/* ]]> */
Jun 242012
 

 

ஹரியானா மாநிலத்தின் மானேஸ்வர் கிராமத்தில் 20 / 6 / 2012 அன்று தன் பிறந்தநாளைக் கொண்டாடி விட்டு நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுமி மாஹி 70 அடி ஆழ்துளைக்கிணற்றினுள் தவறி விழுந்தாள் . குழந்தை விழுந்து 15 மணி நேரங்களுக்குப் பின்பே மீட்பு நடவடிக்கைகள் துவங்கின . கிட்டத்தட்ட 80 மணி நேரங்கள் ஆழ்துளைக்கிணற்றினுள் கிடந்த மாஹி பலத்த போராட்டத்துக்குப் பிறகு பிணமாகத்தான் மீட்கப்பட்டிருக்கிறாள் ! ஆரோக்கியமான அழகான 4 வயது சிறுமி , நூறு பிறந்த நாட்களைக் கொண்டாடி இருக்க வேண்டியவள் யாரோ சிலரது அலட்சியத்துக்கும் , கவனக்குறைவுக்கும் பலியாகி உயிரை விட்டிருக்கிறாள் .

 

தொடர்ந்து ஆழ்துளைக்கிணறுகள், சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு மரணக்கிடங்குகளாக மாறின அவலத்தைப் பார்த்து வந்தாலும் இன்னமொரு குழந்தையை இழந்திருக்கிறோம் !

துளைக்குள் தொடர்ந்து பிராணவாயு செலுத்தப்பட்டு வந்ததால் தன் குழந்தை உயிரோடு இருப்பாள் என்றும் நிச்சயம் மீட்புக் குழுவினரின் முயற்சி வீண் போகாது என்றும் நம்பிக்கை தெரிவித்த குழந்தை மாஹியின் தாய் தன் மகளின் மரணச்செய்தி கேட்டு மயங்கி விழுந்தது நெஞ்சில் ஓங்கி அறைந்த வேதனையைக்கொடுத்தது .சி.சி.டிவியிலும் என்.டி.டிவி யிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட மீட்பு நடவடிக்கைகளை 4 நாட்களாகக் கவனித்துக்கொண்டிருந்த பல்லாயிரம் மக்களின் பிரார்த்தனை வீண் போனது !

சில ஆண்டுகளுக்கு முன்பு ஹரியானாவின் குருஷேத்ராவில்  சிறுவன் ப்ரின்ஸ் இதே போன்றதொரு ஆழ்துளைக்கிணற்றுக்குள் விழுந்து 48 மணி நேரத்துக்குள் உயிரோடு மீட்கப்பட்டான் , ஆக்ராவில் சோனு என்ற குழந்தையும் ஜெய்ப்பூரில் ஒரு குழந்தையும் , தௌசாவின் அஞ்சுவும் இது போன்ற துளைகளில் விழுந்து உயிரோடு மீட்கப்பட்டாலும் மாண்டு போன குழந்தைகள் குஜராத்தின் கிர்தன் மற்றும் கிஞ்சல் , வாராங்களின் மஹேஷ், மேலும் திருநெல்வேலி மற்றும் மத்யப்பிரதேசத்தைச் சேர்ந்த இன்னமொரு குழந்தை ஆகியோரின் பட்டியலில் சேர்ந்து போனாள் மாஹி .

மீட்புப் பணியில் ஈடுப்பட்டிருந்த ஆர்மி ஜவான்கள் உயிரைப்பணயம் வைத்து 40 டிகிரி கொளுத்தும் வெய்யிலில் போராடி சடலத்தை மட்டும் மீட்டிருக்கின்றனர் .

வெட்டப்பட்டிருந்த ஆழ்துளைக்குழிகள் சட்டவிரோதமானவை என்பதும் அந்தக் குடியிருப்பு பகுதியே அப்ரூவல் இல்லாமல் கட்டப்பட்டிருக்கின்றது என்பதெல்லாமும் சம்பந்தப்பட்டவர்களை கற்களால் அடித்துக் கொல்ல வேண்டும் போன்ற ஆவேசம் கிளம்பச் செய்யும் செய்திகள்  .

கடுமையான பாறைப்பகுதியான மேனேஸ்வர் கிராமம் பூராவும் இம்மாதிரியான மூடிகள் அற்ற ஆழ்துளைக்கிணறுகள் ஏராளம் இன்னமும் உள்ளனவாம் ! நாடு பூராவும் இன்னமும் எத்தனை கிணறுகள் உள்ளனவோ ?

இம்மாதிரியான சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்தும் புத்திகொள்முதல் இல்லாமல் போனது ஏன் ?

