/* ]]> */
Aug 122012
 


ன்று ஒரு நாள் மட்டும் கடந்து விட்டால் நான் அடையப்போகும் வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே பரவசமாக இருக்கிறது … இன்னும் கொஞ்சம் நேரத்தில் அவுட்டு வந்து விடுவான் … அவுட்டு வருவதால் என் வாழ்க்கை மாறப்போவதில்லை , ஆனால் அவன்  கொண்டு வரும் மூணு கோடி ரூபாய் என் வாழ்க்கையை மாற்றப் போகிறது … அவன் வருவதற்குள் நீங்கள் என்னை பற்றி தெரிந்து கொள்வது அவசியம் …

வாழ்க்கைக்கு எது முக்கியம் ?  மன நிம்மதி , சந்தோசம் , சந்ததி , பதவி , புகழ் என்று எவ்வளவையோ அடுக்கிக்கொண்டே போகலாம் , ஆனால் இவையெல்லாம் பணத்திற்கு முன்னாள் பம்மாத்து என்பது என்னைப் போல வாழ்க்கையில் அடிபட்ட எவனுக்கும் நன்றாகவே தெரியும் … ஆமாம் பணம் மட்டும் தான் எனது கடவுள் , கர்த்தா , குரு எல்லாமே … பணம் இல்லாததால் தான் பெற்றோர்களால் என்னை நினைத்தது போல வளர்க்க முடியவில்லை … அவர்களிடம் பணம் இல்லாததை பற்றி நான் குற்றம் சொல்லவில்லை , ஆனால் அதை அடைவதற்காக அவர்கள் எந்த முயற்சியையும் செய்யாமல் விலங்குகள் போல வாழ்ந்துகொண்டிருந்ததை தான் என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை …

அதனால் தான் எனக்கு விவரம் தெரிந்த வயதுக்கு மேல் அவர்களோடு இருக்க முடியாமல் சென்னைக்கு ஓடி வந்துவிட்டேன் … கெட்டும் பட்டணம் போ என்பார்கள் , நான் பெரியவர்கள் சொன்னதில் செய்தது  இதை மட்டும் தான் … முதலில் ஏதேதோ வேலை செய்து வயிற்றை கழுவிக் கொண்டிருந்த  என் வாழ்க்கை  பால் சேட்டின் நட்பு கிடைத்த பிறகு தான் மாறத்தொடங்கியது … என் போன்ற படிக்காதவர்கள் கூடிய விரைவில் பணம் பார்ப்பதென்பது நடக்காத காரியம் , எனவே என்னைப் பொறுத்தவரை எப்படி பணம் சம்பாதிக்கிறோம் என்பது முக்கியமில்லை , எப்படியோ சம்பாதிக்க வேண்டும் … சேட் மூலமாக இரண்டு மூன்று பொருட்களை கை மாற்றி விட்ட போது நல்ல பணம் கிடைத்தது , கிடைத்த  பணத்தை நண்பர்களுடன் உடனே குடித்தழித்தேன்.

இங்கே நண்பர்கள் என்று யாரையும் சொல்ல முடியாது , கடத்தல் தொழிலில் எவனும் எப்பொழுது வேண்டுமானாலும் எதிரியாக மாறலாம் , இருந்தாலும் ஒன்றாக அமர்ந்து குடிக்கும் போது எல்லோரும் சந்தோசமாகவே இருப்போம் … குடிக்கு எவ்வளவோ சைடிஷ் இருந்தாலும் எங்களுக்கு அவுட்டு தான் ஊறுகாய் … அவனுக்கு அவுட்டு என்பது இயற்பெயரா அல்லது யாராவது வைத்த பெயரா என்றெல்லாம் தெரியாது , ஆனால் நாங்கள் அப்படித்தான் கூப்புடுவோம் … ஆறடிக்கு வளர்ந்திருந்தாலும் அவுட்டு அறிவா கிலோ என்ன விலை என்று கேட்பான் , அதனால் தான் சில ரிஸ்கான வேலைகளை அவனிடம் தள்ளி விடுவோம் , எங்களைப் பொறுத்தவரை அவுட்டு ஒரு பலிகடா … இங்கே பாவ , புண்ணியமெல்லாம் பார்த்தால் பிழைப்பு நடத்த முடியாது …

