/* ]]> */
Nov 282011
 

“மொழியெனும் தேவதையோடு எப்போதும் இருக்கும்” சுசீலாம்மாவின் “தேவந்தி” . 1979 முதல் 2009 வரை தொடர்ந்து வெளிவந்த 36 சிறுகதைகள் இத்தொகுப்பின் கீழ் அடங்குகின்றன .

குடும்ப வாழ்வெனும் அமைப்பு பெண்களிடத்தில் உண்டாக்கும் வெற்றிடத்தையும், ஆணால் காயமடைந்து வரும் பெண்களின் நிலையில் பெரிதாக உண்டாகிவிடாத உயர்வையும் , சுரண்டப்படும் நல்லுணர்வுகளையும் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன சுசீலாம்மாவின் சிறுகதைகள் .

முக்கியமான கதைக்களனாக தான் வெகுவாக நேசித்த ஆசிரியப்பணியையும் கையில் எடுத்திருக்கிறார் . தனிப்பட்ட முறையில் எனக்கு இவ்வாறு ஒரு ஆசிரியரை கதாநாயகியாகக் கொண்டிருக்கும் அவரின் கதைகள் வெகுவாகக் கவர்ந்தன.

கல்வியின் பெருமை பேசும் கதை , காதலின் மகத்துவம் பேசும் கதை , மத நல்லிணக்கம், சமூக நீதி உரைக்கும் கதைகள் , சீதா ராமன் கதை ,சமூக விழிப்புணர்வை வேண்டும் கதைகள்  என பல துறைகளிலும், கதைக் களன்களிலும் அவருடைய அனுபவமும், மொழி மற்றும் இலக்கிய மேதமையும் –தண்ணீருக்கு மேல் தலையசைக்கும் தாமரைகளைப் போல் இயல்பாக ,மனதிற்கு இனியதாக வெளிப்படுகின்றது .

எத்தனையோ பரப்புகளில் பரந்து விரிந்திருக்கும் அவருடைய ஞானம் ஒவ்வொரு தளத்திலும் அதனுடைய முத்திரையைப் பதித்துத் தான் இருக்கிறது என்றாலும் பெண்ணியம் பேசும் அவருடைய கதைகளில் அவருடைய வழக்கமான மென்மையான நடை சற்றே மாறுபட்டு அறச்சீற்றம் கொண்டு ஒரு பெண் புயலென– அவர் மனதின் அடியாழத்திலிருக்கும், பெண்மைக்கு எதிராக காலம் காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் அக்கிரமங்களைக் கண்டு கொதிப்புற்றிருக்கும் ஒரு மாறுபட்ட சுசீலாம்மாவைக் காணலாம்.

தேவந்தி-

கதைதொகுப்பின் தலைப்பிலான கதை . படித்து முடித்துப் பல மணி நேரம் வரை மிகுந்த துயருக்கு எனை ஆளாக்கின ஒன்று . பள்ளியில் சிலப்பதிகாரம் பயின்றிருக்கிறேன் தான் . தேவந்தியைப் பற்றி ஒன்றும் அறிய மாட்டேன் . இந்த சிறுகதை படித்ததில் இருந்து கண்ணகியையும் விட கொஞ்சம் அதிகப்படியான ஆதுரம் எழும்புகிறது தேவந்தியின் மீது. காரணம் இயல்பான ஒன்று தான். சமூகத்தினால், முக்கியமாக இந்தியச் சமூகத்தினால் –கொடுமைகளுக்கு, நிராசைகளுக்கு, அவலங்களுக்கு ஆளான ஆளாகிக்கொண்டிருக்கின்ற (இனியும்…? )அத்தனை பெண்களின் ஒரே படிமமாக விளங்குகிறாள் தேவந்தி .

கண்ணகியாவது சில காலம் கணவனோடு இன்புற்று இருந்தாள், அவள் கதை உலகறிய பாடப்பட்டது, கற்புக்குக் குறியீடாக மாறினாள். கும்பிடப்படுகிறாள்!ஆனால்–  கணவன், முட்டாள்தனமாக ,தானே தெய்வம் என்று நம்பிவந்ததால், கட்டின மனைவியைத் தீண்டவும் இல்லாத பேடியாக அமையப்பெற்று அதை வெளியில் சொல்லாமலே வாழ்ந்து வந்த தேவந்தியின் கதை யாருக்குமே தெரியாமல் போய் விட்டதே?

