/* ]]> */
Feb 102012
 

சாருநிவேதிதா வின் எக்ஸைல் புத்தக விமர்சனம்

charu nivedita ‘s excile tamil book review

சாருவின் எக்ஸைல் :

எந்த விதமான முன் தயாரிப்புகளும் இல்லாமல் படித்தாலும் சரி வேறு மாதிரியானாலும் கூட சாருவின் இன்டெரெஸ்டிங்கான நடையில் ஒரு நல்ல வாசிப்பானுபவம் கொடுக்கும் ஒரு நாவல் சாருவின் “எக்சைல் ” . துவக்கத்திலேயே ஒரு க்ளைமாக்ஸ் வைத்து ஆரம்பித்து இருக்கிறார் சாரு – “ஒரு “க்ளைமாக்ஸ் என்பதிலேயே இன்னமும் கூட க்ளைமாக்ஸ்கள் உண்டு என்பது புரியும்.

அளவுக்கு அதிகமான செக்ஸ் , ஏகப்பட்ட சுய தம்பட்டம் , சுயபுராணம் ,தன்னிலை விளக்கங்களையும் தாண்டி ஸ்வாரஸ்யமாக நாவலைக் கொண்டு செல்கிறார் ஆசிரியர் ,வாசகனை கடைசி வரி வரையிலும் ! பத்திகளின் தொடர்பின்மை ,கண்ணிகள் தொடர்பில்லாமல் அறுந்து தொங்கினாலும் –அதாவது ஒரே பக்கத்தில் இரண்டு பத்திகள் ஒரு கதையினோடதும் இன்னும் சில மற்ற கிளைக்கதைகளினோடதுமாக இருந்தாலும் அதிர்வேதும் இல்லாமல் ஒரு மெட்லியின் போது ஒரு பாடலில் இருந்து இன்னொன்றுக்குத் தாவுகையில் ஏற்படும் மெல்லிய ஆச்சர்ய சுகம் போலவே உணரப்படுகிறது இந்தத் தாவல் !எழுத்தாளர் நாவல் கட்டமைப்பில் நிகழ்ந்துவரும்  மாற்றங்களை இனம் கண்டு அதைத் தன் எழுத்தில் பிரயோகிப்பவர் என்பதற்கு எக்ஸைல் ஒரு அத்தாட்சி .

கதைச்சுருக்கம்:

இந்திய , தமிழக சூழலில் ஒரு எழுத்தாளனாக இருப்பது எத்தனை கொடுமையான அனுபவமாக இருக்கிறது இந்நாவலின் கதாநாயகன் உதயாவுக்கு என்பது தான் முக்கிய முடிச்சு , கூடவே அவனுக்கு அந்த 60 வயதிலும் 30 களில் இருக்கும் அஞ்சலியிடம் உண்டாகும் ஒரு அழுத்தமான ( மூர்க்கமான? ) காதல் , கதையின் ஊடாகவே (அடைப்புக்குறிகளில்) பயணிக்கும் உதயாவின் நண்பன் கொக்கரக்கோ வின் பாத்திரப்படைப்பு ,  சமகால அரசியல் , ஒரு நடிகையுடன் உல்லாசமாக இருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்ட சாமியாரின் சித்தரிப்பாக வரும் ஜிம்காவின் கதை என்று ஏகப்பட்ட கதைகள்.

இதில் ரொம்பவும் ஆயாசம் தரும் ஒரு விஷயம் மிகப் பரபரப்பாகப் பேசப்பட்ட அந்த செக்ஸ் சாட் விவகாரம் தான். பல பக்கங்களை இந்த பிரச்சனை ஆக்ரமித்துவிட்டிருப்பது ரொம்பவே அலுப்பேற்படுத்துகிறது . ஆனாலும் சாரு வைக்கும் விவாதங்களை அலட்சியமாக புறந்தள்ளி விட முடியவில்லை . ஒரு ஆணும் பெண்ணும் மனம் ஒப்பி தங்களுக்குள் நிகழ்த்திக்கொள்ளும் பாலியல் உரையாடல்களைப் பற்றி யாரும் விமர்சிக்க என்ன இருக்கிறது ? இருவரில் ஒருவருக்கு அசூயை என்றாலும் உடன் உரையாடலை கத்தரித்துக்கொள்ள முடியும் தானே ? ஒரு மனிதன் சர்சைகளில் சிக்கிக்கொண்டான் என்பதற்காக ஆளுக்காள் அவனைக் கிழித்துக்கோர்ப்பதில் உள்ள நியாயம் புரியத்தான் இல்லை . மெல்ல அவல் இல்லையென்றால் நம் பல்லைத்தான் கழட்டி வைத்துக்கொள்ள வேண்டும் ! சிக்கியவன் கையைக் கடிக்கலாமா ?