அவுட்டு தான் இப்படி ஆனால் அவன் மனைவி அழகி , பேரழகி … ஒரு முறை நல்ல போதையில் பெண்களை பற்றிய பேச்சு வந்தது , நானும் சேட்டும் போதையில் இருக்கும் போது மட்டும் தான் பெண்களை பற்றி பேசுவோம் , அது என்னவோ அந்த வஸ்து உள்ளே போய் விட்டாலே காம வெறி தலைக்கு ஏறி விடுகிறது…சேட் வழக்கமாக கூட்டிச் செல்லும் பெண்ணிடம் போக வேண்டாமென்று நான் ஏற்கனவே முடிவு செய்திருந்தேன் , என்னமோ சலித்து விட்டது , ஆனால் சேட்டுக்கு மட்டும் அவள் நடிகை என்பதாலோ என்னமோ அலுக்கவே இல்லை … இந்த முறை நான் பிடிவாதமாக மறுத்துவிட்டேன் , வேறு எங்காவது போகலாம் என்று முடிவு செய்த பின் சேட் என்னை ஒரு இடத்திற்கு கூட்டிச் சென்றான் … நான் அவளை பார்த்தவுடன் அசந்துவிட்டேன் , அவள் அவ்வளவு அழகு … ஆனால் அவள் அவுட்டுவின் மனைவி என்று தெரியவந்ததும்  கொஞ்சம் அதிர்ச்சி , சேட் முகத்தில் எந்த வித உணர்ச்சியும் இல்லாத போதே அவன் அடிக்கடி இங்கே வருகிறான் என்று தெரிந்து கொண்டேன் …

” ஒன்னும் யோசிக்காத  இதெல்லாம் அவுட்டுக்கு தெரியாது , சேட்டுக்கு அப்புறம் நீ தான்” அவள் எத்தனை பேரிடம் இப்படி சொல்லியிருப்பாள் என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு எனக்கு அப்போது நேரமில்லாததால் நான் வந்த வேலையில் இறங்கினேன் … எல்லாம் முடிந்த பிறகு சேட்டுடன் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது அவுட்டு வந்தான் .. ” எப்போ வந்தீங்க சார் , சொல்லியிருந்தா நானே உங்கள கூட்டியாந்திருப்பேனே”  அவன் சொன்ன போது என் கண்கள் அவனை நேரடியாக பார்க்காமல் வேறு பக்கம் திரும்பிக் கொண்டது … அங்கிருந்து இருவரும் திரும்பி வரும் வழியில் தான் சேட் என்னிடம் அந்த விஷயத்தை சொன்னான் …

இது வரை சின்ன சின்ன சரக்குகளை கை மாற்றி விட்டு சில லட்சங்களை பார்த்த எங்களுக்கு இது போட்டியில் கலந்து கொள்ளாமலேயே கைகளில் கிடைக்கப் போகும் மூணு கோடி … இந்த முறை கடத்தப் போவது விலையுயர்ந்த போதை வஸ்து , மாட்டினால் தொலைந்தோம் , அவ்வளவு சீக்கிரம் வெளியே வர முடியாது … ஆனாலும் இந்த வாய்ப்பை விட எங்களுக்கு மனதில்லை என்பதால் ரிஸ்க் எடுக்க முடிவெடுத்தோம் … வழக்கம் போல அவுட்டுவை வைத்து பொருளை கை மாற்றிவிடலாம் , அவன் மாட்டினாலும்  எங்களுக்கு பிரச்சனையில்லை , அவன் உயிரே போனாலும் எங்களை காட்டிக் கொடுக்க மாட்டான் … இருவரும் முடிவு செய்த பின் அவுட்டு வீட்டிற்கு திரும்பி சென்றோம் …

