/* ]]> */
Mar 182014
 
 
” எங்கள் மத்தியில் இன்னுமோர் கும்பல் எஞ்சியுள்ளது . அவமானத்தை அது சாப்பிடுகிறது . தலைகுனிந்து நடந்து செல்கிறது . அவர்களின்

பிடரியை நிமிர்த்துவோம் நாங்கள் . எதிர்ப்படும் ஒவ்வொரு கையையும் நக்கும் ஒருவனை எப்படி நாங்கள் எம்மிடையே வைக்கலாம் ? ”

பலஸ்தீனக் கவிஞர் ரஷித் குசைனின் இந்த வரிகள் இமையத்தின் செடல் படிக்கும் போது அடிக்கடி நினைவில் முட்டிய வண்ணமாய் இருந்தது .

ஊரைப் பிடித்தாட்டும் பஞ்சத்துக்கும் வறுமைக்கும் காரணம் தெய்வகுத்தமாகவும் இருக்கலாம் என்று பேசும் ஊர் பெரிய மனிதர்கள் ,  அதை நிவர்த்திக்கும் பொருட்டு சாதியிலும் பொருளிலும் இளைத்தவனான கோபாலின் மகள் செடலை செல்லியம்மன் கோயிலுக்கு பொட்டுக்கட்டி விட தீர்மானிக்கின்றனர் . பஞ்சத்துக்குப் பயந்து பிழைக்க இலங்கை செல்லலாம் என்ற எண்ணத்தில் இருக்கும் கோபாலையும் அவன் மனைவி பூவரும்பையும் புராணத்தில் இருந்து கதைகள் மேற்கோளிட்டும் , பொட்டுக்கட்டப்படும் பெண்னுக்கு அளக்கப்படும் படியின் காரணம் குடும்பமே பிழைக்கலாம் என்று ஆசை காட்டியும் பணிய வைக்கிறார்கள் . நிமிரவே இயலாத வண்ணம் அமுக்கிப்பிடித்து கதறக்கதற மொட்டையடித்து செடலுக்கு பொட்டுக்கட்டி விடும் கதை இப்படித்தான் துவங்குகிறது .

 பொட்டுக்கட்டுதல்

அழகும் இளமையும் மிக்க பெண்களுக்குப் பொட்டுக்கட்டி,  தெய்வ சேவைக்கென்று அவர்களை அர்ப்பணித்து வந்தது இசை வெள்ளாளர் குடும்பங்களில் வழக்கமாக இருந்து வந்திருக்கிறது . கோவில்கள் இருந்த இடத்திலெல்லாம் இந்த நடன மாதர் இருந்திருக்கின்றனர் . கோவிலின் வசதிக்கேற்ப அவர்களின் எண்ணிக்கையும் கூட குறைய இருந்தது .இஸ்லாமியப்படையெடுப்புக்குப் பிறகு கோவில்களின் செல்வாக்குக் குறைந்ததில் தமிழக கோவில்களின் செல்வநிலை தாழ்ந்தது . ஆனால் இஸ்லாமிய செல்வாக்கு குறைவாக இருந்த தென்தமிழகத்தில் பிரிட்டிஷ் ஆட்சி காலம் வரை தேவதாசி அமைப்பு இருந்தே வந்தது . கிராமங்களிலும் குலதெய்வ வழிபாட்டின் ஒரு கிளையாக இந்த வழக்கம் ஒடுக்கப்பட்ட சாதியான கூத்தாடிக் குடும்பங்களில் வழக்கில் இருந்து வந்திருக்கிறது .

இப்பொழுதும் புதுக்கோட்டை விராலிமலையைச் சேர்ந்த கிராமங்களில் வசித்து வரும் இந்த இனத்தினர் இவ்வழக்கத்தின் பிடியிலிருந்து விடுப்பட்டு விட்டாலும் தாக்கதில் இருந்து மீளாமல் வாழ்கின்றனர் என்பது அவசியம் குறிப்பிடப் படவேண்டிய செய்தி .

