/* ]]> */
Dec 142012
 

கும்கி விமர்சனம் – கும்கி சினிமா விமர்சனம் –  kumki review

கும்கி விமர்சனம் எழுதுமுன் மனதில் தோன்றுவது  பிரபு சாலமன் எடுத்த மைனா படம் தான் . மைனா மூலம் நம் மனங்களை ஆக்ரமித்த சாலமன் மீண்டும் ஒரு வித்தியாசமான படைப்பாய் கும்கியை கொடுத்திருக்கிறார்.

இயற்கைக்கும் மனிதனின் ஆக்ரமிப்பிற்கும் இடையில் நடக்கும் போராட்டம் தான் களம். காடுகள் அழியும் சமூகப் பிரச்சினையை  மையப் புள்ளியாக்கி கும்கியை உருவாக்கியிருக்கிறாராம் பிரபு சாலமன்.

மலைகளையும் விட்டு, மலைகிராமங்களுக்குள் உணவுதேடிப் புகுந்துவிடும் காட்டு யானைகளை, திரும்பவும் காட்டுள்ளேயே திருப்பி அனுப்ப பயன்படுத்தப்படும் யானைகள்தான் கும்கி யானைகள்!

கும்கி கதை :

ஆதிக்குடி என்ற மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு மலை கிராமத்திற்குள் காட்டு யானைகள் புகுந்துவிட, அவற்றை விரட்டி அடிக்க அழைத்து வரப்படுகிறது ‘மாணிக்கம்’ என்ற கும்கி யானை! இந்த யானையின் பாகன்தான் கதையின் நாயகனான ‘பொம்மன்’ (விக்ரம் பிரபு). சிவாஜி பேரன்.

யானைகளை விரட்ட வந்த இடத்தில், தனது யானை மீது அன்பு செலுத்தும் மலைவாசிப் பெண்ணான ‘அல்லி’ (லஷ்மி மேனன்) மீது பொம்மனுக்குக் காதல்! அதற்குக் காரணம், அயலூர்வாசியான பொம்மனோடு அந்த ஊர்மக்கள் யாரும் ஒட்ட மறுக்கிறார்கள்! ஆனால் அல்லி மட்டும் அவனது யானை விரட்டும் திறமையை கண்டு ஆச்சர்யப்பட்டு அவனோடு கள்ளம் கபடம் இல்லாமல் பழகுகிறாள். மெல்லிய காதல் மலர்கிறது !

ஒரு கட்டத்தில் தனது காதலை அவளுக்கு தெரிவிக்கிறான் பொம்மன்! ஆனால் அல்லி பதில் ஏதும் சொல்லாமல் இருந்துவிட, தவிக்கிறான் பொம்மன்! இதற்கிடையில் மற்றொரு கிராமத்துக்கு யானைகளை விரட்ட அழைக்கப்படுகிறான் பொம்மன். பொம்மனின் பிரிவு அல்லியை வாட்டுகிறது! ஆனால் அல்லியின் பெரியப்பன் மாடன் செய்த தந்திரத்தின் காரணமாகவே பொம்மன் அங்கிருந்து அகற்றப்பட்டது அல்லிக்கு தெரியவருகிறது! பொம்மனின் பிரிவு அல்லியை ஏக்கத்துக்கு தள்ள… ஆதிக்குடி கிராமத்துக்குள் மீண்டும் காட்டு யானைகள் படையெடுக்கின்றன. ஊரே பயந்து நடுங்கி அழுகிறது! ஆனால் அல்லி மட்டும் மகிழ்சியின் உச்சத்துக்கே போனாள்! காரணம் மீண்டும் பொம்மன் தன் யானையோடு ஊருக்குள் வருவான் என்ற எதிர்பார்ப்புதான்!

எதிர்பார்த்தது போலவே மீண்டும் வரும் பொம்மனிடம் தனது காதலை அல்லி அறிக்கையிட்டுச் சொல்கிறாள்…! பொம்மன் – அல்லி இருவரும் இயற்கை அன்னையின் மடியில் காதலின் குழந்தைகள் ஆகிறார்கள். இவர்களின் காதலை அந்த ஊர்மக்கள் ஏற்றுக் கொண்டார்களா? யானைகளை விரட்டும் ஆப்பரேஷனில் பொம்மனின் நிலை என்னவானது என்பதை க்ளைமாக்ஸில் உயிரை உலுக்குவதுபோல் சொல்லியிருகிறார் பிரபு சாலமன்.

கும்கி நடிப்பு :

பொம்மனாக நடித்திருக்கிறார் சிவாஜியின் பேரன் விக்ரம் பிரபு. இது அவருக்கு ஒரு சேலஞ்ச் ரோல்தான் ஆனால் தாத்தா பராசக்தியில் பின்னி பெடலெடுத்தது போலெல்லாம் இல்லை. அல்லி என்னும் மலைவாழ் பெண் கேரக்டரில் நடித்திருக்கிறார் லஷ்மி மேனன். தேசிய விருது பெற்ற நடிகர் தம்பி ராமையா கொத்தமல்லி என்னும் கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார். எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாய் அந்த யானை. ஃப்ரேமுக்கு ஃப்ரேம் ஆகரமித்து நம் மனம் வெல்கிறது !

கும்கி பாடல்கள் :

கும்கி படத்தின் பாடல்கள் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்திருக்கின்றன. சொய் சொய் ஏற்கனவே சூப்பர் ஹிட்டாகிவிட்டது. சொல்லிட்டாளே பாடலும் அருமை. மைனா பட ரேன்சுக்கு இல்லை என்றாலும் கதைக்கேற்ற பாடல்கள். இமான் பொறுப்பை உணர்ந்து செய்திருக்கிறார்.

கும்கி ஒளிப்பதிவு :

படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் சுகுமார். காடுகள் , மலைகள், நீர்த்தேக்கங்கள் , யானை , காதலர்கள் என எதில் கேமரா ஃபோகஸ் செய்தாலும் அழகு மிளிர்கிறது !

கும்கி இயக்கம் :

மைனாவில் மைல்கள் தொட்ட பிரபு சாலமன் கும்கியில் காதலையும் தாண்டி சமுதாய பிரச்சினையை முன் வைத்திருக்கிறார். கொஞ்சம் ஹெவி சப்ஜக்ட். சில சமயம் கொஞ்சம் நறுக் சுருக் என சொல்லியிருக்கலாம். ஆனால் அந்த பிரம்மாண்ட காடுகளையும் அம்மண்ணின் மனிதர்களையும் கண் முன் கொண்டு வந்ததற்கு பாராட்டியே தீர வேண்டும் .

ப்ளஸ்:

வித்தியாச கதைக்களம்

அழகு கொஞ்சும் லொகேஷன்

பிரம்மாண்ட யானை

மயிர்கூச்செறியும் க்ளைமாக்ஸ்

மைனஸ் :

நடு நடுவே டாகுமென்ட்ரி உணர்வு

எதிர்பார்த்த படியே போகும் திரைக்கதை

பார்க்கலாமா ? :

நிச்சயம் குழந்தைகளுடன் பார்க்க கூடிய குடும்ப படம் !

ஃபைனல் வெர்டிக்ட் :

கும்கி – காட்டருவி !

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>