வழக்கம் போல சில ஆயிரங்களை கொடுத்து விஷயத்தை சாதித்துக் கொள்ளலாம் என்று நினைத்த எங்களுக்கு அவுட்டுவின் மனைவி பெரிய ஷாக் கொடுத்தாள்.. “உயிரை பணயம் வச்சு உங்களுக்காக வேல செய்யுராறு , அதான் இந்த தடவ வரதுல சரி  பங்கு கொடுத்தீங்கன்னா , சொந்த ஊருக்கே போயி செட்டிலாயிடலாம்னு இருக்கோம் ” அவள் தீர்க்கமாய் சொன்னதிலிருந்தே அவுட்டு மாதிரியில்லை என்று தெளிவாக தெரிந்தது … ” நீ நினைக்கிற மாதிரியெல்லாம் பெருசா ஒண்ணுமில்ல, வேணுமின்னா எப்பவும் தரத விட ஜாஸ்தியா தரோம் ”  சேட் சொன்னவுடன்  , அவள் கோணலாய் சிரித்தபடி” என்ன மூணு கோடியா ” என்று கேட்ட போதே அவள் நிறைய விஷயம் தெரிந்தவள் என்பது எங்களுக்கு தெளிவாக புரிந்தது … நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம் … எங்கள் இருவருக்குள்ளும் ஒரே எண்ணம ஓடவே நாங்கள் அவள் சொன்னபடி பங்கை இரண்டுக்கு பதில் மூன்றாய் போட முடிவெடுத்தோம் … இதில் எதிலுமே சம்பந்தம் இல்லாதது போல் அவுட்டு எங்கோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் … அவனுக்கு இந்த பணம் ரொம்ப அதிகம் தான் என்றாலும் எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை …

” மூணு கோடி கைக்கு வந்ததும் முதல்ல அவுட்டையும் , அவளையும் போட்டுரனும் ” நான் மனதில் நினைத்ததையே சேட்டும் சொன்னான் … நான் ஆமாம் என்பது போல தலையாட்டினேன் , அந்த நொடி சேட்டையும் போட்டுவிட்டால் மூணு கோடியும் எனக்கே என்று என் மனம் நினைக்கும் போதே உடல் சிலிர்த்தது … இதோ நினைத்தது படியே அவுட்டு வேலையை முடித்துக்கொண்டு பணத்தோடு வந்து கொண்டிருக்கிறான் என்று சேட் செல்போனில் சொன்ன போதே என் திட்டத்தை மனதிற்குள் நான் பட்டை தீட்டிக் கொண்டிருந்தேன் … சந்தோசமோ , துக்கமோ சேட் சரக்கடிக்காமல் இருக்க மாட்டான் , நான் ஏற்கனவே திட்டமிட்டபடி சரக்குடன் விஷத்தை கலந்து கொடுத்துவிட்டால் சேட் மூர்ச்சையாகி விடுவான் , அவுட்டு சரக்கடிக்க மாட்டான் , எனவே அவன் வந்தவுடன் பணத்தை எடுத்துக் கொண்டு கைத்துப்பாக்கியை  வைத்தே அவன் கதையை  முடித்து விடலாம் …