 வரலாறு

“தாசி குலம் தோன்றியது நம்முடைய காலத்தில் அல்ல. வியாசர், பராசரர் காலத்திலிருந்து அந்தக் குலம் வாழ்ந்து கொண்டு வருகிறது. பலருக்கு இன்பத்தை வாரி வழங்கிக் கொண்டும் வருகிறது. இப்படிக் கூறுவதால் என்னைத் தாசிக்கள்ளன் என்று கூட கூறலாம். அதைப் பற்றி நான் கவலைப்படப் போவதில்லை.சமூகத்திற்குத் தாசிகள் தேவை என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்ல விரும்புகிறேன். தாசிகள் கோவில் பணிக்கென்று படைக்கப்பட்டவர்கள். அது சாஸ்திர சம்மதமானது. தாசிகளை ஒழித்துவிட்டால் பரத நாட்டியக் கலை ஒழிந்துவிடும். சங்கீதம் அழிந்துவிடும். ஆண்டவன் கட்டளையை மீறுவது அடாத செயலாகும். அநியாயமாகும்”

— இப்படிப் பேசியவர் சனாதனவாதி தீரர் சத்தியமூர்த்தி ஐயர்

“அப்படியென்றால் ஒரு குறிப்பிட்ட குலத்தைச்சார்ந்த பெண்கள் மட்டுமே ஏன் பொட்டுக்கட்டி விடப்படவேண்டும் ? பிற குலப்பெண்களுக்கும் பொட்டுக்கட்டி அவர்களும் சமூக சேவை செய்யட்டுமே ” என்று பதிலடி கொடுத்த பெரியார் , முத்துலட்சுமி அம்மையாரின் முயற்சியால் இந்தக் கொடுமைக்கு முடிவு கட்டப்பட்டது . ( தகவல் உதவி நூல் – மகளிர் மனம் கவர்ந்த முத்து – பி.எல் . ராஜேந்திரன் )

தமிழகத்திலும் , தில்லியிலும் ஏனைய சில இடங்களிலும் கூட முதலமைச்சர்களாகவும் , பெருந்தலைவர்களாகவும் பெண்கள் முன்னிலை பெற்று வந்தாலும் , பெரும்பான்மையான பெண்களின் நிலையில் நல்ல மாற்றங்கள் இல்லாத நம் நாட்டின் இந்த காலகட்டத்தில் செடல் வாசிக்கப்படவேண்டிய முக்கிய நாவலாகிறது .

 கதைச்சுருக்கம்

பொட்டுக்கட்டி விடப்பட்டவர்கள் சில காலமாவது தம் குடும்பத்தில் இருந்து பிரிந்து கோயிலை ஒட்டிய குடியிருப்புகளில் வாழவேண்டும் என்ற விதிமுறைக்கு உடன்படுத்தப்படுகிறாள் செடல் . சின்னஞ்சிறுமி என்பதால் தாயையும் குடும்பத்தினரையும் பிரிந்து பெருந்துயருக்கு ஆளாகிறாள் . கடும் பஞ்சத்தின் போது செடலிடம் சொல்லிக்கொள்ளாமலேயே தாய் தகப்பனும் உடன்பிறந்தோரும் ஊரை நீங்குகின்றனர் , இவளுக்குத் துணையாக அமர்த்தப்படும் கிழவியுடன் தனியாக வாழ்வை எதிர்கொள்கிறாள் செடல் . கிழவியின் மரணம் கடுமையாக பாதிக்கிறது அவளை . ஒரு வழியாக இவளைப் பொட்டுக்கட்டியதன் அர்த்தமாக மழை கிழிந்து கொட்டும் ஒரு நாளில் பூப்பெய்தும் செடலுக்கு கோவிலை ஒட்டிய குடிசையில் தங்க அனுமதி கிடைப்பதில்லை .

ஒண்ட இடமில்லாமல் இரத்தம் பெருக்கிய நிலையில் ஊரை நீங்குகிறாள் .பொன்னன் எனும் தெருக்கூத்து செட் நடத்தும் தூரத்து உறவினன் இவளை அழைத்து அடைக்கலம் கொடுக்கிறான் , விருப்பம் இல்லாத நிலையிலும் கட்டாயத்தின் பேரில் அவனுடன் சேர்ந்து தெருக்கூத்தில் தேர்ச்சி அடைந்து பேர் பெற்ற நடனக்காரியாகிறாள் செடல் .