நம் நாட்டைத்தவிர உலகின் வேறெந்த மூலையிலாவது இம்மாதிரியான ரத்தத்தை உறைய வைக்கும் சம்பவங்கள் நடக்குமா ?

ஏன் நம் யாருக்குமே வெட்கம் இல்லாமல் போனது ?

மரணக்குழிகளாகும் ஆழ்துளைக்கிணறுகளுக்கு பொறுப்பேற்கப் போவது யார் ? சம்பந்தப்பட்ட மாநில அரசா ? நகராட்சியா ?

சட்டவிரோதமாக கட்டிடங்கள் கட்டவும் கிணறுகள் தோண்டவும் துணிச்சல் எப்படி  முளைக்கிறது ? இவர்களுக்கு என்ன தண்டனை ?

கிணறுகளில் விழுக்காட்டியும் , அனுமதியல்லாமல் கட்டப்பட்ட  பள்ளிகளுக்கு அனுப்பி தீயில் இட்டு கருக்கியும் , ஊட்டச்சத்துக்குறைப்பாடுகளுக்கு பலியாக்கியும் , சாலைகளில் பாதுகாப்பில்லாமல் விபத்துகளுக்கு ஆளாக்கியும் பச்சிளம் குழந்தைகளை இழந்து கொண்டிருக்கும்  நமக்கெல்லாம் வேகமாக வளர்ந்து வரும் நாடு , வல்லரசாகப் போகும் நாடு என்று சொல்லிக்கொள்ள வெட்கமாக ஏன் இல்லை ?

 மாஹி மட்டும் ஒரு அரசியல்வாதி அல்லது சமூக அந்தஸ்து மிக்க ஒரு நபரின் குழந்தையாக இருந்திருந்தால் மீட்பு நடவடிக்கை 15 மணி நேரங்கள் கழித்து துவங்கி இருக்குமா ? பூப்போன்ற மகளை அநியாயமாகப் பறி கொடுத்துவிட்டு கதறும் மாஹியின் தாய்க்கு நாம் என்ன பதில் சொல்லப்போகிறோம் ?

இம்மாதிரியான அவலங்களை , தேசிய அவமானங்களை , வெட்கக் கேடுகளைத் தடுப்பதிலும் சட்ட விரோதங்களில் , மீறல்களில் ஈடுபடுபவர்களைக் கடுமையாக தண்டிப்பதிலும் அரசாங்கம் மற்றும் பொதுமக்களின் பங்கு என்ன ?

எப்போதும் போல சில நாட்களுக்கு மட்டும் ரத்தம் கொதிக்கக் கொதிக்கப் பேசிவிட்டு அநியாயமாக உயிரை விட்ட மற்ற குழந்தைகளையும் போல மாஹியையும் மறந்து விடப் போகிறோமா இல்லை சிறுமை கண்டு பொங்கி நம்மால் ஆனதை அதற்கு எதிராகச்செய்யப்போகிறோமா ?

ஆபத்து விளைவிக்கும் வண்ணம் திறந்து கிடக்கும் ஆழ்துளைக் கிணறுகள் , கால்வாய்கள் மற்றும் பள்ளங்களின் புகைப்படங்களை viewertimesnow@gmail.com க்கு அனுப்புமாறு சிசி டிவி கேட்டுக்கொண்டிருக்கிறது . இம்மாதிரியான அபாயகரமான பள்ளங்கள் , குழிகளை பார்த்து கண்டுகொள்ளாமல் இருந்து விடாமல் நம்மால் இயன்ற நடவடிக்கைகளை அவசியம் துரிதமாக எடுப்போம் , புகைப்படம் மற்றும் செய்தியோடு மாநகராட்சிக்குத் தெரியப்படுத்தும் முன் யாரும் அவற்றை நெருங்கா வண்ணம் பாதுக்காப்பு ஏற்பாடுகளை அவசியம் செய்ய வேண்டும் ,  குழந்தை மாஹியின் நிலை நாளை எந்தக் குழந்தைக்கும் நேர வேண்டாம் .

யாராவது சரி செய்வார்கள் ,  யாராவது செய்யட்டும் என்று எண்ணாமல் முதல் நடவடிக்கையை ஆபத்தை உணரும், பார்க்கும் முதல் நபர் எடுத்திருந்தால் மாஹி இப்படி ஒரு குழிக்குள் விழுந்திருப்பாளா ? இனியாவது விழித்துக்கொள்வோம் ( மா?  ) .

.. ஷஹி..

மாஹி , மஹி , ஆழ்துளைக் கிணறு , ஹரியானா , மானேஸ்வர் , சிசி டிவி , என்டி டிவி

maahi , mahi , deep borewells, bore wells, hariyana, maneswar , cc tv , ndtv

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>