எங்கள் திட்டப்படி சேட் அவள் மனைவியை இந்நேரம் முடித்திருப்பான் , நினைக்கும் போதே என் செல்போன் சினுங்கியது …  ” சொல்லு சேட் ” அவன் விஷயத்தை சொன்னவுடன் என் காதுகளில் இன்பத்தேன் வந்து பாய்ந்தது … ” சரி நான் அவ பாடிய வர வழில டிஷ்போஸ் பண்ணிடுறேன் , நீ நம்ம அயிட்டத்த வாங்கி வை ” அவன் அயிட்டமும் அவனுக்காக நான் வாங்கிய அயிட்டமும் தயாராகவே இருந்தன …
” வா சேட் எல்லாம் ரெடியா இருக்கு ” போனை வைத்துவிட்டு ஒரு முழு சிகரெட்டை முழுவதுமாய் புகைத்தேன் … சேட் வந்தவுடன் கத்தியின்றி ரத்தமின்றி அவன் கதை முடிந்தது , வாயெல்லாம் நுரையுடன் ஒரு பக்கம்  கோணிக் கொண்டே அறைக்குள் செத்துக் கிடந்தவனை வெறித்துப் பார்த்தபடியே இரண்டு சிப் அடித்தேன் …

எனக்கு புது வாழ்க்கையை காட்டியவனின் வாழ்க்கையை முடித்துவிட்டேன் , லேசாக ஏதோ ஒரு உணர்வு என்னைத் தாக்க அதை தவிர்ப்பதற்காக டி.வி யை ஆன் செய்தேன் … வெஸ்டர்ன் ஆல்பத்திலிருந்து சுட்ட பாடலுக்கு தமிழ் பட ஹீரோயின் இடுப்பை ஆட்டிக் கொண்டிருந்தாள் … டி.வி சத்தத்தை மீறி கதவை தட்டும் சத்தம்  கேட்கும் போதே வந்தது அவுட்டு தான் என்று எனக்கு விளங்கியது … ” இருடா வரேன் ” சேட் செத்துக் கிடந்த அறையை சாத்தி விட்டு கதவை நோக்கி நான் போவதற்கு முன் டேபிளின் மேல்    துப்பாக்கி  இருப்பதை ஒரு முறை உறுதி செய்து கொண்டேன் … ” வாடா ஏதாவது சாபுட்றையா ” வேகமாக மண்டையை ஆட்டினான் .. அவனிடமிருந்து பணத்தை வாங்கிக் கொண்டு சேட்டுக்காக வாங்கி வைத்திருந்த உணவு பொட்டலத்தை அவனிடம் கொடுத்தேன் …

சேட் தான் சாப்பிடமாலேயே போய் சேர்ந்து விட்டான் , இவனாவது சாபிடட்டுமே என்ற எண்ணத்தை விட அவன் சாப்பிட்டு முடிப்பதற்குள் பணத்தை எண்ணி முடித்து விடலாம் என்ற எண்ணமே எனக்கு மேலோங்கியிருந்தது … பணத்தை பல தடவை மோர்ந்து பார்த்துக் கொண்டேன் , அதை அழகாக பைக்குள் அடுக்கி வைத்து விட்டு கைகளில் உறைகளை மாட்டிக் கொண்டேன் , அவன் ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான் … வாசல் கதவு தாழ்ப்பாள் சரியாக  போட்டிருக்கிறதா என்பதை ஒரு முறை சரி பார்த்து விட்டு திரும்பிய போது தான் கூர்மையான ஏதோ ஒன்று என் வயிற்றுக்குள் வேகமாக இறங்கியது …

கைகளில் கத்தியுடன் அவுட்டு நின்று கொண்டிருந்தான் , அவன் கழுத்தை நெறிக்க நான் நினைப்பதற்குள் மறு முறை முன்பை விட வேகமாக கத்தி என் வயிற்றுக்குள் இறங்கியது … மயக்கத்தில் கண்கள்  சொருக அவன் மேல் விழுந்த என்னை தள்ளி  விட்டு விட்டு  அவுட்டு பணம் இருந்த அறையை நோக்கி வேகமாக போய்க் கொண்டிருந்தான் … கண்கள் சொருகி செத்துக் கிடந்த சேட் ஒரு முறை என் நி…னை..வு…க்..கு  வ..ந்….தா …

tags

short story , tamil short story

சிறுகதை , தமிழ் சிறுகதை , கதை , இலக்கியம்

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>