/* ]]> */
Dec 022011
 

பெரிய சிகப்பு நெற்றிப் பொட்டும், மையிட்ட கண்களும்,சுருள் முடியும், அடர்வண்ணப்புடவைகளும்அவரின்அடையாளங்களாகும்.அஸ்ஸாமின் இனிய மகள் என்று கொண்டாடப் பட்டு,அஸ்ஸாமியர்களிடையே செல்லமாகஅறியப்படும் மாமோனி பாய்தியோ ஒரு அஸ்ஸாமிய எழுத்தாளர், கவிஞர்,பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் அறிவு ஜீவி.

இவர் இந்திரா கோஸ்வாமி என்ற இயற்பெயரால் அறியப்படும்  மாமோனி ராய்சோம் கோஸ்வாமி (Mamoni Raisom Goswami) . நவம்பர் 14, 1942 ஆம் வருடம் இந்தியாவில், குவாஹத்தி என்னும் ஊரில் பிறந்தார். தந்தையார் பெயர் உமாகாந்தா கோஸ்வாமி. இந்திரா அவர்கள்,அஸ்ஸாம் தலைநகர் ஷில்லாங்கில் பைன் மவுண்ட் பள்ளியிலும்,(Pine Mount ) தன் கல்லூரிப் படிப்பை குவாஹாத்தியில் உள்ள காட்டன் கல்லூரியில்(cotton college) அஸ்ஸாம் இலக்கியம் பயின்றார்.

கிரிதிநாத் ஹசாரிகா(Kirthi Nath Hazarika)என்பவர் இந்திராகோஸ்வாமியை ஊக்குவித்து அவரது சிறுகதைகளைத் தொகுத்து, திருத்தி இலக்கிய இதழில் வெளியிட்டார். அப்பொழுது இந்திராவுக்கு வயது பதிமூன்று, அவர் 8 ஆம் வகுப்பு சிறுமி. அவர் மாணவியாக இருக்கும் சமயம்,1962 ஆம் வருடம் இவருடைய சிறுகதைத் தொகுப்பை சினக்கி மோரோம்(chinaki morom) என்ற தலைப்பில் வெளியிட்டார்.

இவர் பிள்ளைப் பிராயத்தில் இருந்தே மனச்சோர்வுக்கு உட்பட்டு,  தற்கொலை எண்ணங்கள் மேலோங்க,ஷில்லாங்கில் அவரின் வீட்டிற்கு அருகில் இருக்கும் கிரினோலைன் (Crinoline falls)அருவியில் குதித்துள்ளார். தொடர்ந்து அவருடைய தற்கொலை முயற்சியால் அவருடைய இளமைப் பருவம் முழுவதும் சுவாரசியம் அற்றும், துன்பகரமாகவும் இருந்தது.அவருடைய மண வாழ்வும் அவ்வளவாக திருப்திகரமாக இல்லை. திருமணம் முடித்து பதினெட்டே மாதங்களில் அவர் துணைவர் மாதவன் ரய்சோம் அய்யங்கார் காஷ்மீர் பகுதியில், ஒரு கார் விபத்தில் உயிர் இழந்தார்.அவரின் திடீர் மரணத்தால் மிகவும் மனமுடைந்து தூக்கமாத்திரைகளுக்கு அடிமை ஆனார். அவருடைய மனமாற்றத்திற்காக அவரை அஸ்ஸாம் மாநிலத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு அவர் கோல்பாரா சய்னிக்(Goalpara sainik)பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார்.மெல்ல மெல்ல தன் துயரத்தை மறக்க திரும்பவும் எழுதத்துவங்கினார். தன் எழுத்தால் தான் தன் துயரத்தை துறந்து, தான் எழுதுவதே வாழ்வதற்காக என்றும், தன் எழுத்தால் தான் அது சாத்தியம் ஆனது என்று அவர் கூறியுள்ளார்.

அவருடைய நாவல்களான அஹிரான் மற்றும் தி செஹினாப்ஸ் கரண்ட்(Ahiron and The Chehnab’s current) நூல்களில், காஷ்மீரிலும், மத்திய பிரதேஷிலும், அவர் கணவர் பொறியாளர் ஆக பணியாற்றிய இந்திய மாநிலங்களின் தன் அனுபவங்களை குறிப்பிட்டுள்ளார்.

கோல்பாரா சய்னிக் பள்ளியில் பணியாற்றும் பொழுதே, அவர் ஆசிரியர் உபேந்திர சந்திர லெக்ஹெரு வற்புறுத்தலின்பேரில் மத்திய பிரதேஷில் உள்ள பிருந்தாவனில் மன அமைதி ஆராய்ச்சிக்காக அழைக்கப்பட்டார்.தி புளு நெக்டு பிரஜா(1976 ல The Blue Necked Braja) என்ற நாவலில் ஆராய்ச்சியாளராகவும், விதவையாகவும் தன் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். இந்த நாவலில் இளம் விதவைகளின் அவலநிலையும், பாலியல் வன்கொடுமைகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். சமூகத்தின் பழமைவாத அமைப்புகள் இவரை விமர்சித்தன.

