/* ]]> */
Aug 262011
 

 

 

 

 

’எலி’ ஸபத் டவர்ஸ்

 

நகைச்சுவை சிறுகதை [பகுதி 1 of 2 ]

By வை. கோபாலகிருஷ்ணன் 
 

அன்று வெள்ளிக்கிழமை. ராமசுப்பு ஆபீஸுக்கு வந்து இரண்டு மணி நேரம் கூட ஆகாத நிலையில் அவருடைய போன் ஒலித்தது.

“ஹலோ, ராமசுப்பு ஹியர்” என்றார்

 

“அப்பா…. நீ உடனே புறப்பட்டு வீட்டுக்கு வா. நம்ம வீட்டிலும் அந்த சனியன் புகுந்து விட்டது. எனக்கும் அம்மாவுக்கும் என்ன செய்வதென்றே புரியாமல், படுக்கை அறை கட்டிலின் மீது ஏறி, ஆளுக்கு ஒரு தடிக்குச்சியால் தட்டிக் கொண்டே இருக்கிறோம்.” போனில் பேசினான் அவரின் ஒரே வாரிசு, பத்தாம் வகுப்பு படிக்கும் ராஜூ.

 

 

 

ராகு காலம் என்று கூட பார்க்காமல் அரை நாள் லீவும், கால் நாள் பர்மிஷனும் எழுதிக்கொடுத்து விட்டு, உடனே பஸ் பிடித்து கிளம்பி விட்டார் ராமசுப்பு. 


பஸ்ஸில் பயணிக்கும் போது அவர் மனதிலும் ஒரே படபடப்பு.சிறு வயது முதற்கொண்டே பல்லி, பாச்சை, கரப்பான் பூச்சி, சுண்டெலி, பெருச்சாளி, தவளை, ஓணான் போன்ற எந்த ஜந்துவைக் கண்டாலும், அவருக்கும், அவருக்கென்று வாய்த்த மனைவிக்கும், அவர்களுக்குப் பிறந்த பையனுக்கும் ஒரு வித அருவருப்பு கலந்த பயம்.

அவர்கள் வசித்து வரும் “எலிஸபத் டவர்ஸ்” என்ற புத்தம் புதிய அடுக்குமாடிக் குடியிருப்பில் கொஞ்ச நாட்களாகவே முரட்டு எலி ஒன்று அடிக்கடி கண்ணில் தென்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

அந்த எலிஸபத் டவர்ஸ் குடியிருப்போர் நலச் சங்கத்தின் செயலாளரான ராமசுப்புவை, இந்த எலி விஷயமாக சென்ற வாரம் கூட்டப்பட்ட சிறப்புப் பொதுக்கூட்டத்தில், எல்லோருமாக சேர்ந்து (பல எலிகள் சேர்ந்து கூட்டமாக குடைவது போல) குடைந்ததில் மனுஷன் ஏற்கனவே நொந்து நூலாகிப் போய் இருந்தார். 
இந்த ஒரு சிறிய எலிப் பிரச்சனையைக் கூட தீர்க்க முடியாத செயலாளரின் செயலற்ற போக்கிற்கு, கண்டனத் தீர்மானம் கொண்டு வந்து, அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றி, மன நிறைவு கொண்டு மகிழ்ந்தனர் அந்தக் குடியிருப்பு வாசிகள்.

புதிதாகக் குடி வந்த முதல் மாடி, முதல் வீட்டு முத்துசாமி மேல் அனைவருக்குமே ஒரு சந்தேகம். அவர் குடும்ப உபயோகப் பொருட்கள் என்ற பெயரில் பலவிதமான அடசல்களை லாரியிலிருந்து இறக்கியதைப் பலரும் முகம் சுளித்தவாறு பார்த்திருந்தனர். ஒரு வேளை இந்த சனியன் அவர் மூலம் இந்த அடுக்கு மாடி வளாகத்தினுள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் இருக்கலாம்.

இப்போது அந்தப் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தாற்போல இவர்கள் வீட்டுக்குள்ளேயே நுழைந்துள்ளது.


