியே வந்தேன். 

வயிறு பசிப்பதுபோல இருந்தது. காலையில் நீராகாரம் மட்டும் குடித்துவிட்டு கிராமத்திலிருந்து, வீட்டைவிட்டுப்புறப்பட்டது.  

மதியம் இப்போது பன்னிரெண்டரை மணிக்கு மேல் ஆகிவிட்டது. எதிர்புறம் இருந்த ஓட்டலுக்குப்போய் ஒரு ஓரமாக அமர்ந்து, வயிற்றுக்கு சாப்பிட ஏதோ ஆர்டர் கொடுத்தேன். நல்லவேளையாக ஓட்டலில் இப்போது கும்பல் அதிகமில்லை.


தொடரும்

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>