/* ]]> */
Nov 112012
 

தீபாவளிப்பண்டிகை

துலாமாதம்- என்று போற்றப்படும் ஐப்பசி மாதத்தில் கொண்டாடப்படுகிற அற்புதமான பண்டிகை ,” தீபாவளி “. அதிகாலை “கங்கா ஸ்நானத்தில்” தொடங்கி, புத்தாடை, பலகாரம், பட்டாசு என்று சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாக கொண்டாடுகிற பண்டிகை தீபாவளி மட்டும்தான். ” திருமால்-திருமகள் ” திருமணம் ,தேவர்கள் அமுதத்தை அடைந்த தினம் , நரகாசுரனுடைய தொல்லைகளுக்கு நாராயணன் முற்றுப்புள்ளி வைத்த தினம் –எல்லாமே ” தீபாவளி ” தான் .இன்று விஷ்ணுவையும் , லட்சுமியையும் , வழிபடுவது , துன்பப்பட்டாசை சிதறடித்து , மத்தாப்பு ஒளியாக மகிழ்ச்சியை மலரச்செய்யும் .சிலர் ” குபேர பூஜை ” -யும் செய்வார்கள்.

திருமகள் துதி .

நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே சூரபூஜிதே !

சங்கசக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே !

ஸர்வஜ்ஞே ஸர்வவரதே ஸர்வ துஷ்ட பயங்கரி !

ஸர்வதுக்க ஹரே தேவி மகாலக்ஷ்மி நமோஸ்துதே !

பொருள் :

ஸ்ரீ சக்கரவாசினியான திருமகளே ! மாய வடிவினளே , தேவர்களால் வழிபடப் பெறுபவளே , சங்கு , சக்கரம் , கதை , போன்ற ஆயுதங்களைத் தரித்தவளே , உனக்கு வணக்கம் ! எல்லாம் அறிந்தவளே , எல்லா வரங்களும் நல்குபவளே , தீயவர்களுக்கு மிகவும் பயங்கரமானவளே , துன்பங்கள் அனைத்தையும் ஒழிப்பவளே , மகாலட்சுமி தேவியே , உனக்கு வணக்கம் .

மஹாவிஷ்ணு துதி

வனமாலீ கதீ சார்ங்கி சங்கீ சக்ரீ சநந்தகீ

ஸ்ரீமாந் நாராயணோ விஷ்ணு வாசுதேவோ பிரஷது .

பொருள்

வனமாலை , கதை , சாரங்கம் , சங்கு , சக்கரம் , நந்தகம் என்னும் வாள் இவற்றைத் தரித்திருப்பவனும் , மகாலட்சுமியுடன் கூடியவனுமான நாராயணன் நம்மைக் காப்பாற்றட்டும் .

பலகாரங்கள் ;

தீபாவளிக்கு எந்தப்பலகாரம் செய்தாலும் , வழக்கமாக செய்வதுதானே , இது எங்களுக்குத்தெரியுமே , என்று அனைவரும் சொல்வார்கள் .ஆதலால் , கொஞ்சம் வித்தியாசமானதாகவும் ,பலருக்கும் தெரியாததுமான ” பலாப்பழக்கேசரி “யையும் , ” உக்காரை ”யையும் செய்து அசத்துங்க .

பரந்தாமனுக்குப் படைக்க பலாப்பழக் கேசரி

தேவையான பொருட்கள் :

பலாப்பழச்சுளைகள்—ஒரு தம்ளர் , ( நறுக்கிய அளவு ) ஒன்றரை பங்கு சர்க்கரை ,கால் பங்கு நெய் , வழக்கம் போல் தேவையான அளவு , முந்திரி , ஏலம் .

செய்முறை; சர்க்கரையில் சிறிது நீர் விட்டு கம்பிப் பதத்திற்கு காய்ச்ச வேண்டும் .கம்பிப் பதம் வந்ததும் பலாப்பழத்துண்டுகளை அதில் போட்டு கை விடாமல் கிளறவேண்டும் . பழம் வெந்து குழைந்து , பாகில் சேர்ந்து பதம் ஆனதும் , நெய் சேர்த்து கிளறவேண்டும் . பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது ,நெய்யில் வறுத்த முந்திரி சேர்க்கவும்,ஏலத்தைப்போடி செய்து தூவவும் .