2)

செயலற்ற செயலாளராக இருப்பதாகச் சொல்லி, தன் மீது கண்டனத்தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய புண்ணியவான்கள் யாரோ, நம்மீது உள்ள கடுப்பில், வேண்டுமென்றே மூன்றாவது மாடியின் கடைசி வீடான நம் வீட்டுப்பக்கம் அந்தச் சனியனை துரத்தி விட்டிருப்பார்களோ! இது அவர்களில் யாரோ ஒருவரின் சதித்திட்டமாகத் தான் இருக்கக்கூடும் என்ற ஒரு சந்தேகம் ராமசுப்புவுக்கு வந்தது. 


பஸ் இறங்கி வீடு செல்லும் முன்னே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு துடைப்பம் (தென்னங்கீற்றுக் குச்சிகளை வைத்துக் கட்டிய கட்டை விளக்கமாறு) வாங்கிக்கொண்டு, ஒரு வீராதி வீரனின் போர்வாள் போல அதைக் கையில் பிடித்துக்கொண்டு, தன் வீட்டிற்குள் பயந்து கொண்டே நுழைந்தார்.

வீட்டின் வெளிப்பக்க கிரில்கேட் திறந்தே இருந்தது. பூட்டிய பூட்டு மட்டும் தனியே தொங்கிக் கொண்டிருந்தது. தன்னிடம் இருந்த மாற்றுச் சாவியால் வெளிக்கதவைப் பூட்டி விட்டு உள்ளே போனார். ஹாலில் யாரும் பார்க்காமலேயே, டி.வி. ஓடிக்கொண்டிருந்தது. அதை ரிமோட்டால் அணைத்து விட்டு, மெதுவாக பெட்ரூம் கதவைத் திறந்து கொண்டு உடனே மீண்டும் ஞாபகமாக அந்தக் கதவை சாத்திவிட்டு, மனைவி மற்றும் மகனுடன் தானும் கட்டிலில் ஏறிகொண்டார்.

சமையல் அறைப் பக்கம் தான் நேரில் பர்த்து விட்ட அந்த எலியின் நடமாட்டத்தைப் பற்றி, திகிலுடன் அம்புஜம் விவரித்துக் கூறியதை, ஒரு மர்மக் கதை போல அரண்டு மிரண்டபடியே கேட்டுக்கொண்டார், ராமசுப்பு.

பிறகு என்ன செய்வது என்று ஒன்றும் புரியாதவராக, தன்னிடம் ஓரளவு ஒட்டுதலாகப் பழகும் பக்கத்து வீட்டுப் பட்டாபியை செல்போனில் அழைத்தார், ராமசுப்பு.


அது சமயம் தன் குடும்பத்தாருடன் மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையாருக்குப் பாலாபிஷேகம் செய்யப் போயிருந்தார் பட்டாபி. தனக்கு நேர்ந்துள்ள விபரீதத்தை பட்டாபியிடம் விளக்கிப் பரிகாரம் கேட்கலானார், ராமசுப்பு.

“பூனை ஒன்று வாங்கி வளர்க்கலாம் அல்லது ஏற்கனவே பூனை வளர்ப்பவர்களிடம் வாடகைக்கோ அல்லது ஓஸியிலோ வாங்கி வரலாம். அவ்வாறு செய்தால் பூனை எலியைப் பிடித்துத் தின்று விடும் என்று ஒரு ஆலோசனையும்; எலி பாஷாணம் என்று கடைகளில் விற்கும். அதை வாங்கி சாதத்துடன் மையப்பிசைந்து, ஆங்காங்கே வீடு பூராவும் உருட்டி வைத்து விட்டால், எலி அதை அப்படியே சாப்பிட்டாலும் சாப்பிடலாம்; இறந்து போனாலும் போகலாம்” என்ற மற்றொரு ஆலோசனையும் வழங்கி விட்டு, அபிஷேகம் பார்க்க வேண்டிய அவசர வேலை இருப்பதாகச் சொல்லி, தொடர்பைத் துண்டித்து விட்டார், பட்டாபி.

