சம்பாஷணைகளின் முடிவிலான மௌனங்கள்
பதட்டம் தெறிக்கும் கேள்விகளால் நிரம்பியவை
துக்கம்,
ஏக்கம்,
நம்பிக்கையின்மை,
ஆயாசம்,
ஒரு காதலுக்கான யாசிப்பு..
ஒரு முத்தத்துக்கான எதிர்பார்ப்பு..
ஒரு நிச்சயமின்மை..
எல்லாமுமானவை.
உன் கேள்விகளுக்கான பதில்களுடன் தான்
நான் நம் சம்பாஷணைகளைத் துவக்கவே செய்கிறேன்..
என் உடல் மொழியிலும்,
விரல் நுனியிலும் ,
கண்ணிமைகளிலும்,
எப்போதுவேண்டுமானாலும்
வெளியில் இறக்கிவிடப்படக் கூடிய
அழகிய பூனைக்குட்டிகளாய் என் சட்டைப்பையிலும்,
அவற்றை எப்போதும் வைத்திருக்கிறேன்.
நகரவாசிகளுக்கு -உரையாடல்களை விட
அவற்றினால் எழும்பி விடக்கூடிய கேள்விகளை
உதறிவிடுவதற்கான ஒத்திகைகள் அதிமுக்கியமானவை.
பதில் அளிப்பதில் உள்ள கருணை குறித்து
இரு வேறு கருத்துக்களை எழுப்பிவிடும் ஒத்திகைகள் அவை..என்னுள்ளும்.
மட்டறுக்கப்படும் கருணையின்
காந்தல் மணத்தோடு
விரிந்து வருகிறது நகரம்..
..ஷஹி..
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments