/* ]]> */
Aug 032011
 

1. அரெஸ்ட் பயத்தில் இருக்கிறாராம், அழகிரி.  மத்திய மந்திரியானதால், சபாநாயகர் அனுமதியின்றி அரெஸ்ட் பண்ண முடியாதாம். எனவே சபாநாயகருக்கு அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறதாம். பதிலுக்காகத்தான் காத்திருக்கிறார்களாம். அதனால், கலக்கத்தில் இருக்கிறார், அழகிரி, என்கிறார்கள். தி.மு.க. ஆளும் கட்சியாக இருக்கும்போதே, அழகிரியைச் சுற்றிவந்த ஆட்களைப் பற்றி ரகசியமாக விசாரித்து தனியாக ஒரு நியூஸ்பேங்க் வைத்திருக்கிறாராம், ஒரு முக்கியப் பிரமுகர். அவரால் தயாரிக்கப்பட்ட பல்வேறு தகவல்கள் இப்போது ஜெயலலிதாவுக்கு கை கொடுக்கிறதாம்.

2.  கரன்ஸியில் கொழித்த ஜாம்பவான் ஒருவர், கடந்த ஆட்சியில்  அதிகமாகக் கொழிக்க ஆரம்பித்தார்.  வழக்குப் போட வேண்டும் என்று நினைத்தால் இவர்மீது தாராளமாகப் போடலாம். எனவே இவர், வெளிநாட்டுக்குப் பறந்துபோய்விட்டார். அங்கிருந்தபடியே, இங்கிருக்கும் மேலிடத்துக்கு வேண்டியவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சக்திவாய்ந்த புள்ளிகளிடம்  போன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். நேரில் பேசி விஷயத்தை முடித்துக் கொள்ளலாம், என்று அவர்கள் கூறவே இவரும் வெளிநாட்டிலிருந்து புறப்பட்டு வந்திறங்கி, ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கி யிருக்கிறார். அவருக்கு சென்னையிலும் கோவையிலும் பல வீடுகள் இருந்தாலும் இவருடைய நட்சத்திர ஓட்டல் வாசம் இவருடைய வீட்டினருக்குக் கூடத் தெரியாதாம்.  ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு இவரைச் சந்திக்க ஒரு ஆசாமி வந்து ” வழக்கு எதுவும் வராமல் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று, வாக்களித்துவிட்டு இது சம்பந்தமாக நட்சத்திர ஓட்டல் ஜாம்பவான்  இன்னொருவரையும் சந்திக்க வேண்டும் என்று வந்தவர் கூறினாராம். சம்மதித்த பிரமுகர் அந்த  ‘இன்னொருவரை’யும் சந்தித்தாராம். இதே டெக்னிக்படி மூன்றாவது நபரும் வந்து பேசியிருக்கிறார். தொகையும் முடிவாகியிருக்கிறது.  அனைத்துக்கும் சம்மதித்த ஜாம்பவான், ‘ இவர்கள் மூவரும் ஒருவருடைய பெயரை அடிக்கடி உச்சரிக்கிறார்களே, அவரை நேரில் பார்க்க வேண்டும் ‘என்று  கூறினாராம். ‘அவுங்க வாக்குறுதி கொடுத்தால்தான் நம்புவேன்’ என்றாராம். ‘ சந்திப்புக்கு ஏற்பாடு செய்கிறோம்.’ என்று சொல்லிச் சென்ற மூவரும் ஐந்து நாட்கள் ஆகியும் வரவில்லையாம். காத்திருந்து, காத்திருந்து நொந்துபோன ஜாம்பவான், விரக்தியில் திரும்பவும் வெளிநாடு போய்விட்டாராம். விரைவில் அவர்மீது இப்போது போலீஸ் பாய இருக்கிறதாம்.

3. திருவள்ளூர் மாவட்டத்தில் தி.மு.க.வின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. இந்த மாவட்டத்தில் 10 ஆண்டுகளாக மாவட்டச் செயலாளராக இருந்த சிவாஜி ராஜினாமா செய்ததை அடுத்து சுதர்சனம் என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். மாஜி மாவட்டச் செயலாளர் சிவாஜி ஒருநாள்கூட தொகுதி மக்களைச் சந்தித்தது இல்லை. இவரது உதவியாளர்கள்தான் மனு வாங்குவார்கள். இவர்கள் செய்த தகிடுதித்தங்களினால்தான், சிவாஜியின் பதவியே காலியானது. சிபாரிசுக் கடிதங்கள் வாங்க யார் சென்றாலும் ‘ அண்ணன் சென்னையில் ஸ்டாலினுடன் இருக்கிறார். 2 நாள் கழித்து வாருங்கள்  ‘ என்று கூறும் உதவியாளர்கள்,  2 நாள் கழித்துச் சென்றதும், பணம் வாங்கிக்கொண்டு சிபாரிசுக் கடிதம் கொடுப்பார்கள். சிவாஜியின் கையெழுத்தை பி.ஏ.க்களே போட்டுக் கொடுப்பார்களா என்று தெரியாது. மற்றும் சிவாஜி மனைவி ஸ்டாலின் மனைவியின் தோழியாக இருந்ததால், மாவட்ட  நிர்வாகத்தில் அவருடைய தலையீடு அதிகமாகவே இருந்தது. அதனாலேயே கட்சிப் பொறுப்பிலிருந்து சிவாஜி விலக நேர்ந்தது. புதிய செயலாளரான சுதர்சனம் பதவி ஏற்றதும்  ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். அந்தக் கூட்டத்துக்கு மொத்தம் 92 பேர்தான் ஆஜரானார்களாம். பெரும்பாலான ஒன்றிய .நகரச் செயலாளர்கள்  அத்தனை பேரும் சிவாஜியிடம்தான் இருக்கிறார்களாம். இந்தக் கோஷ்டிப் பூசலுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு  உள்ளாட்சித் தேர்தலில் அனைவரும் இறங்கி செயல்பட்டால்தான், தி.மு.க.வின் மானம் பிழைக்கும். இப்போதைய நிலைமையில் தி.மு.க.வுக்கு எதிராக மற்ற கட்சிகள் எதுவும் மெனக்கெட வேண்டியதில்லை. தன்னுடைய குழியை தானே வெட்டிகொள்ளும் நிலையில்தான் கட்சி இருக்கிறது.

