மூக்குத்தி
சிறுகதை [பகுதி 6 of 7]
By வை. கோபாலகிருஷ்ணன்
அந்த ஓட்டலில் எனக்கு முன்பு ஏற்கனவே சாப்பிட்டுவிட்டு, கைகழுவிக்கொண்டிருந்த புளியங்கொட்டைக்கலர் சட்டைப்பையன் என்னைப்பார்த்து புன்சிரிப்பை உதிர்த்தவாறே, ஓட்டலிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தான்.
வயசுப்பையன் பாவம், அவனுக்கு என்னைப்போலவே பசி எடுத்திருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். ஓட்டலில் அதிகம் கும்பல் இல்லாமல் இருந்ததால் மீண்டும் நகையை பையிலிருந்து எடுத்துப்பார்த்து, பத்திரப்படுத்திக்கொண்டேன்.
ஓட்டலுக்கான பில்லுக்கும், திரும்பிப்போக பஸ் செலவுக்கும் மட்டும் வேண்டிய பணத்தைத் தனியாக சட்டைப்பையில் வைத்துக்கொண்டேன்.
அடிக்கும் வெய்யில் என் தலையைத்தாக்காமல் இருக்க, குடையை விரித்தபடி, பொடிநடையாக நடந்து, பேருந்து நிலையம் வந்து விட்டேன். அங்கும் ஒரே கும்பல். எங்கள் ஊர் பக்கம் செல்லும், ஒரு பஸ் உட்கார இடமில்லாமல் நிறை மாத கர்ப்பிணி போல, நிரம்பி வழிந்து, மிகவும் தள்ளாடியவாறு புறப்படத்தயார் ஆனது.
நான் அடுத்த பஸ்ஸில் செல்லத்தீர்மானித்து, கும்பலோடு கும்பலாக நிற்கும் போதே, அடுத்த பஸ்ஸும் வந்துவிட்டது.
டவுனில் வெய்யில் அடிக்கும் போதே மழையும், [கோடைமழை] படபடவென்று பெரும் தூரலாய்ப்போட்டது.
புளியங்கொட்டைக்கலர் சட்டை போட்டப்பையன் அப்போதும் திடீரென என்முன் தோன்றி, என் குடையை உரிமையுடன் வாங்கி, ஜன்னல் பக்கமாக அந்த பஸ்ஸில் ஒரு இடம்போட்டுவிட்டு, தொங்கவிட்ட மஞ்சள் பையுடன் இருந்த என்னை, அந்தக்கும்பலில் ஏற்றிவிட, படிக்கட்டில் இருந்த கூட்டத்தாரை, தன் பலம் கொண்டமட்டும் விலக்கி உதவியும் செய்தான்.
அவனுக்கு வேறு ஏதோ அவசர வேலை இருப்பதாகவும், அடுத்த பஸ்ஸில் வருவதாகவும் சொல்லியவன், நான் குடை வைக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து விட்டேனா என்று உறுதி செய்துகொண்ட பிறகே புறப்பட்டான்.
அந்த பஸ் ஸ்டாண்டு கும்பலில் அவன் மறையும் வரை, நன்றியுடன் அவனையே பார்த்துக்கொண்டிருந்த என்னை, என் அருகில் அமரவந்த ஒரு இரட்டைநாடி மனிதரின் “குடையை மடக்கி நேராக வைத்து நகர்ந்து உட்காருஙக” என்ற குரல் திரும்பச்செய்தது.
பஸ் எங்கள் கிராமத்தை நெருங்குவதற்கு சற்று முன்னர் நான் எழுந்து படிக்கட்டுப்பக்கம் போய் இறங்குவதற்கு வசதியாக நின்று கொண்டேன்.
எங்கள் கிராமத்தில் மட்டும் மழைபெய்த அடையாளமே எதுவும் தெரியாமல், சுள்ளென்று வெய்யில் அடித்துக்கொண்டிருந்தது.
பஸ்ஸிலிருந்து இறங்கிய நான், எங்கள் ஊர் ரோட்டின் மேல் இருந்த பிள்ளையார் கோயில் அருகில், எதையோ பறிகொடுத்ததுபோல நின்று கொண்டிருந்த புளியங்கொட்டைக்கலர் சட்டைப்பையனை மீண்டும் கண்டேன்.
எனக்கு முன்னால் இவன் எப்படி இங்கு வந்துசேர்ந்தான்? ஒருவேளை டூ வீலரில் யாருடனாவது தொத்திக்கொண்டு ஸ்பீடாக வந்திருப்பானோ என்ற நினைப்பில் அவனை நெருங்கினேன்.
“என்னப்பா தம்பி, முகமெல்லாம் வாடிப்போய் ஒரு மாதிரியாக இருக்கிறாய்! வாங்கிவந்த நகைகளில் எதையாவது தொலைத்து விட்டாயா? திருட்டுப்போய் விட்டதா? என்று விசாரித்தேன்.
ஆமாம் என்பதுபோலத்தலையை ஆட்டினான். எனக்கு அவனைப்பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது.
தொடரும்
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments