/* ]]> */
Jan 262013
 

கமலின் விஸ்வரூபம் – ரிலீஸ் பின்னணி – தடை நீங்குமா?

விஸ்வரூபம் படம் தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா பாண்டிச்சேரியிலும் தடை செய்யப்பட்டு விட்டது. படத்தை இன்று நீதிபதி பார்த்துவிட்டார்.. என்ன முடிவெடுக்க போகிறது நீதி மன்றம் ? அது விரைவில் தெரியும். தடையின் பின்னணியும் தடை நீங்குமா என்பதையும் அலசுகிறார் அனந்து ……..

ன்று இந்நேரம் விஸ்வரூபம் படத்திற்கான விமர்சனத்தை எழுதிக் கொண்டிருக்க வேண்டிய நான் படம் ரிலீசாகாமல் தடை செய்யப்பட்ட விவகாரத்தை பற்றி எழுதிக்கொண்டிருப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை.  விஸ்வரூபம் என்று தன் படத்திற்கு கமல்ஹாசன் எந்த நேரத்தில் பெயர் வைத்தாரோ தெரியவில்லை படம் வெளிவருவதற்கு முன்னரே எக்கச்சக்க பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்து ஆட ஆரம்பித்து விட்டன  .

படம் திரையரங்குகளில் வருவதற்கு முன்னரே டி.டி.எச் இல் திரையிட கமல் வகுத்த திட்டம் திரையரங்கு உரிமையாளர்களின் குறுக்கீடுகளால் தவுடுபொடியானது . ஜனவரி 11 வரவேண்டிய படம் ஒரு வழியாக பல சமரச முயற்சிகளுக்கு பிறகு ஜனவரி  25 இல் தியேட்டர்களிலும் , பிப்ரவரி இல் டி.டி.எச் இலும் ரிலீஸ் என்று முடிவு செய்யப்பட்டு தியேட்டர்களில் ஒரு வாரத்திற்கான டிக்கட்டுகளும் புக் செய்யப்பட்டுவிட்டன.  இந்த நிலையில் பிரத்தியேகமாக தங்களுக்கு காட்டப்பட்ட படத்தின் ப்ரிவியு வை பார்த்து விட்டு அது இஸ்லாமியர்களையும் , இஸ்லாமிய மதத்தையும் தவறுதலாக சித்தரிக்கிறது என்று சொல்லி படத்தின் ரிலீசை தடை செய்யக்கோரி ஒரு அமைப்பினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் 15 நாட்களுக்கு படத்தின் ரிலீசி ற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டதும் , அதை எதிர்த்து கமல் கொடுத்த்த மனுவை விசாரித்த நீதிபதி 26 ஆம் தேதி படத்தை பார்த்து விட்டு28 ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக சொல்லியிருப்பதும் யாவரும் அறிந்ததே.

கமல் மட்டுமல்லாமல் அந்த படத்தை காண ஆவலாக காத்துக் கொண்டிருந்த கோடானு கோடி  தமிழர்களும்   இதற்கான தீர்ப்பை எந்த நேரமும் எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கும் வேளையில் கிட்டத்தட்ட 100கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு , சென்சார் செய்யப்பட்டு , வினியோகஸ்தர்களாலும் , தியேட்டர்காரர்களாலும்  பல கோடி செலவில் வாங்கப்பட்டு , படம் பார்க்க விரும்புகிறவர்களால் புக் செய்யப்பட்டு இன்று ரிலீஸ் ஆகியிருக்க வேண்டிய படத்தை  சட்டம் ஒழுங்கு குலையும் என்கிற ஒரு காரணத்தை சொல்லி அரசு தடை செய்திருப்பது கமலை மட்டுமல்ல நல்ல சினிமாவை நேசிக்கிற ஒவ்வொருவனையும் பெரிய வேதனைக்கு உள்ளாக்கியிறுக்கிறது .

இந்த நடவடிக்கை விஸ்வரூபம்   படத்தை தடை செய்யவேண்டுமென்று ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயமே திரண்டு வந்தது போல ஒரு மாயையை ஏற்படுத்துகிறது . ஏனெனில் முஸ்லீம்கள் அதிகம் வாழும் மலேசியா விலேயே படம் ரிலஸ் ஆகியிருப்பதொடு அனைவரின் வரவேற்ப்பையும் பெற்றிருப்பதே உண்மை  . 28 ஆம் தேதி தீர்ப்பு கமலுக்கு சாதகமாக இருந்து படம் ரிலீசானாலும் இந்த 3 நாள் விடுமுறையில் கிடைத்த ஒப்பனிங் கிடைப்பது சந்தேகமே , அதோடு மட்டுமல்லாமல் படம் வெளிநாடுகளில் ரிலீஸ் ஆகி விட்டதால் திருட்டு வி.சி .டி வந்து வியாபாரத்தை கெடுக்கப் போவதும் உறுதி .