இவள் போல வெளியில் சொல்ல முடியாத துயரங்களோடு வாழ்ந்து மறைந்த கோடிக்கணக்கான பெண்களுக்கு சுசீலாம்மாவால் இயன்ற அஞ்சலி இது  என்று தான் அவருடயை இந்த சிறுகதை பற்றி சொல்ல வேண்டும்.

தொகுப்புக்கான பெயராக தேவந்தி என்பதை தெரிவு செய்து சர்வசாதாரணமாக ஒரு சாதனையைச் செய்திருக்கிறார் சுசீலாம்மா.

 புதிய பிரவேசங்கள் -

இன்னொரு மிக முக்கியமான கதை .தன் கற்பின் திண்மையை ,அப்பழுக்கற்ற தன்மையை சீதை உலகறிய நிரூபிக்கச்செய்து விடுவதற்காக மனதைக் கல்லாக்கிக்கொண்டு அவளை சோதிக்க விழைகிறான் ராமன் .

பதிபக்தி என்ற சொல்லுக்கொரு உதாரணமாகத் திகழும் சீதையோ கணவனின் இந்த ஆணைக்குக் கட்டுப்பட மறுக்கிறாள் !

மனைவியிடம் ஏற்படும் அற்ப சந்தேகங்களுக்குக் கூட ராமனின் பெயரால் பின் வரும் காலங்களில் ஆண்கள் ஆணையிட்டு விடக்கூடிய எரியூட்டல்களைத் தவிர்த்து விடுவதற்காக !

வித்தியாசமான இந்த சிந்தனை வெகு நிறைவான ஒரு சிறுகதையாகி இருக்கிறது . அன்று தொட்டு இன்று வரையிலும் பெண்கள் சந்தித்து மீளும் எரிகளன்கள் தான் எத்தனை எத்தனை !

தடை ஓட்டங்கள் -

என் மனதுக்கு மிக நெருக்கமான கதை . படைப்பூக்கம் கொண்டு, அதை வெளிப்படுத்தி விடத் துடிக்கும், ஒவ்வொரு பெண்ணின் சார்பாகவும் எழுதப்பட்டிருக்கும் கதை . விழிகளின் கடையில் கண்ணீர் பூக்கும் வண்ணம் தீட்டப்பட்டிருக்கும் சிறுகதைச்சித்திரங்கள் இதே தொகுப்பில் பல இருந்தாலும் ,

ஓவென்ற ஒரு கதறலை எழுத்தார்வம் கொண்டு, தன்னை வெளிப்படுத்திக்கொள்ள இயலாமல் தவிக்கும் ஒவ்வொரு பெண்ணின் மனதிலிருந்தும் நிச்சயம் வெளிக்கொணரும் கதை . அவருக்குத் தானே தெரியும் இவ்வளவுக்கு எழுத்துலகில் பிரயாணிக்க அவர் தாண்டி வந்த தடைக்கற்கள் அவரின் உள்ளும் புறமும் உண்டாக்கி விட்ட காயங்களை ?

மகன் தன் தாய்க்கு எழுதுவதாக வரும் ஒரு கடிதத்தின் ஒரு வரி போதும் இந்தக் கதையின் கனத்தை அளந்து விட..

” உங்களில் கொஞ்சத்தைத் தள்ளி வைத்துவிட்டுத்தான் எங்களை நீங்கள் உருவாக்கியிருக்கிறீர்கள் ! அம்மா ..! இனியாவது தொலைத்ததைத் திரும்ப எடுங்கள் ! “

அருமையாக, தன் தாயைப் புரிந்து கொண்ட ஒரு தனயன் எழுதியிருக்கும் கடிதத்தின் சில வரிகள் அவை . ஆனால் எத்தனை பெண்களுக்கு இப்படியான கொடுப்பினை கூட வாய்த்துவிடும் என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி!

உயிர்த்தெழல் -

பலாத்காரம் செய்யப்பட்டு விடுவதால் மட்டும் ஒரு பெண் களங்கப்பட்டு விடுவதில்லை ,

தெரு நாய் ஒன்று கடித்துவிட்டால் அதற்கு எப்படியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக்கொள்வோமோ ..எத்தனை வருந்துவோமோ அப்படி ஒரு சிகிச்சை,அதே அளவு  வருத்தம் மேற்கொள்ளுதல் போதும் .அதற்கு மேல் ஒரு துளியும் அது குறித்து வருந்தியோ விபரீதமாக யோசித்தோ தன் நிலையில் இருந்து எந்தப் பெண்ணும் இறங்க வேண்டியதில்லை என்னும் கருத்தை ஆணித்தரமாக சமூகக்கட்டுப்பாடு எனும் அரக்கனின் முகத்தில் அறைந்து பேசியிருக்கும் கதை இது .