தமிழ் சித்தர் மரபு , இந்திய ஞான மரபு , சபரி மலைக்கு உதயா மாலையிட்டுக் கொண்டு சென்று வருவது என்பன போன்ற பகுதிகள் இருக்கும் அதே பக்கங்களில் உதயா , அஞ்சலியின் காதல் கடிதப் பரிவர்த்தனை , அவர்களின் படுக்கையறை விவகாரங்களின் வர்ணனை ! ஆனால் அஞ்சலியின் ஆங்கிலம் மற்றும் ஃப்ரெஞ்ச் கலந்த கடிதங்கள் அற்புதமான ஒரு காதல் நாடக வசனம் படிக்கும் உணர்வைத்தருகின்றன .

தனது நாட்டை விட்டு விலகி ,அல்லது நாடு கடத்தப்பட்டு வாழும் ஒரு மனிதனின் உணர்வு போன்றதே இங்கு கொள்கைபிடிப்புள்ள எழுத்தாளனாக மட்டும் வாழ நினைக்கும் ஒருவனின் நிலை என்பது தான் எக்ஸைலின் பெயர்க்காரணமாக உள்ளது.

உதயாவின் காதலி அஞ்சலி இளமையில் செக்ஷுவலாக ஒரு போலி ஆன்மீகவாதியால் தொடர் தொந்தரவுக்கு ஆளானவள் , திருமணத்திலும் அவளின் அன்பு மற்றும் காதலுக்கான ஏக்கங்கள் கொந்தளித்தபடியே இருக்கும் நிலையில் உதயாவைச் சந்திக்கிறாள் .கண்டதும் காதல், நான்காவது நாளிலேயே படுக்கை வரை செல்கிறார்கள் என்று போகிறது கதை . இங்கே முக்கியமான ஒரு அம்சம் என்னவென்றால் எக்ஸைல் ஒரு ஆட்டோஃபிக்ஷன் வகையிலான நாவல் என்பது தான் .

ஆட்டோஃபிக்ஷன் :

Autofiction is principally a genre associated with contemporary French authors, among them: Christine Angot, Guillaume Dustan, Alice Ferney, Annie Ernaux, Olivia Rosenthal, Anne Wiazemsky, and Vassilis Alexakis. Catherine Millet’s 2002 memoir The Sexual Life of Catherine M. famously used autofiction to explore the author’s sexual experiences.

In India, autofiction has been associated with the works of Tamil Postmodern writer Charu Nivedita. His novel Zero_degree, a path breaking work in Tamil literature,his recent Novel‘”Exile” are example of this genre.

சுயசரிதை(autobiography) என்பது, உலகின் முக்கியமான நபர்களுக்கு, அவர்களது வாழ்க்கையின் முடிவில், நாகரிகமான நடையில் எழுதப்படும் ஒரு விஷயமாக இருக்கிறது. உண்மையான சம்பவங்களையும் தகவல்களையும் வைத்து எழுதப்படும் நாவலை, Autofiction என்றே சொல்லலாம். அது, சுயசரிதை அல்ல. சாகஸத்தின் மொழியை, மொழியின் சாகஸத்தைக் கொண்டு, மரபு சார்ந்ததாகவோ அல்லது புதியதாகவோ உள்ள அந்த நாவலின் வடிவத்துக்கும் நுட்பத்துக்கும் வெளியே வைத்து எழுதுவது. சம்பாஷணைகள், வார்த்தைகளின் கோர்ப்புகள், வார்த்தை விளையாட்டுகள், முரண்பாடுகள் ஆகியவற்றை உறுதியான வகையில், இசையைப்போல், இலக்கியத்துக்கு முன்பும் பின்பும் எழுதுவது‘

- Serge Doubrovsky
(நன்றி விக்கிபீடியா )

….என்றால் சாருவின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்களை புனைவு சேர்த்து இந்நாவலில் கொடுத்திருக்கிறார் என்றே நாம் கொள்ள வேண்டியிருக்கிறது எனும் போது —

