/* ]]> */
Sep 012011
 

 

அனைவருக்கும் இனிய 
”பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்”

காலம் மாறிப்போச்சு!

சிறுகதை – இறுதிப்பகுதி 2 of 2

By வை. கோபாலகிருஷ்ணன்

-o-o-O-o-o-
ஒரு ஆறு வருடங்களுக்கு முன்பு, என் மகன் அழைப்பின் பேரில் துபாய் சென்று ஒண்ணரை மாதங்கள் தங்கும்படி நேர்ந்தது. அதனிடையில் விநாயக சதுர்த்தி பண்டிகையும் வந்தது. ”நம் ஊராக இருந்தால் களிமண்ணில் பிள்ளையார் செய்துகொண்டு ஒரே அமர்க்களப்படும்” என்று என் மகனிடம் முதல் நாள் சாயங்காலம் கூறினேன். 

”இங்கேயும் பிள்ளையார் கிடைக்கும் அப்பா”, என்று சொல்லி உடனே யாருக்கோ போன் செய்து பேசினான். 
”அப்படியா, ஓ.கே. என்ன விலையானாலும் பரவாயில்லை. அந்த ஒரே ஒரு பிள்ளையாரை யாருக்கும் கொடுத்து விடாதீர்கள். இன்னும் ஒரு மணி நேரத்தில் நான் நேரில் வந்து வாங்கிக்கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டு, என்னையும் அழைத்துக்கொண்டு காரில் புறப்பட்டான்.

நீண்ட பயணத்திற்குப்பின் கார் ஒரே இடத்தைப் பலமுறை சுற்றிச்சுற்றி வருவது போல எனக்குத்தோன்றியது. பிறகு தான் புரிந்தது, கார் பார்க் செய்ய இடமில்லாமல் என் மகன் கஷ்டப்படுகிறான் என்று.

ஒருவழியாகக் காரை ஓர் இடத்தில் பார்க் செய்துவிட்டு, அங்குள்ள மிஷினில் பணம் போட்டு, அதற்கான டோக்கன் ஒன்றை காரின் முன்புறக்கண்ணாடியில், வெளியிலிருந்து பார்த்தால் தெரிவது போல வைத்துவிட்டு, ரிமோட் மூலம், கார் கண்ணாடிகளையும், கதவுகளையும் தானாகவே மூடச்செய்துவிட்டு, ஒரு சந்தின் குறுக்கே நுழைந்து அந்தக் கடைக்குக் கூட்டிச்சென்றான்.
”பெருமாள் பிள்ளை பூக்கடை” என்று தூய தமிழில் எழுதியிருந்தது, என்னை வியப்பில் ஆழ்த்தியது.   அருகிலேயே ஒரு சிவன் கோயில். அர்ச்சனை சாமான்கள் முதல் அனைத்து பூஜை சாமான்களும் விற்கப்படும் அருமையான கடை அது. அந்தக்கடையில் உள்ள அனைவரும் தமிழில் பேசினர். தமிழ்நாட்டுக்கே வந்து விட்டது போல மிகவும் சந்தோஷப்பட்டேன்.

கடைக்காரர் வரவேற்றதும் என் மகன் தான் புக் செய்திருந்த பிள்ளையாரைக் கேட்டான். ”பலபேர் வேண்டி விரும்பிக்கேட்டும் ஸ்டாக் தீர்ந்துவிட்டது என்று சொல்லி உங்களுக்காகவே ரிசர்வ் செய்து வைத்துவிட்டேன்” என்று சொல்லி அந்த மிகச்சிறிய களிமண் பிள்ளையாரை எடுத்துக்காட்டி பேக் செய்து கொடுத்தார். 

“என்ன விலை” என்று என் மகனிடம் கேட்டேன். 
”இருபது திர்ஹாம் மட்டுமே” என்று சொன்னான். 

நம்மூர் மதிப்புக்கு 250 ரூபாய் என்று மனதுக்குள் கணக்குப் போட்டுக் கொண்டேன். மற்ற தேங்காய், வாழைப்பழம், பூக்கள் முதலிய பூஜைக்குத் தேவைப்படும் எல்லா சாமான்களையும் அங்கேயே வாங்கிக்கொண்டு, சிவன் கோயிலுக்குப்போய் சிவனையும் தரிஸித்து விட்டு, காரில் வீடு வந்து சேர இரவு வெகு நேரம் ஆகிவிட்டது. 