பிருந்தாவனில் அவர் ராமாயண காவியத்தை ஆய்வுக்காக எடுத்துக்கொண்டிருந்தார். மாபெரும் தொகுதியான துளசிதாஸ் ராமாயணம் வெறும் பதினோரு ரூபாய்க்கு வாங்கினார். அவர் ஆய்வு செய்வதற்கு இதுவே உத்வேகமும், பெரும் மூலாதாரமாகவும் இருந்தது.இந்திரா அவர்கள் தில்லியில் உள்ள தில்லி பல்கலைகழகத்தில் உள்ள அஸ்ஸாமியத் துறைத் தலைவராக பணியாற்றினார். அவர் வாழ்வில் வசந்தம் வீசத் தொடங்கியது. இனிமையான தருணங்கள் ஆரம்பமாயின.பல்கலைகழகத்தில் பணியாற்றும் பொழுது பல சிறந்த படைப்புகளை எழுதினார்.

ஹிரிடொய்,நன்கோத் சோஹர், பரோஃபோர் ராணி (Hridoy, Nangoth Sohor,Borofor Rani) போன்ற சிறு கதைகளும், தில்லியின் பின்னணியும் எழுதியுள்ளார்.அவருடைய ரத்தத்கரை படிந்த பக்கங்கள் (pages stained in blood) என்ற புத்தகத்தில்1984 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் இந்திராகாந்தியின் படுகொலைக்கு பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தைப் பற்றியும், தில்லியில் G.B.தெருவில் இருக்கும் சிவப்பு விளக்குப் பகுதியில் வசிக்கும் விலைமாதர் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

அஸ்ஸாமின் மத நிறுவனங்கள் பற்றியும், அஸ்ஸாமிய பிராமண விதவைகளின் நிலை பற்றியும் தி மோத் ஈட்டன் ஹொவ்டா ஆஃப் டஸ்கெர்(The Moth Eaten Howdah of a Tusker) என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார். இந்திய இலக்கியத்தின் மாஸ்டர் பீஸ்(Master pieces of Indian Literature) என்ற சிறப்புக்கான பட்டத்தை இந்த நாவல் கெளரவிக்கபட்டது. இந்த நாவல் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு பல சர்வதேச மற்றும் தேசிய விருதுகள் பெற்றது. தொலைக்காட்சித்  தொடராகவும் இந்த நாவல் எடுக்கப்பட்டது.

இவர் புகழின் உச்சியில் இருந்த போது எழுதிய நாவல் தி மேன் ஃபரம் சின்னமஸ்தா(The Man from Chinnamasta,) மிகவும் சர்சைக்குரிய நாவல் ஆகும். ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அஸ்ஸாமில் உள்ள அம்மன் கோயில்களில் பிராணிகளைப் பலியிடுவதை பற்றி விமர்சிப்பதாக உள்ளது இந்த நாவல். அம்மனை ரத்தத்தால் பூஜிப்பதை விட, மலர்களால் பூஜிக்கவேண்டும் என்று தன் நேர்காணலில் கூறியுள்ளார். இந் நாவல் பிரபல பத்திரிக்கையில் தொடராக வெளிவந்த பொழுது பல மோசமான அச்சுறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு பிராணி வதை கோவில்களில் தடுக்கப்பட்டது.

இந்திரா  சாகித்திய அகாடமி விருதை 1982 ஆம் வருடமும், இந்தியாவின் மிக உயர்ந்த ஞானபீட விருதை 2000 ஆம் ஆண்டு பெற்றார். இவருடைய எழுத்துக்கள் பெண்களை மையமாக கொண்டும், அஸ்ஸாமிய சமூகத்தின்  கலாச்சாரமும் மற்றும் அரசியல் கட்டமைப்பைக் கொண்டும் இருந்தது. அமரங்கா, போரிஹா(Amaranga,Boriha) அஸ்ஸாமில் உள்ள சிறிய இடத்தில் இருந்து எடுத்துக்காட்டுடன் அஸ்ஸாமிய பிராமண குடும்பங்களில் நடக்கும் ஆணாதிக்க பிரச்சனைகளைக் கூறியுள்ளார்.

இந்திரா கோஸ்வாமி அவர்கள் குவாஹத்தி மருத்துவமனையில் நீண்டநாட்கள் நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் கடந்த மாதம் நவம்பர் 29 ஆம் தேதி 2011 வருடம் காலை 7.45 மணிக்கு இறைவன் திருவடிகளை அடைந்தார். இவரது இழப்பு இலக்கிய உலகத்திற்கு மாபெரும் இழப்பாகும்.

..மாதங்கி..

இந்திரா கோஸ்வாமி, மாமோணி ரைஸோம் கோஸ்வாமி, அஸ்ஸாமிய எழுத்தாளர் , பெண்ணியவாதி ,அஸ்ஸாமின் செல்ல மகள்

mamoni raisom goswami, indira goswami,assamese writer, feminist

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>