4. ” ராகுல் காந்தியை மந்திரிசபையில் சேருமாறு நான் பலதடவை வேண்டுகோள் விடுத்துள்ளேன். ஆனால், தனக்குக் கட்சிப் பணிகள் இருப்பதாக அவர் கூறிவருகிறார். “என்னும் மன்மோகன் சிங்கின் பேச்சு ‘ மத்திய மந்திரிகள் யாரும் கட்சிப் பணிகளைக் கவனிப்பதில்லையோ என எண்ணத் தோன்றுகிறது.

5. சமச்சீர் வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, அரசால் பழைய பாடப் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டதாக  நாளிதழில் வெளியான செய்தியைச் சுட்டிக் காட்டிய நீதிபதி இக்பால், ‘ இது நீதிமன்றத்தையே அவமதிக்கும் செயல் இல்லையா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். அதற்கு அரசு வக்கீலின் பதில், ‘ அரசுக்கு சாதகமாகத் தீர்ப்பு வந்தால், இந்தப் புத்தகங்களைப் பயன்படுத்திக் கொள்வோம். இல்லாவிட்டால், சமச்சீர் கல்விப் பாடப் புத்தகங்களை பயன்படுத்திக் கொள்வோம். என்பது. ஏற்கெனவே சென்ற அரசால் அச்சடிக்கப்பட்ட சமச்சீர்கல்விப் பாடப் புத்தகங்களை நிறுத்தி வைத்ததால், ரூ. 200 கோடி நஷ்டம் என்பது வழக்கின் குற்றச்சாட்டுகளில் ஒன்று. இப்போது சமச்சீர் கல்வியைத்தான் அமுல்படுத்தவேண்டும் நீதிமன்ற உத்தரவு வந்தால், புதிதாக அச்சடிக்கப்பட்ட புத்தகங்களையும் மூலையில்தானே போடவேண்டும். ஆக இன்னும் மக்கள் பணம் ரூ 200 கோடியை வீணாக்கலாம் என்பதுதான் அரசின் எண்ணமோ?

6. தி.மு.க.வுக்கு எதிரான நடவடிக்கைகளான அன்னிய நாட்டு வங்கிகளில் போடப்பட்டுள்ள பணத்தை முடக்குவது, கலைஞர் தொலைக் காட்சியை முடக்குவது, சாதிக்பாட்சா மர்ம மரண வழக்கு ஆகியவற்றில் பத்திரிக்கைகளில் காட்டப்படும் பரபரப்பு உண்மையில் அதிகார மட்டத்தில் இல்லை என்கிறார்கள். பிரணாப் முகர்ஜி கருணாநிதியை வந்து சந்தித்துவிட்டுச் சென்ற பிறகு அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில் தி.மு.க.வுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகளில் ஒரு தொய்வு விழுந்திருப்பதாகச் சொல்கிறார்கள். ” மூன்றாம் குற்றப் பத்திரிக்கையில் தயாநிதியின் பெயர் இடம் பெறாமல் போனாலும் ஆச்சர்யம் வேண்டாம். ” என்கிறார், ஒரு டில்லி காங்கிரஸ் பிரமுகர். இந்த நிலையில் கனிமொழி ஜாமீனில் வெளி வந்தபிறகு, நடக்க இருக்கும் மத்திய அமைச்சரவையின் மாற்றத்தில் கனி அமைச்சராவாராம்.

7. புதிய படங்கள் ஏதுமின்றி, முடக்கப்பட்டிருக்கும் வடிவேலு ” எனக்கு முதல்வர் மீது எந்தக் கோபமோ வருத்தமோ கிடையாது. தே.மு.தி.க. தனியாக நின்றிருந்தால், நான் தி. மு.க. வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்திருக்க மாட்டேன். காரணம் அந்தச் சூழலில் தே.மு.தி.க. தோற்கும் என்று  தெரியும். அம்மாவை நான் எங்கும் விமர்சனம் செய்யவில்லை. என்று நண்பர்களிடம் புலம்பும் வடிவேலு, விரைவில் ஜெ. வைச் சந்திக்கக்கூடும். சொந்தமாகப் படமெடுக்கப் போகிறாராம்.

Tags : Tamilnadu political developments about central cabinet minister azhagiri

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>