கதை சொல்லப்பட்ட காலம் 1999 என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒரு முக்கிய அம்சம்.

ஆத்தா -

தாய்மை எனும் தவத்திற்கு வரமாக வாராமல் ,சாபமாகப் பிறந்து விட்ட தன் ஒற்றை மகனை , தீவிரவாதிகளின் கைகூலியாக மாறிவிட்டவனை , தன்னை வாழவைத்துக் கொண்டிருக்கும் ஊர் மக்களின் நன்மை கருதி போலீசில் பிடித்துக் கொடுத்த வீரத்தாய் ஒருத்தியின் கதை .

கதையின் ஊடாக வெளிப்பட்டிருக்கும் வீரமும் ,சிறுமை கண்டு பொங்கும் ஆவேசமும் சுசீலா அம்மாவின் ஆழ்மனத்தில் கனன்று வந்திருக்கும் சிறு பொறியினுடையதே  தான் எனச் சொல்லவும் வேண்டுமோ?

கன்னிமை -

1987 இலேயே எழுதபட்டிருக்கும் ஒரு பெண்ணியச்சித்திரம். தன் கன்னிமை சந்தேகிக்கப்பட்டதால் தன் மணவாழ்வை துறக்கவும் துணிந்த  கல்யாணியின் கதை . பெண்ணடிமைத்தனத்துக்கு ஒரு சவுக்கடி .

 

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்

போஒய்ப்  பெறுவ எவன்.

என்றாரே வள்ளுவர் .

மணவாழ்வின் அவலங்கள், மகிழ்ச்சிகள் எதிர்பார்ப்பு மற்றும் ஏக்கங்களை முன் வைக்கும் கதைகளின் வரிசையில் முதலில் வருவது:

ஓர் உயிர் விலை போகிறது -

கஸ்தூரி ,புற்றுநோயால் உடலும் மனமும் ரணமான நிலையிலும் கூட கணவன் தன்னிடம் கேட்டுக்கொண்ட படி இன்னொருத்தியை மனைவியாக்கிக் கொள்ள சம்மதம் தெரிவிக்கும் பெண் .

அவள் இறந்ததும் கொள்ளியிடக் கூட வராதவன் அவளுடைய பி.எஃப் , கிராச்சுவிட்டி யை கிளெய்ம் செய்ய வந்த கொடுமையை விவரிக்கும் கதை . ஏதோ கற்பனை என்று நாம் நிச்சயம் அலட்சியம் செய்ய முடியாதபடிக்கு எங்கோ தான் கண்ட , கேட்ட செய்தி தான் இது என்றெண்ணும் படி விவரித்திருக்கிறார் ஆசிரியர் .

மண வாழ்வில் முதல் அடி எடுத்து வைக்கும் முன்னரே பல அடிகள் முன்னெச்சரிக்கைப் படிகளில் வைத்திருக்க வேண்டியதன் கட்டாயத்தைப் பெண்களுக்கு உணர்த்தும் சிறுகதை. கடுமையாக மனதைப் பாதிக்கக்கூடியது .

நான் பேச நினைப்பதெல்லாம் -

காதல் மணம் புரிந்து ,மணவாழ்வெனும் நீரோட்டத்தில் வெவ்வேறு திசைகள் நோக்கி அடித்துச் செல்லப்படும் தோணிகளாகிப் போன தம்பதியர் மீண்டும் மனமொத்து ஒரே வழிசெல்லும் பிரதிக்ஞை செய்து கொள்ளும் கதை . முடிவு பாசிடிவ்வாக இருப்பது அப்பாடா எனும் ஆசுவாசம் .

தரிசனம் -

வாழ்நாளெல்லாம் மனைவியை முள் மேல் இருத்தின ஒரு கணவன், தான் இறக்கும் தறுவாயில் அவளுடைய பெருமையை ஊர் அறியப் பேசுவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ஏதோ அனுபவித்து வந்த ரணங்களின் காயத்தில் மலரால் ஒற்றினார் போன்றதொரு முயற்சி தான் என்றாலும் பெண்களின் மனம் குமுறத்தான் செய்யும் .

இப்படி ஒரு குமுறலை எதிர்பார்த்து தான் ஆசிரியர் எழுதினாரோ என்னவோ?

பொம்பளை வண்டி -

அடக்கப்பட்டே வந்திருக்கும் ஒரு பெண்ணின் மனம் சந்தர்ப்பவசத்தால் ஆண்களுக்கு எதிராக பேசக் கிடைத்த ஒரு அற்ப வாய்ப்பில் ,தன் மனம் வெடிக்க வெறுப்பைக் கக்கும் கணத்தின் மிக அழுத்தமான பதிவு .

இம்மாதிரியான ஒரு சில நொடிகளை கவனத்தில் கொண்டு  வந்து   எழுத்தில் பதிந்து விடுவதென்பது லேசானது அல்ல!

சொல்லில் புரியாத சோகங்கள் -

எத்தனை அழுத்தமான கனமான தலைப்பு ! அதற்குச் சற்றும் குறையாத அழுத்தம் கதையிலும். எழுதப்பட்டது 2004 இல் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயம் .

பணிக்குச்செல்லும் ஒவ்வொரு இந்தியப்பெண்ணும் ,ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஆளாக வேண்டிய ஒரு குற்றச்சாட்டுக்கு ஆளாகிறாள் கதை நாயகி ஆசிரியை உமா . வேறென்ன குற்றம் சாட்டி விட முடியும்? குடும்பத்தை கவனியாமல் பணி செய்யக் கிளம்புகிறாள் என்பதே தான் .

நேசித்து வந்த ஆசிரியப் பணியை கணவனுக்காக விட்டு விடவும் துணிகிறாள் உமா . ஆனால் எதிர்பாராமல் அவனுக்கு ஒரு விபத்து நேர்ந்து விட மீண்டும் பணியில் சேருமாறு கணவன் ஆணையிடுகிறான். மனம் ஒப்பாமல் தான் எடுத்து விட்ட முடிவில் உறுதி கொள்கிறாள் உமா.

சபாஷ் என்று பெண்கள் சிலாகித்து விடுமாறு அசத்தலான முடிவு . நம் பெண்களுக்கு எப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் குடும்ப வன்முறையின் அருமையான ஒரு பதிவு.

இருவேறுலகம் இதுவென்றால் -

மிகவும் வித்தியாசமான ஒரு கதைக்களன் . சினிமா வின் மீது மிகுந்த காதல் கொண்ட இருவர் வாழ்விலும் இணைந்து , வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்ததை மிக உருக்கமாக சொல்லியிருக்கிறார்.

கடைசியில் நோயுற்றிருந்த கணவன் இறந்தே விட, தங்களை சுற்றி வசிக்கும் நல்லிதயங்களுக்கு பாதிப்பு நேரக்கூடாது என —தன் சோகத்தை மறைத்து அவர்களுடன் பணிக்கு சென்று திரும்பிவிட முடிவு செய்கிறாள் ரத்னா – நாயகி .

சமீபத்தில் வெளியான ஆட்டோகிராஃப் படத்தில் சிநேகா சேரனுக்காக தன் தாய் மறந்ததை சொல்லாமல் தவிக்கும் சோகக் காட்சி நம் கண்களின் முன் நிழலாடுகிறது . சுசீலாம்மா கதையை எழுதியது 1995 இல் !

ஆசிரியப் பணியெனும் கிரீடத்துக்கு சேர்க்கும் வைரங்களாய் ஒளிரும் மண்ணில் விழாத வானங்களின் கந்தசாமி ஐய்யாவும் ,

செய்து வரும் ஆசிரியப்பணிக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டோமோ என ஆத்மவிசாரணை மேற்கொள்ளும் ஒரு விழிப்பின் புலரியில் கதாநாயகி.

அதே சமயம் இப்படிப்பட்ட ஒரு புனிதப்பணிக்கே கேடு என்று நினைக்கத்தூண்டும் விதமானவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் எனும் உண்மையை உரக்கச்சொல்லும் மைனஸ் 10 மதிப்பெண் = ஒரு வாழ்க்கை !