“சாமியார் பூனை வளர்த்த கதையாகிவிடும். அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். குறுக்கேயும் நெடுக்கேயும் ஓடிக்கொண்டே இருக்கும். சகுனத்தடையாகி விடும். அதைக் கைக்குழந்தை போல பராமரிக்கணும். எல்லா இடங்களிலும் மலம் ஜலம் கழித்து அசிங்கம் செய்து விடும். பூனையிலிருந்து ஏதோ ஒரு வித வைரஸ் நோய் பரவுவதாக சமீபத்தில் ஏதோ ஒரு வார இதழில் படித்தேன்” எனச் சொல்லி அந்தப் பூனை வாங்கும் யோசனையை முளையிலேயே கிள்ளி எறிந்தாள் அவரின் மனைவி அம்புஜம். எலி பாஷாணமும் அவளுக்கு சரியாகப் படவில்லை. அதையும் நிராகரித்து விட்டாள்.

“வளவளன்னு நீங்க ரெண்டு பேரும் பேசிண்டே இருக்காமல் சீக்கிரமாக ஏதாவது வழி பண்ணுங்கப்பா …. மத்தியான சாப்பாடே இன்னும் அம்மா தயார் செய்யவில்லை. பசி வயிற்றைக் கிள்ளுது” என்றான் ராஜூ.


3)

ராமசுப்பு, அம்புஜம், ராஜூ மூவரும் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்த வண்ணம் தாண்டிக் குதித்து, பெட் ரூமை விட்டு மெதுவாக வெளியே வந்து, எட்டி நின்றவாறு மிகவும் உஷாராக சமையல் அறையை ஒரு திகிலுடன் பார்த்து விட்டு, பூட்டிய வீட்டைத் திறந்து வெளியே போய், மீண்டும் வீட்டையும் பூட்டிவிட்டு, ஹோட்டல் ஒன்றுக்குச் சாப்பிடச் சென்றனர்.

திருப்தியாகச் சாப்பிட்டுத் திரும்பும் வழியில் சந்தித்த தன் பால்ய நண்பர் பரந்தாமனிடம், இந்தப் பிரச்சனையைப் பற்றி விவாதித்ததில் நல்ல ஒரு தீர்வு கிடைத்தது, நம் ராமசுப்புவுக்கு.

பரந்தாமன் வீடும் பக்கத்திலேயே இருந்ததால், அங்கு போய் அவர் வீட்டுப் பரணையில் (லாஃப்ட்டில்), வேலை வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் தூங்கிக் கொண்டிருந்த எலிக்கூடு ஒன்றை வாங்கிக் கொண்டபின், சூடான சுவையான ரோட்டுக்கடை … மசால் வடை ஒன்றும் வாங்கி, அவரை விட்டே, கைராசி என்ற பெயரில் அதில் பொருத்தித் தரச்சொல்லி வாங்கிக்கொண்டார், ராமசுப்பு.

“ஆள் நடமாட்டம் இருந்தால் அந்தப் பக்கம் எலி வரவே வராது, சார். அப்படியே வந்தாலும் நம்மை ஒன்றும் கடித்துக் குதறாது சார். நாம் பயப்படுவது போலவே அதுவும் நம்மைப் பார்த்து பயந்து எங்கேயாவது ஓடி ஒளிந்து விடும்” என்று நம்பிக்கை அளித்து, அந்த எலிக்கூடையும் ஒப்படைத்து “ஆல் தி பெஸ்ட்” சொல்லி அனுப்பி வைத்தார், பரந்தாமன்.


தேர்தல் வாக்குறுதியை நம்பி நாம் ஓட்டளிக்கச் செல்வது போல, பரந்தாமன் கொடுத்த நம்பிக்கையில் எலிக்கூட்டுடன் அடுக்கு மாடி வீட்டுக்கு விரைவாகச் செல்ல ஆரம்பித்தனர்.

மூன்றாவது மாடிக்குச் செல்ல லிஃப்ட் ஏறியபோது, கூடவே ஒட்டிக்கொண்ட பால்காரர் ஒருவர், “என்ன ஸார் எலிக்கூடு இது? இவ்வளவு அழுக்காக ஒட்டடையுடன் ஒரு வித நாற்றம் அடிப்பதாக உள்ளது. இது போல சுகாதாரமில்லாத எலிக்கூட்டைக் கொண்டுபோய் வைத்தீர்களானால், எலி அந்தப் பக்கமே வராது ஸார். சுத்தமாக சோப்புப் போட்டுக்கழுவி, ஏற்கனவே எலி விழுந்த வாடை எதுவும் இல்லாமல் வைத்தால் தான், டக்குனு வந்து எலி மாட்டிக்கும்” என்று தான் பல நாள் முயன்று, பல நூற்றுக்கணக்கான எலிகள் பிடித்த அனுபவத்தை எடுத்துரைத்தார்.