வனப்புமிக்கவளாக இருக்கின்றதாலும் பொட்டுக்கட்டி விடப்பட்ட பெண் என்பதாலும் எல்லா இடத்திலும் அவளுடய உடலின் மீது ஆதிக்கம் செலுத்தத் துடிக்கும் ஆண்கள் , (பொன்னன் , உடையார் , ஆரான் ) தான் சாமிப்பிள்ளை என்பதால் கன்னியாகவே தன் காலத்தைக் கழித்து விடும் உறுதியுடன் செடல் என்று போகிறது கதை .

அகாலமாய்ப் பொன்னன் இறந்து போக குழுவின் மற்றவர்களுடன் தெருக்கூத்தாடிப் பிழைக்கிறாள் .சகோதரி வனமயிலின் கட்டாயத்தின் பேரில் பிழைத்து வந்த ஊரை நீங்கி மறுபடி தன் ஊருக்குச்செல்லும் செடலுக்கு சொந்த ஊரில் கொஞ்சமும் மதிப்பில்லாமல் போகிறது . வனமயில் இறந்து போகிறாள் , தன் மகனாய் செடல் பாவிக்கும் அவளுடய மகனும் செடலை நீங்குகின்றான் . வாழ்வில் விருப்பமற்றுப் போகும் நிலையில் தெருக்கூத்தில் பெரும் புகழ் பெற்று , அப்பொழுதில் படுக்கையில் கிடக்கும் பாஞ்சாலியின் விருப்பத்துக்கு  ஒப்பி அவளுடைய நாடக செட்டை தான் நடத்துவதாக வாக்களிக்கிறாள் செடல் .

 வாழ்வின் குரூரம்

நாவலின் துவக்கத்திலிருந்து இறுதி வரையிலும் ஒரே வரியில் விவரிப்பதானால் ஆண்டான் x அடிமை , செல்வந்தன் x ஏழை , உயர்சாதி x தாழ்த்தப்பட்ட சாதி , ஆண் x பெண் என்ற தான் வாழ மற்றயதை நசுக்குதல் அல்லது அழித்தல் என்ற மனித குலத்தின் குரூர முகத்தைக் காண முடிகிறதைச் சொல்லலாம்.

கதையின் முதல் வரியிலேயே இந்த வாக்கியத்தில் ஏதோ சரியில்லை என்று தோன்றிப் போகிறதை இமையம் சற்று கவனித்திருக்கலாம் .

” சாமி என்னிக்குமே சாவப்போறதில்லெ. ஒம் மவளும் தாலியறுக்கப்போறதில்லெ ”

இப்படித்தான் “நித்திய சுமங்கலிப் பட்டத்தை” எலும்புத் துண்டாகக் காட்டி செடலின் அப்பனை பொட்டுக்கட்டுதலுக்கு ஒப்ப வைக்கிறது ஊர் ! செடல் பொட்டுக்கட்டப்படுவதோ செல்லியம்மனாகிய கண்ணகிக்கு – பெண் தெய்வத்துக்கு இன்னொரு பெண் எப்படி தாலி கட்டிக்கொள்வது ? அத்தனை அறியாமையில் இருக்கும் மக்கள் அவர்கள் என்பது தானா இமையத்தின் பதில்?

கருத்து , மொழி , வடிவம் , உத்தி இவை அத்தனையும் சார்ந்த புதிதான ஒரு விஷயம் அல்லவா ஒரு படைப்பு!  செடல் தெருக்கூத்தில் தேர்ச்சி பெறுகிறாள் என்பதைக் காட்ட எத்தனை உழைத்திருக்கின்றார் இமையம் ? ஆனால் மிகப் பிரயாசைப்பட்டு எழுதப்பெற்றிருக்கும் அவ்வரிகளை – அதிகப் பக்கங்களை ஆக்ரமித்திருப்பதாலும் கதையோடு ஒன்றாமல் துருத்தி நிற்பதாலும்  – படிக்காமல் தாண்டிச்சென்று விடத்தான் வாசக மனம் துடிக்கிறது . பேசுபொருட்கள் ஒன்றுக்கு மேற்பட்டவை என்பதால் கதையின் போக்கும் பல இடங்களில் நிலை கொள்வதில்லை.