இன்னமும் இருக்கிறது மனிதம் இனியும் ஓங்கி வளரும் மானுடம் என முழங்கும் மானுடம் வென்றதம்மா .

விட்டு விடுதலையாகி -

இன்னமொரு உலுக்கும் கதை . நாயகி அலமுவின் நிலை கிட்டத்தட்ட அதே போன்ற சூழலில் வாழ நேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் சரியாய் உணர முடியும் . பெண் படும் பாட்டை ரொம்பவும் ஷார்ப்பாக பதிந்திருக்கிறார் ஆசிரியர்.

கடைசியில் இயற்கையும் அவளுக்கு எதிராய் ஒரு சின்ன சதி செய்து விட அதை அலட்சியம் செய்து அவள் நோக்கம் நிறைவேற்றிக்கொள்ள நாயகி செய்யும் முடிவில் பஞ்சாய்ப் பறக்கிறது நம் மனதின் பாரமும்.

கண் திறந்திட வேண்டும் -

பாலுமகேந்திராவின் கதை நேரம் பகுதியில் படமாக்கப்பட்டு “நான் படிக்கணும்” எனும் பெயரில் ஒளிபரப்பான கதை .

இந்தப் படத்தைப் பார்த்திருக்கிறேன் என்றாலும் அப்போது சுசீலாம்மாவைப் பற்றி நான் அறிந்திருக்கவில்லை .

குழந்தைத்தொழிலாளியாகிவிட்ட ஒரு சின்னஞ்சிறுமி தன் கல்விக்கண்களைத் திறந்து கொள்ள ,தானே எடுத்த முடிவை உருக்கமான ஒரு சிறுகதையாக எழுதியிருக்கிறார் ஆசிரியர் .

ஒற்றைச்செருப்பையும் கூட பாதுகாத்து வைக்கவேண்டியிருக்கும் நிலையில் வாழ்பவர்களையும் தொலைந்து போன அந்த செருப்பை வாங்க படாத பாடு பட்ட ஒரு ஏழையின் நிலையையும் பதிவு செய்திருக்கும் இழப்புகள் எதிர்பார்ப்புகள்.

வளர் பிராயத்தில் சந்திக்கவேண்டியிருக்கும் பிரிவுகள் ஒரு சிறுமியில் ஏற்படுத்தும் துயரத்தின் பதிவு பருவங்கள் மாறும் என்றால்…

அதே பதின் வயதில் உயிராய்க் கருதி வளர்த்த நட்பு, குடும்பக் கூட்டுக்குள் அடைபட வேண்டிவரும்போது எப்படி ஒரு மாற்றம் அடைய வேண்டியிருக்கிறது என்பதைச் சொல்லும் சந்திப்பு .

விபத்தில் கணவனைப் பறிகொடுத்து விட்டதால் அதே பயத்தின் எச்சங்களையெல்லாம் பிள்ளைகளின் தலையில் சுமத்தி ,தானும் தவிப்புறும் ஒரு விதவைத் தாயின் தவிப்பின் பதிவாக முகமற்ற பயங்கள் ..

சூழ்நிலை காரணமாக வேலைக்குச் செல்லும் தாய்மார் தம் பிள்ளைகளை பிறரிடம் விட்டுச்செல்வதில் உள்ள  துயரத்தின் திவளைகள் தெறிக்கும் தாயும் தன் குழந்தையைத்தள்ளிடப் போமோ ..?

காத்திருத்தல் -

ஏறக்குறைய அனைவரும் அனுபவித்திருக்கும் சில மணிநேரங்களின் அற்புதமான பதிவு . மருத்துவர் ஒருவரை குழந்தையின் நோய்மைக்காகக் காணக்காத்திருக்கும் ஒரு தம்பதியின் உளக்குமுறல் இது . மிக யதார்த்தமான எழுத்தும் ,அப்பட்டமான உண்மையும் கூட .

யானை டாக்டர் என்ற ஜெயமோகனின் சிறுகதை ஒன்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் பள்ளிகள் கல்லூரிகளில் விநியோகிக்பபட்டதாம் . இந்தச் சிறுகதையின் பதிப்பை மருத்துவர்களிடம் விநியோகிப்பது சாலப்பொருத்தமானது . மிகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் !

வைகை பெருகி வர -

வெள்ளம் சூழ்ந்து தன் கனவு மாளிகையான குடிசையை அடித்துச்சென்று விடுமோ எனக்கலங்கும் ஏழைப் பெண்ணொருத்தியின் கலங்க வைக்கும் கதை .

