/* ]]> */
Nov 152011
 

நம் நாட்டின் மக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் தற்போதைய பெரிய தலைவலி கூடங்குளம் அணுமின் நிலையம். என்ன நிகழ்கிறது என கூடங்குளம் மக்களுக்குப் புரியாத நிலையில், அரசியல்வாதிகளும், அறிவியலாளர்களும் மக்களைக் குழப்பி வருகின்றனர். இந்த கூடங்குளம் அணுமின் நிலையம் தமிழ்நாட்டில்,திருநெல்வேலி மாவட்டத்தில், இந்திய அணுமின் கழக நிர்வாகத்தில்,ரஷ்ஷிய நாட்டின் உதவியுடன் உருவாகி வருவது நாம் அறிந்ததே.

இந்தப் பிரச்சனையின், முதல் விடயமான அரசியலை எடுத்துக்கொள்வோம். “ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்”என்பார்கள். அதைத்தான் மதிப்பிற்குரிய வைக்கோ செய்து வருகிறார். செல்வி ஜெயலலிதாவின் மீதுள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்த இந்த சந்தர்ப்பத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொள்கிறார். மக்கள் சக்தியால் மட்டுமே அரசாங்கத்தை அசைய வைக்க முடியும் என்ற தந்திரத்தைக்கூடத் தெரிந்துகொள்ளாத வழக்கறிஞரா என்ன வைக்கோ?

இதில் ஜெயலலிதா அம்மையாரோ வைக்கோவை விட ஒருபடி மேலே போய், பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒரு குழுஏற்படுத்தி, அதன் மூலம் உறுதி செய்து அறிக்கையும் வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில்

“1. கூடங்குளம் அணு மின் நிலையம், நில நடுக்கம் ஏற்படக்கூடிய சாத்தியம் இல்லாத, இரண்டாம் நிலை மண்டலத்தில்தான் உள்ளது.

2. கூடங்குளம் அணு மின் நிலையத்தில், சிறந்த, மிகவும் பாதுகாப்பான அணு உலை குளிர்விப்பு முறை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதாவது, ஒரு வகையிலான
குளிர்விப்பு முறையே போதும் என்ற போதிலும், நான்கு விதமான குளிர்விப்பு தொடர் முறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

3. கூடங்குளம் அணுமின் நிலையம் கடல் மட்டத்திலிருந்து 7.5 மீட்டர் உயரத்தில் உள்ளதால், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டாலும், அணுமின் நிலையத்திற்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது. 2004 ம் ஆண்டு சுனாமி தாக்கிய போதும் கூடங்குளம்அணுமின் நிலையத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

4. அணு உலைகளை இயக்கத்திலிருந்து நிறுத்தும் போதும், உலைகளை குளிர்விக்க தேவையான ஒரு டீசல் மின்னாக்கிக்கு பதில் நான்கு டீசல் மின்னாக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த டீசல் மின்னாக்கிகள், வெள்ளம் மற்றும் சுனாமி தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் வகையில் கடல் மட்டத்திலிருந்து 9 மீட்டர் உயரத்தில் பொருத்தப்பட்டுள்ளன.” எனக் கூறப்பட்டுள்ளது.

இரண்டாவதாக,அறிவியலாளர்களின் கூற்றுப்படி, கூடங்குளம் அணுமின் நிலையம் சம்பந்தமான பணிகளை நிறுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, இந்திய அணுசக்திக் கழக தலைவரும் மத்திய அணுசக்தித் துறை செயலாளருமான திரு.ஸ்ரீ குமார் பானர்ஜி குறிப்பிடுகையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் அணுஉலை அமைக்கும் பணி நிறைவடைந்து விட்டதாக கூறியுள்ளார்.தற்போது முதல் அணு உலையில் யுரேனியம் நிரப்பப்பட்டு விட்டதாகவும், மின் உற்பத்திக்கான ஒத்திகை தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறி இருக்கிறார்.

இதேபோல, “கூடங்குள அணுமின் நிலைய பணிகளை நிறுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை” என்பதையே திரு. அப்துல் கலாம் அவர்களும் வழிமொழிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் அணு உலையில்,யுரேனியம் நிரப்பப்பட்டுள்ளது உண்மையானால் அணுமின் நிலைய பணிகளை நிறுத்துவது ஆபத்தானதே. மேலும் அங்குள்ள தட்ப வெப்ப நிலையையும், கணினி உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களையும் முறையாகக் கையாளாவிடில் அணு விபத்து ஏற்படுவது நிச்சயம் என்பது நம் கருத்து.

இதில், கூடங்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள மக்களின் கோரிக்கையையும் மறுப்பதற்கில்லை. அவர்கள் அணு மின் நிலையைப் பணிகளை நிறுத்தக் கோருவதற்குப் பதிலாக, மாற்றுக்கோரிக்கை வைக்கலாமே. மேலும், இவர்கள் செய்வது “நெருப்பு சுடும்.அதனால் நான் சமைக்கவும் மாட்டேன். சாப்பிடவும் மாட்டேன்” என்பது போலல்லவா இருக்கிறது.

வெளிநாட்டவர்களின் சதியால்தான் இந்தப் போராட்டம் என சொல்பவர்களும் உண்டு.நம் நாட்டுப் பிரச்சனைக்குள் வெளிநாட்டுக்காரன் எங்கிருந்து வந்தான் என்பது புதிரான ஒரு விடயமே. நம் மக்கள் சொல்வதையே ஏற்றுக் கொள்ளத்தயங்கும் கூடங்குளத்துக்காரர்கள் வெளிநாட்டவன் பேச்சைக் கேட்கிறார்கள் என்பது வதந்தியாகவே இருக்கக் கூடும் என்பது நம் கருத்து.சமீபத்தில் ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட அணு விபத்தினாலேயே நம் மக்கள் குழம்பிப் போயிருக்கின்றனர். அழுது அடம்செய்யும் குழந்தையை அடித்துப் பயனில்லை.அது மேலும் அழவே செய்யும். பேசிப் புரிய வைப்பது ஒன்றே தற்போதைய வழி. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது இவ்விடயத்தில் நடந்துவிட்டால், வெற்றி நம் அனைவருக்கும்தான்.

அரசியலைத் தாண்டி நாம்அடையப் போகும் ஆதாயங்களையும், அவர்களின் பயத்தைத் தாண்டிய  நமது மனிதத்தையும் அவர்கள் புரிந்து கொண்டால், வெளிநாட்டுக்காரன் மட்டுமல்ல,உள்நாட்டுக் கலகக்காரனும் கூட ஊரை விட்டு ஓடவேண்டியதுதான்.

பொழிவுடன்,
ராணி.

கூடங்குளம் , கூடங்குளம் அணுமின் நிலையம், விழிப்புணர்வு, அரசியல், வைகோ, ஜெயலலிதா, அப்துல் கலாம், அணுமின் நிலையம், ஜப்பான், சுனாமி, திரு. ஸ்ரீ குமார் பானர்ஜி

koodangulam, politics, jeyalalitha, abdulkalam,japan, sree kumar banerji

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>