நம்மூரில் ஐந்து அல்லது பத்து ரூபாய்க்கு விற்கப்படும் இந்தக்களிமண் பிள்ளையார் இங்கு இவ்வளவு விலை விற்கிறது. அதுவும் அதை வாங்கிவர காருக்குப்பெட்ரோல் முதல் கணக்குப்போட்டால் …. அப்பாடா” என்றேன்.
“அப்பா, நீ முதன் முதலாக எங்கள் துபாய்க்கு வந்திருக்கிறாய். நாளைக்கு விநாயகர் பூஜை இங்கு நம் வீட்டில் செய்யப்போகிறாய். அந்த சந்தோஷத்திற்கு முன்னால் இந்தப் பணமெல்லாம் ஒரு பொருட்டே இல்லை, அப்பா!;

காசு கொடுத்தாலும், நமக்கு வேண்டிய எந்தப்பொருளும் கிடைக்கிறதே! அதுவே மிகப்பெரிய விஷயம் அல்லவா! மேலும் நம் நாட்டிலிருந்து துபாய் வரை, ஆகாய விமானத்தில் பறந்து வந்துள்ள பிள்ளையார் அல்லவா இது! அதையெல்லாம் கணக்குப்போட்டுப் பார்த்தால், நாம் இந்தப் பிள்ளையாருக்காகக் கொடுத்துள்ளது மிகவும் சொற்பத்தொகையாகும்” என்றான். 
இவனின் இந்தப் பேச்சைக் கேட்க, நல்ல வேளையாக என் தகப்பனாரும் இல்லை, என் மாமனாரும் இல்லை.

மறுநாள் பூஜையில் வைத்த களிமண் பிள்ளையாருக்கு, லேசாக பத்து உத்தரணி அபிஷேகம், அலங்காரம், மலர்களால் அர்ச்சனை, நைவேத்யம் எல்லாம் செய்து என் பேரனிடம் காட்டி மகிழ்ந்தேன். ”பிள்ளையாரை பூஜை முடிந்ததும் நாளைக்கு எடுத்து உன்னிடம் தருகிறேன்; நீ விளையாடலாம்” என்றேன்.    

“நோ … தாத்தா ….. ஐ டோண்ட் வாண்ட் திஸ்; ஐ ஹாவ் ப்ளெண்டி ஆஃப் ந்யூ டாய்ஸ் வித் மீ” என்று சொல்லி தன்னுடைய விளையாட்டு சாமான்கள் வைத்திருக்கும் தனி அறைக்கு என்னைக் கூட்டிச் சென்றான்.
பல்வேறு வகையான கார்கள், விமானங்கள், கீ கொடுத்தால் ஓடும் பொம்மைகள், ஆடும் பொம்மைகள், விளக்கு எரியும் பொம்மைகள், ஒலி எழுப்பும் மிருக பொம்மைகள், ரிமோட் கண்ட்ரோலில் இயங்கும் பலவிதமான விசித்திரமான பொம்மைகள் என ஏராளமானவற்றைக்காட்டி என்னை பிரமிக்க வைத்து விட்டான்.
புதிதாக அப்பா நேற்று வாங்கி வந்தது என்று சொல்லி, ஒரு பெரிய பார்ஸலைப் பிரித்தான். உள்ளே ஒரு ரோபோ பொம்மை – பலவிதமான வேலைகள் செய்யுமாம். அதன் அட்டைப்பெட்டியில் போட்டிருந்த விலையைப்பார்த்தேன். எழுநூறு திர்ஹாம் என ஒட்டப்பட்டிருந்தது. நம்மூர் விலைக்கு ஒரு 8000 அல்லது 9000 ரூபாய் இருக்கலாம். 

என்னுடைய பேரனின் தற்போதைய வயதாகிய இதே ஏழு வயதில், நான் ஒரே ஒரு கலர் பிள்ளையார் பொம்மைக்கு ஆசைப்பட்டு, அதுவும் கிடைக்காமல் நிராசையானதை நினைத்துக்கொண்டேன். என் பேரன் விளையாடும் பொம்மைகளைப் பார்த்து எனக்கு மிகவும் பிரமிப்பு ஏற்பட்டது. அவனுடனும், அந்த அழகழகான பொம்மைகளுடனும் விளையாடிய நானும் அன்று ஒரு சிறு குழந்தையாகவே மாறிப்போனேன். இந்தப்பேரனிடம் போய் களிமண் பிள்ளையாரை விளையாடத்தருவதாகச் சொன்னோமே என மனதுக்குள் மிகவும் வெட்கப்பட்டேன்.  

காலம் மாறமாற காட்சிகளும், கலாச்சாரமும் மாறுகின்றன. மாற்றங்கள் மட்டுமே என்றும் மாறாதவையாக உள்ளன. தலைமுறை இடைவெளியால் ஏற்பட்டுவரும் மாற்றங்களை நம் மனதார மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ள, நாம் நம்மைத் தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.  மாற்றங்களை ஏற்க மறுத்தால் என்றும் நமக்கு ஏமாற்றமே என்பதை நினைவில் கொள்வோமாக!
காலம் மாறிப்போச்சு!

இருப்பினும் பிள்ளையார் காப்பாற்றுவார்!!
-o-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-o-

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>