தான் தான் உலகிலேயே அதீத செஷுவல் எனர்ஜி உள்ள ஒரு ஆண் என்பது போன்று காட்டிக்கொள்ளும் சில வரிகளும்( இரண்டு மணி நேரமாம் ! அடேங்கப்பா!!!!!) ,அஞ்சலியின் ஆதீதமான சுயபச்சாதாபப் புலம்பல்களும் தாங்கல சாமி  ரகம் ! இப்படி டாம்செல்ஸ் இன் டிஸ் ட்ரெஸ்களை (damsel in distress ) நைட்ஸ் இன் ஆர்மர் (nights in armour ) வந்து காப்பாற்றி புகல் கொடுக்கும் கதைகள் உலகம் உள்ளளவும் உய்யும் போல ! சாருவுமா ? ஆண்களுக்கு மாத்திரம் பிடித்துவிட்டால் மட்டுமே போதும் ! பெண்ணுக்கானால் அவள் குடும்ப வாழ்வில் அடிபட்டு மிதி பட்டால் தான் பரபுருஷனிடம் காதல் வரும் ?( போங்கப்பா )நேசிக்கப்படவேண்டும் , காதலிக்கப்பட வேண்டும் என்பது எல்லா மனிதர்களின் – உயிரினங்களின் அடிப்படை ஏக்கம் தானே ? அது ஒரு தேவை , அது ஒரு தவிப்பு இல்லையா ? இதற்கு இத்தனை நியாயப்படுத்துதல்கள் , இட்டுக்கட்டல் தேவையா ?

ஒரு சில பத்திகளில் மட்டுமே வந்திருந்தால் மிகுந்த பச்சாதாபத்தையும், அன்பையும் சம்பாதித்துக் கொண்டிருக்கக் கூடிய அஞ்சலியின் புலம்பல் கதை, பக்கங்களில் நீள்வதில் ரொம்பவே எரிச்சல் கொள்ளத்தான் செய்கிறது . இப்படியான குற்றச்சாட்டுகளுக்கான விளக்கமாகத் தான் கொக்கரக்கோ கதாபாத்திரத்தின் நக்கல், நையாண்டி கேள்விகள் அஞ்சலி தன் கதையைச்சொல்லும்  பத்திகளின் ஊடே வந்த வண்ணம் இருக்கிறது .

கொக்கரக்கோ:

குறிப்பிடப் பட வேண்டிய மிகமுக்கிய அம்சம் இந்த கொக்கரக்கோ பாத்திரப் படைப்பு ! புத்தகத்தை மூடி வைத்து விட்டு உருண்டு சிரிக்குமாறு  செய்த சில இடங்கள் கொக்கரக்கோவின் வாழ்கை வரலாறு (???!!) விவரிக்கப்படும் இடங்கள் தான் . குறிப்பாக கொக்கரக்கோ பள்ளியில் தமிழ் வாத்தியாரை “சொய்ங் ” சொல்லி ( நாவல படிச்சா தான் புரியும் ..ரொம்ப சிரிக்க வைக்கும் இடம் இது !) மயக்கமடைய வைக்கும் இடமும் ..எந்த வாகனத்தையும் “பாடை ” என்றே சொல்லுவதும் .சரியான காமெடி கும்மி ! கொக்கரக்கோ ஒரு பெண்பித்தனாகவும் ,குடிவெறியனாகவும் சித்தரிக்கப்பட்டிருப்பது சாருவின் அதீத புத்திசாலித்தனக்கு ஒரு எடுத்துக்காட்டு !

என் பெயர் பக்கிரிசாமி (என்னா தைரியம் சாமி ?) :

ரியல்எஸ்டேட் புள்ளி ஒருவரின் தற்கொலை விவகாரம் அலசப்படும் இடம் மிக முக்கியமான ஒன்று எக்ஸைலில் . பக்கிரிசாமியாக வரும் இந்நபர் உதயாவின் நண்பராகவும் இருந்திருக்கிறார் ! அவர் அடிமட்ட நிலையில் இருந்து பெரும்புள்ளியாக உருவெடுத்த கதையும், தற்கொலை வரையிலும் அவரைத் தள்ளிய அரசியல் பெரும்புள்ளிகளின் விவகாரமும் அட்டகாசமாக சொல்லப்பட்டிருக்கிறது . சமகால அரசியலை தைரியமாக உலக அளவில் பேசப்படும் ஒரு படைப்பில் பதிந்து வைத்திருக்கும் தைரியத்துக்காக மட்டுமே கூட எக்ஸைலை வரவேற்கலாம் . ஆவியாக அலையும் பக்கிரிசாமியே பேசுவதாக வரும் இந்தப் பகுதி, பல திடுக்கிடும் உண்மைகளை , இன்றைய தமிழக ,இந்திய அரசியல் என்று பல முக்கியமான விஷயங்களை நக்கலும் நையாண்டியுமாக விவரிக்கின்றது .