தெய்வத்திற்கு நிவேதனம் செய்யுங்கள் .பிறருக்கும் கொடுங்கள் நீங்களும் சுவையுங்கள் .பலாப்பழம் போலவே உங்கள் வாழ்வும் மணம் வீசும் .

உட்கார்ந்து உண்ண வைக்கும் ” உக்காரை “

இந்தப் பலகாரத்தைப் பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்களேன் .

தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு —கால் கிலோ , வெல்லம்—கால் கிலோ , நெய்—நூறு கிராம் , ஏலக்காய் , முந்திரி உங்கள் தாரள மனதைப் பொறுத்தது .

செய்முறை;

அரைமணி நேரம் ஊற வைத்த கடலைப்பருப்பை கொரகொரப்பாக அரையுங்கள் . ( தண்ணீர் சேர்க்காமல் ) அதை சுத்தமான துணியில் கொட்டி மூடி, இட்லி பானையில் வேகவையுங்கள். குக்கரிலும் வேகவிடலாம் .நன்றாக வெந்ததும் இறக்கி ,ஆறவிடுங்கள் . வெல்லத்தைப்பாகு காய்ச்சி , அதில் ஆறின கடலை மாவைப்போட்டு , நெய் விட்டு கை விடாம கிளறுங்கள் . கொஞ்சம் நெய்யில் முந்திரியை வறுத்துப்போடுங்கள் . ஏலப்பொடி தூவுங்கள் .இஷ்ட தெய்வத்திற்கு நிவேதனம் செய்யுங்கள் .பிறகு அனைவரும் ‘உக்காரையை” உட்கார்ந்து சாப்பிடுங்கள் .

சொக்க வைக்கும் ” சோமாஸ் “

தேவையான பொருட்கள் :

பாம்பே ரவை ( நைசான ரவை )–கால்கிலோ , நெய் ஒரு கரண்டி , கொஞ்சம் உப்பு. சர்க்கரை–நூறு கிராம் ( மிக்சியில் போட்டு தூள்செய்யுங்கள் ) .கடலை மாவு –

25 கிராம் , கசகசா –ஒரு தேக்கரண்டி, கொஞ்சம் வறுத்த கொப்பரைத் துருவல், முந்திரி பருப்பு, ஏலக்காய் .

செய்முறை ;

ரவையில் நெய் உப்பு சேர்த்து , கொஞ்சம் தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசைந்து , இரண்டு மணி நேரம் ,அப்படியே வைக்கவும் .கடலை மாவை நெய் விட்டு சிவக்க வறுங்கள். இதில் கொப்பரைத் துருவல் , கசகசா , மு.பருப்பு, ஏலப்பொடி எல்லாம் கந்து வையுங்கள் . ” இது தான்( டா) பூரணம் ” ( சினமா டைட்டில் நல்லாயிருக்கா ) இரண்டு மணிநேரம் ஆனதும் மாவு மாதிரி பிசைந்து வைத்துள்ள ரவையை எடுத்து நன்றாகத் தட்டி , இடித்து , மிருதுவாக பிசைந்து, சிறிய சிறிய அப்பளம் போல் இடவேண்டும் .ஒவ்வொரு அப்பளத்துக்கும் நடுவில் பூரணத்தை வைத்து , இரண்டாக மடித்து அழுத்தமாக மூடவேண்டும். எத்தனை சோமாஸ் வருகிறதோ ,அத்தனையையும் செய்து முடித்து விட்டு ,அரைகிலோ சமையல் எண்ணையை வாணலியில் ஊற்றி ,எண்ணை காய்ந்ததும் ,இரண்டு , மூன்று, சோமாஸ் களாகப்போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவேண்டும் .

சேதாரமில்லாத வாழ்க்கை வாழ அம்பிகைக்கு சோமாசை நிவேதனம் செய்து ,பிறருக்கும் அளித்து சாப்பிடுங்கள் .சோமாஸின் ருசியால் சொக்கிப்போன அம்பிகை உங்களுக்கு சுகமான வாழ்க்கைத்தருவாள் .

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

( படங்கள் இணையத்திலிருந்து )

…..பாபா நளினி

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>