/* ]]> */
Oct 112012
 

( pic crtsy – plan-international.org )

மதிப்பெண் பட்டியலா குற்றப்பத்திரிக்கையா ?

நேற்று என் மகளின் பள்ளியில் நடந்த பெற்றோர் ஆசிரியர் சந்திப்புக்குச் சென்று வந்ததிலிருந்து அதோடு தொடர்புடையனவாக நிகழ்ந்த சம்பவங்களைப்  பகிர்ந்து கொண்டு விட வேண்டும் , மற்றவர்களின் கருத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்று மனது அனத்திக் கொண்டே இருந்தது .

” இன்றைக்கு பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு . நீயா அப்பாவா யார் வரப் போகிறீர்கள் ? ” என்று ஆரம்பித்த என் மகள் அந்தக் கேள்வியை முடிப்பதற்குள் … பிசு பிசுவென்று தூற ஆரம்பித்திருந்த அழுகை சோ என்று பெருமழையாய்ப் பெய்து தீர்க்க — “கலங்கிப்போனேன்” என்று சொல்வதெல்லாம் அந்த உணர்வை ஒரு வார்த்தையில் எழுதி விட  வேண்டும் என்று முயன்றதால் தான் .. அவள் அழுததைப் பார்த்து ஆடிப்போனேன் , எனக்கும் அழுகை பிய்த்துக் கொண்டது என்றெல்லாம் சொல்லிக் கொண்டே போக வேண்டியிருந்திருக்கும் . ” விஷயம் என்ன?  சொல்லு ” என்று வெகு நேரம் கழித்துத் தான் இயல்பாகப் பேச முடிந்தது .

அவளை இத்தனைக்கு அழ வைத்தது இது தான் – மதிப்பெண்கள் குறைவாகப் பெற்றிருந்த குழந்தைகளின் பெயரை ,  பாடத்தோடு மதிப்பெண்ணையும் சேர்த்து நோட்டிஸ் போர்டில் பின் செய்திருக்கிறார்கள் . இவள் கணக்கில் பாவம் என்னைப் போலவே எலி என்று கூட சொல்லிவிட முடியாது , மூஞ்சூறு என்று வேண்டுமானால் –  அது கோபித்துக்கொள்ளாத பட்சத்தில் சொல்லிக்கொள்ளலாம் ! ” நான் என்ன பண்றது எனக்கு மாக்ஸ் வரல ..அசிங்கமா என் பேரப் போட்டு மாக்ஸ் மார்க்கையும் நோட்டிஸ் போட்ல போட்டுட்டாங்க ” என்று ஆரம்பித்தாள் மறுபடி அழுகைக் கச்சேரியை . எந்த மாதிரியான சிச்சுவேஷனிலும்  சீரியஸ்னஸை சற்றே மட்டுப்படுத்தி அறிவு பூர்வமாய் யோசிப்பதும் நடந்து கொள்வதும் தான் சிறந்த ஆளுகைமுறை என்று அவளுக்கு நானே நேற்று போதித்திருந்தமையால் மட்டும் தான் எலி கிலி என்றெல்லாம் எழுத முனைந்தேன் .

வகுப்பறை வன்முறைகள் :

ஆனால் உண்மையில் ஒரு குழந்தைக்கெதிரான உச்சகட்ட வன்முறை இது என்பது என் திடமான கருத்து .

1. ஒரு குழந்தையின் மதிப்பெண் என்பது அந்தக் குழந்தை ,அதன் பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகம் ஆகிய மூன்று பேருக்கும் இடையிலான , அந்த மாணவியின் கல்வி முன்னேற்றம் அல்லது பின்தங்குதல் பற்றின ஒரு குறிப்பு , ஒரு புள்ளி விபரம்  ! இதை முழுப்பள்ளிக்கும் தெரியப்படுத்த வேண்டுவதன் அவசியம் என்ன ? கிட்டத்தட்ட ஒருவரின் டைரிக்குறிப்பை அம்பலப்படுத்தினதை ஒத்த செயல் இது அல்லவா ?