இதெல்லாம் தெரிந்தும் படம் தடை செய்யப்பட்டிருப்பதை பார்க்கும் போது அதற்குண்டான நியாயமான காரணத்தை ஆராய வேண்டியதும் நம் கடமை . படம் மிலாடி நபி அன்று ரிலீஸ் ஆக இருந்ததும் , அதற்கு அடுத்த நாள் குடியரசு தினம் என்பதால் காவல் துறையின் கவனமெல்லாம் அங்கிருக்கும் என்பதாலும் , பட ரிலீசிற்க்கு  பிறகு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் காவல் துறையால் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்தாமல் முடியாமல் போவதற்கு நிறைய வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது . அது மட்டுமல்லாமல் இஸ்லாமிய அமைப்பினர் படத்தை பார்த்து விட்டு கடும் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பதையும்  மறுக்க முடியாது .

கமலுக்கும் , சர்ச்சைக்கும் தூரமில்லை எனவே இது கூட ஒரு பப்ளிசிட்டி ஸ்டன்ட் என்றும் , கமல் புத்தக வெளியீட்டு விழாவில் ப.சிதம்பரத்தை அடுத்த பிரதமர் என்கிற அளவிற்கு பேசிவிட்டார் அதற்கு கிடைத்த பரிசு தான் இது எனவும் சிலர் கூறுகிறார்கள் . தன்  வளர்ச்சியில் இத்தனை  நாள் கூட இருந்த விநியோகஸ்தர்களையும் , தியேட்டர் உரிமையாளர்களையும் தன் சுய லாபத்துக்காக ஒரு நொடியில் கமல் மறந்து விட்டார் என்கிற குற்றச்சாட்டும் அவர் மேல் வலுவாக இருப்பதால் திரையுலகில் நிறைய பேர் இதை கண்டுகொள்ளவில்லை என்பதும் யோசிக்க வேண்டிய விஷயம்  .

ரோஜா விற்கு பிறகு கடந்த இருபது ஆண்டு காலமாகவே இஸ்லாமியர்கள் படங்களில் வில்லன்களாக சித்தரிக்கப்பட்டு வருகிறார்கள் , அதனால் ஏற்பட்ட அதிருப்திகளின் வெளிப்பாடே இந்த எதிர்ப்புக்கு காரணம் என்பது ஒரு சாரரின் வாதம்  . இது போல எவ்வளவோ காரணங்களை அலசினாலும்    ஒரு படத்தை ரிலீஸ் செய்ய வேண்டுமா வேண்டாமா என்பதை நிர்ணயம் செய்ய வேண்டிய   சென்சார் போர்டே படத்தை பார்த்து விட்டு  யு  ஏ சான்றிதழ் கொடுத்த பிறகு இது போன்ற  தடை தேவை தானா என்பது நம் கண் முன் நிற்கும் இமாலய கேள்வி .

படத்தை பார்க்காததால் அது எந்த வகையில் இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்துவது போல அமைந்துள்ளது என்பதை பற்றி கருத்து கூற முடியாவிட்டாலும் கமல் அதை இஸ்லாமிய அமைப்பினருக்கு ரிலீசுக்கு முன்னரே போட்டுக்காட்டியதையும் , தடை செய்யக்கோரி சில அமைப்பினர்  மட்டுமே முனைப்பு காட்டி வருவதையும்  வைத்து பார்க்கும் போது படம் நிச்சயம் ஒட்டு மொத்த இஸ்லாமியர்களுக்கு எதிரானதாக இருக்காது என்கிற நம்பிக்கை இருக்கிறது .

அதோடு மட்டுமல்லாமல் ஒரு சினிமாவை பார்த்து விட்டுத்தான் ஒருவன்  சமூகத்தின் மீதான பார்வையை வகுத்துக்கொள்கிறான் என்று சொல்ல முடியாது . பொழுதுபோக்கையும் மீறி சினிமாவை ரசிக்கலாம் , ஆராதிக்கலாம் அதற்காக அதில்  காட்டுவதெல்லாம் நிஜம் என்று யாரும் நினைக்க மாட்டார்கள் .  ஒவ்வொரு பட ரிலீசுக்கு முன்னரும் இப்படி திரையிட்டு ஒப்புதழ் பெற வேண்டுமென ஒவ்வொரு அமைப்பினரும் எதிர்பார்த்தால் யாருமே சினிமா எடுக்க முடியாது…
.
” இன்னொசன்ஸ் ஆப் முஸ்லீம்ஸ் ” என்கிற படம் அமெரிக்காவில் ரிலீசாகி உலகமெங்கும் பெரிய சர்ச்சையையும் , வன்முறையையும் ஏற்படுத்தியது . வன்முறை தவறென்றாலும் அதற்க்கெதிரான போராட்டங்கள் நியாயமானதே என்று படம் பார்த்தவர்கள் சொன்னார்கள் . ஆனால் படம் பற்றி சிறிதும் அறிந்திராதவர்கள் கூட  உலக அளவிலான எதிர்ப்புக்கு பிறகே படத்தை பார்த்திருக்கிறார்கள் . அதே  போல துப்பாக்கி படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் போது  சில சீன்களை நீக்க சொல்லி ஆர்ப்பாட்டம் நடந்தது . அதற்கு அடிபணிந்து சம்பந்தப்பட்டவர்கள் மன்னிப்பு கேட்டதோடு படத்தின் சில சீன்களையும் நீக்கினார்கள். இந்தியாவில் வேறங்கும் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் மட்டும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பது  நாமிருப்பது தமிழ்நாட்டில் தானா என்கிற  அச்சத்தை நிறைய பேருக்கு கொடுத்திருக்கிறது  …