அரங்கனையே மணப்பேனென்று நோன்பிருந்த, சூடிக்கொடுத்த சுடர்கொடியின் கொஞ்சு தமிழ்காவியம் மானிடவர்க்கென்று பேச்சுப் படில் .

காசு -

இறை நம்பிக்கை எனும் பெயரில் செய்யப்படும் காணிக்கைகள் மானிடர்க்கானவை தான் எனச்சொல்லும் சிறுகதை .

குழந்தைகள் அனைவருக்கும் கட்டாயக்கல்வி என்பது வெறும் பேச்சளவில் தான் உள்ளது என்று சொல்லும் ஆதங்கத்தின் வெளிப்பாடு மகேசுகளும் மகேஸ்வரிகளும் .

மதநல்லிணக்கத்தோடு உடலுறுப்பு தானத்தின் உயர்வைப் பேசும் சங்கமம் .

நீதி நிலை வழுவினேனா

என்று ராமனே ஆத்மவிசாரணையில் தன்னை சோதித்துக்கொள்ளும் சாத்திரம் அன்று… சதி !

சமூகத்தில் பரவலாகக்காணப்படும் வறுமை தொடர்பான அவலங்களைப் பிட்டுப் பிட்டு வைக்கும் மனிதனைத்தேடுகிறேன் .

அரசியல் தலைகளும் அக்கினிக்குஞ்சுகளும் -

துளியும் நாட்டு நலன் பற்றிய சிந்தனையற்ற தலைவனுக்காக உயிரை விடும் முட்டாள் ஜனங்களைப் பற்றிய ஒரு ஆதங்கப்பகிர்வு .

நேர்மையின் பெருமை சொல்லும் ரோஜாப்பூக்களும் வியர்வை உப்புக்களும் .

பெண்களுக்கு எதிரானவற்றைப் புறந்தள்ள விழைந்து புறப்பட்ட இரு பூவையரின் கதை- சங்கிலி .மீண்டும் பெண்ணியம் பேசியிருக்கிறார் சுசீலாம்மா இம்முறை அழகிய நாடகத்தமிழில் .

நேரமில்லை -

மிக நெகிழ்ச்சியான , காலத்தின் கட்டாயத்தால் மகனைப் பார்க்க விரும்பும் ,ஒரு தந்தை அப்பாயிண்ட்மென்ட் கேட்க நேரிடுமோ என அஞ்ச வைக்கும் கதை .

எதற்கும் நேரமில்லை என இறக்கை கட்டிப்பறக்கும் நாம் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய பாடம் .

நிஜமான அன்பைப்புரிய வைப்பதோடு பார்க்கும் பார்வையில் தான் நல்லதும் தீயதும் எனும் பொன்னை விரும்பும் பூமியிலே .

இப்படியாக சுசீலாம்மா பேசாத களன் இல்லை . அவருடைய அனுபவ உளியால் செதுக்கப்பட்ட அழகு மிக்க ஓர் சிற்பம் தான் தேவந்தி . இப்படி ஓர் மகத்தான படைப்பைப் பற்றின அறிமுகத்தை மூன்றாம்கோணத்தில் எழுதியது குறித்து பெருமை கொள்கிறேன்.

..ஷஹி..

புத்தகம் கிடைக்குமிடம்:

susila27@gmail.com

vadakkuvaasal@gmail.com
udumalai@gmail.com
Bharathi Book House,
F-59 / 3 & 4 , Corporation Shopping Complex,
(Shopping Complex Bus Stand,)
Periyar Bus Stand,
Madurai-625001
பதிப்பகம்
வடக்குவாசல்

tags,

தேவந்தி, எம். ஏ. சுசீலா, வாசிக்கலாம் வாங்க, புத்தக விமர்சனம், நூல் விமர்சனம், நூல் அறிமுகம், புத்தக அறிமுகம், பாலு மஹேந்திரா, கதை நேரம், நான் படிக்கணும், சீதை, ராமன், சீதா ராமன், கண் திறந்திட வேண்டும்,சிறுகதை

thevanthi, masusila, M.A.SUSILA, M.A.Susila, vaasikalaam vanga, book review, balu mahendra, Balu mahendra, kathai neram, nan padikanum, short story, short stories, seetha, ram, seetharaman, ram,seethai

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>