இங்கே மிக முக்கியமான ஒரு கேள்வி எழலாம் இதுவே சிறப்பான மதிப்பெண் என்றால் அனைவருக்கும் தெரியப்படுத்துவது குறித்து மகிழ்ச்சி அடைவீர்கள் தானே என்று ! கண்டிப்பாக — அப்படியான பட்சத்தில் இன்னமும் சிறப்பாக பெர்ஃபார்ம் செய்ய வேண்டும் என்ற ஆவல் அந்தக் குழந்தைக்கு உண்டாகும் ..

ஆனால்

2. குறைந்த மதிப்பெண்ணை அனைவருக்கும் தெரியப்படுத்தி இவர்கள் சாதிக்க முயல்வது எதை ? வெட்கப்பட்டு , வருங்காலங்களில் இது போன்று நிகழாமல் பார்த்துக்கொள்வார்கள் அந்த மாணவி மற்றும் அவள் பெற்றோர் என்பது தானா ?
நேரான , நாகரிகமான , நியாயமான சிந்தனைகளையும் எண்ணங்களையும் குழந்தைகளிடத்து ஏற்படுத்த வேண்டிய பள்ளிகளின் செயல்பாட்டில் இதை விட எதிர்மறையான நடைமுறை வேறென்ன இருக்க முடியும் ?

3. ஒரு மாணவியின் குறையை உரக்கச்சொல்லி அதைக் களைய முடியுமா ?

4. தனிமையில் அழைத்து அந்தக் குழந்தைக்கு என்ன விதமான பிரச்சினை என்று தெரிந்து கொண்டு அதைக் களைய முற்படாமல் இப்படி ப்ரூட்டலாக , அநாகரிகமாக நடந்து கொள்வது எவ்விதத்தில் உதவும் ? இப்படி நடந்து கொள்ளும் அதிகாரத்தை இவர்களுக்கு யார் கொடுத்தது ?

5. முன்னமே சிரமத்தில் இருக்கும் , என் மகளைப் போன்ற சென்சிடிவ்வான குழந்தைகளிடத்தில் அது இன்னமும் மோசமான விளைவுகளை அல்லவா ஏற்படுத்தும் ?

மதிப்பெண் பித்து ?

மீட்டிங்கின்  போது பார்வையிட நேர்ந்த சம்பவம் ஒன்றை இங்கு ஹைலைட் செய்தே ஆக வேண்டும் . மாணவன் ஒருவனின் தாய் தன் இன்னொரு குழந்தையான ,  மூளை வளர்ச்சியற்ற இளம் பெண்ணொருத்தியை உடன் அழைத்து வந்திருந்தார் . மிகு உத்வேகத்துடன் ஒவ்வொரு ஆசிரியராகச் சென்று பார்த்து மற்ற எல்லா பெற்றோரையும் போலவே – அப்போதைக்கு மட்டும் அல்லாமல் எப்போதைக்குமே உலகிலேயே மிக முக்கியமானது தன் குழந்தையின் படிப்பு மட்டும் தான் என்பது போன்ற ஒரு மனோபாவத்துடன் பேசிக்கொண்டிருந்தார் .

நான் வழக்கம் போல கூட்டம் கொஞ்சம் குறைந்ததும் நிதானமாகப் பேசிக்கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் இருந்தேன் . என்னருகில் அமர்ந்திருந்த , ரெஸ்ட்லெஸ்ஸாகவே இருந்த அந்த இளம்பெண் , ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து தன் தாயிடம் சென்று ஏதோ சைகையில் சொல்ல முற்பட்டாள் . அந்த அம்மாளோ கொஞ்சமும் அசந்தார் இல்லை . ” இரு இரு ” என்றபடியே பிசிக்ஸ் ஆசிரியையிடம் சென்று அமர்ந்து கொண்டார் .அந்தப் பெண்ணோ நட்ட நடு வகுப்பறையில் நின்றபடிக்கே சிறுநீர் கழித்து விட்டாள் ! இதில் கொடுமை என்னவென்றால் அந்தக் குழந்தையின் தாய் உட்பட வேறு யாருக்குமே அது கடைசி வரையில் கவனத்துக்கு வரவேயில்லை என்பது தான் . எப்படி உதவுவது என்று புரியாமல் அவள் தாயை அழைத்த எனக்கு  ” இருக்கட்டும் இதோ வருகிறேன் “  என்று சர்வ அலட்சியமான பதில் தான் கிடைத்தது ! ( தன் பெண்ணின் மீதான அக்கறைய விட ) எத்தனைக்கு மதிப்பெண்ணின் மீதான பித்து ஏறிப் போய் இருக்கிறது என்பதற்கான காட்சி பூர்வ நிரூபணம் இந்த சம்பவம் என்று தான் கருதுகிறேன் .