சரியான நேரத்தில், இந்த ஒரு பக்குவத்தை எடுத்துக்கூறிய அந்தப் பால்காரரை நன்றியுடன் நோக்கிய ராமசுப்பு, அந்தப் பால்காரரை விட்டே எலிக்கூட்டிலிருந்து மசால் வடையை மெதுவாக வெளியே எடுத்துக் கொடுத்து உதவுமாறு வேண்டினார், பிறகு அதே மசால் வடை தேவைப்படலாம் என்ற தொலை நோக்குத் திட்டத்தில்.

பால்காரர் எலிக்கூட்டின் உள்ளே தன் முரட்டுக் கையைவிட்டு வடையைப் பிடித்து வேகமாக இழுத்ததில், மிகவும் மிருதுவான அந்த மசால் வடை, தூள் தூளாகி லிஃப்டினுள்ளேயே சிந்திச் சிதறியது.

“எலிக் கூட்டை சுத்தமாக சோப்புப் போட்டுக் கழுவி விட்டு, வேறு ஒரு புதிய மசால் வடை வாங்கி வைங்க ஸார்” என்றார் மிகவும் அஸால்ட்டாக அந்தப் பால்காரர்.

’ரெண்டு ரூபாய் போட்டு வாங்கிய பெரிய சைஸ் மசால்வடை இப்போது தண்டமாகி விட்டது. அதை வாங்கிய உடன் சூடாக நாமாவது புட்டு வாயில் போட்டிருக்கலாம்’ என நினைத்துக் கொண்டாள் அவரின் தர்மபத்தினி அம்புஜம்.


லிஃப்டினுள் சிந்திச் சிதறிய வடைத்தூள்களை செயலாளரின் மனைவி என்ற முறையில் அவளே சுத்தம் செய்ய வேண்டியதாகி விட்டது, அவளுக்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்தியது.


4)


ஒரு வழியாக லிஃப்டில் சிதறி இருந்த மசால்வடைத் துகள்களை சுத்தப்படுத்தி விட்டு, அவர்கள் மூவரும் வேண்டா வெறுப்பாக தங்கள் வீட்டை நெருங்கினர்.

வீட்டு வாசலில் பூட்டைத் தன் கையால் பிடித்து இழுத்தபடி, மணச்சநல்லூரிலிருந்து வந்துள்ள அம்புஜத்தின் உடன்பிறப்பு கோவிந்தன் நின்று கொண்டிருந்தான்.

“வாடா …. கோவிந்தா, செளக்யமா? எப்போது வந்தாய்? பாவம் … ரொம்ப நேரமா வாசலிலேயே நிற்கிறாயா?” என்று தன் உடன்பிறந்த தம்பியை கண்டு உவகையுடன் விசாரித்தாள் அம்புஜம்.

ராமசுப்புவைப் பொறுத்தவரை அவர் மச்சினன் (மச்சினன்=மனைவியின் சகோதரன்) கோவிந்தனைக் கண்டாலே அவருக்கு சுத்தமாகப் பிடிக்காது. முரட்டு மீசை வைத்துக் கொண்டு, கைலியை முழங்காலுக்கு மேல் மடித்துக் கட்டிக்கொண்டு, அகராதித்தனமாக ஏதாவது பேசிக்கொண்டு, வேலை வெட்டி என்று எதுவும் இல்லாமல், கோவில் மாடு போல சுற்றிக்கொண்டு, எப்பவும் ஒரு பேட்டை ரெளடி போல, அவர் கண்களுக்குத் தெரிபவன். மொத்தத்தில் அவன் ஒரு ஒரு வாய்ச் சவடால் பேர்வழி. அடிக்கடி மணச்சநல்லூரிலிருந்து புறப்பட்டு அக்கா வீட்டுக்கு வந்து டேரா போடுபவன். அவனால் அவருக்கு நேற்றுவரை ஒரு பிரயோசனமும் இல்லை.

ஆனால் இன்று அவரும் அவனை மனதார வரவேற்றார். கோவிந்தனுக்கே அவரின் இந்தச் செயல் ஆச்சர்யமாக இருந்தது.

