
இந்தித் திரையுலகின் முண்ணனி நட்சத்திரமாக ஜொலித்தவர், நடிகை மாதுரி தீட்சித். இவர் 1999-ல் அமெரிக்கவாழ் இந்திய டாக்டரான ஸ்ரீராம் நேனாவை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பின்னும் மாதுரிக்கு திரைப்பட வாய்ப்புகள் தொடரவே செய்தன. அவருடைய பரம ரசிகரும் பிரபல ஓவியருமான எம்.எஃப். ஹுசைன் தயாரித்த ‘கஜகாமினி’, ‘லஜ்ஜா’ , ‘தேவதாஸ்’ முதலிய வெற்றிப் படங்களில் திருமணத்துக்குப் பின்தான் நடித்தார்.

பொதுவாக நடிகைகளுக்கு திருமணம் ஆகிவிட்டால், மவுசு இருக்காது. அதற்கு மாதுரி ஒரு விதிவிலக்கு. இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவருக்கு இன்றும் ரசிகர்களும், வாய்ப்புதரக் கெஞ்சிக்கொண்டுள்ள தயாரிப்பாளர்களும் உண்டு. ஆனால், தேடிவந்த படவாய்ப்புகளை மறுத்து, ” கணவர், குழந்தைகளைப் பிரிந்து என்னால் வாழ முடியாது.” என்று உறுதியாக மறுத்து வந்தார், மாதுரி. இப்போது அமெரிக்க வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு இந்தியா திரும்பியுள்ளார்.
அமெரிக்காவில் பல லட்சம் சம்பளம் வாங்கும் இருதய சிகிச்சை நிபுணரான கணவர் ஸ்ரீராமும் மும்பை திரும்புகிறார் என்று கூறுகிறார். ‘என் குழந்தைகள் இந்தியக் கலாச்சாரத்தில் வாழவேண்டும் ‘ என்று கூறுகிறார். அமெரிக்காவில் டென்வர் நகரில் ஒரு சொகுசு பங்களா இருக்கிறது. அதையும் விற்றுவிட்டதாகத் தகவல். அமெரிக்காவில் பலகோடி முதலீட்டில் ஒரு வணிக வளாகத்தை விலைக்கு வாங்கியிருக்கும் மாதுரி தம்பதியினருக்கு இப்போது என்ன நேர்ந்தது? பலரும் பலவிதமாக குழப்பிக்கொள்கின்றனர்.

கணவன்-மனைவிக்குள் மோதலா? தற்போது அமேரிக்காவில் பரவலாக ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியே மாதுரி தம்பதியினரின் இந்த முடிவுக்குக் காரணமா? எதுவும் புரியாத குழப்பத்தில் அனைவரையும் தள்ளிய, 43 வயதாகும் மாதுரிக்கு ரசிகர்கள் மத்தியில் இன்னும் செல்வாக்கு குறையவில்லை.

கதாநாயகி வாய்ப்பு இல்லையென்றாலும், குணச்சித்திர வேடங்களைக் கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராகவே உள்ளனர். தற்போது சின்னத்திரையில் ‘ ஜலக் திக்லஜா’ என்ற நிகழ்ச்சியின் நடுவராக இருக்கும் அவர், மெதுவாக பல சின்னத் திரை நிகழ்ச்சிகளிலும் பின் பெரிய திரையிலும் நுழையத் தயாராகிவிட்டார்.