செடல் – பொட்டுக்கட்டி விடப்படுவதால் காலம் முழுக்கவும் கன்னியாக வாழ வேண்டிய கட்டாயத்தில் வயிற்றுப்பாட்டுக்கும் , தன் உடலை பிற ஆண்களிடமிருந்து காத்துக்கொள்வதற்கும் இடையில் சிதறுண்டு போகும் ஒரு பெண்ணின் வாழ்க்கைச் சித்தரிப்பா அல்லது அழிந்து போகும் கூத்துக்கலைஞர்களின் ஆறாக்கண்ணீர் கதையா ? செடலின் கதை என்றால் இம்மாதிரியான ஒரு வாழ்வைச் சுமந்து தடுமாறிக்கொண்டிருக்கும் அவளின் அகஉணர்வுகள் ஒன்றிரண்டு பத்திகளில் மட்டுமே சொல்லப்பட்டிருப்பதாலும் , முற்றுமுழுக்காக தனிமையில் வாழும் செடலின் அகத்தனிமை பற்றின குரலே கதையில் எழும்பாததாலும் சுவாரஸ்யம் வெகுவாக ,மட்டுப்படுக்கிறது . புறச்சார்பு கொண்ட அவளின் பேச்சு மட்டுமே பதிவாகி இருப்பது குறையாகத் தான் தெரிகிறது .

கதையம்சத்தையும் மீறின தெருக்கூத்தின் தொழிற்நுணுக்கங்கள் மற்றும் பாடல்கள் நாவல் முழுக்க வியாபித்திருக்கின்றது என்பது மட்டுமே இது தெருக்கூத்துக்கலைஞர்களின் கதை தான் என்று பொருந்திக்கொள்ள போதுமானதாகவும் இல்லை .

 கேள்விகள்

தன்னை உடமையாக்கிக்கொள்ளும் எண்ணத்துடன் வரும் உடையாரிடம் பேசும் போதும் மேலும் பல சந்தர்ப்பங்களிலும் கூட தன் பிறப்பும் குலமும் தாழ்ந்தது தான் என்று செடலே நம்புகிறார் போல் வசனங்கள் வருவது எவ்விதத்தில் நாவல் எழுதப்பட்டதன் நோக்கத்துக்கு வளம் சேர்க்கின்றது என்பது பெரிய ஒரு கேள்விக்குறி ! நான் கட்டுரையின் துவக்கத்தில் மேற்கோளிட்டிருந்த கவிஞர் ரஷித்தின் வரிகளின் பொருளை சரி பார்த்துக்கொள்ள வேண்டியது இந்த இடங்களில் தான் .

” நான் முன் சென்மாந்தரத்துல என்னா பாவம் செஞ்சியிருந்தா, இந்தப் பொறவியில இந்தக் கெதிக்கு ஆளாயிருப்பன்? எனக்கு இன்னமா வேணும்? ஒங்க வூட்டு மாட்டுச் சாணிய வாரி வவுறு வளர்க்கிற சாதி நான். பறச்சிய விட மட்டி ஒங்களத் தொட்டு தீட்டாக்கி நான் இன்னுமா பாவத்தச் சேத்துக்கணும்? ஒங்க சாதிக்கேத்தத் தொயிலா இது? …… எல்லாத்தயுங்காட்டியும் நான் பொட்டுக்கட்டி வுட்டவ. எனக்கு அந்த மாரியான கொடுப்பன எல்லாம் கெடயாது. வேற ஏதாச்சும் சொல் லுங்க….” அட எங் கடவுள, என்னால ஒங்க சாதி மானம் கெடணுமா? சாதி கலப்பு வாண்டாம் சாமி, மாடு திங்கிற பொலச்சியத் தேடி வரலாமா?”

உள்ளது உள்ளபடி என்பதை எழுதுவதை விடவும் அதைத் தாண்டல் , மீறல் என்பதைத் தன் சிறுகதைகளில் பேசுபராயிற்றே இமையம் ?

 ஆண்டான் x அடிமை = ஆண் x பெண் ?