ஒவ்வொருவரும் ஒரு காரணத்தை சொல்லி படங்களை முடக்க நினைத்தால் இந்த துறையை நம்பியிறுக்கும் லட்சோப லட்ச மக்களின் எதிர்காலம் என்னவாவது என்கிற கவலையும் நம்மை தொத்திக் கொள்கிறது . எப்படி தனது ஆக்கங்கள் எந்தவொரு சாதியையோ , மதத்தையோ , இனத்தையோ , சமூகத்தையோ இழிவு படுத்தாமல் இருக்க வேண்டுமென்பது ஒவ்வொரு கலைஞனின் கடமையோ அதே போல சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டியதும் பொது மக்களின் கடமை . இதற்கான எல்லைகளை அவரவர்கள் மீறும் போது  பிரச்சனை வெடிக்கிறது …

பணத்தால் மட்டுமல்லாமல் , மனதாலும்  பாதிக்கப்பட்டுள்ள கமல் தனது அறிக்கையில் ” நான்  இஸ்லாமிய சகோதரர்களுக்கு எதிரானவன் அல்ல , படத்தை பார்த்து விட்டு பாராட்டியவர்கள் பிறகு ஏன் எதிர்க்கிறார்கள் என்று தெரியவில்லை , நான் ஹிந்து – முஸ்லிம் ஒற்றுமைக்காக பாடுபடும்
” இந்தியா ஹார்மோனி ” என்கிற அமைப்பில் இருக்கிறேன் , இந்த படத்தை சுய லாபத்துக்காக சிலர் மட்டுமே எதிர்க்கிறார்கள் , எனவே இந்த படத்திற்கான தடையை நீக்க வேண்டும் ” என்று மனமுறுக கேட்டுக் கொண்டுள்ளார் . இது வரை திரையுலகில்  யாரும் வாய் திறக்காத வேளையிலே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கமலுக்கு ஆதரவுக்கரம்  நீட்டியுள்ளார் …

இவரையும் , பிரகாஷ்ராஜையும்  தவிர கமல் தான் எங்களுக்கு முன்னோடி , குரு என்றெல்லாம் ஆஹோ , ஓஹோ வென்று புகழும் யாரும்  வாயே திறக்காதது ஆச்சர்யமே . எழுத்தாளர்களில் ஞானியும் , முஸ்லீமாக இருந்தாலும் மனுஷ்யபுத்திரனும்  இந்த தடையை வன்மையாக கண்டித்துள்ளார்கள்  .

சினிமாவில் கதைக்கேற்றவாறு காட்சிகளை அமைப்பது ஒவ்வொரு கலைஞனின் கடமை . அது ஒரு தரப்பினருக்கு அதிருப்தியாக இருக்கும் பட்சத்தில் அதை சமரசமாக பேசித் தீர்த்து சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க சொல்லலாமே தவிர இது போன்ற முழு தடையை கோருவது கருத்து  சுதந்திரத்துக்கு முற்றிலும் எதிரானது . எல்லா தரப்பையும் அலசி ஆராய்ந்த பிறகு தான் சென்சார் போர்ட் ஒ.கே சொல்கிறது அதையும் மீறி மாநில அளவில் படத்தை எதிர்ப்பதை விட்டு விட்டு சென்சார் போர்டுக்கு தங்களின் கோரிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டியதே நியாயமான செயல் என்றும் பத்திரிக்கைகளும் , டி .வி மீடியாக்களும் சுட்டிக் காட்டுகின்றன …

இது  ஏதோ கமல் மற்றும் அவர் ரசிகர்கள் சம்பந்தப்பட் பிரச்சனை  மட்டும் என்று நினைத்து ஒதுக்கி விட முடியாது . ஏனெனில் இந்த பிரச்சனை  நாளை குடியரசு தினத்தை கொண்டாடவிறுக்கும் ஒவ்வொரு குடிமகனின் கருத்து சுதந்திரத்துக்கும் விடப்பட்டிருக்கும் சவால் . கமல் போல சட்டத்தை மட்டுமே நம்பியிருக்கும் கோடானு கோடி இந்தியர்களும் இதற்கான தீர்ப்புக்காக காத்திருக்கிறார்கள் . சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும் என்பதற்காக படத்தை தடை செய்யும் தைரியமான முடிவை எடுத்த தமிழக அரசு அதே போல நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு படம் வெளியிடப்பட்டால்  இதே போன்றதொரு நடவடிக்கையை எடுத்து படத்தை காண வருபவர்களுக்கு  எவ்வித பாதிப்பும் இல்லாமல் பார்த்துக்கொள்வார்கள் என்கிற நம்பிக்கை அனைவருக்கும் நிறையவே இருக்கிறது . அந்த நம்பிக்கையுடன் கமலோடு சேர்த்து நாமும் காத்திருப்போம் …

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>