/* ]]> */
Apr 102012
 

பசித்த பொழுது கவிதைத் தொகுப்பு

பசித்த பொழுது தொகுப்பின் கவிதைகளில் ஒரு தேர்ந்த கதைசொல்லியாகவோ, கனிவுமிக்க உரையாடற்காரனாகவோ  நெடுக பேசும் மனுஷ்யபுத்திரன் , கவிதையின்  இறுதிச் சில வரிகளில் மிகச்சாதுர்யமாக காட்சிமைப்படுத்திவிடும்  கவித்துவ தரிசனத்தாலேயே சமகாலத் தமிழ்க்கவிஞர்களில் மிக முக்கியமானவராகிறார் . சீரான இடைவெளிகளோடான படிக்கட்டுகளில் மென்மையாக வழுக்கியோடும் ஆறொன்று .. திடீரென்று அருவியாகி  உயரத்திலிருந்து திடுமென விழும்போது தெறிக்கும் திவலைகள் ஏற்படுத்தும் பரவசத்தை ஒத்தது,  பூடகமான குறியீட்டு மொழியற்றது போலவும் , மேலோட்டமான வாசகனுக்கும் எளிதில் புரிந்து விடுவது போலவும் தோற்றமளிக்கும் மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் .

மனுஷ்யபுத்திரன் கவிதைகளின் தனித்தன்மை

மிக இயல்பான, எளிமையான வார்த்தைகளால் தனது கவிதைகளைக் கட்டமைக்கும் மனுஷ்யபுத்திரன் அவற்றினுள் வீரியம் மிக்க தத்துவங்களையும் , நமது கலாச்சாரம் மற்றும் மனக்கட்டமைப்பின் புரையோட்டங்கள் பற்றின விமர்சனங்களையும் புகார்களையும் பதுக்கி வைத்திருந்து அவற்றின் மீது நம்மை விசாரணைகள் எழுப்பத்தூண்டி வரும் கவிஞர் .அன்றாட வாழ்வின் எளிய நிகழ்வுகளிலும் கவனம் கொள்ளவும், அவற்றின் மீதான  ஒரு முப்பரிமாண அவதானிப்பை தன் கவிதைகளில் வெளிப்படுத்துவதும் தான் மனுஷ்யபுத்திரனின் தனித்தன்மை . கவிதைகளின் எளிய சொல்லாடல்கள் பலரையும் படிக்கவும் எழுதவும் தூண்டுபவன என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய அம்சம் . இருண்மையும் புதிர்மையும் அற்றவை கவிதைகள் அல்ல எனும் கட்டமைப்பை உடைத்து தனக்கான ஒரு புது கவிதை மொழியை உருவாக்கிக் கொண்டவர் மனுஷ்யபுத்திரன்.

235 கவிதைகள் கொண்ட இந்தத் தொகுப்பில் பலவும் மிக்க கனம் கொண்டவையாகவும் மேற்கோளிடப்பட வேண்டியவையாகவும் உள்ளன ! மிகச்சிலவற்றைப் பற்றி  மட்டுமே எழுத இயல்வதிலும் , அதிலும் முழு நியாயம் செய்ய இயலாமல் போவது மற்றும் கவிஞனின் கவித்துவத்தின் உச்சத்தை உணர்த்த இயலாத , என் வார்த்தைகளின் போதாமையிலும் கலக்கமுறுகிறேன் !

“கவிஞரின் கவனம் எப்போதும் சிறிய விஷயங்களில் தான் அதிக கவனம் கொள்கிறது” என்கிறான் அரபுக் கவிஞன் அடோனிஸ் ! கண்ணாடியில் ஒரு நீர்த்துளி வாசித்த போது நினைவில் ஆடியது இந்த மேற்கோள் . ..

கண்ணாடியில் ஒரு நீர்த்துளி

ஜன்னல் கண்ணாடியின் வெளிப்புறம்

வழிந்தோடும் தண்ணீரில்

ஒரு துளியைப் பருகுவதற்கு

தவித்தலையும்

ஒரு குருவியின் சாகசம்

அளப்பரியது

கண்ணாடியில் உருளும் தண்ணீர்

எந்த அவகாசமும் தருவது இல்லை

எந்தக் கவனக்குறைவையும் அனுமதிப்பதில்லை

எந்த சலுகைக்கும் அங்கே இடமில்லை

எந்த ஒரு துளியும் பிறகு திரும்பக் கிடைப்பதுமில்லை

அந்தரத்திலிருக்கும் ஒரு பறவை

கண்ணாடியில் உருளும் ஒரு நீர்த்துளியை

துரத்தும் துயரம்

அளப்பரியது

இந்தக்  கவிதையில் காணக்கிடைக்கும் கவித்துவம் தான் எத்தனை காட்சிபூர்வமானது?  முதல் வாசிப்பில் அபூர்வமான , வாழ்வில் ஒரே முறை மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரு சந்தர்ப்பத்துக்குத் தான் கண்ணாடியில் உருளும் துளி நீர் உருவகமாக்கப்பட்டிருக்கிறது போல் தோன்றுகிறது .ஆனால் மறு வாசிப்புகளில் எல்லையற்ற சாத்தியக்கூறுகள் தெளியத்துவங்குகின்றன . கண்ணாடியில் உருளும் அந்த நீர்த்துளி , வாழ்வை மேம்படுத்தும் , அர்த்தம் கொடுக்கும் ஓர் உறவாகவும் , பின்னர்  இருத்தலைச் சாத்தியப்படுத்தும் அன்பாகவும் நம் கண்களின் முன்னே உருளத்தொடங்குகின்றது .

அமைதிக்குத் திரும்புதல் எனும் தலைப்பிலான கவிதை ஒன்றில் .. கோபமும் , எரிச்சலும் , வருத்தமும்  , கசப்புமான ஒரு உறவில் கூடவே இருந்து வந்த உயிர்ப்பு — வன்மம் வந்ததும் மரணித்ததை அத்தனை துயரோடு பதிந்திருக்கிறான் கவிஞன் .

புனித ஒப்பந்தம் எனும் கவிதை எனக்குத் தனிப்பட்ட முறையில் மிகப் பிடித்தமானது ..ஒரு பறவையும் வேடனும் செய்து கொள்ளும்  ஒப்பந்தத்தை ஒரு கதையாகச்சொல்லிச் செல்லும் இந்தக் கவிதை

……………………………………..

இறுதியாக

என்னைத் தொடும் போது

நீ வேடன் என்பதை மறந்து விட வேண்டும் என்றது

வேடன்

தான் ஒரு வேடனேயல்ல என்று சத்தியம் செய்தான்

பறவை அப்போது

என்றென்றைக்குமாக மறந்து போனது

தான் ஒரு பறவை என்பதை

என்று முடிகிறது .. பாடப்பட்டுள்ளது ஆணுக்கும் பெண்ணுக்குமாக யுகம் யுகமாய் நிகழும் ஒப்பந்தமும் மீறலும் மட்டும் தானா ?  கைவிடப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகங்களும் அவற்றிற்கு எதிரானவைகளும் நிகழ்த்திக்கொள்ளும்.. மீறப்படும் , ஒப்பந்தங்களுமா ?

குட்டி மழைக்காலம்

நெடுங்கோடை நடுவே

எப்படியோ வருகிறது

ஒரு குட்டி மழைக்காலம்

……………………………….

எனத்துவங்கும் இக்கவிதையும் , உலகை எரித்துச் சாம்பலாக்கும் கோடையான… அன்பின்மையையும் , தன்னலத்தையும் , துரோகத்தையும் , பிரிவையும்,  வேதனையையும் , குளிர்விக்கும் –அன்பின் ,காதலின், கருணையின் ஒரு குட்டி மழைக்காலத்தை

………………………….

ஒரு பசித்த விலங்கிற்கு

அதன் குட்டியைத் தின்னக் கொடுப்பதுபோல

எனதிந்தக் கைகளால்

தின்னக் கொடுத்தேன்

–என முடிகிறது . இறகு பிய்ந்து, பாலையில் விழுந்து கிடக்கும்  ஓர் சின்ன பறவை,  கிடைத்த சொற்ப நீர்த்துளியையும் தவற விட்டதைக் காட்சி ரூபமாக்கி இருக்கிறது இந்தக் கவிதை .

சேனல் 4 – பசித்த பொழுது தொகுப்பின் ஆக முக்கியமான , அற்புதமான ஒரு கவிதை . நீராலானது தொகுப்பிற்கு ஓர் அரசியைப் போல் பசித்த பொழுதின் சேனல் 4 ! சமகாலத்தமிழர் உலகின் தாங்கொணாத்துயரை , அரசியலை , தமிழர்களின் கையாலாகாத நிலையை இத்தனைத் துயர்தோய , இதயங்களில் இறங்கும் ஓர் கூர்வாளின் நுண்மையுடன் சொல்லும் கவிதை வேறெது ?