“கோவிந்தா நீ தான் இதற்கு சரியான ஆளு! நம்ம வீட்டிலே ஒரு எலி புகுந்து அட்டகாசம் பண்ணுது. என்னான்னு கொஞ்சம் பார்த்து விரட்டி விட்டுடு. உன் அக்காளும், மறுமானும் ( மறுமான் = அக்கா பிள்ளை ) ரொம்பவும் பயந்து நடுங்கிப் போய் இருக்கிறார்கள்” என்று, தான் ரொம்ப தைர்யசாலி போலப் பேசினார்.

“எலி தானே … அது என்ன புலியா … ஏன் இந்தக் கிலி உங்களுக்கு?” என்று ஒரு வீர வசனத்தைப் பொழிந்து விட்டு ”கவலையே படாதீங்கோ, இன்று அதை உண்டு இல்லைன்னு பண்ணிடறேன்” என்று தைர்யம் சொன்னான்.

வீட்டைத் திறந்து நால்வரும் உள்ளே போனதும் “சூடா ஒரு காஃபி போடு அக்கா … அப்படியே ஏதாவது பஜ்ஜியும் கெட்டிச் சட்னியும் பண்ணினாக்கூட இந்த மாதிரி நேரத்துக்கு சாப்பிட ஜோராயிருக்கும்” என்றான், கோவிந்தன்.

“நீ முதலில் எலி எங்கே உள்ளதுன்னு கண்டு பிடிச்சு அதை வெளியேற்ற வழியைப் பாரு … சமையல் ரூமுக்குப் போகவே உங்க அக்கா பயப்படறா” என்றார் ராமசுப்பு.

சமையல் அறைக்குள் புகுந்து ராக்குகளில் இருந்த அனைத்து சாமான்களையும் ஹால் பக்கம் வெளியேற்றினான் கோவிந்தன். பிறகு உயரமான மர ஸ்டூல் ஒன்று போட்டுக்கொண்டு, உயரத்தில் இருந்த லாஃப்ட்களில் உள்ள அனைத்து சாக்கு மூட்டைகள், அட்டைப் பெட்டிகள் என எல்லாவற்றையும் எடுத்து, தொப்தொப்பென்று கீழே போட ஆரம்பித்தான். சாமான்கள் உடையுமோ, நசுங்குமோ அல்லது தரையில் புதிதாகப் போடப்பட்ட டைல்ஸ் கற்களில் கீறல் விழுமோ என்ற பயத்தில் ராமசுப்புவே அவனுக்கு கூடமாட உதவி செய்யத் தயாரானார்.

“பார்த்து அத்திம்பேர் (அத்திம்பேர்=அக்காவின் கணவர்)! நீங்க போய் ரெஸ்ட் எடுத்துக்கோங்கோ. உங்கள் உச்சந்தலையின் மேல் அந்த எலி எகிறிக்குதித்து, உங்கள் உடம்பெல்லாம் ஊடுருவி, உள்ளங்கால் வழியாகப் பிராண்டிட்டுப் போய் விடப் போகிறது” என்று எச்சரித்தான், கோவிந்தன்.

இதைக் கேட்டதும் ராமசுப்புவுக்கு, நிஜமாகவே அது போல நடந்து விட்டது போல ஒரு பிரமை ஏற்பட்டு, அரண்டு மிரண்டு போய், பெட்ரூம் கதவை சாத்தி விட்டு, ஃபேனைத் தட்டிவிட்டு, கட்டிலில் போய் அமர்ந்தார்.

மின்விசிறி சுழல ஆரம்பித்ததும், அதில் பல நாட்களாகத் தொங்கிக் கொண்டிருந்த கருத்த தடியான ஒட்டடைக்கற்றை ஒன்று அவர் மேல் தொப்பென்று விழுந்ததில், எலியோ என பயந்து போய், கட்டிலிலிருந்து எழுந்த அவர் ஒரு பரத நாட்டியமே ஆடியதில், அங்கிருந்த டீப்பாய் மேல் இருந்த இருமல் சிரப் மருந்து பாட்டில் கீழே விழுந்து, அது உடைந்து அதிலிருந்து கொட்டிய திரவம் அடிபட்ட எலியின் ரத்த ஆறு போலக் காட்சியளித்தது.

தொடரும்ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>