நாட் ஸ்கோரிங் குட் மார்க்ஸ் இஸ் நாட் எ க்ரைம் !

நோட்டிஸ் போர்டில் மதிப்பெண் ஒட்டப்பட்ட விவகாரத்தில் நான் என் மகளுக்கு சொன்னது இதைத்தான்

” ஆஷி வானம் இடிந்து கீழே விழுந்து விடாது ..உன் மதிப்பெண் என்பது இந்த பர்ட்டிகுலர் சப்ஜெக்ட்டில் , இந்தக் காலாண்டில் நீ பெர்ஃபார்ம் செய்ததற்கான ஒரு புள்ளி விபரம் அவ்வளவு தான் ..  நாட் ஸ்கோரிங் குட் மார்க்ஸ் இஸ் நாட் எ க்ரைம் ! தி வே யு ஹாவ் ஃபேர்ட் இஸ் ஃபைன் வித் மீ .. ஷுட் பீ தி சேம் ஃபார் யூ ஆல்ஸோ  .. நீ வாங்கும் மதிப்பெண் உனக்கும் நம் குடும்பத்துக்கும் , உன் நண்பர்களுக்கும் இடையில் உன்னைப் பற்றின எந்த மாதிரியான எதிர்மறை தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை ..

உன் குடும்பம் , உன் நண்பர்கள் அல்லாதவர்களின் உன்னைப் பற்றின மதிப்பீடு பற்றி ஓரளவுக்கு மேல் நீ கவலைப்பட வேண்டியதில்லை . இன்று உன் மதிப்பெண் தெரிந்து , ஒரு வேளை உன்னைப் பார்த்து சிரித்திருக்கலாம் என்று நீ நினைக்கும் நபர்களுக்கு அடுத்த நொடியே கவனிக்க வேறு வேலைகள் இருக்கும் .. அப்படி அது அத்தனை முக்கியம் என்று நீ வருந்தினால் வா நம்மால் முடிந்தவரை கணக்கை நம் வசப்படுத்த முயல்வோம் … அப்படியும் ஒரு அளவுக்கு மேல் முடியவில்லையா ? அடுத்த வருடம் +1 இல் கணக்கே இல்லாத க்ரூப் எடுத்துக்கொள்ளலாம் .. வாழ்கையை அழகாகவும் நல்லவிதமாகவும் வாழ்வதற்காகத் தான் படிக்கிறாய் .. படிப்பதற்காக  வாழவில்லை ” என்றேன் !

முடிவாக

அதே சமயம் நேர்மையாக ஒப்புக்கொள்ள வேண்டும் என்றால் …. பாம்பு தின்னும் அனைவருக்கும் மத்தியில் சைவ வேடம் பூணுகிறேனோ என்ற எண்ணம் என்னுள் எழாமல் இல்லை . அதிதீவிர ஆர்வம் காட்டும் பெற்றோருக்கிடையில் அபரிமிதமான நிதானம் காட்டுகிறேனோ , அம்மா சொன்னால் சரியாகத் தான் இருக்கும் என்று திட்டமாக நம்பும் என் குழந்தைகளை சரியான படி வழி நடத்துகிறேனா என்ற பதட்டமும் குற்ற உணர்வும் குடைந்து கொண்டே தான் இருக்கிறது !

ஒரு விவாதமாக இந்தப் பதிவு தொடர்ந்தால் பலருக்கும் உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன் …

..ஷஹி ..

 

 

 

 

 

 

 

 

மதிப்பெண் , பரிட்சை , பத்தாம் வகுப்பு , பொதுத் தேர்வு , பத்தாம் வகுப்பு பரிட்சை , தேர்வு , தேர்வுகள் , மார்க்ஸ், சமச்சீர் கல்வி

marks , violence , 10 th exams , public exams, samacheer kalvi

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>