இரு பறவைகள் ஒரு காதல் ..
அழகான கவிதை ஒன்று எழுதி நெடு நாளாகி விட்டதென்று மனதினுள் சிந்தனை கொண்டு
எண்ணங்கள் நிலைத்திருக்க
கண்கள் வான் வெறித்திருக்க
முற்றத்தில் அமர்ந்திருந்தேன்
சட்டென்று சலனம் கேட்டு
மெதுவாய்த் திரும்பிப் பார்க்கையிலே
ஆங்கே கிளிகள் இரண்டு
மாமரத்தின் கிளைகளிலே
பார்வைக்கெட்டும் தூரத்திலே
தூரத்திலே கொஞ்சிக் காதல் பரிமாறும்
காட்சி ஒன்று கண் முன்கண்டேன்
உள்ளுக்குள் உவகை கொண்டேன்
கொஞ்சிக் குலாவியபடி
மாம்பழமொன்றை மெதுவாய்க் கொத்தி
அவைகளுக்குள் பகிர்ந்துண்ணும் அழகில்
மெல்ல என் இதயம் இழந்தேன்
இனம் புரியா ஆனந்தம் கொண்டேன்
மெதுவாய் சில முத்தங்கள்
அருகாமையின் தீண்டல்கள்
அன்பின் பரிமாரல்கள்
இவைகளைக் கண்ட போது
நானும் ஒரு பறவையாய் பிறந்திருக்கலாமே
என்று உள்ளுக்குள் ஓர் ஆசை கொண்டேன்
கண்களில் நீர் துளிகள் பெற்றேன்
தலைக்கு மேல் சற்று தொலைவில்
சுதந்திரமாய் இங்குமங்கும்
பறந்து திரியும் பறவைகளிடம்
சாதியில்லை மதமுமில்லை
குலம் கோத்திரமெனும் பேதம் இல்லை
எல்லைகளை தூரங்களோ
அவைகளுக்கு ஒரு பொருட்டும் இல்லை
பொங்கி எழும் அன்பையும்
நெஞ்சம் தொட்ட காதலையும்
விரும்பியவர்களுடன் பகிர்ந்து கொள்ள
தடைகள் என்றெதுவுமில்லை
பறவைகளாய்ப் பிறந்திருந்தால்
நானும் அவளும் அருகருகில்
இந்நேரம்இருந்திருப்போமே
அன்பு பரிமாறி அருகாமையின் சுகம் பெற்று
ஆனந்தம் கொண்டிருப்போமே
சின்னதாய் சில இறக்கைகள்
இல்லாததன் காரணமாய்
பூமியில் நடக்கும் சாபம் பெற்றோம்
மடத்தனமான மானிடக் கொள்கைகளுக்கு
நாங்களும் இரையாகிப் போனோம்
பறவைகளாய் இனம் மாற
விலையொன்று உண்டென்றால்
எப்பாடு பட்டாகிலும் அவ்வரம் பெற்றே தீருவேன்
அப்போதாவது நாங்கள் இருவரும் அருகருகே இருக்கவியலுமே !
…பால் ஆரோக்கியம் ..
tags
love , love poetry , tamil love poetry , tamil love poems , birds , birds and bees , paul , love marriage , marriage , tamil poems
காதல் , காதல் கவிதை , தமிழ் காதல் கவிதை , பறவை , காதல் மணம்
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments













Please comment with your real name using good manners.