குணரத்தினம் , குருசாமி , உதயாவின் முன்னாள் காதலி மேகலா , அவனின் பெரியம்மா , நண்பன் சிவா ஆகியோரின் பாத்திரங்கள் கதையை  நகர்த்துவதில் மிக முக்கிய பங்கு உள்ளவை .

இந்திய வாழ்வின் அவலங்கள், குறிப்பாக போக்குவரத்து மாதிரியான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் , பண முதலைகள் ,கார்ப்பரேட் மற்றும் அரசியல் வாதிகளின் சுரண்டல் , மக்களின் வாழ்க்கைத் தரம், குஷால்தாஸ் மாதிரியான கார்பேரேட் சாமியார்களின் அட்டகாசம் இவற்றையெல்லாம் குறித்து பகடியாகவும், சமரசமே செய்து கொள்ளாத விமர்சனமாகவும் சாரு எழுதியிருப்பதை வழியேதுமில்லாமல் நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது .

மனித வாழ்வின் அபத்தங்கள் , சமையல் குறிப்புகள் , காயகல்ப மருந்து , வீரியவிருத்தி லேகியம் தயாரிப்பு முறை என்று எடுத்தாளப்பட்டிருக்கும் விபரங்கள் ஏராளம் . பெண்களின் செக்ஷுவாலிட்டி பற்றின கருத்துக்களை உலகின் முன் போட்டு உடைத்திருப்பதை வரவேற்கிறேன் (பேசட்டுமே யாராவது ! ) . பெண்களின் ஆடைரகங்கள் , உள்ளாடைகள் பற்றின விபரம் எல்லாம் கொஞ்சம் டூ மச் . அதோடு கூட G SPOT பற்றின சாருவின் விளக்கம் சரியானதில்லை என்பது தான் என் கருத்து ( சாருவுக்கே தெரியலையா ?) .

பின்நவீனத்துவம் :

வாசகனையும் ஆசிரியரோடு சேர்ந்து பங்கெடுத்துக்கொள்ள வைத்திருக்கும் யுக்தி , பின்நவீனத்துவ எழுத்தின் ஓர் அங்கம் . மிகவும் சுவாரஸ்யமாக வாசிப்பு அனுபவம் அமைந்து விடுவதற்கு இது ஒரு முக்கியமான காரணம் என்று நினைக்கிறேன் .

சாருவின் ஸீரோ டிகிரி யின் ஆங்கில மொழிபெயர்ப்பு கலிஃபோர்னியா மாநில கல்லூரியில் MODERN ASIAN CLASSICS பிரிவில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது என்பது தமிழர்களாக பெருமை கொள்ள வேண்டிய ஒரு விஷயம் தான் . ஆனால் அந்த செய்தியையுமே தன்னுடைய மற்றொரு நாவலில் தான் பதிந்து கொள்ள வேண்டும் என்ற துர்பாக்கிய நிலைக்கு 40 ஆண்டு காலமாக தமிழில் எழுதி வரும் ஒரு எழுத்தாளனைத்  தள்ளியிருப்பது  தமிழ் சமூகத்தினால் மட்டுமே முடியும் சாதனை !

மணமேடையில் மாப்பிள்ளையின் அருகிலேயே அவனுடைய பணக்காரத் தோழனை நிறுத்தி வைத்து அவனுக்கு முதலில் மாலையிடும் பெருமைக்குரியவர்கள் , “இயல்” புக்குரியவர்கள்  அல்லவா நாம் !

முடிவாக :

“சாருவை ஒருவர் ஏற்கலாம் ,நிராகரிக்கலாம் . ஆனால் நிச்சயம் புறக்கணிக்க முடியாது ” என்று எக்ஸைல் நாவலின் பின் அட்டையில் உள்ள வாசகம் சாருவின் எக்ஸைல் நாவலுக்கும் பொருந்தும் .

..ஷஹி..

சாரு நிவேதிதா, சாரு , எக்ஸைல் , ஸீரோ டிகிரி , ஆட்டோ ஃபிக்ஷன், உலக இலக்கியம்

charu nivedita , charu , exile, zeero degree, auto fiction , world literature

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>