உலகத் தமிழர்கள்

இப்போது ஒரே ஒரு தொலைக்காட்சியையே

விரும்பிப் பார்க்கிறார்கள்

–என்று துவங்கும் அது

சேனல் 4

அவர்களுக்கு மிகவும் அந்தரங்கமான

ஒரு கொடுங்கனவைத்

தொடர்ச்சியாக ஒளிபரப்புகிறது

…………………..

ஒரு குரூரத்தைக் காட்டுவதை விட

அதன் விளைவுகளைக் காட்டுவது

ஒரு நுட்பமான உத்தி

………………………

இந்த உலகின் மனசாட்சி என்பது

ஒரு பாறையைப் போல மாறிவிட்டது

நாம் அதை ஒரு சிறிய சுத்தியலால்

இப்போதுதான் அடிக்கத் தொடங்கியிருக்கிறோம்

……………………….

ஒரு புதிய பெண்ணோ

ஒரு புதிய சிறுவனோ

வெட்டவெளியில்

தலையில் துப்பாக்கியை வைத்து

சுடப்படும் போது

…………………………

இந்த உலகம் நீதியை நோக்கி

ஒரு அடி உண்மையாகவே நகர்ந்துவிடும்

என்று அவர்கள் நம்புகிறார்கள்

……………………………

அது ஒரு படம் மட்டுமே

என்பதை அவர்கள் அறிவதில்லை

… …………………………..

சதாம் ஹூசைன் தூக்கிலிடப்படுவதை

யாரோ ஒருவர் படம் எடுத்தார்

………………………………….

புஷ்ஷின் ஒரு தனிப்பட்ட தேவைக்காகத்தான்

அது படம் எடுக்கப்பட்டது

புஷ் தனக்கு விரைப்பு ஏற்படாதபோது

ஊக்க மருந்துகளுக்கு பதில்

இந்தப் படத்தைப் பயன்படுத்த விரும்பினார்

ஆனால்

உலகமயமாக்கலின் விளைவாக

அந்த மருந்து நம் அனைவருக்குமே கிடைத்தது

சேனல் 4ன் இந்தத் திரைப்படங்கள்

ஒருவேளை ராஜபக்ஷேவுக்காகவோ

அவரது சகோதரருக்காகவோ

……………..

தயாரிக்கப்பட்டதாகவும் இருக்கலாம்

………………………

வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணக்காட்சிகளும்

யாரிடமாவது இருக்கக்கூடும்

……………………………

இவ்வளவு மௌனமாக

நம்மால் அழிய முடியாது

……………………………

என்று பேசிப் போகிறது !

ஈழப்போரின் போது நிகழ்ந்த கொடூரக்கொலைகள் , மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் என்று சகலைத்தையும் வாசகனின் மனதில் கடுமையான குற்றவுணர்வும் ,ஆவேசமும்  மேலோங்கும் வண்ணம் பேசும்  இந்தக் கவிதை நிச்சயமான ஒரு வரலாற்றுப் பதிவு .

ஒரு கவிஞனின் மிகமுக்கியப் பணி வரலாற்றைப் பதிவதும் அதன் மீதான விசாரணையைத் துவக்கி வைப்பதும் .

மனுஷ்யபுத்திரன் இந்தக் கவிதையைப் பாடி அந்தப் படத்தில் இப்படியாகப் பார்க்கப்படுவோம் என்று தெரியாமலே பங்கேற்றவர்களுக்கு ஒரு சிறிய நியாயத்தை வழங்கியிருக்கிறார் ! சமகால அரசியலை, வாழும் உள்நாட்டு  மற்றும்  உலகத்தலைவர்களை நகையாடவும் அவர்கள் பற்றின எள்ளல் தொனிக்கும் கவிதைகள் எழுதவும் திடம் இருக்கிறது இவரிடம் !மனுஷ்யபுத்திரன் எறியும் ஒவ்வொரு வரியும் ஒரு சப்பாத்து வீசல் , அவை அவற்றின் இலக்குகள் சென்று சேரும் !

வாசகர் சந்திப்பு  கவிதைகள் ஒரு எழுத்தாளன் சந்திக்கும் பிரச்சினைகளைப் பேசுகின்றன .. எப்படியான நெருக்கடிகளுக்கு, கேள்விகளுக்கு , எதிர்பார்ப்புகளுக்கு,எதிர்ப்புகளுக்கெல்லாம் ஒரு கவிஞன், எழுத்தாளன் ஆளாகின்றான் . எவைகளுக்கு மத்தியில் அவன் தொடர்ந்து செயல்படவேண்டியுள்ளது என்பதையெல்லாம் கோபம் ,  சுயஎள்ளல், விசாரணை ,நகைப்பு என்பவற்றின் கனத்தோடு பேசும் இக்கவிதைகள் கவிஞனின் அகத்தனிமை தாளாமல்  ததும்புகின்றன .