செடலுக்குப் பொட்டுக்கட்டும் முடிவை தகப்பன் முன்னும் ஊர் முன்னும் வைப்பது – நடராஜப் பிள்ளை – அதற்கான புராணக்கதையைச் சொல்லி அதை நியாயப்படுத்துவது – ராமலிங்க ஐயர் – ஒடுக்கப்பட்ட குலம் மற்றும் வறுமையின் காரணம் மனைவியின் ஆட்சேபணையையும் மீறி அதை ஒப்புவது – கோபால்-  என்று எல்லாமே ஆண்கள் .

பொட்டுக்கட்டப்பட்டு குடும்பத்தைப் பிரிந்து கோயிலை ஒட்டின வீட்டில் அவள் வசிக்கும் போது துணையாய் இருப்பது – சின்னம்மாள் கிழவி -  தன்னைப் போலவே பொட்டுக்கட்டப்பட்ட பெண் என்ற கரிசனத்தில் இம்மாதிரியான விசித்திரமான வாழ்வை அழகாக பாதுகாப்பாக வாழும் வகையையும் தாங்கள் சாமிப்புள்ள தம் கன்னிமையை காத்துக்கொள்ள வேண்டும் என்ற நினைப்பை அவளுக்குள் உண்டு பண்ணுவது – லட்சுமி – ஒண்ட இடங்கொடாத ஊரை நீங்கி பொன்னனின் தயவில் வாழ நேரும் போது தோழியாய் இருந்து வாழ்வின் மீது மீண்டும் நம்பிக்கை கொள்ள வைப்பது – விருத்தாம்பா – காலச்சுழலில் சிக்கி அவநம்பிக்கை கொள்ளும் போது மீண்டும் நம்பிக்கை உண்டாக்குவது – பாஞ்சாலி – என்று எல்லோரும் பெண்கள் .

மதுரை மீனாட்சி அம்மனின் சாபமே தங்களைப் போன்ற பொட்டுக்கட்டின பெண்களுக்கு வாழ்வு விடியாததன் காரணம் என்று செடலுக்கு போதனை செய்பவளும் பாஞ்சாலியே .

சில தமிழ் சினிமாக்களில் போல பிழியப்பிழிய சோக ரசம் சொட்டும் கதை என்றாலும் தன் பிள்ளையாய் கருதி வந்த வனமயிலின் மகனும் தன்னை நீங்கின பின்னும் கூட ஒடிந்து போகவில்லை அவள் என்பதிலும் தனக்கு சம்மதமில்லாமல் தன் மீது சுமத்தப்பட்ட முட்கிரீடத்தை சுமந்தே அலைந்தாலும் , அதைச்சுமத்தின சமூகத்தைத் தனக்கு அறிந்த வழியில் பழி வாங்குகின்றாள் என்பதெல்லாமும் பெண்ணிய நோக்கில் சிலாகிக்கப்பட வேண்டிய அம்சங்கள் . வட்டார வழக்கும் , சொலவடைகள் மற்றும் பழமொழிகள் ஆகியவற்றின் தாராளமான இயல்பான பிரயோகம் இவையெல்லாமும் இமையத்தின் எழுத்துக்கே  உரிய பிரத்யேகமான தன்மைகள் .

தடுமாறும் செடல்

மிகுந்த சோகமான எத்தனையோ பெண்களின் சித்திரங்களை வாசித்திருக்கிறோம் .. டால்ஸ்டாயின் அன்னா கரேனினா , இங்கென்றால் கண்மணி குணசேகரனின் அஞ்சலை என்று .. ஆனால் குவிமையச்சிதறல் , கூறியது கூறல் , நடையில் வறட்சி  காரணமாகவும் ,அன்னா போலவோ , அஞ்சலை அளவிலோ செடல் நம் நெஞ்சங்களில் நிறைகின்றாள் இல்லை ! இத்தனை உழைப்பில் உருவாகி இருக்கும் கதை எப்பொழுதும் நினைவில் நின்றிருக்குமா என்பதும் …. ?

செடல் என்றால் குடைராட்டினம் என்கிறார் இமையம் .. ரீடபிலிட்டி அதாவது வாசிப்பில் இன்பம் தடைப்படுவதால் காற்றாய்ப் பறந்திருக்க வேண்டிய செடல் சிக்கித் திக்கி தடுமாறுகின்றாள் !

 

..ஷஹிதா ..

 

( பண்புடன் ஏப்ரல் 2013 பெண்கள் இதழில் வெளியானது )

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>