மின்மினிகளின் வீடு - குழந்தைகள் தாம் இன்னமும் இவ்வுலகில் எஞ்சியிருக்கும் நம்பிக்கைகள் . ஈவிரக்கமும்,  கருணையுமற்ற இவ்வுலகில் மீதமிருக்கும் ஆசுவாசத்தின் ஒரு துளி . கொடுமைகள்,  கடின சித்தங்கள் மற்றும் தன்னலத்தின் சுமை தாங்காமல் தடுமாறும் மனித வாழ்வை தம் சின்னஞ்சிறு விரல்களால் தூக்கி நிறுத்துபவை குழந்தைகளே என நிறுவும் மிக்க அழகான கவிதை .

பத்து வருடங்களாக

குடியிருக்கும் இந்த வீட்டில்

பக்கத்து வீட்டுக்காரர்கள் யாரென்று தெரியாது

…………… ………..

அம்மு ஒரு நாள்

முனைவீட்டிலிருந்து

ஒரு குழந்தையை வசியம் செய்து

அழைத்து வந்துவிட்டாள்

…………………….

கருங்கல்லால் கட்டிய சுவர்கள்

குழந்தைகள் கைபட்டு உடைகின்றன

வெளிச்சம் வராத அறைகளுக்குள்

இப்போது

மின்மினிகள் வருகின்றன

இந்தக் கவிதையெனும் பூச்சாடியில் மற்ற வரிகள் புறா இறகுகள் என்றால் இடையில் வரும்

ஒரு பந்தயப் புறாவை வளர்த்தால்

அது பத்துப் புறாக்களை கொண்டுவந்து விடுகிறது

எனும் வரிகள் மயிலிறகுகள் ! சரியான இடத்தில் கச்சிதமாக வந்து செருகிக்கொண்டு பூச்சாடியல்ல இது மணிமுடி என்று நிறுவுகின்றன !

வாசகனை நெருங்க

வாசகன் திறந்து பார்க்க அஞ்சும் வாழ்வின் இருள் மிகுந்த பக்கங்களைப் பலவந்தமாகப் பிரித்துப் பார்த்து , காட்சிக்கும் வைத்திருக்கிறார் மனுஷ்யபுத்திரன் . வேட்டையின் போது  அடிபட்ட புலியொன்று ,  தப்பின ஓய்வில்,  தன் காயத்தைத் தானே நக்கும் போது அனுபவிப்பது போன்றதொரு வலி உண்டாகின்றது பசித்த பொழுதின் கவிதைகளைப் படிக்கும் போது .  ஒரு மனிதனை நெருங்குவதற்கு சக மனிதனுக்கு உரையாட வேண்டியிருக்கிறது , புன்னகைக்க , அணைத்துக்கொள்ள , ஆறுதல் அளிக்க , தலையைக் கோத , கைகுலுக்க வேண்டிவருகிறது ..மனுஷ்யபுத்திரனுக்கு கவிதை பாட வாய்த்திருக்கிறது !

இது தனிமையில் வாடும் ஆத்மா – துணைக்காகவும் , புறக்கணிக்கப்பட்டவன் – அன்புக்காகவும், ஒடுக்கப்பட்ட சமூகம் -  நியாயத்துக்காகவும், நிராகரிக்கப்பட்டவன் -  காதலுக்காகவும் , வியாதியஸ்தன் -ஒரு சொஸ்தக் களிம்புக்காகவும் பசித்த பொழுது !

..ஷஹி..

 

 

tags

manushya puthiran, uyirmmai, pasitha pozuthu , eezam, srilanka issue, kavithai , tamil poems, tamil poetry , manushya puthran kavithaigal, pasitha pozuthu poems, pasitha pozuthu kavithaigal, arasi, vaasikalaam vaanga, book review

மனுஷ்ய புத்திரன் , உயிர்மை, பசித்த பொழுது , தமிழ் ஈழம், சேனல் 4 , தமிழ் கவிதைகள் , தமிழ் கவிதைத் தொகுப்பு , மனுஷ்யபுத்திரன் கவிதைகள் , பசித்த பொழுது கவிதைகள் , அரசி , நூல் விமர்சனம் , புத்தக விமர்சனம் , வாசிக்கலாம் வாங்க , மதிப்புரை

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>